home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஶ்ரீஹனுமார் மந்திர், கட்பாஹரா, சாகர், மத்திய பிரதேசம் :: courtesy-N.I.C.


ஶ்ரீஹனுமார் மந்திர், கட்பாஹரா, சாகர், மத்திய பிரதேசம்

திரு. சந்தோஷ் குப்தா, சாகர்


சாகர்

சாகர் என்னும் நகரத்தை ஏரியூர் என்று சொல்லலாம். கடல் மட்டத்திற்கு 1750 அடி உயரத்தில் விந்திய மலைதொடருக்கு அடிவில் மத்திய பிரதேசத்தில் உள்ளது. நகரின் நடுநாயகமாக இருப்பது மிக விஸ்தாரமான ஏரியாகும். இதனை சாகர் ஏரி என்றே அழைக்கிறார்கள். நகரம் இதனை சுற்றியே வளர்ந்துள்ளது. இந்த எழிலான ஏரியை ஶ்ரீலாக்ஹா பன்ஸாரா என்பர் 1100 ஆண்டு கட்டினார். இந்த ஏரியினால் நகரத்தின் அழகு கூடி, பார்ப்பவர் மனதை கவர்வதாக இருக்கிறது. மராட்டா ராஜ்ஜியத்தின் பிரதிநிதி ஶ்ரீகோவிந்த் பந்த புன்டேலே என்பவர் 1735ஆம் ஆண்டு, சாகரை தனது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு தலைநகரமாக்கினார். அதன் பின் சாகரின் முக்கியத்வம் கூடியது.

பழைய சாகர்

அனேகமாக சாகர் எல்லோருக்கும் இன்று தெரியும். ஆனால் இன்றைய சாகர், அருகில் இருக்கும் கடபாஹராவிற்கு மாற்று தலைநகரமாக உருவாக்கப்பட்டது தான். இன்று கடபாஹரா பழைய சாகர் என்று அழைக்கப்படுகிறது. இது இன்றைய சாகரிலிருந்து சுமார் பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் ஜான்சி ரோட்டில் பஹன்ஶா என்னும் குன்றின் மேல் உள்ளது. லலித்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை-26இல் இருந்து பஸ் வசதியுள்ளது. சாகரில் இருந்து "ஷேர் ஆட்டோ" கடபாஹராவிற்கு கிடைக்கும்.

பஹன்ஶா குன்றின் மேல் பழமையான கோட்டை தெரியும். இங்கு கடபாஹராவில் இருக்கும் ஶ்ரீஹனுமார் திருக்கோயில் "சிந்த பீடம்" என்று போற்றப்படுகிறது. அதனால் இவ்விடத்தையே "சித்" என்றே அழைக்கிறார்கள்.

கடபாஹராவின் ஆட்சியாளர்கள்

Steps leading to Gadpahra fort, Sagar, Madhya Predesh and the Hanuman Mandir கோட் பரம்பரையினர் காலத்திலிருந்தே இவ்விடம் மிகவும் பிரபலம். டாங் பரம்பரையினர் இதனை கைப்பற்றி தங்கள் இராஜ்ஜியத்தின் ஆட்சிக்கு உட்படுத்தினர். நார்வாரை ஆண்ட காசவஹா ராஜபுத்திர அரசன் டாங் இதனை கைபற்றி தனது தனி அரசை துவங்கிய இடம் இது. வரலாற்று சான்றுகள் இந்த முதல் டாங்கினை பற்றி ஏதும் கிடைத்ததாக தெரியவில்லை, ஆனால் இவன் இந்திரனையே வெற்றி கண்டதாக கிராமிய பாடல்கள் பல உள்ளன. கடபாஹராவை பல அரசர்கள் ஆட்சி புரிந்தாலும், ஶ்ரீபிருதிவிபாத், ஶ்ரீமஹராஜகுமார், ஶ்ரீமானா சிங் ஆகியோர்களின் பெயர் மிகவும் பிரபலம். ஶ்ரீபிருதிவிபாத் முகலாயர்களுக்கு ஜாகீர்தாராக 1689ஆம் ஆண்டு முதல் இருந்திருக்கிறார்.

கடபாஹராவில் கோயில்கள்

குன்றின் மேல் இரு திருக்கோயில்கள் உள்ளன. கடபாஹரா குன்றின் மேல் உள்ள ஏரியும், கோட்டையும் பார்க்க வேண்டிய இடங்கள். குன்றின் இறக்கத்தில் ஶ்ரீஅங்கத தேவியின் திருக்கோயில் உள்ளது. குன்றின் பின்புற இறக்கத்தில் மிக அழகிய ஆனால் சிறிய ஏரி ஒன்று உள்ளது. இதனை மோதிடால் என்று அழைகிறார்கள்.

கடபாஹராவின் ஶ்ரீஹனுமார்

Sri Hanuman, Gadpahra, Sagar, courtesy: n.i.c. குன்றின் மேல் உள்ள ஶ்ரீஹனுமாரின் திருக்கோயில் ஒரு சித்த க்ஷேத்திரம். கீழே பிரதான சாலையிலிருந்தே ஶ்ரீஹனுமார் திருக்கோயிலுக்கு செல்லும் பாதையாக படிகட்டுகள் தெரியும். காவியும், வெண்மையுமாக நிறங்களால் பளிச்சென்று தெரியும். நானூறு அல்லது நானூற்று ஐம்பது படிகள் நாம் ஏறவேண்டும். பக்தர்கள் ஹனுமான் சாலீஸாவை ஜபித்த வண்ணம் படிகளில் ஏறுவார்கள். மலை குன்று முழுவதும் காடு இருப்பதால், சுகந்தமான காற்றும், அதில் மிதந்து வரும் ஹனுமான் சாலீஸாவும் நம் மனதை சாந்தமாக்கி விடும். பழைய கோட்டையின் ஒரு பகுதியில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது.

கோயில் மிக பெரிதாக இருக்கவில்லை. மிகவும் எளிமையாக ஆடம்பரமோ அல்லது ஆர்பாட்டமோ இல்லாமல் இருக்கிறது. பெரிய நீளமான தாழ்வாரம் வழியாக சென்றால், பெரிய கூடம் அவ்வளவு தான். கூடத்தின் மேல் கூறையில் விமானம் உள்ளது. முகலாய கலை அமைதியுடன் இருக்கிறது அவ்விமானம். விமானத்தின் உச்சியிலும், கூடத்தின் நான்கு மூலையிலும் காவி வண்ணத்தில் முக்கோணவடிவில் கொடிகளை காணலாம்.

சித்தி ஶ்ரீஹனுமார்

திருக்கோயிலின் உள் சென்ற உடன் நம்மிடமுள்ள இறைத்தன்மை நம்மை கவ்வுவதை உணரலாம். சுயம்பூவான ஶ்ரீஹனுமார் நம்மை ஆட்கொள்வதை உணரலாம். அவர் முன் மெய்மறந்து நாம் பிராத்தனை செய்வோம். இங்கு பிராத்தனைகள் வீண்போகாது என்பது தின்னம் என்று நமது உள்ளுணர்வு கூறும்.

சுயம்பூ மூர்த்தமான ஶ்ரீஹனுமாரின் மூர்த்தம் சுமார் ஆறு அடி உயரம் இருக்கும். வலது திருக்கரம் தலையினும் உயரமாக தூக்கி ஆசிகள் வழங்கிய வண்ணம் இருக்கிறது. இறைவன் பக்தர்களை பார்த்த வண்ணம் உள்ளார். திறந்த பெரிய கண்களில் வழிந்தோடும் கருணை என்னென்று சொல்வது? அவர் முன் நாம் நிற்கும் பொழுது நமக்கு அவர் கண்கள் மூலம் அளிக்கும் ஆசிகள் அளவில் அடங்காது, நினைவிநின்று அகலாது.

திருவிழாக்கள்

ஆஷாட மாதத்தில், மிக பெரிய திருவிழா எடுக்கப்படுகிறது. அப்பொழுது மேளாவும் உண்டு. சாதாரணமாக செவ்வாய் கிழமை பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்கு வருவார்கள். கோயிலின் பின்புறம் பழைய கோட்டையை காணலாம். சற்றே தொலைவில், டாங் அரசாட்சியின் போது கட்டப்பட்ட ஶீஷ் மகால் [கண்ணாடி மாளிகை] தெரியும். குன்றின் சரிவில் இரங்கினால் மாதா அங்கத தேவியின் திருக்கோயில் வரும்.

ஶ்ரீஹனுமார் கோயில் என்பதால் இங்கு வானரங்கள் பல உண்டு. ஆனால் அவை சாதாரணமாக பக்தர்கள் எதை தருகிறார்களோ அதை பெற்றுக்கொள்கின்றன. பக்தர்கள் கையிலிருந்து பிடுங்குவது மிகவும் அபூர்வமே.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீஹனுமார் மந்திர், கட்பாஹரா, சாகர், மத்திய பிரதேசம்"

 

அனுபவம்
ஏரியூர் எனப்படும் அருமையான சாகருக்கு, கடபாஹரா சித்தி ஹனுமாரை தர்சிக்க வாருங்கள். தாங்களின் நியாயமான வேண்டுகோளை நிச்சயமாக நிறைவேற்றும் வரத்தை அவரிடமிருந்து வாங்கி செல்லுங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: நவம்பர் 2018
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+