home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஶ்ரீசஞ்சீவீராயர் திருக்கோயில் வெல்லாலா, கடப்பா மாவட்டம், ஆந்திர பிரதேசம்

திருமதி அகிலா ரகுராமன்


யெல்லாலா வெல்லாலா

குமுதவல்லி என்னும் குண்டு நதி, வெல்லாலா, கடப்பா, ஆந்திரா ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜுபாலலேம் மண்டலத்தில் உள்ளது இந்த கிராமம். தெலுங்கு மொழியில் யெல்லாலா அல்லது வெல்லாலா என்றால் "நான் போக வேண்டும்" என்று பொருள். ஒரு கிராமத்திற்கு "நான் போக வேண்டும்" என்று பெயரா? என்று கேட்க தோன்றுகிறதா? அதற்கு முன் அக்கிராமத்திற்கு செல்வோமா?

இக்கிராமத்தின் அருகாமையில் உள்ள ப்ரொகட்டூர் மிகவும் முக்கியமான நகரம் சுமார் இருபது மூன்று கி.மீட்டர் தொலைவில் உள்ளது. கடப்பா-கர்நூல் மார்கத்தில் உள்ள சகலமார்ரி கிராமத்தில் இருந்து எட்டு கி.மீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கு வரலாம்.

குமுதவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வெல்லாலா கிராமம் மிக அமைதியான அழகான தலம். குமுதவதி ஆற்றினை தற்பொழுது குண்டு என்று அழைக்கிறார்கள். பசுமையான பட்டுப் போன்ற வயல்வெளி கிராமத்திற்கு வருவோரை வரவேற்கிறது. கடப்பா ஜில்லாவில் பென்னா ஆற்றில் கலக்கும் குண்டு ஆறு கர்நூல் ஜில்லாவில் ஓர்வகல் என்னும் இடத்திலிருந்து ஆரம்பிக்கிறது. வழியில் வெள்ள பெருக்கினால் வரும் தண்ணீர் குண்டு ஆற்றில் கலந்து அழகிய நீர் நிறைந்த ஆறாக மழைகாலத்திலும் நீர் அதிகமில்லாம்ல் கோடையிலும் காட்சியளிக்கும்.

ஶ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோயில்

இந்த கிராமம் ஶ்ரீஆஞ்சநேயரின் பக்தர்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளதற்கு காரணம் இக்கிராமத்தில் உள்ள மிக பழமையான அனுமார் திருக்கோயிலாகும். இத்திருதலத்தில் ஶ்ரீசஞ்சீவிராயர் என்று பெயர் கொண்டு அனுமார் அருள்பாலிக்கிறார். இத்திருகோயிலுக்கு அருகில் உள்ள இடங்களிலிருந்து வரும் பக்தர்களை தவிர கர்நாடக மாநிலத்திலிருந்தும் அதிகம் பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கிராமத்திற்கு ’வெல்லாலா’ என்ற பெயர் சூட்ட காரணமே இந்த ஶ்ரீசஞ்சீவிராயர் தானே!

’வெல்லால’ என்று பெயர் காரணம்

இராம-இராவண யுத்ததின் சமயம் லக்ஷ்மணன் மூர்ச்சையானார். சில மூலிகைகளின் உதவியினால் அவரது மூர்ச்சை தெளியும் என்பது விளங்கியது. இமால பகுதியில் கிடைக்க கூடியவை அந்த மூலிகைகள். அத்ம்மூலிகைகளை கொண்டு வரும் பொருப்பு அனுமானிடம் ஒப்படைக்கப் பட்டது. வின்னில் பாய்ந்த அனுமார் மருந்துடன் உள்ள மலையையே இலங்கைக்கு தூக்கி சென்றார். பொழுது புலரும் சமயம் சூர்ய நமஸ்காரம் செய்ய குமுதவேதி நதிகரையில் இறங்கினார். தேவர்களும் ரிஷிகளும் அனுமார் மருந்து மலையையே தூக்கி செல்லும் அதிசயத்தை காண இங்கு வந்தனர். தனது காலை நமஸ்காரத்தினை முடித்துக்கொண்டு கிளம்பிய அனுமாரை ரிஷிகள் சற்றே இளைபார கூறினார்கள். அதற்கு அனுமார் தான் இராம கார்யத்தில் இருப்பதால் உடனே செல்ல வேண்டும் என்றார். "வெல்லாலா" "வெல்லாலா" என்று கூறி தான் திரும்பவும் இத்தலத்திற்கு வருவதாக கூறி தனது பயணத்தை தொடர்ந்தார். "வெல்லாலா" என்றால் தெலுங்கு மொழியில் "செல்ல வேண்டும்" என்று பொருள். இதுவே இத்தலத்திற்கு வெல்லாலா என்ற பெயர் வர காரணம்.

ஶ்ரீசஞ்சீவிராயர்

ஶ்ரீசஞ்சீவீராயர் திருக்கோயில் வெல்லாலா, கடப்பா மாவட்டம், ஆந்திர பிரதேசம் பதினைந்தாம் நூற்றாண்டில் இவ்விடம் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தின் கீழ் அவர்களின் பிரதிநிதிகள் ஆட்சியில் இருந்தது. அப்பொழுது ஶ்ரீஹனுமத்மல்லு என்னும் இராணுவ அதிகாரி இங்கு முகாம் இட்டிருந்தார். அச்சமயம் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு இங்கேயே பல நாட்கள் முகாமை நீடிக்க வேண்டி வந்தது. அப்பொழுது ஶ்ரீஹனுமாரின் சிலை குமுதவதி ஆற்றில் இருப்பதாகவும் அதனை வெளி கொண்டு வரவேண்டும் என்றும் அவருக்கு தெய்வ வழிகாட்டல் கிடைத்தது.

குமுதவதி நதியில் சிலையை தேட அவர் ஆட்களை அனுப்பி, உடல் நலம் குன்றியிருந்த போதும் தானே இதனை மேற்பார்வை பார்த்தார். நீண்ட தேடலுக்கு பிறகு ஶ்ரீஹனுமாரின் சிலை நதியில் கண்டெடுக்கப் பட்டது. விதிமுறை படி ஶ்ரீஹனுமாரின் சிலையை அவர் பிரதிஷ்டை செய்தார். அன்று முதல் ஶ்ரீசஞ்சீவிராயர் என்று பெயரிடப்பட்ட ஹனுமார் இங்கு அருளாட்சி செய்து வருகிறார். .

ஶ்ரீசஞ்சீவிராயருக்கு திருக்கோயில்

பின்பு ஶ்ரீசஞ்சீவிராயரின் காருண்யத்தை பற்றிய மகிமை பரவியது, அதனால் அக்கம் பக்கத்திலிருந்து பக்தர்கள் வருகை அதிகரித்தது. அவருக்கு சிறிய கோயில் கட்டினார்கள். பின்பு வந்த ஆட்சியாளார்கள் கோயில் வளாகத்தை இன்னும் பெரிதாக்கினார்கள். இன்று ப்ரொகட்டூர்-அலாகட்டா சலையில் ஊரின் எல்லையில் இருக்கிறது. ஐந்து அடுக்கு இராஜகோபுரம் பக்தர்களை வரவேற்கிறது. இராஜகோபுரம் வழியாக நுழைந்தால் வெளி பிரகாரம். விஜயநகர கட்டடகலை பாணியில் அமைந்திருக்கும் துஜஸ்தம்பம். ஶ்ரீகணபதியும் ஶ்ரீஆஞ்சநேயரும் புடைப்பு சிலைகளாக துஜஸ்தம்பத்தில் இருக்கிறார்கள். தெலுங்கு மொழியில் தலபுராணமும் இங்கு காணப்படுகிறது. பிரதான கோயிலின் வெளிசுவரை ஒட்டி மேடை கட்டப்பட்டுள்ளது. முகதுவாரத்தின் மேல் அபய முத்திரை காட்டும் ஶ்ரீராமா, சீதா, சிவா, பிரும்மா இருக்கிறார்கள்.

முகதுவாரத்தின் வழியே முன் மண்டபத்தை அடைந்து பின் கர்பகிரஹத்தில் மூலவரை தர்சிக்கலாம். முன் மண்டப மேல் வளைவில் சிந்தூரம் பூசப்பட்ட பக்த ஶ்ரீஆஞ்சநேயரைக் காணலாம்.

வெல்லாலா ஶ்ரீசஞ்சீவீராயர்

ஶ்ரீசஞ்சீவீராயர், வெல்லாலா, கடப்பா மாவட்டம், ஆந்திர பிரதேசம் கர்பகிரஹத்தின் நுழைவாயிலுக்கு அருகில் சென்றால் தான் ஒருவர் மூலவர் ஶ்ரீசஞ்சீவராயனை முழுமையாக பார்க்க முடியும். ஸ்ரீ சஞ்சீவராயனின் பிரமாண்டமான உருவம் பக்தரின் கண்களுக்கு ஒரு விருந்து. இறைவனின் மூர்த்தம் சுமார் பதினாறு அடி உயரம் இருக்கும். அவரது தங்கம் போன்ற பாதங்களில் நுபுரமும், அவருடைய கணுக்கால்களில் தண்டையும் அலங்கரிக்கின்றன. அவரது இடது கால் முன்னோக்கி செல்வது, எதிரிகளின் சக்தியை அழிக்க எதிரி பிரதேசத்திற்கு அவர் நுழையும் போவதை நினைவுக்கு கொண்டு வருகிறது. கச்சம் வைத்து கட்டிய பீதாம்பரம் மிகவும் பொருத்தமாகவும், மிகவும் அலங்காரமாகவும் உள்ளது. இடுப்பில் அவர் அலங்காரமாக ஒட்டியானம் போன்ற அணிகலம் அணிந்துள்ளார். அவரது நீண்ட வால் அவரது தலையில் மேலே எழுப்பி காணப்படுகிறது. அவரது வலது கை 'அபய' முத்திரை மூலம் பயப்பட வேண்டாம் பக்தர்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறார். அவரது கங்கணம் அணிந்து இடுப்பில் இருக்கும் இடது கை, கதையை பிடித்துள்ளது. அவரது உத்ரீயம் காற்றில் பறந்து பாய்வது போல் இருக்கிறது. அவரது மார்பில் பல மாலைகளை அணிந்துள்ளார். அதில் ஒரு மாலையில் ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ சீதா பொறிக்கப்பட்ட பெண்டன்ட் உள்ளது. அவரது பாயும் முடி நேர்த்தியாக முடியப்பட்டுள்ளது.

பார்ப்பவரை கொள்ளைக் கொள்ள செய்யும் அவரது ஒளிரும் கண்கள் ஆசிகளை அள்ளி அளிக்கிறது,

பிரம்மோத்ஸவம்

சந்திர மான்ய வைசாக மாதத்தில் வெல்லாலா ஶ்ரீசஞ்சீவிராயருக்கு பிரம்மோத்த்ஸவம் கொண்டாடப்படுகிறது. தேரில் இறைவன் பவனி வருவார், பின் குமுதவேதி நதியில் தீர்த்தவாரி நடக்கும். இந்த பிரமாண்டமான பிரம்மோத்ஸவத்தில் பக்தர்கள் வெகுவாக பங்கு பெற்று இறைவனின் ஆசிகள் பெருகிறார்கள்.

கோயில் வளாகத்தில் ஶ்ரீலக்ஷ்மி உடனுறை ஶ்ரீசென்ன கேசவசுவாமி, ஶ்ரீபார்வதி உடனுறை ஶ்ரீபீமலிங்கேஸ்வரர், ஶ்ரீவீர பத்திர சுவாமி, ஶ்ரீவினாயகர், ஶ்ரீலக்ஷ்மிநரசிம்மர் ஆகியோருக்கு தனி சன்னிதிகள் உள்ளன.

வெளியிலிருந்து வரும் பக்தர்களுக்கு தங்குவதற்கு இட வசதி கோயிலில் உள்ளது, இதை தவிர மற்ற தர்ம சத்திரங்களும் உள்ளன.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீசஞ்சீவீராயர் திருக்கோயில் வெல்லாலா, கடப்பா, ஆந்திரா"

 

அனுபவம்
காந்தமென இழுக்கும் இந்த க்ஷேத்திரத்திற்கு விஜயம் செய்யுங்கள். தாங்கள் உள் மனதில் தன்னை சுத்தமானவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தங்களின் ஆசையை பிரம்மாண்டமான ஶ்ரீசஞ்சீவிராயர் நிச்சயம் ஊக்கிவிப்பார்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி :: முதல் பதிப்பு ஜூலை 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020
தகவல் உதவி: ஶ்ரீ ஒய்.சஞ்சீவராயலு, கடப்பா


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+