home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

பிஹ்ட்பஞ்ஜன் ஶ்ரீ ஹனுமான் மந்திர், ஹர்னி, வரோத்ரா, குஜராத் :: படம் உதவி: harnihanuman.org

பிஹ்ட்பஞ்ஜன் ஶ்ரீ ஹனுமான் மந்திர், ஹர்னி, வரோத்ரா, குஜராத்

திரு சுப்பிரமணிய சுவாமி


பரோடாவும் வடோத்ராவும்

நதி கரையில் ஶ்ரீவிஸ்வாமித்திர முனிவர் தவம் இருந்ததால் அந்நதிக்கு விஸ்வாமித்ரி என்று பெயர் வந்தது. புனிதமான விஸ்வாமித்ரி நதிகரையில் அமைந்து இருக்கும் நகரம் பரோடா. இந்நகரத்தின் அரசன் சந்தன் பெயரால் சந்தன்வதி என்பது புராணமான பெயராகும். வீரர்கள் நிறைந்த இடம் என்பதால் வீரக்ஷேத்திரா அல்லது வீரவதி என்று பின்பு அழைக்கப்பட்டது. ஆலமரங்கள் அதிகம் காணப்பட்டதால் வடபத்ரகா என்று அழைக்கப்பட்டது. பின்பு, ஆலமரங்களின் நடுவில் என்னும் பொருள் கூறும் வடோத்ரா என்று அழைக்கப்பட்டது. ஆங்கில யாத்திரிகர்கள் இந்த நகரத்தை போடிரா என்று குறிப்பிட்டு, அதுவே அங்கிலேயர்கள் ஆட்சியின் போது பரோடா என்று அழைக்கப்படலாயிற்று. இன்று திரும்பவும் வடோத்ரா என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

மும்பாயையும் தில்லியையும் இணைக்கும் இரயில் பாதையும், தேசிய நெடுஞ்சாலையும் வடோத்ரா வழியாக செல்கின்றன. குஜராத்தின் தலைநகரமான காந்திநகரில் இருந்து சுமார் நூற்று நாற்பது கி.மீ. தொலைவில் உள்ளது இந்நகரம்.

சந்ஸ்காரி நகரி - கலாசார நகரம்

ஒரு அருமையான வரலாற்று பின்னணியில் உருவான நகரம் வடோத்ரா. தில்லி சுல்தான்கள் நிர்வாகத்தின் கட்டுப்பட்டில் ஒரு குறுகிய காலம் இருந்ததை தவிர இந்த இடம் இந்து ஆட்சியாளர்களின் கீழ் தான் அதிக காலம் இருந்தது. இதனால் கலாச்சார மரபுகள் மிகவும் பாதிக்கப்படவில்லை. இக்காரணத்தால் இந்நகரத்தை "சங்கஸ்கரி நாகரி" என்று அழைப்பார்கள். இப்பகுதி நீண்ட காலம் சாளுக்கியர்கள் மற்றும் மராட்டியர்களின் செல்வாக்கின் கீழ் இருந்ததால், இப்பகுதியில் ஸ்ரீ ஹனுமானின் பக்தர்கள் பலர் உள்ளனர்.

ஹர்னியில் பிஹட்பஞ்சன் ஹனுமான் மந்திர்

வடோத்ரா நகரத்தில் ஹனுமாருக்கான திருக்கோயில்கள் பல உள்ளன, அனேகமாக எல்லா கோயில்களும் சுமார் நூறு ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்தவையே. ஹர்னியில் உள்ள ஶ்ரீஹனுமார் கோயில் அருமையான தலபுராணம் கொண்ட பழமையான கோயில்களில் ஒன்றாகும். ஹர்னி சாலையில் வதோதராவின் வடகிழக்குப் பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. வதோதரா விமான நிலையம், ஹர்னி ஏரி மற்றும் மோத்நாத் மஹாதேவ் ஆலயம் ஆகியவற்றின் அருகாமையில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஹனுமான் ஏன் 'பிஹட்பஞ்சன்' என்று அழைக்கப் படுகிறார் என்பது மிகவும் சுவாரஸ்யமான விசயம்.

ஹர்னியின் ஹிரன்கசுபு

இந்த இடத்தில் முன் காலத்தில் ஆலமரங்கள் நிறைய அடர்ந்து அமைதியாக இருந்த காரணத்தால் பல மகான்கள் இங்கு தவம் புரிவதற்கு விரும்பினர். பல துறவிகள் மற்றும் ரிஷிகள் அமைதி பெறவும் பிரம்மத்தை உணர்வதற்கும் இவ்விடத்திற்கு விரும்பி வந்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த இடத்தில் ஒரு துற்மார்க்கத்தில் செல்லும் அரசன் ஹிரன்கசுபு (ஸ்ரீ கிருஷ்ணனின் மாமா அல்ல) என்பவனின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இம்மன்னன் இங்கு தவம் புரியும் ரிஷிகளையும் தவசீலர்களையும் துன்புருத்துவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால் ரிஷிகள் இதற்காக ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பி தங்கள் தவத்தை தொடர்ந்தனர். ஸ்ரீ ராம, சீதா, லக்ஷ்மணன், ஸ்ரீ ஹனுமான் ஆகியோர் ஒரு சமயம் இந்த இடத்திற்கு வருகை தந்தார்கள். ரிஷிகள் ஸ்ரீ ராமரை அளவில்லா மகிழ்ச்சி கொண்டனர். அவரிடம் ஹரின்கசுபுவால் அவர்களால் சந்திக்கும் துன்புறுத்துதலைப் பற்றி கூறினர். தாங்கள் அமைதியாக இங்கு தவம் புரிவதற்கு அவர்கள் இதற்கான தீர்வு காணும்படி ஶ்ரீராமரை கேட்டுக்கொள்கிறார்கள்.

ஸ்ரீ ஹனுமானனால் கட்டுண்ட ஹிரன்கசுபு

ஸ்ரீராமர் லக்ஷ்மணனிடமும் ஹனுமானிடமும் ஹிரன்கசுபுவை வதைக்க உத்தரவிட்டார். இந்த வீரர்கள் இருவரும் அரக்கனிடம் போர் புரிந்தனர், ஆனால் யுத்தம் முடிவிற்கு வருவதாக இல்லை. யுத்தம் முடிவடையாது இருந்த நேரத்தில் ஸ்ரீ ராமர் ஹனுமானை சண்டையை தொடரும்படியும், தக்க சமயத்தில் விராட் ரூபம் எடுத்து அசுரனை அழிக்கவும் கூறினார். போர் முடிவடையாது, பதினான்காம் நாள் ஹனுமான் விஸ்வ ரூபம் எடுத்துக் கொண்டு, அரக்க அரசனை தரையில் தள்ளி, தனது வலது காலால் தரையில் விழுந்த அரக்கனை கட்டுக்குள் கொண்டு வந்தார். ஹனுமானின் வலது திரு பாதம் ஹிரன்காசுபு மீது இருந்ததால் அரக்கனின் அசுரதனமும் பொல்லாத சக்திகளும் அழிந்து போக ஆரம்பித்தன.

ஸ்ரீ ராமனின் விருப்பம்

ஶ்ரீராமர், ஹனுமானை அங்கேயே அப்படியே அசுரனை காலால் அழுத்திக் கொண்டு இருக்கச் சொன்னார். ஏனென்றால், இந்த ஒரே வழியில் தான் இவ்வரக்கனின் அட்டகாசத்தை நிறுத்த முடியும் என்றார். ஶ்ரீராமரின் இக்கட்டளையை தன் சிரம் மேல் ஏற்றார் ஶ்ரீ ஹனுமான். அன்று முதல் இங்கு ஶ்ரீ ஹனுமானின் சாந்நித்யம் உணரப்படுகிறது.

பீஹட் பஞ்ஜன் மாருதி

பிஹ்ட்பஞ்ஜன் ஶ்ரீ ஹனுமான் மந்திர், ஹர்னி, வரோத்ரா ஹனுமான் தனது வனர ரூபத்தை விட்டுவிட்டு மனித உருவில் இருக்க வேண்டும் என்றும் ரிஷிகளையும் சாதுக்களையும் காப்பாற்றியதற்கு மக்கள் அவரை பூசிக்க விரும்புவார்கள் என்றும் அதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தீர்க்கதரிசனமாக கூறினார் ஶ்ரீராமர். இவ்விடத்தில் அவரை பூசிக்கும் மக்களின் இடையூறுகளையும் துன்பத்தினையும் அவர் அழிக்க வல்லவர் என்றும் கூறினார். சாதுகளின் ரிஷிகளின் எல்லா இடையூறுகளையும் அழித்த ஶ்ரீமாருதி இந்த தலத்தில் பிஹட்[இடையூறு/தொந்தரவு] பஞ்ஜன்[அழிக்கும்/ஒடுக்கும்] மாருதியாவார். ஸ்ரீ ராமரின் ஆசீயின் படி இத்தலத்தில் பிஹட்பஞ்ஜன் மாருதி என்ற பெயருடன் மீசை தாடியுடன் மனித முகத்துடன் அருள்பாலிக்கிறார்.

ஹர்னியில் பீஹட் பஞ்ஜன் மாருதிக்கு கோயில்

அந்த நேரத்தில், ஹர்னி என்னும் இந்த இடம் அர்னி மரங்கள் கொண்ட காடாய் இருந்ததால், இவ்விடத்திற்கு ஹர்னி என்ற பெயர் வந்தது. மாறுதலாக இந்த இடத்தில் ஹிரன் கசுபு வதைக்கப்பட்டான் என்பதால் இவ்விடத்திற்கு ஹர்னி என்று பெயர் வந்தது என்றும் கூறுவர். பல ஆண்டுகளுக்கு பின் ஒரு மரத்தின் கீழ் ஒரு அசாதாரணமான ஹனுமானின் விசித்திரமான விக்ரஹம் காணப்பட்டது. மக்கள் அதனை வழிபட்டு வரலாயினர். வடக்கில் விஸ்வாமித்ரி மற்றும் சூர்யா நதி ஓடுகிறது. ஹர்னி ஹனுமான், பிஹட் பஞ்ஜன் மாருதி என்று அழைக்கப் பட்டு புகழ் பாடப்பட்டார்.

புராணமான திருக்கோயில்

பிஹ்ட்பஞ்ஜன் ஶ்ரீ ஹனுமான் மந்திர், ஹர்னி, வரோத்ரா காலப்போக்கில் ஶ்ரீமாருதிக்காக கோயில் கட்டப்பட்டது. ஹர்னி ஹனுமான் கோயிலின் அமைப்பு மற்ற நவீன இந்திய கோயில்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கோயிலின் கூரையானது முகலாய பாணியிலான கல்லறையின் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. விக்கிரக ஆராதனைக்கு எதிராக இருந்த படையெடுப்பவர்களை திசைதிருப்புவதற்காக, ஒரு கல்லறையை போன்று கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. இத்தகைய கட்டமைப்பில் காணப்படுவதே இந்த கோவில் பழைமையான கோயில் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த கோயில் இப்பகுதியில் உள்ள ஒரு பழங்கால கோவில் என்பது உறுதியாகிறது.

இந்த பண்டைய மந்தரில் திருவிழா

பாரத தேசமெங்கிருந்தும் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். செவ்வாய் மற்றும் சனிக்கிழமையன்று அதிக பக்தர்கள், குறிப்பாக "ச்ரவண" சனிக்கிழமைகளில் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கோயிலுக்கு அதிகம் வருகை தருகிரார்கள். இந்த சமயத்தில் பண்டிகையை கொண்டாடும் மனப்போக்கு மக்களுக்கு இருப்பதால் அச்சமயம் பெரிய மேளா நடத்தப்படும். திபாவளிக்கு முன் வரும் சதுர்தசி மிகவும் நல்ல சாதனா மற்றும் சித்திக்கு மிக அருமையான நாளாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் தங்கள் இலட்சியத்தை அடையவதற்காக இந்த கோயிலை அன்றைய தினத்தில் அதிகம் வருகிறார்கள். இந்த சதுர்த்தி ஒரு சனிக்கிழமையன்று வந்தால், பிஹட் பஞ்சன் மாருதி பூசிப்பது மிகவும் சால சிறந்தது என்பது நம்பிக்கை.

திருக்கோயிலின் இருப்பிடம்

இந்த புராதமான ஶ்ரீஹனுமார் கோயில் வடோத்ராவின் வடகிழக்கு பகுதியில் ஹர்னியில் உள்ளது. ஹர்னி நெடுஞ்சாலையில் மொத்நாத் மஹாதேவ மந்திர், ஹர்னி ஏரி, விமான தளம் அருகில் அமைந்துள்ளது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "பிஹ்ட்பஞ்ஜன் ஶ்ரீ ஹனுமான் மந்திர், ஹர்னி, வரோத்ரா"

 

அனுபவம்
இந்த பழங்கால கோயிலுக்குச் சென்று, நர ரூபத்தில் உள்ள ‘வானராணாமதீஶம்’ [वानराणामधीशम्] த்தினை தரிசனம் செய்து, எல்லா எதிர்மறையையும் உங்களிடமிருந்து விலக்குங்கள். மனதினை தூய்மையாக்கி வெளியே வந்து வாழ்க்கையின் நற்செயல்களைச் செய்ய தொடங்குங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு ஜூன் 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+