home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

நாமக்கல் மற்றும் கமலாலயம், நாமக்கல், தமிழ்நாடு

ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், நாமக்கல், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு

ஜி.கே.கௌசிக்


பக்த பிரஹல்லாதனின் அசைக்க முடியாத நம்பிக்கை

யானையின் காலடியின் கீழ் தன் மகனை கொல்ல நினைத்த போதும், மலை மீதிலிருந்து உருட்டி விட்ட போதும் பிரஹல்லாதனை ஶ்ரீஹரி காப்பாற்றினார். இருந்தும் ஶ்ரீஹரியின் அவதாரமான நரஸிம்ம அவதாரம் உக்ர ரூபத்தில் இருப்பானேன்?

ஶ்ரீஹரியிடம் பக்தி கொண்டவர்களை கொடுமை படுத்தும் ஹிரண்யகசுபு என்னும் கொடிய சக்தியை அழிக்க அவதரித்தார் என்பதாலா? ஆம். ஶ்ரீஹரியை நம்பியவர்கள் கைவிடக்கூடாது என்னும் தின்னமான வலுவான காரணத்தால் எடுக்கப்பட்ட ரூபம் இந்த ஶ்ரீநரஸிம்மர் என்னும் உக்ர ரூபம். மற்ற அவதாரங்கள் யோசித்து, திட்டமிட்டு எடுக்கப்பட்ட அவதாரங்கள், ஆனால் நரஸிம்ஹாவதாரம் ஒரு நொடியில் எடுக்கப்பட்டது. ஶ்ரீமஹாலக்ஷ்மிக்கு கூட தெரிவிக்கும் முன் எடுக்கப்பட்ட அவதாரம்.

[பக்த பிரஹல்லாதனின் பக்தியை பற்றி நமது “சோளிங்கர்” யோக ஶ்ரீஆஞ்சநேயர் கோயில் தலப்புராணத்தில் பார்க்கவும்]

ஶ்ரீலக்ஷ்மி தேவியின் தவம்

ஶ்ரீ ஆஞ்சநேயர், நாமக்கல் ஶ்ரீநரஸிம்மரின் உக்ரத்தை கண்டோர் நடுங்கினர். அவரை சாந்தபடுத்த வேண்டும் இல்லையேல் உலகுக்கு என்ன நஷ்டம் வரும் என்று யோசிக்க கூட முடியாது. எல்லோரும் குழந்தை பிரஹல்லாதனை வேண்டினர். அவனும் ஶ்ரீஹரியிடம் உலக நலனுக்காக சாந்தமடைய பிராத்தனை செய்தான். அதே சமயம் ஶ்ரீஹரியின் இந்த ரூபத்தை பார்த்த தேவர்கள் ஶ்ரீஹரியை சாந்தபடுத்த ஶ்ரீமஹாலக்ஷ்மியிடம் சென்று வேண்டினர்கள். ஶ்ரீமஹாலக்ஷ்மி ஹரியின் உக்ரத்தை தணிக்க பூமிக்கு வந்தார். ஆனால் அவன் வரும் முன்னேயே குழந்தை பிரஹல்லாதனின் பிரார்த்தனைக்கு இசைந்து தனது உக்ரத்தை தணித்துக்கொண்டு விட்டார். குழந்தையின் முகம் கண்டால் கோபமும், துன்பமும் பறந்தோடுமல்லவா? ஶ்ரீமஹாலக்ஷ்மிக்கு ஹரியின் இக்கோலம் ஏமாற்றத்தை கொடுத்தது. ஶ்ரீஹரியின் உக்ர ரூபத்தை காண வந்தவள் அல்லவா? அக்காட்சியை காண வேண்டும் என்பதால் அருகிலிருந்த தாமரைதடாகத்தில் இறங்கி தவமிருக்க ஆரம்பித்தாள். அப்படி தாயார் தவமிருந்த ’கமலாலயம்’ என்று அழைக்கப்படும் தாமரைகுளம் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. நாமக்கல் என்று இவ்விடத்திற்கு பெயர் வந்த காரணம் சற்று பார்ப்போம்.

ஶ்ரீஆஞ்சநேயரும் சாலிகிராமமும்

பிரஹல்லாதன் எப்படி ஶ்ரீஹரியிடம் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தானோ அதே போல் ஶ்ரீஹரியின் அவதாரமான ஶ்ரீராமரிடம் அசைக்க முடியாத பக்தி வைத்திருந்தவர் ஶ்ரீஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் நீராடும் போது அவரிடம் ஒரு சாளிக்கிராம் கிடைத்தது. அதை அவர் எடுத்துக்கொண்டு ராமேஸ்வரம் புறப்பட்டார்.

விஷ்ணுவின் ஏதாவது ஒரு ரூபமாக சாலிக்கிராம் இருக்கும். இது நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் கிடைக்கும் மிக அபூர்வமான கல். சங்கும் சக்ரமும் இயற்கையாகவே இருக்கும் சாலிக்கிராமத்தை பூஜிப்பார்கள். இதனை பூமியில் வைக்க மாட்டார்கள்.

கோயிலில் க்ஷேத்திரத்தின் புராணத்தை சித்தரிக்கும் ஓவியம் மாலை சந்தியாகாலம் வந்தஉடன் ஆஞ்சநேயர் தனது நித்யகர்மவான சந்தியா வந்தனத்திற்கு ஆறு, குளம் தேடினார். நாமக்கல் கமலாலயம் கண்ணில் பட்டதும், இறங்கி அங்கு இருந்த தேவியிடம் சாலிக்கிராமத்தை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டினார். தான் ஸந்தியா வந்தனம் செய்யத் தொடங்கினார். முடிந்த உடன் தேவியிடம் சாலிகிராமம் பெறுவதற்கு சென்றார். தியானத்திலிருந்த தேவி தன்னிடம் உள்ளது சாலிகிராமம் என்பதை உணரும் முன் அதனை பூமியில் வைத்து ஆஞ்சநேயரை எடுத்துக்கொள்ள செய்கையால் காண்பித்தார்.

நாமக்கல் பெயர்

அப்பொழுது யாரும் எதிர்பார்க்காத ஒன்று அங்கு நடந்தது. பூமியை தொட்ட உடன் சாலிகிராம் பெரிதாக வளர ஆரம்பித்தது. யாருக்கும் ஒன்றும் புரியாத நிலையில் ஆஞ்சநேயர் தனது வாலால் சாலிகிராமத்தை கட்டி எடுக்கப் பார்த்தார். அஹோ! வெடித்து சிதறிய சாலிகிராமத்திலிருந்து உக்ர ரூபத்தில் நரசிம்மர் வெளிப்பட்டார். அதை கண்டு ஶ்ரீமஹாலக்ஷ்மி தேவி அச்சத்துடன் கூடிய ஆனந்தத்தில் ஆழ்ந்தாள். ஆஞ்சநேயர் வைத்த கண்னெடுக்காமல் தரிசித்தார். பகவான் “ஆஞ்சநேயா! நீ கொணற்ந்த சாலிகிராம் உக்ர நரசிம்மருக்கு உரியது. அதை இங்கு நீ எடுத்து வந்ததால் என்னை உக்ர ரூபத்தில் தர்சித்ததால் ஶ்ரீதேவியின் தவம் பூர்த்தியடைந்தது. சாலிகிராம் மலையாக மாறியதால் இவ்விடம் ’நாமகிரி’ நாமக்கல் என்று நிலைக்கட்டும்” என்றார்.

நாமக்கல் கோயில்

நாமக்கல் டவுனின் நடுமையத்தில் அமைந்திருக்கும் பெரிய மலை உச்சியில் உள்ள குடைவறை கோயிலில் ஶ்ரீநரசிம்மரை தர்சிக்கலாம். ஶ்ரீநரசிம்மர் மேற்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ளார். அவரது வலது திருபாதம் பூமியில் அழுந்தியும் இடது கால் வலது தொடையின் மேல் அமர்ந்துள்ளது. அவரது திருகரங்களின் ’வஜ்ரநகம்’ பார்க்கவே அச்சத்தை கொடுக்கிறது. ஹிரண்யனை ஸம்ஹாரம் செய்த நகங்கள் என்பதால் அச்சம் தவிர்த்து பக்தி மேலிடுகிறது. ஶ்ரீஜன்கன் அவரின் இடது புறமும் ஶ்ரீசனாதன் அவரின் வலது புறமும் இருந்து லோக க்ஷேமத்தை விவரிக்கிறார்கள். இடதுபுறம் உள்ள சிவனும் வலதுபுறம் உள்ள ப்ரம்மாவும் உக்ரத்தை தணிக்கச் சொல்லும் பாவனையில் உள்ளார்கள். ஆக இங்கு வரும் பக்தர்களுக்கு திரிமூர்த்திகளையும் தர்சிக்கும் ஆனந்தம் கிடைக்கும். உக்ரமூர்த்தி போல் தெரிந்தாலும், ஶ்ரீலக்ஷ்மியின் தவத்தை பூர்த்தி செய்து ஶ்ரீலக்ஷ்மியும் இங்கு இருப்பதால் இவர் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் ஆவார்.

இத்க்ஷேத்திரத்தில் ஶ்ரீலக்ஷ்மி தேவி நாமகிரி தாயார் என்று பெயர் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

நாமக்கல் ஶ்ரீஆஞ்சநேயர்

இக்குடவறை கோயிலை நோக்கியவாரு சுமார் 250 அடி தூரத்தில் ஶ்ரீஆஞ்சநேயர் இருக்கிறார். கூறை வெய்யா கோயிலில் கூப்பிய கரங்களுடன் ஶ்ரீநரசிம்மரை வணங்குவதாக உள்ளார். மிக ஆச்சரியமான விசேடம் என்னவென்றால் ஶ்ரீஆஞ்சநேயரின் கண்களுக்கு நேர் எதிரே தெரிவது பகவான் ஶ்ரீநரசிம்மருடைய திருபாதங்களே. இதை இன்றும் கருடர் சன்னதியிலிருந்து பக்தர்கள் காண்கிறார்கள். சுமார் 18 அடி நெடிந்து வளர்திருக்கும் ஶ்ரீஆஞ்சநேயரின் மூர்த்தம் கண்கொள்ளா காட்சி. அவர் அணிந்திருக்கும் ஆபரணங்கள் மிக அற்புதம். ஶ்ரீநரசிம்மரை பார்க்கும் நேர்த்தியான கண்களும், அவரின் திருபாதங்களும் என்றும் நம் கண்முன் நிற்கும்.

ஶ்ரீஆஞ்சநேயரின் திருபாதங்கள் படிமம் கமலாலயம் குளக்கரையில் படிதுறையில் உள்ளது.

நாமக்கல்

கோல்லிமலை சரிவில் அமைந்துள்ள நாமக்கல் டவுன் நாமக்கல் மாவட்டத்தின் தலமையகம். மலை தொடர் டவுனின் கிழக்கு பகுதியில் உள்ளது. தமிழ்நாட்டு தொல் பொருள் ஆராய்ச்சி கழகம் இக்கோயில் கொங்கு நாட்டை ஆண்ட அதியமான் கட்டியிருக்கலாம் என்றும் குடவறை சிற்பங்கள் குணசீல ஆதித்ய குல அரசனால் ஏழாம் நூற்றாண்டு வரைய பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், நாமக்கல்"

 

அனுபவம்
நாமக்கல் ஶ்ரீஆஞ்சநேயர் ஶ்ரீலக்ஷ்மிதேவியின் தவத்தை பூர்த்தி செய்து ஶ்ரீநரசிம்மருடைய அவதார கோலத்தை தரிசிக்க வைத்தவர். ஶ்ரீநரசிம்மருடைய பாதாரவிந்ததை என்றும் தரிசித்துக் கொண்டிருப்பவர். நமது இந்த ஜன்ம தவத்தை பூர்த்தி செய்து, ஶ்ரீநரசிம்மரின் பாதாரவிந்ததை தரிசனம் செய்து வைக்க வல்ல ஶ்ரீஆஞ்சநேயரை வாருங்கள் இவ்க்ஷேத்திரத்தில் தரிசித்து சித்தி பெறுவோமாக.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு ஆகஸ்ட் 2014
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+