இன்றைய ஹைதராபாத் முதலில் கோல்கொண்டாவை மையமாகக் கொண்டிருந்தது. இது கிழக்கு சாளுக்கிய வம்சத்தால் ஆளப்பட்டது, அதைத் தொடர்ந்து காகத்தியர்கள். 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அலாவுதீன் கல்ஜியால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர், பின்னர் இந்த இடம் பல்வேறு சுல்தான்களால் ஆளப்பட்டது. கோல்கொண்டாவின் ஆளுநரான சுல்தான் குலி, பஹ்மானி சுல்தானகத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்து பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குதுப் ஷாஹி வம்சத்தை நிறுவினார். புகழ்பெற்ற சார்மினார் மற்றும் மெக்கா மசூதி அவர்களின் ஆட்சியின் போது கட்டப்பட்டது.
குதுப் ஷாஹி வம்சத்திலிருந்து, அது முகலாயர்களுக்குச் சென்று, பின் ஆசிஃப் ஜா தனது சுதந்திர ஆட்சியை நிறுவி, அப்பகுதிக்கு ஹைதராபாத் டெக்கான் என்று பெயரிட்டார். இவர்கள் வம்சம் ஆசிப் ஜாஹி வம்சம் என்று அறியப்பட்டது.
ஹைதராபாத் ஒரு மேட்டு நிலப்பகுதியாகும் (தாழ்நிலங்களுக்கு மேலே உயரமான நிலம்) ஆறுகள் மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு தொடர் மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பொதுவாக எந்த ஒரு மலையகப் பகுதியும் தண்ணீர் தேவைக்கு நிலத்தடி நீரையே முக்கிய ஆதாரமாக நம்பியிருக்கும். சமுதாயத்தின் நலனுக்காக ஆட்சியாளர்கள் மற்றும் பிரபுக்கள் இந்த பகுதிகளில் நீர் ஆதாரமாக கிணறுகள் தோண்டவும் கட்டுமானத்திற்கும் தங்கள் பங்கை செய்தனர். இப்படி சமூக நலன் கருதிக் கட்டப்பட்ட பல கிணறுகள் நிலத்தின் தன்மை, பரப்பு, மற்றும் சமூகப் பயன்பாடு இவைகளை கருத்தில் கொண்டு கட்டப்பட்டன. அவைகள் சாதாரண கிணறாகவோ அல்லது படி வைத்த கிணறாகவோ அமைக்கப்பட்டது.
தெலுங்கில் நுத்தி அல்லது நுய்யி என்பது ஒரு கிணற்றை குறிக்கும் சொல்லாகும், ஹிந்தியில் இதனை பாயோலி/பவலி என்பர். டெக்கான் பகுதியில் இந்த பாயோலி என்ற வார்த்தை பௌலி என்று மாறியது. ஹைதராபாத்தில் முந்தைய ஆண்டுகளில் பல சாதரண கிணறுகள் மற்றும் படிக்கட்டுக் கிணறுகள் கட்டப்பட்டன. சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சமூகத்தினருக்கு உபயோக்கிக்கப்பட்ட கிணறு உள்ளூர் மக்களால் அவர்களின் வசதிக்காக பெயரிடப்பட்டது. நீரின் தரம், மக்கள் அல்லது உபயோகிக்கும் சமூகம், அல்லது கிணற்றைக் கட்டிய ஒரு நிகழ்வு அல்லது பிரபு போன்றவற்றின் அடிப்படையில், பௌவுலிக்கு பெயரிடப்பட்டது. புட்லிபௌலி, கங்காபௌலி, ஹரிபௌலி, ஹாதிபௌலி, இன்ஜின்பௌலி என்று பல பெயர்களில் இங்கு பௌலிகள் காணப்பட்டுள்ளன. அவைகளில் பல இன்று காணாமல் போய் விட்டன, ஆனாலும் அவைகள் இருந்ததின் அடையாளமாக சில பகுதிகள் இன்னும் பௌவுலி பெயரைப் பற்றிக் கொண்டிருக்கின்றன.
இது சார்மினாருக்கு மிக அருகில் உள்ள இடம். ஒரு காலத்தில் இங்கு அமைந்திருந்த பசுமைக் கிணறு "ஹரிபௌலி" [ஹரி என்றால் பச்சை நிறம்] என்பதன் மூலம் இந்த இடம் அதன் பெயரைப் பெற்றது. இது ஷாலிபண்டாவுக்கு மிக அருகில் உள்ள இடம். அந்தக் காலத்தின் பல பிரபுக்களும், நவாபின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களும், சனாதன தர்மத்தைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்த இடமாக இது இருந்தது. காலப்போக்கில், அந்தக் குறிப்பிட்ட காலத்து ஆட்சியாளரின் ஒப்புதலுடன் பல கோயில்கள் பல்வேறு மக்களாலும் பிரபுக்களாலும் கட்டப்பட்டன என்பது குறிப்பிட தக்கது. உதாரணத்திற்கு ஸ்ரீ சீதாரம்பாக் கோயில், மல்லே பள்ளி நாம்பள்ளி யில் உள்ள கோயிலை பற்றிய விவரங்களை பார்க்கவும்.
ஹரிபௌலி பகுதியில் பல கோவில்கள் உள்ளன. அவர்களில் பல முந்நூற்று நானூறு ஆண்டுகள் பழமையானவை. அப்படிப்பட்ட ஒரு ஆலயம் ஸ்ரீ முக்யபிராணா ஆலயம். மாத்வர்கள் ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமியை "ஸ்ரீ முக்யபிராண தேவரு" என்று அழைப்பார்கள்.
மத்வாச்சாரியாரின் கோட்பாடுகளைப் பின்பற்றும் மற்றும் த்வைத தத்துவத்தைப் பின்பற்றும் பக்தர்கள் இந்த பகுதியில் வசித்து வந்தனர். அவர்கள் வசிக்கும் இடம் அக்ரஹாரம் என்று அழைக்கப்பட்டது. அவர்கள் வழக்கம் போல் இந்த அக்ரஹாரத்தில் முக்யபிராணருக்கு ஆலயம் அமைத்து வழிபட்டனர். கோயில் எப்போது கட்டப்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை, ஆனால் குறைந்தது இருநூற்று ஐம்பது ஆண்டுகள் அல்லது அதற்கு மேலோ பழமையானது எனக் கூறப்படுகிறது.
சில நிமிட நடைப்பயண தூரத்தில் உள்ள தர்வாஜா பகுதியில் இதுபோன்ற ஒரு கோயிலைப் பார்த்தோம். [ஸ்ரீமுக்யப்ராணா திருக்கோவில், ஷாலிபண்டா]. பல்வேறு மத்வ மடங்களின் தலைவர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். ஸ்ரீ உத்திராதி மடம் சமீபத்தில் இந்த கோவிலில் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ஹரிபௌலியில் உள்ள இந்த முக்யபிராணா கோயில் "ஸ்ரீ தாச ஹனுமான்" கோயில் என்று அழைக்கப்படுகிறது, இப்போது “ஸ்ரீ தாச ஹனுமான் கோயில், ஸ்ரீ உத்திராதி மடம்” என்று அழைக்கப்படுகிறது.
கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. பெயர்பலகையில் கோயிலின் பெயர் “ஸ்ரீ தாச ஹனுமான் மந்திர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வளாகத்தில் நுழையும் போது பக்தர்களை வரவேற்பது குளுமையான திறந்த வெளி, நிழல் பரப்பும் பெரிய அரச மரம். ஒருபுறம் நவக்கிரக சந்நிதி உள்ளது. அருகில் கோவில் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் கோசாலை. வளாகத்தில் நிறைய திறந்தவெளி உள்ளது. இங்கு விதானம் அமைக்கப்பட்டு, மத்வ ஜெயந்தி, ஹனுமத் ஜெயந்தி, இந்து புத்தாண்டு உகாதி போன்ற அனைத்து சம்பிரதாய விழாக்களையும் கொண்டாட பக்தர்கள் கூடுகிறார்கள். இவை தவிர உத்தராதி மடாதிபதி ஸ்வாமிகளின் வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட நாட்களில் ஹோமங்களும் நடத்தப்படுகின்றது. பிரதான கோயில் ஒரு செவ்வக வடிவம் கொண்ட மண்டபம் மற்றும் கர்ப்பகிரஹம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஹரி வாயு ஸ்துதி போன்ற வழக்கமான பாராயணங்கள் மற்றும் பக்தர்கள் குழுவின் மற்ற ஸ்துதிகள் இந்த மண்டபத்தில் நடைபெறும். பக்தர்கள் மண்டபத்தில் இருந்தே ஸ்ரீதாச அனுமனை தரிசனம் செய்யலாம். கர்ப்பகிரஹம் மண்டபத்தை மையமாக வைத்து, சுற்றிலும் இடம் விட்டு, பக்தர்கள் கர்ப்பக்கிரகத்தை வலம் செய்ய வசதியாக உள்ளது.
இறைவனின் மூர்த்தம் சுமார் மூன்றடி உயரம் கொண்டது. இது அலங்கரிக்கப்பட்ட பிரபையுடன் ஒரே கிரானைட் கல்லால் ஆனது. பிரபையின் வளைவு இரண்டு தூண்களில் நிற்கிறது.
தசா ஹனுமான் கூப்பிய கைகளுடன் கிழக்கு நோக்கி நின்று தனது இரு உள்ளங்கைகளையும் ஒன்றாக இணைத்துள்ளார். இறைவனின் தாமரை திருப்பாதங்கள் தண்டை மற்றும் நூபுரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இறைவன் வேட்டியை கச்சம் வைத்து கட்டியுள்ளர். மௌஜா-புல்லினால் செய்யப்பட்ட மூன்று சரத்தினை கச்சையையின் மேல் அணிந்துள்ளார். அவரது இரு திருக்கரங்களும் கேயூரம், கங்கணம் அகியவற்றல் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவர் இரண்டு மணி மாலைகளை ஆபரணங்களாக அணிந்துள்ளார், அவற்றில் ஒன்று அவரது மார்புக்கு அருகில் உள்ளது, மற்றொன்று நீளமானது மற்றும் முழங்கால் வரை வருகிறது. இறைவனின் வால் அவரது தலைக்கு மேலே உயர்கிறது, அதன் முனை சற்று சுருண்டுள்ளது. வால் முனையிலும் ஒரு சிறிய மணி காணப்படுகிறது. இறைவன் தனது தோள்களைத் தொடும் குண்டலங்களை காதினில் அணிந்துள்ளார். அவரது பிரகாசமான கண்கள் பக்தன் மீது கருணையைப் பொழிகிறது.
அனுபவம்
இக்கட்டான காலங்களில் இந்த க்ஷேத்திரத்தின் பக்தர்களை இறைவன் ஆசிர்வதித்து
பாதுகாத்து வந்துள்ளார். எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் தைரியத்தை அருளும் இந்த க்ஷேத்திரத்தின் இறைவனின்
தரிசனம் அவரது பக்தர்களுக்கு வாழ்க்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது உறுதி.
தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு: நவம்பர் 2024