home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீமுக்யப்ராணா திருக்கோவில், ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி மடம், ஷாலிபண்டா, ஹைதராபாத்

ஜீகே கௌசிக்

ஸ்ரீமுக்யப்ராணா கோவில், ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி மடம், ஷாலிபண்டா, ஹைதராபாத்


ஹைதராபாத் ஷாலிபண்டா

ஸ்ரீமுக்யப்ராணா கோவில், ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி மடம், ஷாலிபண்டா, ஹைதராபாத்- 2017இல் தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் மிகவும் பிரபலம் சார்மினார். சார்மினார் அருகே இருக்கும் ஒரு இடம் ஷாலிபண்டா என்று அழைக்கப்படும் ஷா-அலி-பண்டா ஆகும். இந்த இடத்தைப் பற்றிய தகவலுக்கு நீங்கள் விக்கியைப் பக்கங்களில் பார்த்தால், இது மத நல்லிணக்கம் இல்லாத இடமாக கூறப்பட்டிருக்கும். அதற்கு மேல் எதுவும் சொல்லியிருக்கமாட்டார்கள். ஆனால் எல்லா இடத்திற்கும் ஒரு வரலாறு உள்ளது போல் இந்த இடத்திற்கும் ஒரு சொந்த வரலாறு உள்ளது. அந்தக் காலத்தின் பல பிரபுக்களும், நவாபின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களும், சனாதன தர்மத்தைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்த இடமாக இது இருந்திருக்கிறது.

இவ்விடத்தில் பல ஆண்டுகளாக, அன்றைய ஆட்சியாளர்களின் சம்மதத்துடன் பல கோயில்கள் பல்வேறு மக்களால் கட்டப்பட்டு இருந்திருக்கிறது. மூசி நதியினை ஒட்டி உருவாக்க பட்ட இந்நகரத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. இப்போதும் கூட இவ்வாற்றங்கரையில் முன்னூறு நானூறு ஆண்டுகள் பழமையான பல கோயில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தில் வாழ்ந்த, நிஜாமுக்கு சேவை செய்த உன்னத குடும்பங்களின் அரண்மனை வீடுகளை "தியோதி"கள் என்று அழைப்பார்கள். ஷா அலி பண்டா பகுதியில் கட்டப்பட்ட பெரிய "தியோதி"கள் இந்துகளுடையது. தியோதிகளின் பெரிய விஸ்தீரமானப் பகுதிகளில் அவர்கள் சொந்த கோவில்கள் இருந்தன. "ஷாலிபண்டா" என்று அழைக்கப்படும் பகுதியில் பிரபுக்களைத் தவிர, இந்துக்களாகிய பொது மக்களும் இருந்தனர். இந்த பகுதியில் குறிப்பாக "லால் தர்வாஜா" என்ற பகுதியில் இவர்களால் கோவில்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

லால் தர்வாஜா

ஸ்ரீமுக்யப்ராணா கோவில், ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி மடம், ஷாலிபண்டா, ஹைதராபாத்- 2020இல் அந்த நாட்களில் ஹைதராபாத் நகரத்தை சுற்றி சுவர் எழுப்பப்பட்டு கோட்டை கட்டப்பட்டு இருந்தது. தற்போதைய ஹைதராபாத் பழைய நகரத்தின் பகுதியைச் சுற்றி இருந்தது இக்கோட்டை சுவர். நகரைச் சுற்றிலும் ஏராளமாகக் கிடைக்கும் பெரிய கிரானைட் கற்களால் கோட்டை சுவர் சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் எழுப்பபட்டிருந்தது. பல்வேறு பகுதிகளில் சுமார் 18 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது இச்சுவர். இப்படி இந்த பெரிய சுவரால் பாதுகாக்கப்பட்ட நகரம் பதின்மூன்று நுழைவாயில்களைக் கொண்டிருந்தது, இதன் மூலம் நகரத்திற்கு நுழைவதற்கும் வெளிசெல்வதற்கும் அனுமதிக்கப்பட்டது.

அத்தகைய ஒரு நுழைவாயில் லால் தர்வாஜா [சிவப்பு கற்களால் செய்யப்பட்ட நுழைவாயில்] ஆகும். நுழைவாயில் தற்போது இல்லை என்றாலும், இந்த நுழைவாயில் இருந்த இடமும் இதை சுற்றிய பகுதியும் இன்றும் லால் தர்வாஜா பகுதி என்றே அழைக்கப்படுகிறது. இன்று லால் தர்வாஜா "போனம்" என்று அழைக்கப்படும் திருவிழாவுடன் மூலம் பிரபலம். இந்த திருவிழா சிம்மவாஹினி மகாகாளி கோவிலின் பிரதான தெய்வத்திற்கு நன்றி செலுத்தும் நிகழ்வுகளாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கடந்த நானூறு ஆண்டுகளாக கோல்கொண்டாவில் நடந்து வரும் "போனம்" திருவிழாவின் முன் மாதிரியாக கொண்டு இங்கு லால்தர்வாஜாவில் கிட்டத்தட்ட நூற்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆறாவது நிஜாம் மிர் மஹ்பூப் அலிகான் 1905 ஆம் ஆண்டு லால் தர்வாஜாவில் உள்ள கோவிலுக்கு நிலத்தை நன்கொடையாக வழங்கினார். நிஜாமின் பிரதம மந்திரி மஹாராஜா கிஷன் பெர்ஷாத் லால் தர்வாஜா மஹான்காளி கோவிலில் போனலுவை துவக்கி வைத்தார். கோல்கொண்டா கோட்டையில் கோயில் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட அக்கண்ணா மற்றும் மாதன்னா ஆகியோரின் நினைவாக இந்த கோயில் பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ முக்யபிராணா ஆலயம்

ஸ்ரீ பிரசன்ன அனுமான், ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி மடம், ஷாலிபண்டா, ஹைதராபாத் சிம்மவாஹினி மகான்காளி கோயிலைப் போலவே லால் தர்வாஜா பகுதியில் பல கோயில்கள் உள்ளன. அவற்றில் பல மிகவும் பழமையானவை சுமார் முந்நூற்று நானூறு ஆண்டுகள் பழமையானவை என அறியப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு ஆலயம் ஸ்ரீ முக்யபிரானுக்கான ஆலயம்.

மத்வாச்சாரியாரின் தத்வமாகிய த்வைத தத்துவத்தைப் பின்பற்றும் பக்தர்கள் இந்த பகுதியில் வசித்து வந்தனர், அவர்கள் வசிக்கும் இடம் [பகுதி]அக்ரஹாரம் என்று அழைக்கப்பட்டது. அவர்கள் வழக்கம் போல் இந்த அக்ரஹாரத்தில் முக்யபிராணருக்கு ஆலயம் அமைத்து வழிபட்டனர். கோயில் எப்போது கட்டப்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை, ஆனால் குறைந்தது இருநூற்று ஐம்பது ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பழமையானதாகக் கூறப்படுகிறது.

காலங்காலமாக ஆலயம் அவர்களின் சமய நடவடிக்கைகளுக்கான மையமாக மாறியது. பல்வேறு மத்வ மடங்களின் தலைவர்கள் பலர் இந்த கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இன்று லால் தர்வாஜாவில் உள்ள இந்த கோவில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி கோவில் என்று அழைக்கப்படுகிறது.

கோவில் வளாகம்

ஸ்ரீமுக்யப்ராணா கோவில், ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி மடம், ஷாலிபண்டா, ஹைதராபாத்- 2020இல் அப்போதைய மத்வ அக்ரஹாரத்தின் மையத்தில் ஸ்ரீ முக்யபிராணர் கோவில் உள்ளது. சற்றே உயர்வான மேடையின் ஒரு பகுதியில் பதினான்கு தூண்கள் கொண்ட மண்டபம் கிழக்கு நோக்கி உள்ளது, மேடையின் மேற்குப் பகுதியில் கர்ப்பகிரஹம் உள்ளது. கர்ப்பகிரஹத்திற்கு முன்னால் திறந்த வெளியுள்ளது. சுற்றிலும் இரண்டு அடி சுற்று பாதையையும் உள்ளது. மேடைக்கு முன் கர்ப்பகிரஹத்திற்கு எதிரே த்வஜ ஸ்தம்பம் உள்ளது. மேடையைச் சுற்றி பத்து அடி திறந்தவெளி மற்றும் மூடப்பட்ட நடைபாதை [ஹால்வே] கோயிலைச் சுற்றி ஓடுகிறது. சுற்றிலும் மரங்கள் இருப்பதால் வளாகம் மிகவும் குளுமையாக இருக்கிறது. கோவில் வளாகம் பெரியதாகவும் மற்றும் மிகவும் அமைதியாகவும் உள்ளது, இதனால் தியானத்திற்கு இனிமையான சூழ்நிலையை தருகிறது.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி கோவில்

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலின் கர்ப்பகிரகத்தில், ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தரின் மிருத்திகா பிருந்தாவனம் ஸ்ரீ முக்யபிராண தேவருக்குப் பக்கத்தில் நிறுவப்பட்டது. சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு உத்தராதி மடத்தின் 37வது பீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ சத்யஞான தீர்த்தருவின் மிருத்திகா பிருந்தாவனம் ஸ்ரீ ஸ்ரீ சத்ய பிரமோத தீர்த்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஜனவரி 2020 இல், கர்ப்பகிரகம் கிரானைட் தளம் அமைத்து புதுப்பிக்கப்பட்டது. அப்போது ஸ்ரீ ராம பரிவார தெய்வங்களும் இக்கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ சத்யாத்ம தீர்த்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மேலே உள்ள அனைத்து புனித தெய்வங்களையும் கிரபக்ரஹாவில் காணலாம், மேலும் இந்த வளாகத்தில் கணியூர் மடத்தின் 25 வது துறவியான ஸ்ரீ வித்யாபதி தீர்த்தரின் மிருத்திகா பிருந்தாவனமும் உள்ளது. மேலும், கோவிலின் வடக்கு வெளி மாடத்தில் ஸ்ரீ பிரசன்ன அனுமனுக்கு சந்நிதி உள்ளது.

ஸ்ரீ முக்யபிராணா

ஸ்ரீ ஆஞ்சநேயரின் மூர்த்தம் கிட்டத்தட்ட நான்கு அடி உயரம் கொண்டது. அஞ்சலி முத்திரையில் கூப்பிய கைகளுடன் தசா ஆஞ்சநேயராக நின்ற நிலையில் இறைவன் காட்சியளிக்கிறார். அவருடைய இரண்டு தாமரை பாதங்களும் நூபுரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவரது வால் அவரது இடது பாதங்களுக்கு அருகில் காணப்படுகிறது. இறைவன் கௌபீனம் அணிந்து காட்சியளிக்கிறார். அவரது கைகளில் மணிக்கட்டில் கங்கணமும், மேல் கரத்தில் கேயூரமும் அணிந்துள்ளார். அவரது பரந்த மார்பில் யக்ஞோபவீதம் காணப்படுகிறது. தலைக்கு மேல் ஒரு சிறிய கிரீடம் காணப்படுகிறது. இறைவன் காதில் குண்டலம் மற்றும் கர்ண புஷ்பம் அணிந்துள்ளார். இறைவனின் பிரகாசமான கண்கள் பக்தர்களை நேரடியாகப் பார்க்கின்றன மற்றும் அவரது கடாஷத்தின் மூலம் முடிவில்லாத ஆசீர்வாதங்களை வழங்குகின்றன.

 

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி மடம், ஷாலிபண்டா, ஹைதராபாத்"

 

அனுபவம்
அமைதியும் சாந்தமும் உங்களை வரவேற்கும் இந்த க்ஷேத்திரத்திற்குள் நுழையுங்கள், க்ஷேத்திர இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் மற்றும் மகான்களின் ஆசீர்வாதங்களை வெகுவாக எடுத்துச் செல்லுங்கள்.      

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு:  நவம்பர் 2023


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+