home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோவில், தெற்கு வாசல், மைசூர் அரண்மனை, மைசூர்

ஸ்ரீ காத்யாயினி பிரியன்

வராஹ வாசல், மைசூர் அரண்மனை, மைசூர்

மைசூர்

முந்தைய நாட்களில் அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய பிறகு, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பணி ஓய்வுக்குப் பிறகு ஆரோக்கியமான இடத்தில் நாட்களை அமைதியாகக் கழிக்க நினைப்பார். அந்த இடத்தில் கிடைக்கும் மருத்துவ வசதி, குழந்தைகளுக்குக் கல்வி வசதி போன்றவற்றை பற்றியும் யோசிப்பார். பலருக்கு, புனே, இந்தூர், கந்த்வா, பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர் ஊர்களின் பெயர் தான் முதலில் தோன்றும். சம்பந்தப்பட்ட நபரின் தனிப்பட்ட விருப்பங்களில் இன்னும் சில ஊர்களும் இருக்கும்.

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோவில், வராஹ வாசல், மைசூர் அரண்மனை, மைசூர் தெற்கில் பலர் பணி ஓய்வுக்குப் பிறகு சிறந்த இடம் பெங்களூர் என்பார்கள். சுதந்திரத்தின் தொடக்கத்தில் பெங்களூர் ஒரு தொழில் நகரமாக மாறிய பிறகு, மைசூர், அடுத்த மிகவும் பிரபலமான இடமாகவும் மாறியது. மைசூர் ஒரு வளமான கலாச்சாரம் கொண்ட நகரம், இதற்கு முந்தைய மகாராஜாக்களின் பாரம்பரியத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ­­­­இப்போதும் நகரத்தில் வாழ்வது எளிது. இந்த நகரம் அங்கு வாழும் மக்களின் எளிமைக்கு பெயர் பெற்றது. மொத்தத்தில் அமைதியை விரும்பும் நகரம். நகரம் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. சாமுண்டி மலைகள் நகரின் பின்னணியாக அமைய, இதன் மூலம் நகரத்தின் அழகு மேலும் அதிகரிக்கிறது. நகரம் சிறந்த கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை கொண்டது என்பது மேலும் சிறப்பு.

இந்த நகரம் பழைய கோட்டையைச் சுற்றி கட்டப்பட்டுள்ளது - தற்போது மைசூர் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது.

மைசூர் அரண்மனை

அரண்மனை வளாகத்தை பார்க்க வரும் எந்தவொரு பார்வையாளரும் அரண்மணையின் பிரமாண்டம், கட்டமைப்பு, வடிவமைப்பு கண்டு ஆச்சரியப்படுவார். கட்டிடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளின் நன்கு பராமரிக்கப்படும் தோட்டங்கள் அரண்மனைக்கு மேலூம் அழகு சேர்க்கிறது.

பிரதான அரண்மனை வளாகம் 245 அடி நீளமும் 156 அடி அகலமும் கொண்டது. அரண்மனைக்கு நான்கு நுழைவாயில்கள் உள்ளன: கிழக்கு வாசல் - முன் வாயில், தசராவின் போது மட்டுமே திறக்கப்படும், அதுவும் பிரமுகர்களுக்கு மட்டுமே. பிரம்மபுரி வாயில் என்னும் மேற்கு வாயில் - அரச குடும்பத்தினருக்கு மட்டும். தெற்கு வாசல் மற்றும் வடக்கு வாசல் பொதுமக்களுக்கு திறந்திருக்கும். மற்ற சில வாயில்கள் உள்ளன அவை குறிப்பிட்டப் பயன்பட்டுக்காக மட்டும், அவை பொதுமக்களுக்குத் திறக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் பார்வையாளர்கள் வடக்கு வாயில் அல்லது தெற்கு வாயில் வழியாக நுழையலாம்.

மைசூர் அரண்மனை வாயில்கள்

இந்த வாயில்கள் அவை அமைந்துள்ள திசையின் அடிப்படையில் பிரபலமாக பெயரிடப்பட்டாலும், அரண்மனையின் ஒவ்வொரு வாயில்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பெயர் உள்ளது. வடக்கு நுழைவாயிலில் இரண்டு வளைவுகள் உள்ளன - ஒவ்வொன்றும் தனித்தனி வாயில்கள் - இந்த வாயில்கள் ஜெயராம மற்றும் பலராம வாயில்கள் என்று அழைக்கப்படுகின்றன. கிழக்கு வாசல் ஜெயமார்த்தாண்ட வாசல் என்று அழைக்கப்படுகிறது. மேற்கு வாசல் பிரம்மபுரி வாசல் என்று அழைக்கப்படுகிறது. தெற்கு வாசல் வராஹ வாசல் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாயில்கள் மட்டுமல்ல; மற்ற வாயில்களுக்கும் குறிப்பிட்ட பெயர்கள் உள்ளன - வெளிப்படையாக சில காரணங்களால். தெற்கு வாசல் ஏன் "வராஹ வாசல்" என்று அழைக்கப்பட வேண்டும் என்பது சுவாரஸ்யமானது. வாயிலுக்கு அருகில் ஸ்ரீ வராஹ மூர்த்திக்கு கோவில் இருப்பதால்தானே? ஆராய்வோம்.

வராஹ ஸ்வாமி

மகாவிஷ்ணு சமஸ்கிருதத்தில் ‘வராஹா’ என்ற பன்றியின் வடிவில் அவதாரம் எடுத்ததை நாம் அனைவரும் அறிவோம். ஹிரண்யாக்ஷன் என்ற அரக்கன் தன்னால் திருடப்பட்ட 'பூமியை' வைத்திருந்த ஆதிகால நீரிலிருந்து பூமியை மேலே கொண்டு வர அவர் இந்த அவதாரத்தை எடுத்தார். மகா விஷ்ணு, ஹிரண்யாக்ஷனைக் கொன்றதன் மூலம் பூமியின் தாய் - மா பூமா தேவியை மீட்டு, பிரபஞ்சத்தில் அவளது சரியான இடத்திற்கு மீட்டெடுத்தார்.

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோவில், வராஹ வாசல், மைசூர் அரண்மனை, மைசூர் அக்னி புராணம், நாரத புராணம், பாகவத புராணம், ஸ்கந்த புராணத்தின் வெங்கடாசல மகாத்ம்யம், கருட புராணம் அனைத்தும் ஸ்ரீ வராஹ ஸ்வாமி வழிபாட்டைப் பற்றி பேசுகின்றன. மோட்சம் (விடுதலை) உட்பட பல பலன்களைத் தவிர, ஸ்ரீ வராஹா இறையாண்மை, செழிப்பு, எதிரிகளை ஒழிப்பதாக பலர் கூறுகின்றனர். வராஹா பூமியின் பாதுகாவலனாக இருப்பதை இங்கே காணலாம். எனவே மன்னர்கள் தங்கள் பிரதேசத்தின் பாதுகாவலராக ஸ்ரீ வராஹ ஸ்வாமியை வழிபட்டனர்.

வைணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றிய பல மன்னர்கள் ஸ்ரீ மகாவிஷ்ணுவை ஸ்ரீ வராஹ மூர்த்தியாக வழிபட்டனர். அவர்களில் பலர் தங்கள் ஆட்சிக் காலத்தில் ஸ்ரீ வராஹ மூர்த்திக்காக கோயிலைப் புதுப்பித்துள்ளனர். குப்தர்கள் காலத்திலிருந்தே ஸ்ரீ வராஹ மூர்த்திக்கு பாரத வர்ஷத்தில் பல கோவில்கள் உள்ளன. ஆந்திராவின் திருப்பதி- திருமலையில் உள்ள ஸ்ரீ வராஹ ஸ்வாமி கோயில், மற்றும் தமிழ்நாட்டின் ஸ்ரீமுஷ்ணம் ஆகியவை மிகவும் புனிதமாகக் கருதப்படுகின்றன. எனவே, மன்னர்கள் பூவராஹ சுவாமிக்கு வழிபடுவதில் ஆச்சரியமில்லை. மைசூர் உடையார்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ஸ்வேதா வராஹஸ்வாமி கோவில்

சிக்க தேவராஜ உடையார் (1672-1704) மைசூர் மகாராஜாவாக இருந்தார், அவருடைய காலத்தில் ஸ்ரீரங்கப்பட்டினம் தலைநகராக இருந்தது. அவர் தனது தலைநகரில் ஸ்ரீ வராஹஸ்வாமிக்கு கோவில் கட்ட திட்டமிட்டார். அவர் ஸ்ரீமுஷ்ணத்திற்குச் சென்று, க்ஷேத்திரத்தின் ஆச்சார்யர்களின் ஆசீர்வாதத்துடன், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கட்டப்படும் கோவிலுக்கு ஸ்வேத வராஹஸ்வாமியின் விக்ரஹத்தைப் பெற்றார். பின்னர் அவர் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஸ்ரீ ஸ்வேதா வராஹஸ்வாமிக்கு ஒரு கோயிலைக் கட்டினார், மேலும் அவர் கோயிலுக்கு உற்சவ மூர்த்திகளையும் செய்தார். இக்கோயிலின் "உற்சவ மூர்த்தி"யில் சிக்க தேவராஜ உடையார் நன்கொடை அளித்ததாகக் கல்வெட்டு உள்ளது.

மைசூர் ஸ்வேதா வராஹஸ்வாமி கோவில்

ஆங்கிலேயர்களால் திப்பு சுல்தானை தோற்கடித்த பிறகு, 1799 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி மகாராணி லக்ஷ்மி அம்மனி தேவி அரியணையை உடையார்களிடம் திரும்பப் பெற முயற்சி எடுத்தார். அதன் விளைவாக ஐந்து வயது மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார் மகாராஜாவாக ஆக்கப் பட்டார். நிர்வாகத்தில் உதவுவதற்காக பூர்ணய்யா என்பவர் திவானாக நியமிக்கப் பட்டார். அதன்பின் தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டினத்திலிருந்து மைசூருக்கு மாற்றப்பட்டது.

ஐந்து வயது மூன்றாம் கிருஷ்ண ராஜ உடையார் அவர்களின் முடிசூட்டு விழா வெலிங்டன் பிரபு தலைமையில் லட்சுமிரமண சுவாமி திருக்கோயிலில் நடந்தது. உடையார்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டபோது அரண்மனை வளாகத்தின் நிலை பரிதாபமாக இருந்தது. அரண்மனை வளாகத்தில் வேறு கண்ணியமான இடம் இல்லாமையினால் முடிசூட்டு விழா இங்கு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராணி லட்சுமி அம்மனி தேவி - மூன்றாம் கிருஷ்ண ராஜ உடையாரின் பாட்டி - திவான் பூர்ணய்யாவின் திறமையான உதவியுடன் செய்த முதல் காரியம், அரண்மனைக்கு பாதுகாப்பை வழங்கும் நோக்கில் தென்மேற்கில் ஸ்வேத வராஹஸ்வாமி கோவிலைக் கட்டியதுதான். இதற்காக ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்த ஸ்ரீ ஸ்வேத வராஹஸ்வாமி சிலைகளை மாற்றினர். நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிக்க தேவராஜ உடையார் கட்டிய கோயில் திப்பு சுல்தானால் அழிக்கப்பட்டது. ஷிமோகா மாவட்டத்தில் இடிந்த நிலையில் இருந்த ஹொய்சாள பாணியில் கட்டப்பட்ட கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட இடிபாடுகளைக் கொண்டு அவர்கள் இக்கோயிலைக் கட்டினார்கள். மகாராணி லக்ஷ்மி அம்மனி தேவி மற்றும் திவான் ஸ்ரீ.பூர்ணய்யா ஆகியோரின் முயற்சியால் 1809 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்வேத வராஹ ஸ்வாமிக்கு கோவில் இங்கு கட்டப்பட்டது. இது முதன்மையாக மைசூர் இராச்சியத்திற்கு இறையாண்மை, செழிப்பு மற்றும் அரசின் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பை வழங்குவதற்கான நோக்கத்துடன் செய்யப்பட்டது.

மூன்றாம் ஸ்ரீ கிருஷ்ண ராஜா உடையார், 1810 இல் தனது 16 வயதை அடைந்தவுடன் மைசூரூக்கு முழுமையான மகாராஜாவாக ஆனார். இருப்பினும், பாட்டியின் சேவையை 1810 இல் தனது பாட்டி இறந்ததும், 1812 இல் இறந்த பூர்ணய்யாவின் சேவையையும் இழந்தார் ராஜா இழந்தார்.

கன் ஹவுஸ் - இராச்சியத்தின் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் சேமிக்கப்பட்ட இடம் - தெற்கு வாயில் வழியாக குருகிய நேரத்தில் எளிதாக அணுகக்கூடிய இடத்தில் அமைக்கப் பட்டிருந்தது. எனவே தெற்கு வாயில் முக்கியமாக அரசின் பாதுகாப்பைப் பராமரிப்பதில் தொடர்புடையவர்களால் பயன்படுத்தப்பட்டது. மற்றவர்களுக்கு தெற்குப் பக்கத்தில் வேறு வாயில் இருந்தது.

திவான் பூர்ணய்யாவும் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலும்

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி, வராஹ வாசல், மைசூர் அரண்மனை, மைசூர் ஹொய்சாளர்கள் நுணுக்கமான கல் வேலைபாடுகள், மற்றும் கல் சிலைகள் கொண்ட, நேர்த்தியான கட்டுமானத்தில் கோயில்களை வடிவமைப்பதில் பெயர் பெற்றவர்கள். அவர்கள் கட்டிய நகரங்கள் மையத்தில் ஒரு கோயிலை அமைப்பார்கள், கோயிலைச் சுற்றியுள்ள நான்கு முக்கிய திசைகளில் தெருக்களை அமைத்தும் நகரத்தை திட்டமிடுவார்கள் என்பது பிரபலம். நான்கு வீதிகளின் முடிவிலும் உள்ள ஒவ்வொரு வாயில்களிலும் ஆஞ்சநேயர் சிலைகளை அமைப்பது அவர்களின் அடையாளமாக இருந்தது. அவர்களின் ஆட்சியின் போது, ​​ஹொய்சாலர்கள் தங்கள் பேரரசு முழுவதும் 1500 க்கும் மேற்பட்ட கோயில்களைக் கட்டியுள்ளனர், அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன. ஹொய்சாலர்கள் சைவ, வைணவப் பிரிவுகளையும் சமணத்தையும் அங்கீகரித்துள்ளனர்.

மைசூரில் உள்ள ஸ்ரீ ஸ்வேத வராஹா கோயிலைக் கட்டுவதற்காக ஷிமோகாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கோயில் இடிபாடுகளில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் சிலையும் இருந்தது. அன்றைய மன்னர்களின் வழக்கம் போல், கோட்டை புதிதாக கட்டப்படும்போது அல்லது புதுப்பிக்கப்படும்போது, ​​நான்கு திசைகளிலும் ஸ்ரீஆஞ்சநேயரை நிறுவுவார்கள். ஸ்ரீ ஆஞ்சநேயர் ஒரு பாதுகாவலராகவும், எதிரிகளை கண்காணிப்பவராகவும் கருதப்படுகிறார், எனவே இந்த நடைமுறை. விஜயநகர சாம்ராஜ்யத்திலிருந்து ஆட்சி செய்ய அதிகாரங்களைப் பெற்ற ஏறக்குறைய அனைத்து ராஜ்யங்களும் இதை நடைமுறைப்படுத்துவதை நாம் காணலாம். அதில் மைசூர் இராஜியமும் ஒன்று.

ஸ்ரீ பூர்ணய்யா அவர்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரின் பக்தராக இருந்தார், மேலும் அவர் மைசூர் சுல்தான்கள் மற்றும் மகாராஜாக்களுக்கு அவர் சேவை செய்த போது அவர் சென்ற பல்வேறு இடங்களில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு கோயில்கள் கட்ட உதவினார் அல்லது ஸ்ரீ முக்ய பிராணன் கோயில்களை புதுப்பிக்க உதவினார். ஷிமோகாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயரின் சிலையை மைசூர் பாதுகாப்பு வாசலில் வராஹ வாயில் [தற்போது தெற்கு வாசல் என்று அழைக்கப்படுகிறது] நிறுவ அவர் திட்டமிட்டிருந்தார். ஸ்ரீ பூர்ணய்யா ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு கட்டிய கோயில்களில் அனேகமாக இதுவே கடைசியாக இருக்கும். மைசூரில் அவரால் கட்டப்பட்ட மற்றொரு ஸ்ரீ ஹனுமான் கோவிலை பற்றிய விவரங்களை, எங்கள் “திவான் பூர்ணய்யா சௌல்ட்ரி” கட்டுரையில் பார்க்கவும்.

தெற்கு வாசலில் ஸ்ரீ.பூர்ணய்யா அவர்களால் கட்டப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு கோயில் உள்ளது. அங்குள்ள ’கியோஸ்’க்குகளுக்குப் பின்னால் தெற்கு வாசல் வழியாக உள்ளே வரும் பார்வையாளர்களை போலீஸ்காரர் சோதனை செய்கிறார். அதன் அருகாமையில் இருக்கிறது இக்கோயில். பார்வையாளர்கள் பொதுவாக இந்த கோவிலை கவனிக்க தவறிவிடுவார்கள், கூர்ந்து கவனிக்காத வரை. கோயிலை காலையில் அர்ச்சகர் பூஜைகளுக்காக பத்து நிமிடங்களுக்கு திறக்கிறார் என்பதையும், பூஜைக்கு நிலையான நேரம் இல்லை என்பதையும் பக்தர்கள் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி, வராஹ வாசல், மைசூர் அரண்மனை, மைசூர் அற்புதமான, கம்பீரமான மற்றும் பிரம்மாண்டமான ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலை. ஒரே ஒரு பார்வை, பக்தன் அவரிடம் சரணடைவது உறுதி. அனைத்து கலைத் திறனுடனும் செதுக்கப்பட்ட சிற்ப வேலைகள் நிறைந்த, அற்புதமான சிலை அபிமானத்திற்குரியது. ஹொய்சாள வேலைப்பாடுகளின் சிறப்பம்சங்கள் அங்கிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலையில் தெளிவாகத் தெரிகின்றது.

சுமார் இருபது அடி உயர மூர்த்தத்தில் இறைவனின் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இறைவன் சற்று உயரமான மேடையில் நின்றிருக்கிறார். அபிஷேக நீர் முழுவதும் சிந்தாமல், சீராக வெளியேற எதுவாக அம்மேடையில் ஒரு வாய்கால் செதுக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலையை ஒரு புடைப்பு சிலை என்றாலும் சிற்பி தனது திறனால் சிலை முழுச் சிலை போல முப்பரிமாண விளைவை மிக அழகாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் தாமரை திருப்பாதங்களை கணுக்காலுக்கு சற்று மேலே 'தண்டை'- [பாதவலய] அலங்கரிக்கிறது. எந்த வேலைபாடும் இல்லா ஒரு எளிய நூபூரமும் [பதாசரஸ்] காணப்படுகிறது. அவரது இடது ஆடுதசையினை ஒரு அலங்கார ஆபரணம் இறுக்கமாகப் பிடித்துள்ளது. ஒரு மல்யுத்த வீரர் அணிவது போல் இடுப்பில் கௌபீனம் - லங்கோடு அணிந்துள்ளார். அதற்கு மேல் இடுப்பில் நாபி அருகில் ஒரு முடிச்சுடன் இருக்கும் துணி [ஊருதாமா] அவரது தொடையை மூடிய மாதிரி அத்துணியின் முனைகள் கீழ்நோக்கி பாய்கின்றன. அவர் தனது இடுப்பில் காஞ்சி எனப்படும் தட்டையான அகன்ற அலங்கார ஆபரணத்தை அணிந்துள்ளார். மோதிரம் மாதிரியான வளையங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இறைவனின் வலிமையான வால் [லாகூலம்] அவரது தலைக்கு மேல் உயர்ந்து காணப்படுகிறது. வால் முனை சுருண்டு ஒரு சிறிய மணியுடன் காணப்படுகிறது. அகன்ற மார்பினை யக்ஞோபவீதம் மற்றும் மணிகளால் ஆன இரண்டு மாலைகள் அலங்கரிக்கின்றன. அவர் தனது இரண்டு திருக்கர மணிக்கட்டுகளிலும் கங்கணம் எனப்படும் கடா அணிந்துள்ளார். அவரது மேல் திருக்கரத்தில் அவர் அங்கதம் என்றும் அழைக்கப்படும் பஹுவலயத்தை அணிந்துள்ளார். அவரது பரந்த தோள்கள் புஜவலயத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவரது வலது கரம் 'அபய முத்திரை' காட்டுகிறது, அவரது இடது கையில் இறைவன் சௌகந்திகா புஷ்பத்தை வைத்திருக்கிறார்.

அவரது அமைதியான சிரிக்கும் முகம் [பிரசன்ன வதனம்] அமைதியைப் பரப்புகிறது. கனிந்த கன்னமும் தாடையும் ஸ்ரீ அனுமனின் ரம்யமான தோற்றத்திற்கு அழகு சேர்க்கிறது. அவரது நீண்ட கூந்தல் நேர்த்தியாகப் பின்னப்பட்டு கேசபந்தாவால் பிடிக்கப்பட்டிருந்தது. பின்னல் மிக நீளமாக இருப்பதால், அது மடிந்திருப்பதைக் காணலாம். நீண்ட புருவத்தின் கீழ் அவரது மூடிய கண்கள் இறைவன் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் காட்டுகிறது. மூடியிருந்தாலும் மௌனமாக பல விஷயங்களை பக்தர்களுக்கு எடுத்துரைக்கின்றனர். ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி பிரம்ம தத்வத்தைப் பற்றி மௌனமாக விளக்குவது போல, இங்கே இந்த ஸ்ரீ ருத்ராவதார மூர்த்தி, பக்தனுக்கு வரும் கவலைகள் அனைத்தையும் அமைதியாக நிவர்த்தி செய்கிறார். இந்த இறைவனின் முன் நின்று உங்கள் பிரச்சனைகளுக்கு விடை பெற்று, இலகுவான உள்ளத்துடன் திரும்பிச் செல்லுங்கள்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஆஞ்சநேய சுவாமி கோவில், தெற்கு வாசல், மைசூர் அரண்மனை"

 

அனுபவம்
எதிரிகளை அழிப்பவனும், பிரதேசத்தைக் காப்பவனுமான ஸ்ரீ அனுமனை தரிசனம் செய்யுங்கள். சில நிமிடங்கள் அவர் முன் நிற்கவும் - இறைவனின் மந்திரக்கோல் உங்கள் மீது வேலை செய்வதை உணருங்கள். உங்கள் மனதில் உள்ள அனைத்து எதிரிகளும் மறைந்துவிடுவார்கள். மேலும் நீங்கள் உங்கள் வரையறையும் எல்லையையும் உணர்ந்து 'பூர்ணா'வாக இருக்கக்கூடிய நிலை பெறுவீர்கள்.       

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு:  ஆகஸ்ட் 2024


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+