home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

கூகிள் வழிகாட்டி வரைப்படம்: ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், திவான் பூர்ணையா சத்திரம், மைசூர்


ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், திவான் பூர்ணையா சத்திரம், மைசூர்

ஜி.கே.கௌசிக்


மைசூர்/மைசூரூ

மைசூர் - மிகவும் எளிமையான படாடோபமில்லா நகரம். மைசூர் மிகவும் எளிமையான படாடோபமில்லா நகரம். கலாசாரம் மிக்க, மிகவும் நல்மனம் கொண்டோர் வசிக்கும் நகரம். இன்றும் நகரம் ஆடம்பரம் மிகுதியில்லாமல் தான் காணப்படுகிறது. நகரத்தின் எளிமை, உள்ளூர்வாசிகளின் நேர்மை, அவர்களின் பழக்கவழக்கங்களில் எளிமை இவைகள் நகரத்தின் பெருமையை கூட்டுகிறது. நகரம் இயற்கையாகவே துப்புரவாக இருக்கிறது. சாமுண்டி மலையை பின்னனியாக கொண்டு மைசூர் அமைந்திருப்பதால் நகரத்தின் அழகு கூடுகிறது.

பழைய காலம் முதல் மகாராஜாவின் அரண்மனை இருக்கும் கோட்டையை மய்யமாகக் கொண்டு மைசூர் இருந்தது. இதனை கில்லா மொஹல்லா அல்லது போர்ட் மொஹல்லா என்று அழைக்கப்பட்டு வருகிறது. அக்காலத்தில் கோட்டையும் அரண்மனையும் மண்ணாலும், மரத்தாலும் அமைக்கப்பட்டிருந்தன. சுற்றியிருந்த வீடுகளும் அப்படியே. அன்று ஜனதொகையும் அவர்களின் தேவையும் மிகவும் குறைவே.

தலைநகரம் மாற்றம்

முதலில் மைசூர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்தது. விஜயநகர பேரரசு சிதைந்த போது, மைசூர் ராஜ்யத்தின் அரசராக முதலாம் ராஜா உடையார் இருந்தார், அவர் மைசூரை சுயச்சை அரசாக அறிவித்தார். தனது தலைநகரை மைசூரிலிருந்து ஶ்ரீரங்கபட்டிணாவிற்கு மாற்றி அமைத்தார். ஶ்ரீரங்கபட்டிணா தீவாக காவேரி நதியால் சூழப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறது என்பதாலும் இது இராணுவத் தாக்குதல்களுக்கு எதிராக இயற்கையாகவே பாதுகாப்பை வழங்கியது என்பதாலும் இவர் இதனை மைசூரின் தலைநகரமாக தேர்ந்தெடுத்தார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு திப்பு சுல்தானின் மறைவுக்கு பிறகு, திரும்பவும் உடையார்கள் அரசர்களான பிறகு தலைநகரத்தை ஶ்ரீரங்கபட்டிணாவில் இருந்து திரும்பவும் மைசூருக்கு மாற்றினார்கள். மைசூர் திரும்பவும் எழுச்சிப் பெற்றது. பழைய அரண்மனைக்கு பதில் புதிய அரண்மனை வடிவமைகப்பட்டு உருவாக்கப்பட்டது. இதனால் பழைய கோட்டை பகுதியில் இருந்த பழைய வீடுகள் இடிக்கப்பட்டு, கோட்டை பகுதிக்கு வெளியே புதிய விரிவாக்கங்கள் உருவாக்கப்பட்டு அங்கு மாற்றி அமைக்கப்பட்டன.

அக்ரஹாரம்

அக்ரஹாரம் என்பது வேத பண்டிதர்களுக்கும், பூஜாரிகளுக்குமான குடியிருப்பு பகுதி. கோட்டை மற்றும் அரண்மனை வளாகத்தை விரிவுபடுத்தியதனால், கோட்டை மொஹல்லாவில் வசிந்துவந்தவர்களை புதியதாக ஏற்படுத்தப்பட்ட அக்ரஹாரம் பகுதியில் இடமாற்றம் செய்யப்பட வேண்டியதாயிற்று. மூன்றாம் கிருஷ்ண ராஜா அவர்களும், திவான் பூர்ணையா அவர்களும் கோட்டை எல்லைக்கு வெளியே அக்ரஹாரம் என்னும் குடியிருப்பினை பண்டிதர்கள், பூஜாரிகள், வித்வான்கள் ஆகியோர்களுக்காக உருவாக்கினர்கள். பழைய தலைநகரமான ஶ்ரீரங்கபட்டிணாவிலிருந்து வந்த அரசாங்க அதிகாரிகளும் அக்ரஹாரத்தில் குடியேற்றப்பட்டனர்.

திவான் பூர்ணையா

பூர்ணையா மாத்வ சம்பிரதாயத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு பிறந்தவர். மிகவும் எளிமையான நிலையிலிருந்து முன்னேறி ஹைதர் அலி, திப்பு சுல்தான், மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் ஆகிய மைசூர் சாம்ராஜ்யத்தின் மூன்று மன்னர்களுக்கு மந்திரியாக [திவான்] இருந்திருக்கிறார். இவருடைய காலத்தில் தான் இவர் மூன்றாம் கிருஷ்ணராஜாவுடன் சேர்ந்து கோட்டையின் தெற்கில் அக்ரஹாரத்தை உருவாக்கினார்.

திவான் பூர்ணையா சத்திரம்

ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், திவான் பூர்ணையா சத்திரம், மைசூர் ஈகையுள்ளம் கொண்ட பூர்ணையா செய்துள்ள பல நற்பணிகளுக்கு பெயர் பெற்றவர். சனாதன தர்மத்தில் நம்பிக்கையுள்ள அவர் பல திருக்கோயில்களை சீரமைத்து புதிப்பித்துள்ளார், பல வேத சாஸ்திரம் நிபுணர்களுக்கு உதவியுள்ளார். அதன் நீட்டிப்பாக அக்ரஹாரம் உருவான பொழுது அதில் ஒரு சத்திரம் கட்டினார். மைசூருக்கு வரும் யாத்ரீகர்களுக்கும், வெளி மாநிலத்திலிருந்து வரும் வேத விற்பன்னர்களுக்கும் இது தங்கும் வசதியை அளித்தது. மைசூர் மகராஜா ஸம்ஸ்கிருத கல்லூரியில் கற்க வரும் மாணவர்களுக்கும் இங்கு தங்க அனுமதியிருந்தது. மிக பெரிய காடு மாதரியிருக்கும் இடத்தில் அரசாங்க யானைகளை கட்டி வைத்திருப்பார்கள், இவ்விடத்தை "ஆனே கோர்டி" என்று அழைப்பார்கள். இதனை ஒட்டி தான் பூர்ணையா சத்திரம் இருந்தது.

சத்திரத்தின் கோயில்கள்

கோயில்களை ஒட்டி சத்திரங்களும் அல்லது மாறாக சத்திரத்தை ஒட்டி கோயில்களும் கட்டுவது அக்கால வழக்கம். சாதாரணமாக அப்படிப்பட்ட சத்திரங்களில் யாத்ரீயர்களுக்கு உணவும் அளிக்கப்பட்டு வந்தது. முக்கியமாக விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்த அனேக ராஜ்யங்களில் இது நடைமுறையிலிருந்தது எனலாம். [சில தர்ம சிந்தனையுள்ள உள்ளங்களால் சமுதாயத்திற்கான நலன் கருதி திருமணம் செய்து வைக்க பொதுக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இவைகளை திருமண சத்திரம் என்று அழைப்பார்கள். நாம் அப்படிப்பட்ட சத்திரத்தைப் பற்றி நாங்கள் இங்கு பேசவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்].

ஶ்ரீ பூர்ணையா சத்திரம் - இன்று

அன்று அவர் கட்டிய சத்திரம் இன்று இல்லை. அன்றைய சத்திரத்தின் இடத்தின் ஒரு பகுதியில் இன்று ஜே.எஸ்.எஸ்.மருத்துவ மணை இருக்கிறது. சத்திரத்தின் சில பகுதி சாலை விஸ்தரிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்று மகாத்மா காந்தி ரோடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இறைவனின் அருளால் பூர்ணையாவினால் அன்று சத்திரத்தில் தங்கியிருந்தவர்களுக்காக கட்டப்பட்ட கோயில் அகற்றப்படவில்லை. இடிக்கப்படவில்லை. அகலமாக இருக்கும் எம்.ஜீ.ரோடு இந்த இடத்தில் இரண்டாக பிரிந்து சிறிது தூரத்தில் ஒன்று சேருகிறது, தற்சமயம் கோயில் ஒரு தீவு போன்ற திடலில் காணப்படுகிறது.

ஶ்ரீ பூர்ணையா சத்திரக் கோயில்கள்

ஶ்ரீஆஞ்சநேய சுவாமி, ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், திவான் பூர்ணையா சத்திரம், மைசூர் எம்.ஜீ.ரோட்டின் மத்தியில் காணப்படும் தீவுதிடலில் மிகவும் எளிமையாக காணப்படும் கட்டிடம் தான் அன்றைய சத்திரக் கோயில்கள். அக்காலத்தில் பல பண்டிதர்களால், வித்வான்களால், மாணவர்களால் பூஜிக்கப்பட்ட இரு சுவாமிக்கான திருக்கோயிலிது. எந்த வித ஆடம்பரமும் இல்லாமல், கோபுரம், விமானம் என்று படாடோபமும் இல்லாமல் மிகவும் எளிமையான தோற்றத்துடன் காணப்படுகிறது. அந்நல் மக்களால் செய்யப்பட்ட பிரார்த்தனைகளோ என்னவோ பூர்ணையா சத்திரத்தை இடித்த போதும் கோயிலை காப்பாற்றியிருக்கிறது. கிழக்கு நோக்கி இருக்கும் கோயிலில் இரண்டு சன்னிதிகள் பக்கம் பக்கமாக உள்ளன. ஒன்றில் ஶ்ரீசாமுண்டீஸ்வரியும் மற்றதில் ஶ்ரீஆஞ்சநேயரும் குடிக்கொண்டுள்ளனர். பூர்ணையா மைசூரின் க்ஷேத்திர தெய்வமான ஶ்ரீசாமுண்டீஸ்வரியையும், புதிய இராஜ்யம் உருவான சமையமான அந்நாளின் மக்களுக்கு தேவையாக இருந்த புத்தி, உடல் வலிமை, தைரியம், ஆரோக்கியம் ஆகியவற்றை அளிக்க வல்ல ஶ்ரீஆஞ்சநேயருக்கு ஒரு சன்னிதியும் அமைத்தார்.

ஶ்ரீ ஆஞ்சநேயர் சன்னிதி

ஶ்ரீஆஞ்சநேயர் சன்னிதி கோயிலின் முக்கிய சன்னிதியாகும். ஶ்ரீஆஞ்சநேய சுவாமியை கோயில் வெளியிலிருந்தே பக்தர்கள் தரிசனம் செய்யலாம். உள்ளே நுழைந்த உடன் பெரிய கூடம், முதலில் ஶ்ரீஆஞ்சநேயர் சன்னிதி, அடுத்து அதை ஒட்டி ஶ்ரீசாமுண்டீஸ்வரியின் சன்னிதி. வலம் வருவதற்கான பிரதக்ஷண பாதை இரு சன்னிதிகளை சுற்றி உள்ளது. விஸ்தாரமான இக்கூடத்தில் பக்தர்கள் தியானம் செய்யலாம். போக்குவரத்து நிறைந்த எம்.ஜீ.ரோடின் மத்தியில் அமைந்துள்ள இக்கோயிலின் உள்ளே எந்த விதமான சப்தமும் இல்லாமல் அமைதியாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ஶ்ரீ ஆஞ்சநேயர்

கிழக்கு நோக்கி நின்ற வண்ணம் காணும் பிரபு தனது இரு திருக்கரங்களையும் சேர்த்து ’அஞ்சலி’ முத்திரையில் வைத்துள்ளார். விக்ரஹம் கருங்கல்லில் திருவாச்சியுடன் வடிக்கப்பட்டுள்ளது. அவரது இரு திருப்பாதங்களையும் தண்டை, மற்றும் நூபுரம் அலங்கரிக்கின்றன. இடது முட்டிகாலுக்கு சற்று கீழ் அவர் அணிந்திருக்கும் அழகிய மணியுடன் கூடிய ஆபரணம் அவருடைய நிற்கும் தோரணைக்கு மேலும் அழகு சேர்க்கிறது. கச்சம் வைத்து அணிந்துள்ள வேட்டியை இடுப்பில் அணிந்திருக்கும் அலங்காரமான அணிகலம் பிடிப்பில் வைத்துள்ளது. அகன்ற மார்பினை மூன்று மணிமாலைகள் அழகுபடுத்துகிறது. தனது இரு திருக்கரங்களையும் குவித்து வைத்திருக்கும் நிலையில் இடது திருக்கரத்தில் மடிப்பில் சௌகந்திகா மலரை பிடித்து வைத்துள்ளார் [எங்கும் காணாத காட்சியிது]. இரு மணிகட்டிலும் கங்கணம் காணப்படுகிறது. மேல் கரத்தில் கேயூரம் அணிந்துள்ளார். அகன்ற தோள்களை ’புஜ வலயம்’ என்னும் அணிகலம் அலங்கரிக்கிறது. காதுகளில் குண்டலங்கள் உள்ளன, அவைகள் அவரது தோள்களை தொடுகின்றன. அவருடைய புன்னகையினால் அவரது ’கோர பல்’ தெரிகிறது. கனிந்த கன்னங்கள் மின்னுகின்றன. தனது பிரகாசமான கண்களால் காருண்யத்தை பொழிகிறார். அவரது சுருள் முடி முகத்தின் பக்கவாட்டில் பாய்வது போல் காணப்படுகிறது, இது பிரபுவின் எழிலான தோற்றத்திற்கு மேலும் செம்மையை சேர்க்கிறது. சுருண்ட வளைவுடன் முடியும் வால். வாலின் நுணியில் சிறிய மணி.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், திவான் பூர்ணையா சத்திரம், மைசூர்

 

அனுபவம்
இறைவன் முன் உட்கார்ந்து கண்களை மூடி பிராத்தியுங்கள். நீங்கள் எதுவும் கேட்க வேண்டாம். நீண்ட ஜபத்திற்கு பிறகு கண்களை திறக்கவும், பிரபுவை நோக்குங்கள், அவரது கண்களின் கடாக்ஷத்தினால் நீங்கள் நிறைவை உணர்வீர்கள். இதனினும் மேலாக உங்களால் ஏதாவது வேண்ட முடியுமா?  

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: மே 2021


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+