home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் சந்நிதி தெரு, காஞ்சிபுரம்

ஜிகே கௌசிக்

ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் சந்நிதி தெரு, காஞ்சிபுரம்

காஞ்சி ஸ்ரீ வரதராஜ சுவாமி கோவில்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்று ஸ்ரீ வரதராஜ சுவாமி கோவில். காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் மற்றும் காமாக்ஷி அம்மன் கோவில் ஆகியவற்றுடன் இந்த கோவில் மும்மூர்த்திவாசம் (மூவர் தங்குமிடம்) என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு விஷ்ணு பக்தரும் தனது வாழ்நாளில் தரிசிக்க விரும்பும் முக்கிய கோயில்களில் ஸ்ரீ வரதராஜ சுவாமி கோயிலும் ஒன்றாகும். அத்தி மரத்தில் செதுக்கப்பட்ட ஸ்ரீ வரதராஜ ஸ்வாமியின் உருவப் பிரதி "அத்தி வரதர்" ஆவார். இவர் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் குளத்தில் இருந்து வெளிப்பட்டு நாற்பத்தெட்டு நாட்களுக்கு பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார்.

ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் சந்நிதி தெரு, காஞ்சிபுரம் இக்கோயில் அனைத்து அரச வம்சத்தினரின் ஆதரவையும் பெற்றது. சோழர், பாண்டியர், கந்தவராயர், சேரர், காகத்தியர், சம்புவராயர், ஹொய்சாளர், விஜயநகர மன்னர்கள் எனப் பல அரசர்கள் தங்கள் காலத்தில் இக்கோயிலுக்குப் பல நன்கொடைகளையும், பல்வேறு நற்பணிகளும் செய்துள்ளனர்.

பல்வேறு தெய்வங்களுக்கான சந்நிதிகளைக் கொண்ட இக்கோயில் பரப்பளவில் மிகப் பெரியது. மண்டபங்கள் மற்றும் சந்நிதிகளின் சுவர்களில் சித்தரிக்கப்பட்டுள்ள ஸ்ரீமத் ராமாயண மற்றும் மகாபாரத காட்சிகள் கோவிலின் அழகை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கோயிலின் திருவிழாக்கள்

இக்கோயிலில் மாதந்தோறும் பெரும் உற்சவம் நடக்கும் போதும் பெருமாள் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். தமிழ் மாதமான வைகாசியில் [மே/ஜூன்] நடத்தப்படும் பிரம்மோத்ஸவம், புரட்டாசியில் [செப்டம்பர்/அக்டோபர்] நடத்தப்படும் நவராத்திரி விழா மற்றும் ஆவணி [ஆகஸ்ட்/செப்டம்பர்] ஸ்ரீ ஜெயந்தி விழா ஆகிய மூன்று விழாக்கள் புகழ்பெற்றவை. இந்த திருவிழாக்களில் பக்தர்கள் உற்சாகத்துடனும் கலந்து கொள்கின்றனர்.

இக்கோயிலின் பிரம்மோத்ஸவம் பற்றிய விவரங்களை நமது தளத்தின் "அனுமான் கோவில், கங்கைகொண்டான் மண்டபம், காஞ்சிபுரம்" பக்கத்தில் பார்க்கலாம்.

இந்த மஹா திருவிழாக்களில் ஸ்ரீ ஆஞ்சநேயர் இக்கோயிலின் பிரதான இறைவனால் அருள்பாலிக்கிக்க படுகிறார். பிரம்மோத்ஸவத்தின் போது ஸ்ரீ ஆஞ்சநேயரை அருளுவதற்காக கங்கைகொண்ட மண்டபம் வரை செல்கிறார். மேலும் நவராத்திரி மற்றும் ஸ்ரீ ஜெயந்தி விழாக்களில் சந்நிதி தெருவில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு அருள்பாலிக்கிறார்.

நவராத்திரி விழா

புரட்டாசி மாதத்தில் [செப்டம்பர்/அக்டோபர்] பத்து நாட்கள் நவராத்திரி விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. பின்னர் வரதராஜர் மற்றும் பெருந்தேவி தாயார் இருவரும் வெளிப் பிரகாரத்தில் உள்ள நூறு தூண்கள் கொண்ட மண்டபத்தில் கொலுவீற்று அருளுகிறார்கள். நவராத்திரியின் முதல் நாளில், தாயார் சன்னதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சனம் [புனித ஸ்நானம்] செய்யப்படுகிறது. மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கடாத்திரி கொண்டை உடுத்திய ஸ்ரீ தேவராஜப் பெருமாள் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு வந்து சேருகிறார்கள். ஸ்ரீஆஞ்சநேயருக்கு தரிசனம் அளித்துவிட்டு, மீண்டும் பிரதான கோயிலுக்குத் திரும்புகின்றனர். ராஜகோபுர வாசலில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் அவர்களுடன் இணைகிறார். பின்னர் ஆயிரம் தூண் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகின்றனர்.

ஸ்ரீ ஜெயந்தி விழா நாளில் உறியடி உற்சவம்

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு ஆவணி மாதத்தில் [ஆகஸ்ட்/செப்டம்பர்] இங்கு மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஸ்ரீ ஜெயந்திக்கு மறுநாள் “உறியடி” உற்சவம் நடத்தப்படுகிறது. பானைகளை வைப்பதற்கு வளையம் வீட்டின் கூரையிலிருந்து ஒரு வடம் மூலம் தொங்கவிடப்படுவதை தமிழில் "உரி" என்பர். ஸ்ரீ கிருஷ்ணர் வெண்ணெயைத் திருடிச் செல்வதைத் தடுக்க, கோபிகைகள் வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் வைத்து, அந்த பானையை “உரி”யில் தொங்கவிடுவார்கள். ஸ்ரீ கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் கோபிகாவின் வீட்டிற்குச் செல்வார்கள், ஸ்ரீ கிருஷ்ணர் தனது நண்பர்களை கொண்டு உருவாக்கிய மனித கோபுரத்தின் மீது ஏறி உரியில் இருந்து வெண்ணெய் எடுப்பார். ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த லீலை ஸ்ரீ ஜெயந்தியின் போது "உறியடி" என்று கொண்டாடப்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து ஸ்ரீ விஷ்ணு கோவில்களிலும், இந்த கோவிலிலும் "உறியடி" கொண்டாடப்படுகிறது.

காஞ்சிபுரம் சந்நிதி தெரு ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள அரச தம்பதிகளின் இரண்டு சிற்பங்கள் அன்று காலையில் சேஷ வாகனத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலின் மாட வீதிகளில் ஊர்வலமாகச் செல்வார். மாலையில் அழகிய கிரீடம் அணிந்த ஸ்ரீ அருளாளப்பெருமாள், பட்டுப்புடவை, ஆபரணங்கள் அணிந்த அவரது துணைவியருடனும், மயில் இறகுடன் கூடிய தலைக்கவசம் அணிந்த ஸ்ரீ கிருஷ்ணருடன் ஊர்வலம் வருவார். சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலை வந்தடைந்து ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தரிசனம் கொடுத்து, பின் "உரியடி" லீலாவைக் கண்டு களித்து, பிரதான கோவிலுக்குத் திரும்புவார்கள்.

பழமையான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில்

மேற்குறிப்பிட்ட திருவிழாக்களின் பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களிலிருந்து, சந்நிதி தெருவில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பழமையானது என்று ஊகிக்க முடிகிறது. ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தியின் போது "உறியடி" திருவிழா நடத்தப்பட்டதாக விஜயநகர காலத்தின் தேதி குறிப்பிடப்படாத கல்வெட்டு நமக்கு தெரிவிக்கிறது. 1517 தேதியிட்ட ஒரு கல்வெட்டு "உறியடி" திருவிழாவைக் காண ஸ்ரீவரதராஜ பெருமாள் ஊர்வலமாக அனுமன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. ஸ்ரீஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில் இரண்டு தூண்களில் பொறிக்கப்பட்ட அரச தம்பதிகளின் இரண்டு சிற்பங்கள் உள்ளன, அச்சிற்பங்கள் விஜயநகர காலத்தைச் சேர்ந்தது என்பதை அதன் அமைதி காட்டுகிறது. இதன் மூலம் இக்கோயில் மிகவும் பழமையானது என்பதை மீண்டும் உறுதிப்படுத்த முடிகிறது.

பிரதான கோயிலின் மேற்கு ராஜகோபுரத்தை நோக்கிய தெரு சன்னதி தெருவு என்று அழைக்கப்படுகிறது. அவ்வீதியின் முடிவில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது . கோயிலின் பிரதான தெய்வம் மேற்கு நோக்கி இருப்பதால், இந்த ராஜகோபுரம் கோவிலின் முக்கிய நுழைவாயிலாக பயன்படுத்தப்படுகிறது. சந்நிதி தெரு ராஜகோபுரத்திற்கு செங்குத்தாக உள்ளது. ஆஞ்சநேயர் கோவில் பிரதான கோயிலின் பிரதான தெய்வத்தை நோக்கி உள்ளது.

ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில்

ஸ்ரீ ஆஞ்சநேயா, வரதராஜப் பெருமாள் கோவில் சந்நிதி தெரு, காஞ்சிபுரம் ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலின் முன்பகுதியில் நான்கு தூண்கள் கொண்ட மண்டபம் உள்ளது, இது பிரதான கோவிலில் இருந்து வரும் தெய்வங்களை வரவேற்பதற்காக இருக்கலாம். இதை அடுத்து ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கோயில் முகப்பில் உள்ள அலங்கார வளைவில் ஸ்ரீ பூதேவி மற்றும் ஸ்ரீதேவியுடன் இருக்கும் விஷ்ணு பகவான் சுதை சிற்பம் பக்தர்களை வரவேற்கிறது. பின்னர் ஒரு தூண் மண்டபம் வருகிறது, அது மிகப்பெரிய அளவில் உள்ளது, அம்மண்டபதிலேயே ஸ்ரீஆஞ்சநேயர் இருக்கும் கர்ப்பகிரஹம் உள்ளது. ஸ்ரீஆஞ்சநேயரின் ஊர்வல மூர்த்தியும் கர்ப்பகிரஹத்தில் உள்ளது.

ஸ்ரீ ஆஞ்சநேயர்

ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலை சுமார் ஐந்தடி உயரம் கிரானைட் கற்களால் ஆனது. இறைவன் கிழக்கு நோக்கி இரண்டடி பீடத்தில் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார்.

இரு கால்களிலும் இறைவன் தண்டை அணிந்துள்ளார். அவர் வேட்டியை கச்சம் வைத்து அணிந்துள்ளார், இதன் மேல் அலங்கார இடுப்பு அணிகலம் அணிந்துள்ளார். மார்பின் அருகே அவரது திருக்கரங்கள் கூப்பிய வண்ணம் உள்ளது. பிரபுவின் வலிமையான திருகரங்களின் மணிக்கட்டில் அகன்ற கங்கணமும் மேல் கரத்தில் கேயூரமும் காட்சியளிக்கிறது. அவரது தோள்களில் புஜ-வலயம் காணப்படுகிறது. யக்ஞோபவீதம் அவரது பரந்த மார்பில் காணப்படுகிறது. இரண்டு கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் அவரது கழுத்துக்கு அருகில் காணப்படுகின்றன. மாலை போன்ற ஆபரணம் ஒதுன்று அவரது இடது கைக்கு மேல் தெரிகிறது.

நீண்ட காதுகளில் அவர் அணிந்திருக்கும் குண்டலம் அவரது தோள்களைத் தொட்டவாறு காணப்படுகிறது. பஞ்சுபோன்ற கன்னங்கள் பிரபுவின் பெரிய கண்களை மேலும் பெரிதாக காட்டுகின்றது. இறைவனின் கேசம் அவரது தலைக்கு மேல் கற்றையாக காணப்படுகிறது. இறைவனின் ஒளிரும் கண்கள் பக்தர்களின் மீது பணிவையும் பரிவையும் பொழிகின்றன.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஆஞ்சநேயர் கோவில், சந்நிதி தெரு, காஞ்சிபுரம்"

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் வலிமைமிகு ஆஞ்சநேயர் கூப்பிய கரங்களுடன் ஸ்ரீ வரதராஜ ஸ்வாமி முன் நிற்கிறார். எளிமையும் பணிவும் இருந்தால், பக்தன் தான் கற்பனையினும் அதிகமான விஷயங்களை வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்பதை அவர் பக்தருக்குக் காட்டுகிறார்.       

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு:  ஜூலை 2024


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+