home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

வரதராஜப் பெருமாள் கோவில் குளம் உபயம்: ஸ்ரீ ஸ்ரீராம் mt - Wikipedia.org


ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில், கங்கைகொண்டான் மண்டபம், காஞ்சிபுரம்

ஜிகே கௌசிக்


ஸ்ரீ வரதராஜ சுவாமி கோவில்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்று ஸ்ரீ வரதராஜ சுவாமி கோவில். காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில் மற்றும் காமாக்ஷி அம்மன் கோயில் ஆகியவற்றுடன் இந்த கோயில் மும்மூர்த்திவாசம் (மூவர் தங்குமிடம்) என்று பிரபலமாக அறியப்படுகிறது. ஒவ்வொரு விஷ்ணு பக்தனும் தன் வாழ்நாளில் தரிசிக்க விரும்பும் முக்கிய கோவில்களில் ஸ்ரீ வரதராஜ சுவாமி கோவிலும் ஒன்றாகும். அத்தி மரத்தில் செதுக்கப்பட்ட ஸ்ரீ வரதராஜ ஸ்வாமியின் பிரதியான "அத்தி வரத" மூர்த்திக்கும் பிரசித்தம். அத்தி வரதர் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் குளத்தில் இருந்து நாற்பத்தெட்டு நாட்களுக்கு வெளியே வருவார். அந்த நாற்பத்தெட்டு நாட்களும் அவருக்கு வழிபாடுகள் நடக்கும்.

இந்த கோவில் அனைத்து ராஜவம்சத்தினரின் ஆதரவையும் பெற்றது. சோழர், பாண்டியர், கந்தவராயர், சேரர், காகத்தியர், சம்புவராயர், ஹொய்சாளர், விஜயநகர மன்னர்கள் எனப் பல அரசர்கள் தங்கள் காலத்தில் இக்கோயிலுக்குப் பல நன்கொடைகள் அளித்துள்ளனர், பல்வேறு அபிவிருத்திகளும் செய்துள்ளனர்.

இக்கோயில் பரப்பளவில் மிகப் பெரியது மற்ற பல்வேறு தெய்வங்களுக்கான சந்நிதிகளும் கொண்டுள்ளது. ஸ்ரீமத் ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றில் இருந்து பல காட்சிகள் மண்டபங்கள் மற்றும் சந்நிதிகளின் சுவர்களில் கோவிலின் அழகை மேம்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கோவிலின் ஆண்டு திருவிழா

தமிழ் மாதமான வைகாசியில் [மே/ஜூன்] நடத்தப்படும் பிரம்மோத்ஸவத்திற்கும் இக்கோயில் புகழ்பெற்றது. கோலாகலமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாடப்படும் இவ்விழாவில் பக்தர்கள் பெருவாரியாக கலந்து கொள்கின்றனர். இந்த பத்து நாள் திருவிழாவின் போது உத்ஸவ மூர்த்தி வெவ்வேறு வாகனங்களில் வெவ்வேறு திசைகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார். உத்ஸவர் எதில் ஏறி பவனி வருகிறாரோ அதை வாகனம் என்று அழைப்பார்கள். ஸ்ரீ பெருமாள் ஹம்ச வாகனம், சூர்யபிரபை, ஹனுமத் வாகனம், சேஷ வாகனம், சந்திரபிரபை, தங்கப் பல்லக்கு, யாளி வாகனம், தங்க தேர், யானை வாகனம், தொட்டித்திருமஞ்சம், குதிரை வாகனம், ஆள்மேல் பல்லக்கு மற்றும் நியமித்த நாட்களில் மகா தேரில் வெளியில் பவனி வருகிறார். மேலும் இந்த திருவிழா நாட்களில் இறைவனை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அழகிய வேலைபாடுகள் மிக்க பெரிய குடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆள்மேல் பல்லக்கு

ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலின் பிரம்மோத்ஸவத்தின் ஒன்பதாம் நாளில், ஸ்ரீ பேரருளாளன் [ஊர்வல தெய்வம் இவ்வாறு அழைக்கபடுகிறார்] ஆள்மேல் பல்லக்கில் [பல்லக்கு] வெளியே எடுக்கப்படுகிறது. பல்லக்கை நான்கு பேர் சுமந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பல்லக்குக்கு "ஆள்மேல் பல்லக்கு" என்று பெயர்.

இந்நாளில் காலை சுவாமி கோயிலில் இருந்து ஆள்மேல் பல்லக்கில் ஊர்வலமாக வந்து, ஸ்ரீ சங்கர மடத்துக்கு அருகில் உள்ள கங்கை கொண்டான் மண்டபத்துக்குச் செல்கிறார். கங்கை கொண்டான் மண்டபத்தில் பூச்சாற்று சேவையை சுவாமி ஏற்றுக் கொள்கிறார். அனந்த சரஸில் தீர்த்தவாரிக்காகக் கோயிலுக்குத் திரும்புகிறார். விஷ்ணு காஞ்சியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு சுவாமி வருகை தருவதால், கங்கை கொண்டான் மண்டபத்திற்கு சுவாமியின் வருகை ஒரு அற்புதமான நிகழ்வாகும்.

கங்கை கொண்டான் மண்டபம்

ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் தனது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதற்காக புறப்பட்டான். கிபி 1019 இல், அவனது படைகள் கலிங்கத்தின் வழியாக கங்கை நதியை நோக்கி அணிவகுத்தன. கலிங்கத்தில் சோமவம்சி வம்சத்தின் ஆட்சியாளரான இந்திரரதனை சோழப் படைகள் தோற்கடித்தன. இந்திரரதருடன் கசப்பான பகை கொண்டிருந்த பரமராசர் மற்றும் காலச்சூரிகளின் உதவியை ராஜேந்திர சோழன் பயன்படுத்திக் கொண்டான். அவர்களின் ஒருங்கிணைந்த படைகள் இந்திரரதாவை தோற்கடித்தன. இந்த வெற்றிக்கு பிறகு தான் கட்ட நினைத்த சிவன் கோவிலுக்கு கங்கை நதியில் இருந்து தெற்கே தண்ணீர் கொண்டு வந்தான் ராஜேந்திரன். இதனால் அவன் கங்கை கொண்ட சோழன் என்றும் அழைக்கப்படுகிறான்.

ஸ்ரீ ஹனுமார் [முதல்], கங்கைகொண்டான் மண்டபம், காஞ்சிபுரம் வடக்கிலிருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நீர் வழியில் பல புனிதமான இடங்களில் வைக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் மண்டபம் கட்டப்பட்டு, புனிதப்படுத்தப்பட்ட பிறகு, அங்கு வைக்கப்பட்டது. புனித கங்கை நீர் மேலே பயணிப்பதற்கு முன்பு இப்படி ஏற்பாடு. மன்னரால் புனித நீர் வைக்கும் நோக்கத்திற்காக கட்டப்பட்ட இத்தகைய மண்டபங்களுக்கு "கங்கைகொண்டான் மண்டபம்" என்று பெயரிடப்பட்டது. உள்ளூரில் இது "கங்கனா மண்டபம்" என்று அழைக்கிறார்கள். அத்தகைய மண்டபத்திலிருந்து கங்கை நீர் நகர்த்தப்பட்ட பிறகு, அந்த இடத்தின் புனிதம் அப்படியே இருக்க, அந்த இடம் உள்ளூர் கோயிலின் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டது.

அப்படி கட்டப்பட்ட ஒரு கங்கைகொண்டான் மண்டபம் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ சங்கர மடத்திற்கு எதிரே அமைந்துள்ளது.

கங்கனா மண்டபம்

கங்கைகொண்ட மண்டபம் மங்கள தீர்த்தத்தின் தென்கிழக்கு மூலையில், பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ காமகோடி ஸ்ரீ சங்கர மடத்திற்கு எதிரே அமைந்துள்ளது. மண்டபம் மிகவும் அழகாகவும் மற்றும் அலங்காரமாகவும் செதுக்கப்பட்ட பதினாறு தூண்களைக் கொண்டுள்ளது. கட்டிடக் கலைஞரின் கூற்றுப்படி, இந்த மண்டப தூண்கள் விஜயநகர காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருவிழாக் காலங்களில் மட்டும் இத்தலத்திற்கு வருவதால், இக்கோயிலின் திருவிழாவிற்கு குடை தயாரிப்பதில் வல்லமையுள்ள கைவினைஞர்களால் மண்டபம் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரியமாக கோயில் திருவிழாக்களுக்கு குடை தயாரிக்கும் இந்த கைவினைஞர்கள் இந்த மண்டபத்தை தங்கள் பணியிடமாக பயன்படுத்துகின்றனர். இன்று இது ஒரு பாரம்பரிய கட்டிடம். கோவில் குடை மற்றும் பூ விற்பனையாளர்கள் வேலை செய்யும் கைவினைஞர்களுக்கான வேலை இடமாக பயன்படுத்தப்படும் இம்மண்டாபத்தில் ஸ்ரீ ஹனுமாரும் குடி கொண்டுள்ளார்.

மண்டபத்தில் இரட்டை அனுமன் சிலைகள்

மண்டபத்தின் மையத்தில் வடக்கு சுவரை ஒட்டி இரண்டு ஸ்ரீ ஹனுமார் சிலைகள் உள்ளன. முன் வாசலில் இருந்தே சுவாமியை தரிசனம் செய்யலாம்.

இடதுபுறத்தில் உள்ள முதல் சிலை புடைப்பு சிலை [அர்த்த ஷிலா] வகையாகும், வலதுபுறத்தில் உள்ள இரண்டாவது சிலை முழுவதும் செதுக்கப்பட்ட வகையாகும் மற்றும் இது சற்று பெரிய அளவில் உள்ளது. சிலையின் அமைதி மற்றும் சுவாமியின் வடிவமைப்பை நோக்கினால் இவ்விரண்டு சிலைகளும் விஜயநகர காலத்தைச் சேர்ந்தவை என்பது தெளிவாகிறது. இரண்டில் சிறிய சிலை மத்வர்கள் வழிபாட்டுப் அமைதியிலும், இரண்டாவது சிலை நாயக்கர் காலத்தை சேர்ந்ததாகவும் இருக்கலாம் என்பதை ஊகிக்க முடிகிறது.

மண்டபத்தின் புனிதத்துவம்

ஸ்ரீ ஹனுமார் [இரண்டாம்], கங்கைகொண்டான் மண்டபம், காஞ்சிபுரம் சமீப காலங்களில் ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகளும், காஞ்சி காமகோடி மடத்தின் ஸ்ரீ மஹாபெரியவாவும் இந்த மண்டபத்திற்கு தவறாமல் வந்து இருந்து விட்டு செல்வார்கள். அதனால் இந்தத் தலத்தின் புனிதத்துவம் பல பெரிய மகான்களால் உறுதி படுத்தப்பட்டு ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.

ஸ்ரீ ஹனுமார் [முதல்]

கருங்கல் புடைப்பு சிலை [அர்த்த ஷிலா] வகையில், ஐந்தடி உயரத்திலும் தெற்கு நோக்கி சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். அவருடைய இரு திருப்பாதங்களிலும் அவர் நூபுரத்தையும் தண்டையும் அணிந்துள்ளார். அவர் வேட்டியை கச்சமாக அணிந்துள்ளார், அவரது இடுப்பில் ஒரு அலங்கார இடுப்பு பட்டை அணிந்துள்ளார். அவர் தனது இடது திருக்கரத்தில் சௌகந்திகா மலரைப் பிடித்துள்ளார். மலர் அவரது தோளுக்கு அருகில் காணப்படுகிறது. அவரது மார்பில் இரண்டு மணிமாலைகள் அணிந்துள்ளார். வலது திருக்கரத்தை உயர்த்தி அபய முத்திரை காட்டி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அவரது ஒளிரும் கண்கள் பக்தர்களுக்கு பரிவையும் கருணையையும் அருளுகிறது. அவரது நீண்ட காதுகளை குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. அவரது வால் தலைக்கு சற்று மேலே காணப்படுகிறது. சக்கரம் மற்றும் சங்கு சுவாமியின் சிலைக்கு மேலே தனியாக காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஹனுமார் [இரண்டாம்]

கருங்கல் கற்களால் ஆன சுமார் ஏழரை அடி உயரமுள்ள இந்த சிலை, மற்ற சிலைக்கு அருகில் சற்றே உயரமான மேடையில் வைக்கப்பட்டுள்ளது. சிலை தெற்கு நோக்கியும், சுவாமி பக்தர்களுக்கு நேராகவும் காட்சியளிக்கிறார். சிலை திருவாச்சியுடன் காணப்படுகிறது [தெய்வத்தின் பின்னால் காணப்படும் அலங்கார வளைவு - சமஸ்கிருதத்தில் பிரபை என்று அழைக்கப்படுகிறது] அதே கல்லால் ஆனது. ஒரே கல்லில் பிரபை கொண்டு தெய்வத்தை உருவாக்கும் இந்த பாணி விஜயநகர நாயக்கர்களின் தனித்துவமான கலை பாணியாகும்.

சுவாமியின் விவரங்கள் முதல் ஸ்ரீ ஹனுமாருக்கு உள்ளது போன்றே உள்ளது. ஆனால் இங்கு பகவான் பக்தருக்கு தரிசனமும், பக்தருக்கு "கடாக்ஷம்" நேரடியான அருளுவதையும் பார்க்கலாம்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில், கங்கைகொண்டான் மண்டபம், காஞ்சிபுரம்"

 

அனுபவம்
கங்கை நீரால் புனிதப்படுத்தப்பட்ட இடம் இந்த க்ஷேத்திரத்தின் இறைவனால் மேலும் புனிதமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இறைவனையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்வது, நாம் சுமக்கக்கூடிய நோய்களை அகற்றி, நம் எண்ணங்களை புனிதமாக்குவது உறுதி, இதனால் நாம் ஆரோக்கியமாக இருப்பதும் உறுதி.   

தமிழாக்கம் :திரு. ஹரி சுந்தர்
பதிப்பு: மார்ச் 2022


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+