home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ ஆஞ்சநேயர், கோதண்ட ராமர் திருக்கோவில், பழைய மாம்பலம், சென்னை

ஜிகே கௌசிக்

கோதண்ட ராமர் திருக்கோவில், பழைய மாம்பலம், சென்னை


சைதாப்பேட்டை என்ற மாம்பலம்

பழைய மாம்பலம் மற்றும் புதிய மாம்பலம், சென்னையைக் காட்டும் Google வரைபடம் சைதாப்பேட்டை அடையாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது மற்றும் தற்போது சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது. நகர எல்லை நீட்டிக்கப்படுவதற்கு முன்பு இது செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதற்கு முன் இது ஆற்காடு நவாபின் கீழ் ஒரு ஜாகீராக இருந்தது. அப்போதைய நிர்வாகி சையத் கான் தனது பெயரால் இந்த பகுதிக்கு பெயரிட்டார், இது பின்னர் சைதாப்பேட்டை என்று பெயர் பெற்றது. இதற்கு முன்பு இப்பகுதி, பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராய வம்சத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது மற்றும் பேரரசின் பிரதிநிதியால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றின் மீது ஒரு பாலம் உள்ளது, இது நீண்ட காலமாக மர்மலாங் பாலம் என்று அழைக்கப்படுகிறது. "மர்மலாங்" என்பது "மாம்பலம்" என்பதன் ஆங்கிலமயமாக்கப்பட்ட பெயர் என்று கூறப்படுகிறது. மேலும் இன்றைய தி.நகரின் பழைய குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் தி.நகரை இன்றும் "புது மாம்பலம்" என்றும் இன்றைய மேற்கு மாம்பலத்தை "பழைய மாம்பலம்" என்றே அழைக்கிறார்கள். இவை அனைத்தையும் சேர்த்து நோக்கையில் இன்றைய சைதாப்பேட்டை அன்றைய மாம்பலத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என கருத வழி வகுக்கிறது. தற்போது சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், தி.நகர் போன்றவற்றைச் சித்தரிக்கும் கூகுள் வரைபடத்தை இங்கு இணைத்துள்ளோம்.

சைதாப்பேட்டை திருக்கோவில்கள்

Deepa Stambam கோதண்ட ராமர் திருக்கோவில், பழைய மாம்பலம், சென்னை விஜயநகர வம்சத்தின் பிரதிநிதி நீண்ட காலமாக இப்பகுதியை ஆட்சி செய்து வந்ததின் அடையாளமாக, அந்தக் காலத்தில் ஸ்ரீராமருக்கு அவர்கள் அழகான ஆலயம் எழுப்பினார்கள். பிரதான கோவிலின் அமைப்பும், கோவிலின் முன் உள்ள நான்கு தூண் மண்டபமும் விஜயநகர ஆட்சியாளர்களின் செல்வாக்கிற்கு சான்றாகும். வழக்கமாக அங்கு கோயிலில் குடிக்கொண்டு இருக்கும் இறைவனின் பெயரிலேயே அப்பகுதி அடையாள படுத்தப் படுகிறது. இதே முறையில் இங்கு கோதண்ட ராமர் கோயிலின் முதன்மைக் கடவுளின் பெயரால் இந்த இடம் ஸ்ரீ ரகுநாதபுரம் என்று அழைக்கப்பட்டது. திருக்காரணீஸ்வரர் (சிவன்) திருக்கோயிலை அடுத்த பகுதிகள் திருக்காரணீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. ஸ்ரீ சௌந்தரேஸ்வரரின் திருக்கோயிலை அடுத்த பகுதிகள் திருநாறையூர் என அழைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

சைதாபேட்டை ஸ்ரீ ராமர் கோவிலைப் பற்றி மேலும் அறிய, "ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் கோவில், சைதாப்பேட்டை" என்ற எமது இணையதள பக்கத்தை பார்க்கவும்.

நீண்ட ஏரியும் மாம்பலமும்

உண்மையில் சைதாப்பேட்டை தீபகற்பம் போல் தான், தெற்கில் அடையாறு ஆறும், கிழக்கிலும், வடக்கிலும் பெரிய நீண்ட ஏரியாலும் சூழ காணப்பட்டு இருந்திருக்கிறது. சைதாப்பேட்டைக்கு அருகில் இருந்து நுங்கம்பாக்கம் வரை மெட்ராஸின் நீண்ட ஏரி இருந்தது பலருக்கும் தெரியும். 1900 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எனது தந்தை சைதாப்பேட்டையில் வசித்தவர். இவர் கோட்டையில் அமைந்துள்ள கருவூல அலுவலகத்தில் பணிபுரிந்தார். அந்த காலத்தில் சைதாப்பேட்டையில் ரயில் நிலையம் இல்லை, ஆனால் கிட்டத்தட்ட அனைத்து ரயில்களும் சிவன் கோவில் அருகே நிற்கும். ஹார்பர் ஸ்டேஷன் [தற்போதைய கடற்கரை நிலையம்] மட்டும் உண்டு, கோட்டை இரயில் நிலையம் அன்று கிடையாது. "பட்டணம்" என்று அழைக்கப்படும் கோட்டையை சுற்றிய பகுதி வணிகர்களின் குடியிருப்பு பகுதியாக இருந்தது, கோட்டையில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பலரும் அப்போது சைதாப்பேட்டையில் தங்கியிருந்தனர். அன்றைய கால கட்டத்தில் மழைக்காலத்தில் ரயிலில் பயணம் செய்யும் போது, சைதாப்பேட்டையில் இருந்து துறைமுகம் வரை இரண்டு முதல் மூன்று மைல்கள் வரை மெதுவான வேகத்தில் ரயில் தண்ணீருக்கு மேல் செல்லும்.

அப்போது இருந்த நீண்ட ஏரியை நினைவுபடுத்தும் வகையில் இன்று இரண்டு கோவில்கள் உள்ளன. முதலாவது வன்னியர் தேனாம்பேட்டை, மவுண்ட் ரோட்டில் இருந்து புது மாம்பலம் செல்லும் நுழைவாயிலின் இடதுபுறம் உள்ள அம்மன் கோவில். ஆலமரந்தாள் என்பது அம்மனின் பெயர். இங்குள்ள “ஆல்” எழுத்துக்கள் ஆலமரத்தைக் குறிக்கவில்லை. ஆலின் [நீரின்] என்றால் [நீரின்] கரையில் அமர்ந்திருப்பவள் என பொருள்படும். "லாங் லேக்" என்பது தென் வடக்கே சைதாப்பேட்டை முதல் நுங்கம்பாக்கம் வரையிலும், மயிலாப்பூரில் இருந்து மாம்பலம் வரை மேற்கு - கிழக்கு மேற்கிலும் பிறை நிலவு வடிவில் பரவியுள்ள மயிலாப்பூர் ஏரியின் [நீண்ட ஏரி] கரையில் அமைந்திருப்பதால் இங்கு உள்ள அம்மனுக்கு "ஆலமரந்தாள்" என்று பெயர். இது போல் இன்று கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் 'எரிகரை அம்மன்' கோயில் உள்ளது. மூன்றாவதாக மேற்கு மாம்பலத்தில் "லேக் வியூ ரோடு" என்ற பெயரில் ஒரு சாலை உள்ளது. இந்த மூன்றும் அப்போதைய மயிலாப்பூர் ஏரி அல்லது நீண்ட ஏரியின் எல்லைகளைக் குறிக்கிறது.

கோதண்ட ராமர் திருக்கோவில்

 நுழைவில் அலங்கார வளைவு, கோதண்ட ராமர் திருக்கோவில், பழைய மாம்பலம், சென்னை "சைதாப்பேட்டை திருக்கோவில்கள்" என்ற தலைப்பின் கீழ் மேலே கூறப்பட்ட ஸ்ரீ கோதண்ட ராமர் கோவிலின் நிர்வாகம், காலப்போக்கில் மற்ற கோவில் நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டது. கோயிலின் நிலை ஸ்ரீ கோதண்ட ராமர் கோவிலில் இருந்து ஸ்ரீ பெருமாள் கோவிலாக மாறியது. கிழக்கு நோக்கி விஷ்ணுவுக்கு மற்றொரு சந்நிதியும் கட்டப்பட்டது. திருவல்லிக்கேணி நரசிம்மர் (ஸ்ரீ துளசிங்கப் பெருமாள்) அந்தக் காலத்தில் இந்த கோவிலுக்கு வருகை தந்ததால், இந்த கோவிலின் விஷ்ணு "ஸ்ரீ பிரஸ்ஸன வெங்கட நரசிம்ம பெருமாள்" என்று அழைக்கப்படலானார். சைதாபேட்டையில் இப்படி நடந்து கொண்டிருக்கும் போது, அதே மாம்பலத்தின் மறுமுனையில் ஸ்ரீ கோதண்ட ராமருக்கு ஒரு புதிய கோவில் எழுந்தது.

பத்ராசலம் ஸ்ரீ பக்த ராமதாசரின் பரம்பரையில் வந்த ஸ்ரீ ஆதிநாராயண தாசர், இங்கு பத்ராசலம் ஸ்ரீ வைகுண்ட ராமர் கோவிலை எழுப்பியுள்ளார். இன்று பழைய மாம்பலம் கோதண்ட ராமர் கோவில் என்று அழைக்கப்படும் திருக்கோயிலுக்கு ஒரு சுவாரஸ்யமான தல புராணம் உள்ளது.

தல புராணம்

ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதி, கோதண்ட ராமர் திருக்கோவில், பழைய மாம்பலம், சென்னை பத்ராசலம் ஸ்ரீ பக்த ராமதாசரின் பரம்பரையில் வந்த ஸ்ரீஆதிநாராயண தாசர் ஸ்ரீராமருக்கு எளிய கோவிலைக் கட்டினார். ஸ்ரீராமர் பத்ராசலத்தில் உள்ள அதே தோரணையில் இங்கும் வழிபடப்படுகிறார். இரண்டு தலங்களிலும் ஸ்ரீ ராமரின் இடது மடியில் ஸ்ரீ சீதா தேவி அமர்ந்திருப்பாள். எனவே இத்தலம் தட்சிண பத்ராசலம் என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு ஸ்ரீ ஆதிநாராயண தாசரால் நிறுவப்பட்ட ஆலயம் பிற்காலத்தில் பிரா.வெ.தேனுவகுப்தா வெங்கட்ரங்கையா ஹரிதாசரால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. இவர் கோயிலை விரிவுபடுத்த திட்டமிட்டு பொதுமக்களிடம் நிதி வசூலித்து வந்தார். அந்த நேரத்தில் ஒரு செல்வந்தரும் ஸ்ரீராமரின் பக்தரான ஸ்ரீ வெங்கையால குப்பையா சிட்டியார் ஹரிதாசரிடம் இத்திருக்கோயிலுக்காக ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். தனக்கு நேரடி வாரிசு இல்லாததால், தனது செல்வத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில், தனது சொந்த உறவினர்கள் இவருக்கு சிறுக சிறுக கொல்லக்கூடிய நஞ்சினை கொடுக்க ஆரம்பித்ததாக ஹரிதாஸிடம் கூறினார். இதை அறியாமல் அவர் உறவினர்களை நம்பினார், ஆனால் இவரது கனவில் ஸ்ரீராமரே நடக்கும் இவ்விஷயத்தை அவருக்குத் தெரிவித்தார். எனவே, இந்தக் கோயிலைப் புனரமைப்பதில் தனது செல்வம் முழுவதையும் செலவழிக்க முடிவு செய்திருப்பதாக ஹரிதாஸிடம் தெரிவித்தார்.

ஸ்ரீ ஹரிதாஸ் செட்டியார் சொன்னதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட ரூ 4000/-ஐ மகிழ்ச்சியுடன் அவரிடம் வழங்கினார். பழைய பொருட்களை விற்றதின் மூலம் கிடைத்த 1000 ரூபாயும் அவரிடம் ஒப்படைத்தார். இந்தத் தொகையுடன், புதிய மற்றும் விரிவுபடுத்தப்பட்ட கோவிலின் திருப்பணிகள் 1926 ஜூன் 23 ஆம் தேதி நல்ல நாளில் தொடங்கப்பட்டது. ஜூலை 26, 1926 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, ஏப்ரல் 30, 1927 இல் பணிகள் நிறைவடைந்தன. வைகானச ஆகமப்படி மகா சம்ப்ரோக்ஷணமும் நடத்தப்பட்டது.

இந்த மகாசம்ப்ரோக்ஷத்தின் போது, திருநீர்மலை ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் அருள்பாலித்து, மங்களாசாசனம் செய்ததால், இக்கோயில் அபிமான ஸ்தலமாக விளங்குகிறது.

தற்போதைய கோவில்

ஸ்ரீ ராமர், கோதண்ட ராமர் திருக்கோவில், பழைய மாம்பலம், சென்னை இந்த கோவில் இன்றைய மேற்கு மாம்பலத்தில் மண்டோலி சாலையின் இரயில்வே தாழ் பாலத்தின் முடிவில் அமைந்துள்ளது. இக்கோயில் கிழக்கு நோக்கியுள்ளது, நுழைவில் அலங்கார வளைவு உள்ளது, ராஜகோபுரம் இல்லை. வசந்த மண்டபம் கோயிலுக்கு எதிரே சாலையின் மறுபுறம் உள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும் முதல் சந்நிதி ஸ்ரீ ஆஞ்சநேயரின் சந்நிதி. ஸ்ரீ ராமர், ஸ்ரீ கருடன் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதி நேர்கோட்டில் உள்ளது. ஸ்ரீராமர் கிழக்கு நோக்கியும் மற்ற இருவரும் ஸ்ரீராமரை நோக்கியும் உள்ளனர். ஸ்ரீ கருட சன்னிதிக்கு அருகில் தீப ஸ்தம்பம், பலி பீடம், கொடிமரம் ஆகியவை காணப்படுகின்றன. ஸ்ரீ கருடன் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதிக்கு இடையில் உற்சவ மண்டபம் காணப்படுகிறது. கருட சன்னிதி முன் மண்டபம், மகா மண்டபம், அந்தரளம் பிறகு கர்ப்பகிரஹம் ஆகியவை காணப்படுகின்றன. பிரங்கனில் ஸ்ரீ ரங்கநாயகி தாயாருக்கு தனி சந்நிதி, கிழக்கு நோக்கி ஸ்ரீ ஆண்டாள், திருகல்யாண மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன. கோயிலின் வடக்குப் பகுதியில் கோயில் குளம் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.

ஸ்ரீ ராமர் சந்நிதி

முக்கிய கர்ப்பகிரஹத்தில் ஸ்ரீ பட்டாபிராமரும், ஸ்ரீ கோதண்டராமரும் தாங்கள் பரிவாரத்துடன் உள்ளனர். கீழ் பீடத்தில் ஸ்ரீ ஆதிநாராயண தாசர் வழிபட்ட ஸ்ரீ பட்டாபிராமர் காட்சியளிக்கிறார். ஸ்ரீ பட்டாபிராமர் வீராசனத்தில் அவரது இடது மடியில் ஸ்ரீ சீதாதேவியுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். ஸ்ரீ ஆஞ்சநேயர் தனது பகவான் ஸ்ரீராமரின் தாமரை பாதங்களைப் பிடித்தபடியும், ஸ்ரீ பரதன் அரச குடையைப் பிடித்தபடியும் தனித்துவமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். மேல் பீடத்தில் ஸ்ரீ கோதண்ட ராமர் இடதுபுறத்தில் ஸ்ரீ லக்ஷ்மணருடன், வலதுபுறம் ஸ்ரீ சீதாதேவியுடன் காட்சியளிக்கிறார். ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மணர் இருவரும் வில் மற்றும் அம்புகளுடன் காணப்படுகிறார்கள். ஸ்ரீ பரதரும் ஸ்ரீ சத்ருகுணனும் காணப்படுகின்றனர். ஸ்ரீ பட்டாபிராமர் மற்றும் ஸ்ரீ கோதண்டராம பரிவார உற்சவ மூர்த்திகளும் காணப்படுகின்றது.

ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதி

ஸ்ரீ ஆஞ்சநேயர், கோதண்ட ராமர் திருக்கோவில், பழைய மாம்பலம், சென்னை எட்டு தூண்கள் கொண்ட பிரமாண்ட மண்டபம், அந்தரளம் பின்னர் கர்ப்பகிரஹம் - ஸ்ரீ ஹனுமான் சந்நிதி. ஸ்ரீ அனுமனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் மண்டபத்தின் சுவரில் அழகாக வரையப்பட்டிருந்தன. ஸ்ரீராம பட்டாபிஷேகத்தின் பெரிய ஓவியம் கர்ப்பகிரஹத்தின் முகப்பில் அமைந்துள்ளது சிறப்பு. சன்னிதியில் ஸ்ரீ ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி ஸ்ரீ சஞ்ஜீவிராயனாக, கோயில் கர்பகிரஹத்தில் இருக்கும் ஸ்ரீராமரை பார்த்தவாறு காட்சியளிக்கிறார்.

ஸ்ரீ ஆஞ்சநேயர்

பிரபுவின் மூர்த்தம் அர்த்த சிலை வடிவில் காணப்படுகிறது, சிலை நேர்த்தியான முறையில் செதுக்கப்பட்டுள்ளது. இறைவன் தனது வலது தாமரை பாதத்துடன் வடக்கு நோக்கி நகர தயாராக இருப்பதைக் காணலாம், மற்றொன்று தரையில் உறுதியாக உள்ளது. இறைவனின் தாமரை பாதங்கள் "தண்டை"யால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இறைவன் வேட்டியை கச்சம் வைத்து தரித்துள்ளார். மௌஞ்ஜியினால் ஆன மூன்று சரத்தினை இடுப்பில் அணிந்துள்ளார். அவரது பரந்த மார்பில் மூப்புரி நூல் காணப்படுகிறது. அவர் தனது மார்பை அலங்கரிக்கும் இரண்டு மாலைகளை அணிந்துள்ளார். அவரது இரு கைகளிலும் மேல் கரத்தில் கேயுரமும், மணிகட்டில் கங்கணமும் அணிந்துள்ளார். அவரது வலது கரத்தில் பிரபு மருந்து மலையையும், உயர்த்திய இடது கரம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அபய முத்திரையையும் காட்டுகிறது. இறைவனின் வால் அவரது தோளுக்கு மேல் உயர்ந்து சிகைக்கு சற்று மேலே காணப்படுகிறது, வால் முடிவில் ஒரு சிறிய மணியும் உள்ளது. இறைவன் காதில் குண்டலம் அணிந்துள்ளார். நேர்த்தியாக சீவப்பட்ட சிகை முடிச்சுப் போடப்பட்டிருப்பது தெரிகிறது. அவரது கம்பீரமான முகம், மகத்தான கண் கம்பீரத்திற்கு கம்பீரத்தை சேர்க்கிறது. ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஜொலிக்கும் கண்கள் பக்தர்களிடம் நேரடியாக பேசுகின்றன.

கர்ப்பகிரஹத்தில் இறைவனின் உற்சவ மூர்த்தமும் காணப்படுகிறது. மூலவர் முகம் பக்கவாட்டிலும், உற்சவர் நேராகவும் காட்சியளிக்கிறார்கள்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோவில், பழைய மாம்பலம், சென்னை"

 

அனுபவம்
கோதண்ட ராமர், பட்டாபிஷேக ராமர் ஆகிய இருவரையும் வணங்கும் இந்த க்ஷேத்திரத்தின் ஹனுமார் மிகவும் மகிழ்ச்சியான நிலையில் இருக்கிறார். அவர் தனது பக்தரின் விருப்பங்களை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவார்.      

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு:  செப்டம்பர் 2023


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+