home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

சஞ்சீவிராயன் என்னும் ஶ்ரீராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை

ஜி.கே.கௌசிக்


சைதாப்பேட்டை

அடையார் நதிக்கரை ஓரம் அமைந்துள்ள சைதாப்பேட்டை, தற்பொழுது சென்னை மாநகராட்சியின் ஒர் அங்கம். சென்னை விரிவடைவதற்கு முன் இது செங்கல்பட்டு ஜில்லாவிலிருந்தது. முன்னால் ஶ்ரீகிருஷ்ணதேவராயரின் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சிக்கு உட்பட்டு இப்பகுதியினை ஶ்ரீதேசாய் என்னும் அதிகாரியின் ஆளுகையில் இருந்தது. பின் காலத்தில் இவ்விடம் ஆற்காட்டு நவாபின் பிரிதிநிதியான சையத் கான் என்பவர் ஆளுகையில் இருந்தது. இவ்விடத்திற்கு தனது பெயரையே வைத்து "சையத் கான் பேட்டை" என்று அழைக்கலானார். பின் சைதைபேட்டை என்றும் இன்று சைதாப்பேட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

சைதையில் உள்ள அருமையான ஶ்ரீராமருக்கான திருக்கோயில்கள்

விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சிக்கு உட்பட்டு இப்பகுதியினை ஶ்ரீதேசாயின் பொறுப்பில் இருந்த பொழுது ஶ்ரீராமருக்கா அழகிய திருக்கோயில் ஒன்றை எழுப்பினார். விஜயநகர சாம்ராஜ்யத்திற்கே உரிய பாணியில் மிக உயரமான மண்டபம் கோயில் முன் அலங்கரிப்பதில் இருந்து இது உறுதியாகிறது. சாதாரணமாக கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பெயரால் ஊர் அறியப்படும். அவ்விதமே, இக் கிராமம் தேசாய் காலத்தில், கோயில் கொண்டுள்ள ஶ்ரீகோதண்டராமர் பெயரால் ஊர் ஶ்ரீரகுநாதபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள கிராமம் திருகாரனீஸ்வரம் என்று அங்கு குடிகொண்டுள்ள இறைவன் அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் பெயரால் அழைக்கப்பட்டிருகிறது.

ராமருக்கும் ஶ்ரீஆஞ்சநேயருக்கும் திருக்கோயில்கள்

ஶ்ரீரகுநாதபுரத்தின் மையத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். மூலவர்கள் ஶ்ரீகோதண்ட ராமர், வலப்புறம் ஶ்ரீசீதாதேவியும், இடப்புறம் ஶ்ரீலக்ஷ்மணரும் தென் நோக்கி அடையார் நதியை பார்த்தவண்ணம் உள்ளனர். அருகிலேயே இவர்களின் உத்ஸவர் திருமேனிகள் பட்டாபிஷேக கோலத்தில் உள்ளன.

சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ளது அடையார் நதி. ஆற்றன் கரையோரமாக ஶ்ரீஆஞ்சநேயருக்கு ஒரு அருமையான திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஶ்ரீஆஞ்சநேயர் ஶ்ரீகோதண்டராமரை நோக்கி கைகளை கூப்பிய வண்ணம் உள்ளார். இவருக்கு சஞ்சீவிராயன் என்று திருநாமம். சுமார் நானூறு வருடங்கள் முன் ஶ்ரீகோதண்டராமர் கோயில் கட்டிய பொழுது, இவ்வாஞ்சநேயர் ஶ்ரீராமரை பார்த்து துதித்த வண்ணம் இருந்திருக்கிறார். இடையில் வீடுகளோ கட்டிடங்களோ இல்லாமல் வெளியாக இருந்திருக்க வேண்டும். இன்று இவ்விரு கோயில்களும் தனி தனியாகி விட்டது. இவ்விரு கோயிலுக்கும் இடையே செங்குத்தாக ஒடும் தெருவுக்கு ஆஞ்சநேய கோயில் தெரு என்று பெயர்.

பிரதான கோயிலில் ஶ்ரீகோதண்டராமர் சன்னதிக்கு நேர் எதிரில் ஒரு சிறிய ஜன்னல் உள்ளது, ஶ்ரீஆஞ்சநேயருக்கு இடைவிடாது தரிசனம் கொடுப்பதற்காக.

ஶ்ரீசஞ்சீவிராயன் ஶ்ரீஹனுமாந்தராயன் என்னும் ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில்

சஞ்சீவிராயன் என்னும் ஶ்ரீராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை இவ்விரு கோயிலுக்கும் நடுவிலுள்ள இடைவெளி இன்று வீடுகள் வந்துவிட்டன. கோயில்கள் இரண்டாக இன்று செயல் படுகிறது. சுமார் இருநூறு வருடங்கள் முன் ஶ்ரீகோதண்ட ராமர் சன்னதிக்கு முன்பு ஶ்ரீஆஞ்சநேயருக்காக தனியாக சிறிய சன்னதி ஒன்று கட்டப்பட்டது. சுமார் எழுபது வருடங்கள் முன் ஶ்ரீராமருக்கு தனியாக சன்னதி ஶ்ரீஆஞ்சநேயர் கோயிலில் கட்டப்பட்டது.

ஶ்ரீகோதண்டராமர் கோயில் ஶ்ரீபெருமாள் கோயிலானது

பிராதன கோயிலுக்கு திருவல்லிகேணியிலிருந்து துளசிங்க பெருமாள் வருவது வழக்கமாக இருந்தது. பின் இக்கோயில் வளாகத்திலேயே பெருமாளுக்கு ஒரு சன்னதி கட்ட முடிவெடுக்கப்பட்டு கிழக்கு நோக்கி சன்னதி எழுப்பப்பட்டது. அப்பொழுது ஶ்ரீஆஞ்சநேயருக்காவும் தனி சன்னதி கட்டப்பட்டது. இங்கு கோயில் கொண்டுள்ள பெருமாளுக்கு ஶ்ரீ பிரசன்ன வெங்கட நரஸிம்ம பெருமாள் என்பது திருநாமம்.

ஶ்ரீரகுநாதபுரத்தின் எல்லையை குறிக்கும் விதத்தில் வடக்கிலும், கிழக்கிலும் உலா மண்டபங்கள் கட்டப்பட்டன. பிரதான கோயிலில் இரண்டு பெருமாள்கள் கோயில் கொண்டிருந்தமையால் பொதுவாக "பெருமாள் கோயில்" என்று அழைக்கப் படலானது. பெருமாள் கோயிலில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலுள்ள கிழக்கு உலா மண்டபங்களில் விஜயநகர தாககத்தினால் ஶ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி பிரதிஷ்டை செய்யப்பட்டார். வடக்கிலுள்ள உலா மண்டபம் கங்கணமண்டபம் என அழைக்கப் படுகிறது. சமீபத்தில் அங்கும் ஶ்ரீஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

பிரதான கோயிலில் குடிகொண்டுள்ள இரு பெருமாள்களும் விசேட நாட்களில் இந்த மூன்று ஆஞ்சநேயருக்கும் தரிசனம் கொடுகிறார்கள்.

சென்னையின் மிக பழமையான ஶ்ரீஆஞ்சநேயர் கோயில்

இன்றய சென்னையில் விஜயநகர சாம்ராஜ்ய பரம்பரையால் கட்டப்பட்ட மிக பழமையான ஶ்ரீஆஞ்சநேயருக்கான கோயில் அடையார் ஆற்றங்கரை அமைந்துள்ள இந்த ஶ்ரீசஞ்சீவிராயர் / ஶ்ரீஹனுமந்தராயர் கோயில். குடியிருக்கும் ஶ்ரீஆஞ்சநேயரை போலவே சுமார் நாநூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயிலும் மிக எளிமையாக உள்ளது. ஶ்ரீசஞ்சீவிராயர் தனது அபிமான இறைவனை வடக்கு நோக்கி தரிசனம் செய்த வண்ணம் உள்ளார். ஶ்ரீகோதண்ட ராமர் தனது பக்தனை தென்நோக்கி கண்ட வண்ணம் உள்ளார்.

அஞ்சலி ஹஸ்தனாக இருக்கும் இவ்வாஞ்சநேயர் இன்று "ராமபக்த ஶ்ரீஆஞ்சநேயர்" என்று திருநாமத்தினால் பிரசித்தம். மூர்த்தி சிறிதானாலும் பகவானின் கண்களில் ஒளிரும் காருண்யம் பக்தர்களின் கஷ்டங்களை தீர்க்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

வெள்ளையர்கள் காலத்தில் அன்றைய மதராஸ் பிராந்தியதிற்கு கவர்னர், ஆஞ்சநேயர் கோயிலை சுற்றி 1.35 ஏக்கர் நிலம் 1862ஆம் ஆண்டு கொடுத்துள்ளார். இன்று இக்கோயில் வளாகத்தில் வினாயகர், துர்க்கை, ஐயப்பன் ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளது. ஶ்ரீராமருக்கான சன்னதி ஶ்ரீஆஞ்சநேயருக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது. ஶ்ரீகருட பகவான் ஶ்ரீராமரின் முன் எழுந்தருளியுள்ளார். அருமையான சூழ்நிலையில் ஆற்றங்கரையில் உள்ள கோயில் வளாகத்தில் இருக்கும் ஆலமரம் கோயிலின் அமைதியை இன்னும் அதிகப்படுத்திகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், சைதாப்பேட்டை"

 

அனுபவம்
மாலை வேளையில் அமைதியான சூழலில் இந்த தொன்மை மிகு ஶ்ரீராம பக்தனின் முன் நமது பிராத்தனைகளை சமர்ப்பிப்போம். அமைதி நம்மை ஆட்கொள்வதை நாம் நிச்சயம் உணர முடியும்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜூன் 2016
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+