home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ அனுமார் சுவாமி கோவில், பாங்கோடு, திருவனந்தபுரம், கேரளா

ஸ்ரீ கிருஷ்ணன் கவுதம்

இடதுபுறம் காணப்படும் ஸ்ரீ ஹனுமான் சிலையுடன் பிரதான ஆலய நுழைவாயில், அனுமன் ஸ்வாமி கோவில், பாங்கோடு, திருவனந்தபுரம்


திருவனந்தபுரம்

ஸ்ரீ அனுமார் சுவாமி கோவில், பாங்கோடு, திருவனந்தபுரம், கேரளா தற்போதைய தமிழ்நாட்டில் அமைந்துள்ள பத்மநாபபுரம், திருவிதாங்கூர் இராஜ்ஜியத்தின் அப்போதைய தலைநகராக இருந்தது. நவீன திருவனந்தபுரத்தின் விஸ்தரிப்பு 1729 இல் திருவாங்கூர் சமஸ்தானத்தின் (உள்ளூர் மொழியில் திருவிதாங்கூர்) ஸ்தாபக ஆட்சியாளராக மார்த்தாண்ட வர்மாவால் தொடங்கியது. 1745 ஆம் ஆண்டு மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சியின் போது இராஜ்ஜியத்தின் தலைநகரம் பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அன்றிலிருந்து திருவனந்தபுரம் நகரம் கலை, கலாச்சாரம், கல்வி, ஆயுதப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகளிலும் விரிவடைந்தது.

இந்த நகரம், இந்த க்ஷேத்திரத்தின் பிரதான கடவுளான ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமியின் பெயரால் பெயரிடப்பட்டது. ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி ஆட்சி செய்யும் மாநிலத்தின் பாதுகாவலர்களாகவே திருவிதாங்கூர் மன்னர்கள் தங்களை அறிவித்துக் கொண்டனர். அவர்கள் பணிவான அடியாராக ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமியிடம் சரணடைந்தனர்.

மார்த்தாண்ட வர்மா

அனிசம் திருநாள் வீரபால மார்த்தாண்ட வர்மா (1706–7 ஜூலை 1758) அவர்கள் ’மார்த்தாண்ட வர்மா’ என்று அழைக்கப்படுகிறார், 1729 முதல் 1758 இல் இறக்கும் வரை திருவிதாங்கூரின் அரசராக இருந்தார். 1741 ஆம் ஆண்டு டச்சுக்களுக்கு எதிரான கோலாச்சல் போரில் ஐரோப்பிய மன்னர்களின் ஆயுதப்படையை வீழ்த்தியதற்காக பிரபலமானவர். திருவிதாங்கூர் சாம்ராஜ்யத்தை மரபுவழியில் இருந்து விரிவுபடுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

நாயர் படை

நாயர் படையைப் பற்றி குறிப்பிடாமல் மார்த்தாண்ட வர்மாவின் வெற்றிக் கதை முழுமையடையாது. நாயர்கள் இப்பகுதியில் போர்வீரர் சமூகமாக இருந்தனர். நாயர் படைப்பிரிவு திருவிதாங்கூர் இராஜ்ஜியத்தின் முன்னாள் இராணுவமாகும் மற்றும் திருவிதாங்கூர் இராஜ்ஜியத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தது. நவீன திருவிதாங்கூரை உருவாக்கியவராக ஸ்ரீ மார்த்தாண்ட வர்மா இராஜ்ஜியத்தின் இராணுவத்தை நவீனமயமாக்கினார், அதில் நாயர் படையின் பங்கு மிகவும் முக்கியமானது. போரை நவீனமயமாக்க உதவுவதற்காக டச்சு தளபதிகளை தோற்கடித்தார். 1791 ஆம் ஆண்டு மைசூர் திப்பு சுல்தானின் படையெடுப்பிற்கு எதிராக நாயர் படைப்பிரிவு ராஜ்யத்தை பாதுகாப்பதில் வெற்றி பெற்றது. நெடுங்கோட்டை அருகே நடந்த போரில், திருவிதாங்கூர் நாயர்களுடன் நடந்த போரில் திப்பு சுல்தான் தனது வாளை இழந்தார். திருவிதாங்கூர் இராணுவம் 1818 இல் திருவிதாங்கூர் நாயர் படை என பெயர் மாற்றப்பட்டது.

பாளையம்

திருவாங்கூர் இராஜ்ஜியத்தின் தலைநகரை பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மன்னர் மார்த்தட வர்மா மாற்றியபோது, நாயர் படையும் மாற்றப்பட்டது. ஆரம்பத்தில், படையின் தலைமையகம் பழைய தலைநகரில் இருந்து புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் அது கொல்லத்திற்கு மாற்றப்பட்டு பின்னர் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. திருவனந்தபுரத்தில் அவர்களின் தலைமையகம் இருந்த இடம் இன்று ‘பள்ளயம்/பாளையம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மலையாளத்தில் ‘பள்ளயம்’ என்றால் ‘கண்டோன்மென்ட்’ என்று பொருள்.

பாளையத்தில் அமைந்துள்ள திருவிதாங்கூரின் நாயர் படையின் தலைமையகமாக இருந்த கட்டிடம் தற்போது கேரளாவின் சட்டமன்ற அருங்காட்சியகமாக உள்ளது.

நாயர் படைப்பிரிவு பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாறியபோது, புதிய தலைநகருக்கு அவர்களுடன் சில வழிபாட்டு தெய்வங்களையும் கொண்டு வந்தனர். அவர்களால் கொண்டுவரப்பட்ட ஸ்ரீ அனுமார் ஸ்வாமியும் அப்படிப்பட்ட ஒரு தெய்வம். ஸ்ரீ ஹனுமானை வணங்குவதன் மூலம் ராணுவ வீரர்கள் உத்வேகம் பெறுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. பாளயத்தில் உள்ள ஸ்ரீ ஹனுமான் ஸ்வாமியை இராணுவத்தினர் வழிபட்டனர், அன்று படை வீரர்களால் வழிபடப்பட்ட ஸ்ரீ ஹனுமான் ஸ்வாமி கோயில் இப்போது "OTC ஹனுமான் ஸ்வாமி கோவில்" என்று தற்போதைய பக்தர்களிடையே பிரபலமாக உள்ளனர். இக்கோயிலை பற்றிய முழு விவரமும் "ஸ்ரீ ஹனுமான் ஸ்வாமி கோயில் OTC பாளையம், திருவனந்தபுரம்" என்ற கட்டுரையில் காண்க. முழு விவரங்களுக்கு இணைப்பைக் கிளிக் செய்யவும்.

பாளயத்தை பாங்கோடுக்கு மாற்றுவது

அனுமார் சுவாமி கோவில், பாங்கோடு, திருவனந்தபுரம் - பழைய தோற்றம் காலப்போக்கில், திருவந்தபுரம் நகரமும் அங்கிருந்த படையணியும் [பிரிகேட்] விரிவடைவதால், படையணி பாளயத்திலிருந்து நகர்த்த முடிவு செய்யப்பட்டது. பாளயத்திற்கு கிழக்கே அமைந்துள்ள பாங்கோடு என்ற புதிய இடத்திற்கு படைப்பிரிவை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1935-ம் ஆண்டு பாங்கோடு புதிய இடத்திற்கு படைப்பிரிவு மாற்றப்பட்டது. இருந்துவரும் நடைமுறையாக அங்கு ஒரு புதிய வழிபாட்டுத்தலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பாளயத்தில் வழிபாட்டில் இருந்த ஸ்ரீ ஹனுமார் ஸ்வாமியை அவர்களுடன் பாங்கோட்டுக்கு மாற்ற வேண்டும் என்று காரிஸன் உறுப்பினர்கள் விரும்பினர். ஆனால், பாளயம் பகுதி மக்களிடம் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் தாந்திரீக ஆலோசனைக்குப் பிறகு, ஸ்ரீ ஹனுமான் ஸ்வாமி பாளயத்திலிருந்து நகர்த்தப்படவில்லை, மாறாக ஸ்வாமியின் அனைத்து அம்சங்களையும் சித்தரிக்கும் ஓவியம் பாங்கோடு வழிபாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், நாயர் படையில் வீரர்களால் கோட்டைப் பகுதியில் வழிபாட்டிலிருந்த ஸ்ரீ ஹனுமார் ஸ்வாமியின் சிலை பாங்கோடுக்கு மாற்றப்பட்டு நிறுவப்பட்டது.

பாங்கோடு வளாகத்திற்குள் மாற்றம்

முதலில் படைப்பிரிவு பாங்கோடு நகருக்குச் சென்றபோது, 'வழிபாட்டுத் தலம்' [ஸ்ரீ ஹனுமார் சுவாமி அம்பலம்] HQ91 காலாட்படைப் படையின் பிரதான வாயிலுக்கு வெளியே அமைந்திருந்தது. ஸ்ரீ ஹனுமார் ஸ்வாமி கோவில் வளாகத்திற்கு அருகில் போர் நினைவுச்சின்னம் நிறுவப்பட்ட பிறகு, கடவுள் சிலைகளை வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்ற தேவபிரஷ்னை மூலம் வெளிப்படுத்தினார். பிரிகேட் வளாகத்திற்குள் பொருத்தமான இடம் தேடப்பட்டு, 2001 இல் திருமலா-பிடிபி நகர் சாலையை எதிர்கொள்ளும் ஸ்டேஷன் ஒர்க் ஷாப் EME க்கு அருகில் உள்ள தற்போதைய இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு மாற்றப்பட்டது.

கோவிலின் புதிய வளாகம்

அனுமார் சுவாமி கோவில், பாங்கோடு, திருவனந்தபுரம் - இன்றைய தோற்றம் மெட்ராஸ் படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சோப்ரா புதிய ஸ்ரீ அனுமான் சுவாமி கோவிலுக்கு 17 நவம்பர் 2006 அன்று அடிக்கல் நாட்டினார். ஜூன் 30, 2011 முதல், புதிய வளாகத்திற்கு சிலைகளை மாற்றுவதற்கான அனைத்து மத சடங்குகளும் நடத்தப்பட்டன. பின் 10 ஜூலை 2011 அன்று சிலைகளின் புனர் பிரதிஷ்டை [மீண்டும் நிறுவுதல்] நடத்தப்பட்டது. 2011 ஜூலை 13ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.

கோவில் வளாகத்தில் ஐந்து முக்கிய சிலைகள் உள்ளன - ஸ்ரீ ஹனுமான் ஸ்வாமி, ஸ்ரீ சிவா, ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ கணபதி மற்றும் ஸ்ரீ நாகராஜா. இந்த தெய்வங்கள் அனைத்தும் கோயிலின் முக்கிய தெய்வங்களாகும் ஆதலால் இந்த கோவிலில் "உப-தேவதை" இல்லை என்பதை தயவுசெய்து கவனிக்கவும். ஸ்ரீ கணபதி மற்றும் ஸ்ரீ நாகராஜ பிரதிஷ்டை 1988 இல் செய்யப்பட்ட நிலையில், இந்த கோவிலின் ஸ்ரீ சிவன் மிகவும் பழமையானது. சிவபெருமானின் வரலாறு 175 ஆண்டுகளுக்கு முந்தையது. 1836 ஆம் ஆண்டு நாயர் படைப்பிரிவின் ஆண்டுப் பயிற்சி ஒன்றில் அருவாமொழியில் (ஆரம்பொலி, தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது) அவர்கள் ஒரு அரச மரத்தின் கீழ் சிவபெருமானின் சிலையைக் கண்டனர். படைகள் அங்கு பணியில் இருக்கும் போதெல்லாம் இந்த சிலையை வழிபடுவது வழக்கம். கி.பி 1840 வாக்கில், அவர்கள் இந்த சிலையை கன்டோன்மென்ட்டில் உள்ள கேரிஸனுக்கு கொண்டு சென்றனர். 1940ல் இந்த சிவன் சிலை பாங்கோடுக்கு மாற்றப்பட்டது. முன்பு கூறியது போல், ஸ்ரீ ஹனுமான் ஸ்வாமி சிலை இங்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு நாயர் படைப்பிரிவின் துருப்புக்களால் கோட்டைப் பகுதியில் வழிபாட்டில் இருந்தது.

தற்போது இந்த கோயிலும் பழவங்காடி கணபதியும் ஒரே நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

தற்போதைய வளாகம்

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் இரண்டும் கலந்த ஒரு அரிய கலவையான இடம் பாங்கோடு ஆகும். இது திருவனந்தபுரத்தில் வழுதக்காடு மற்றும் திருமலைக்கு நடுவே அமைந்துள்ளது. ஸ்ரீ ஹனுமான் ஸ்வாமி கோவில் இராணுவ வளாகத்திற்குள் அமைந்திருந்தாலும், பொது மக்கள் எளிதில் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்யலாம். இந்த கோவில் பொதுவாக கேரள கோவில்களின் கட்டிடக்கலையை ஒத்திருக்கிறது. சுற்றிலும் ஏராளமான மரங்கள் மற்றும் செடிகள் இருப்பதால், சுவாமி கதலிவனம் வந்ததைப் போன்ற உணர்வை இந்த கோவில் வழங்குகிறது. கோவிலுக்குள் நுழையும்போது, இடதுபுறம் அனுமன் சுவாமி சிலை நம்மை வரவேற்கிறது. கோவிலுக்குள் நுழைவதற்கு முன், மக்கள் இந்த குறிப்பிட்ட சிலையை வணங்கி, பிரதக்ஷிணை செய்து பின்னர் கோவிலுக்குள் நுழைகிறார்கள். இந்த குளிர்ந்த திறந்தவெளி, இந்த குறிப்பிட்ட சிலையை தரிசனம் செய்வது மற்றும் வளிமண்டலத்தில் உள்ள அமைதி ஆகியவை மனதை அமைதிப்படுத்தும் மற்றும் அமைதியான அனுபவத்திற்கு பக்தரை தயார்படுத்தும்.

மேலும் தொடர்ந்து பிரதான அம்பலத்தினுள் நுழைந்து, நேராக பிரதான சந்நிதியில் உள்ள மூலவர் ஹனுமான் சுவாமியை தரிசனம் செய்யலாம். தியானம் மற்றும் பிரார்த்தனைக்கு உகந்த ஆசிரமம் போன்ற அமைதியான சூழ்நிலையை இந்த கோவில் கொண்டுள்ளது. இக்கோயிலில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளை விட வியாழன் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோவிலுக்குள் நுழையும் போதே அமைதியான சூழல் நம்மை இழுத்துச் செல்கிறது. சுவாமியின் சக்தியை உணர முடிந்தது.

ஸ்ரீ ஹனுமான் ஸ்வாமி

நிற்கும் தோரணையில் இருக்கும் இவர் தனது வலது கையால் அபய முத்திரையைக் காட்டுகிறார். இடது கை இடுப்பில் உள்ளது. அவருக்குப் பக்கத்தில் செப்பினால் செய்யப்பட்ட கதை வைக்கப்பட்டுள்ளது. ஸ்வாமியின் தலைக்கு மேலே காணப்படும் வாலில் ஒரு மணியும் உள்ளது. சுவாமிக்கு எப்போதும் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் காணப்படுகிறார். அவரது கண்கள் நேரடியாக பக்தத்களைப் பார்க்கின்றன, அவருடைய கடாக்ஷம் நேரடியாக பக்தர்கள் மீது விழுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "அனுமார் சுவாமி கோவில், பாங்கோடு, திருவனந்தபுரம்"

 

அனுபவம்
அன்றைய ராணுவ வீரர்களுக்கு வலிமையையும் தைரியத்தையும் ஊட்டிய இறைவன், இன்றைய வீரர்களுக்கும் அதையே வழங்குகிறார். புதிய உன்னதமான நேர்மறை எண்ணங்களால் மனதை புத்துணர்ச்சியடையச் செய்யும் இறைவனை தரிசனம் செய்து, வாழ்க்கையில் புதிய சவால்களுக்கு உங்களை மீண்டும் உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.    

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு: ஜூலை 2023


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+