home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ ஆஞ்சநேயர், பத்தினெட்டாம்படி கருப்ப சுவாமி கோவில், அழகர் கோவில், மதுரை

ஜிகே கௌசிக்

ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதி, பத்தினெட்டாம்படி கருப்ப சுவாமி கோவில், அழகர் கோவில், மதுரை


மதுரை

தேவி ஸ்ரீ மீனாட்சிக்கும் அவரது மிக அழகிய பெரிய கோவிலுக்கும் மதுரை நகரம் பிரபலம். தென்னிந்தியாவின் இந்த கோயில் நகரம் நீண்ட சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்டது. மதுரை ஒரு நகரமாக உருவாக இதனை ஆட்சி புரிந்த பல ஆட்சியாளர்கள் ஸ்ரீமீனாட்சியின் மீது கொண்ட பக்தியின் காரணமாக அவர்கள் இக்கோவிலுக்கு தங்களால் ஆன விரிவாக்கம் செய்ததும் ஒரு காரணம். இந்த நகரம் பல வம்சங்களால் ஆளப்பட்டது, இந்த கோயில் நகரத்தின் வரலாற்றின் சுருக்கமான பதிப்பை எங்கள் முந்தைய பக்கங்களில் வழங்கியுள்ளோம்.

திருமலை நாயக்கர்

இந்நகரை ஆண்ட பல முக்கியமான ஆட்சியாளர்களில், ஸ்ரீ திருமலை நாயக்கர் 1623 - 1659 CE இடையே மதுரையை ஆட்சி செய்தார். பதின்மூன்று மதுரை நாயக்கர் ஆட்சியாளர்களில் இவர் ஏழாவதானவர் இவரது ஆட்சிகாலம் மிகவும் குறிப்பிடத்தக்கது. மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல அற்புதமான கட்டிடங்கள் மற்றும் கோயில்களில் அவரது பங்களிப்புகள் காணப்படுகின்றன. திருமலை நாயக்கர் கலை மற்றும் கட்டிடக்கலைக்கு சிறந்த புரவலராக இருந்தார். பாண்டியர் காலத்து பல பழமையான கோவில்களை புனரமைத்து புதுப்பித்துள்ளார். திருமலை நாயக்கர் அரண்மனை என்று அழைக்கப்படும் அவரது அரண்மனை ஒரு குறிப்பிடத்தக்க கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்பாகும். இது அக்காலம் முதல் பல பார்வையாளர்களை ஈர்க்கிறது என்பது மிகையல்ல.

இவர் காலத்தில் மீனாட்சி கோயில் மற்றும் அழகர் கோயில் இரண்டிலும் பல மண்டபங்களைக் கட்டியுள்ளார். இந்த இரண்டு கோயில்களிலும் உள்ள பல பழைய கட்டிடங்களை அவர் புதுப்பித்திருந்தார். இரண்டு கோவில்களும் இன்றும் பல யாத்திரிகர்களை ஈர்க்கின்றது. இவ்விரு கோவில்களின் திருவிழாக்களையும் சீரமைத்திருந்தார். மதுரையின் உலகப் புகழ்பெற்ற “சித்திரை திருவிழா” வெவ்வேறு சிந்தனையும் சித்தாந்தமும் உள்ளவர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் மறுசீரமைக்கப்பட்டது என்றால் மிகையில்லை. இச்சீரமைப்பு பிராந்தியத்தின் விவசாய பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாகவும் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிட தக்கது. இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு எங்கள் இணைய தளத்தில் தல்லாகுளம் கோயில் பக்கத்தை படிக்கவும். அழகர் வைகை ஆற்றில் பிரவேசிக்கும் போது நடைபெறும் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று நம்பப்படுகிறது.

அழகர் கோவில்

மதுரை அழகர் கோவிலுக்குள் இருந்து ராஜகோபுரத்தின் காட்சி மதுரையில் இருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் அமைதியான சூழலில் ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கு ஒரு சிறந்த கோவில் உள்ளது. காடுகளால் சூழப்பட்ட மலையின் அடிவாரத்தில் கோயில் அமைந்துள்ளது. இன்றும் காடு நன்கு பாதுகாக்கப்பட்டு, கோயிலின் இருப்பிடத் தொன்மை சிதைக்கப்படாமல் உள்ளது.

இக்கோயிலில் மகா விஷ்ணு பரமசுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோம சந்திர விமானம் கொண்ட கர்ப்பகிரகத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தேவி கல்யாண சுந்தரவல்லி என்று அழைக்கப்படுகிறாள். ஊர்வல தெய்வம் அழகர் என்ற பெயரில் வழிபடப்படுகிறார். கள்ளழகர், சுந்தரராஜன் என்பவை இவரின் மற்ற பெயர்கள். அழகர் மக்களின் இதயங்களை கொள்ளையடித்ததால் "கள்ளழகர்" ஆனார். நம்மாழ்வார் கள்ளழகரை நேரடியாகவே “வஞ்சக் கள்வன் மாமாயன்” எனக் கூறியுள்ளார். இந்த மாமாயன் என்பது மாயனுக்கெல்லம் மாயன் என்பதே பொருள்.

புராணங்களின்படி, இக்கோயில் தர்மதேவனால் கட்டப்பட்டது. பின்னர் மலையத்வஜன் என்ற பாண்டிய மன்னனால் புதுப்பிக்கப்பட்டது. மலையத்வஜன் மீனாட்சி தேவியை தன் மகளாகப் பெற இக்கோயிலில் ஸ்ரீ அழகரை வேண்டிக் கொண்டு, அவரும் அருள் புரிந்ததாக கூறப்படுகிறது.

கருப்பன்சாமி மற்றும் அழகரின் அழகும்

அழகர் பெயரில் மட்டுமல்ல, தோற்றத்திலும் அழகாக இருந்தார். அழகரின் அழகு புகழ் பெருமளவில் பரவியது. அழகரின் அழகுக்கு நிகரான சிலை உலகில் இல்லை என்பது அனைவரின் கருத்து. இதனாலேயே சேரநாட்டிலிருந்து [மலையாள தேசம்] ஒரு மன்னன் அழகரின் விக்ரஹத்தை தன் ராஜ்ஜியத்தில் வைத்திருக்க விரும்பினான்.

ஆனால் அழகரை பாதுகாப்பான கோட்டையிலிருந்து அழைத்துச் செல்வது நடைமுறையில் சாத்தியமற்றது. எனவே, ராஜா தனது நாட்டின் அமானுஷ்ய கலையில் நிபுணர்களான பதினெட்டு பேர்களிடம் இப்பணியை ஒப்படைத்தார். இந்த பதினெட்டு மந்திரவாதிகள் ஊர்வல தெய்வத்தை எடுத்துச் செல்ல மதுரையிலுள்ள அழகர் கோவிலுக்கு புறப்பட்டனர். இவர்கள் தங்களின் பாதுகாப்பு கருதி மலையாள தேசத்தின் காவல் தெய்வமான ஸ்ரீ கருப்பன் அவர்களை கூட அழைத்துச் சென்றார். விக்ரஹத்தினை மலையாள தேசம் எடுத்துச் செல்ல இவர்கள் விக்ரஹத்தின் தெய்வீக சக்தியை அகற்றி, அதனை எளிய 'விக்ரஹம்' ஆக்க வேண்டும்.

பத்தினெட்டாம்படி கருப்ப சுவாமி கோவில், அழகர் கோவில் ராஜ கோபுரம், மதுரை மந்திரவாதிகள் இந்த குறிப்பிட்ட வேலையில் இருந்தபோது, மலையாள தேசத்தின் காவல் தெய்வமான ஸ்ரீ கருப்பன் அழகரின் அழகில் மயங்கினான். அவனால் அழகரின் மீதிருந்த தனது கண்களை விலக்க முடியவில்லை. இதனால் மயங்கிய கருப்பன் சிலையை திருட வந்த பதினெட்டு மந்திரவாதிகளையும் காத்து பாதுகாக்கும் கடமையிலிருந்து திசை திருப்பினான். கருப்பன் தங்களை காக்கவில்லை என்பது தெரியாமல் மந்திரவாதிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். பதினெட்டு மந்திரவாதிகள் எந்த நோக்கத்துடன் வேலை செய்கிறார்கள் என்பதை ஒரு பக்தர் கவனித்தார். செய்தி பரவியது. பதினெட்டு மந்திரவாதிகள் பிடிபட்டனர். தண்டனையாக பதினெட்டு மந்திரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் அவர்கள் கோவிலின் ராஜ கோபுரத்தின் முன் பதினெட்டு படிக்கட்டுகளில் அடக்கம் செய்யப்பட்டனர். இந்த விளக்கத்தைத் தவிர, புராணத்தின் பிற பதிப்புகளும் உள்ளன.

அழகர் மீது காதலும் பக்தியும் கொண்ட ஸ்ரீ கருப்பனின் விருப்பத்தின் பேரில், அழகர் அவருக்குப் காவலராக இருக்க ஸ்ரீ கருப்பனுக்கு அருள்புரிந்தார். அன்று முதல் கருப்பன்சுவாமி கோயிலின் அனைத்து சொத்துக்களுக்கும் பாதுகாவலராக உள்ளார்.

கருப்பன்சுவாமி

கோவிலின் பிரதான வாசல் அருகே பதினெட்டு படிகளுக்கு அருகில் காவலராக நிற்கும் கருப்பன் சுவாமிக்கு இங்கு 'ரூபம்' இல்லை. எனவே பக்தர்களால் "பதினெட்டாம் படி கருப்பசாமி" என்று அழைக்கப்படுகிறார். ராஜகோபுரத்தின் பிரதான கதவு எப்போதும் மூடப்பட்டிருக்கும், மூட பட்டுள்ள அப்பெரிய கதவு கருப்பன் வடிவில் வழிபடப்படுகிறது. பிரம்மோத்ஸவத்தின் போது சக்கரத்தாழ்வாருக்கு மட்டும் இக்கதவு திறக்கப்பட்டது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருப்பனுக்கு இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் முதலலில் கருப்பன்சுவாமியை வழிபட்ட பின் பிரதான கோவிலுக்குள் நுழைவது வழக்கம்.

அழகர்களுக்கு ஏராளமான அழகான ஆபரணங்கள் உள்ளன. அழகர் திருவிழாவிற்கு வெளியில் செல்லும்போது, அவர் அணிந்திருக்கும் நகைகளின் பட்டியலை கருப்பன்சுவாமியிடம் படிப்பது வழக்கம். அதேபோல, திரும்பி வரும்போது, அதே நகைகள் வந்திருப்பதை கருப்பன்சாமி உறுதி செய்த பிறகே அழகர் உள்ளே செல்வார். இன்றும் கோவில் மூடப்படும் போது கருப்பன்சுவாமி சந்நிதிக்கு சாவி எடுத்து வருவது வழக்கம். தினமும் நூபுர கங்கையில் இருந்து அழகருக்கு கொண்டு வரப்படும் தீர்த்தம் கருப்பனின் சந்நிதியில் வைக்கப்பட்டு தூய்மையானதாக கொண்டு வரப்பட்டதாக சத்தியம் செய்து உள்ளே கொண்டு செல்லப்படுகிறது. கருப்பன் பெயரில் எடுக்கப்படும் சத்தியம் நீதி தேவன் முன்னிலையில் எடுத்த சத்தியத்திற்கு சமம். கருப்பன்சுவாமி சந்நிதியில் உள்ளூரில் பல தகராறுகள் தீர்க்கப்படுகின்றன, அவரது சந்நிதியில் பொய் உரைப்பது என்பது அவர்களின் வாழ்க்கையை அழிக்கும் என்று நம்பப்படுகிறது.

ஸ்ரீ ஹனுமானுக்கான சந்நிதி

ஸ்ரீ ஆஞ்சநேயர், பத்தினெட்டாம்படி கருப்ப சுவாமி கோவில், அழகர் கோவில், மதுரை கோயிலின் பிரதான ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. ராஜகோபுரத்தின் வாசலுக்குச் செல்லும் பதினெட்டுப் படிகளும், 'பதினெட்டம் படி கருப்பசாமி' கோயிலும் ராஜகோபுரத்தை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. கருப்பன்சுவாமி கோயிலின் தெற்குச் சுவரில் ஸ்ரீ ஹனுமான் சந்நிதி உள்ளது. உண்மையில் ஒரு பக்தர் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் பார்க்கும் முதல் சந்நிதி இதுவாகும். சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது, அது எப்போது தோன்றியது என்று தெரியவில்லை. ஆனால் ஸ்ரீ ஹனுமான் சிலை நாயக்கர்கள் காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. அவர்களின் ஆட்சியின் போது நாயக்கர்களில் ஒருவர் ஸ்ரீ அனுமனை இங்கு [பிரதிஷ்டை] நிறுவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சந்நிதி யாருடைய காலத்தில் வந்தது, எதற்காக இங்கு வந்தது என்பதற்கான காரணமும் தெரியவில்லை.

ஸ்ரீ ஹனுமான்

மதுரை ஸ்ரீ மீனாட்சி கோவில் பிரதான மண்டபத்தில் காணப்படும் ஹனுமார் விக்கிரகம் போன்றே சிறிய மாற்றங்களுடன் இருப்பதாக முதல் பார்வையிலேயே சொல்லலாம். இந்த இரண்டு சிலைகளும் 'அர்த்த சிலா' அதாவது புடைப்பு வகையின் கீழ் வருகின்றன. ஆனால் இவற்றைக் கூர்ந்து கவனித்தால் இவை சற்று ஏறக்குறைய முழுமையாகச் செதுக்கப்பட்ட விக்ரஹம் என்பது விளங்கும்.

ஸ்ரீ ஹனுமான் நடக்கும் கோலத்தில் இருக்கிறார். அவரது இடது தாமரை பாதம் முன்புறமாகவும், வலது தாமரை பாதம் தரையில் உறுதியாகவும் காணப்படுகிறது. அவருடைய பாதங்கள் இரண்டும் நூபுரம் மற்றும் தண்டை அலங்கரிக்கின்றன. இடுப்பை இறுக்கமாகப் பிடித்தபடி கச்சம் பாணியில் வேட்டி அணிந்துள்ளார். அவரது இடது கை, இடது இடுப்புக்கு அருகில், சௌகந்திகா மலரின் தண்டைப் பிடித்தபடி காணப்படுகிறது. அவரது இடது தோளுக்கு மேல் அம்மலர் காணப்படுகிறது. மணிக்கட்டில் வளையலும் மேல் கரத்தில் கேயூரமும் காணப்படுகின்றன. கழுத்துக்கு அருகில் மாலை அணிந்துள்ளார். மற்றொரு மாலை அவரது மார்பை அலங்கரிக்கிறது. அகன்ற மார்பில் இறைவன் யக்ஞோபவீதம் மற்றும் உத்தரியம் அணிந்துள்ளார். ‘புஜ வலையம்’ அவன் தோள்களை அலங்கரிக்கிறது. தம் வலது கையை மேலே உயர்த்தியபடி அவர் தனது பக்தர்களின் மீது ‘நிர்பயத்வம்’ [அபயம்-ஆசிர்வாதம்] பொழிகிறார். இறைவன் காதில் குண்டலமாக உருண்டையான காது வளையத்தை அணிந்துள்ளார். அவரது கேசம் அழகாக கட்டப்பட்டுள்ளது, அவரது தலைக்கு மேல் கிரீடமாக அலங்கரிக்கப்பட்ட 'கேச-பந்தா' பிடித்துள்ளது. இறைவனின் வால் தலைக்கு மேல் உயர்த்தப்பட்டு இடது தோள்பட்டை வரை சென்று வளைவுடன் முடிகிறது. பகவான் பக்தர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டிருக்கிறார். கனிந்த கன்னமும், 'கோரப்பல்' என்பதும், தான் காக்க இருக்கிறேன் என்ற நம்பிக்கையை பக்தர்களுக்கு அளிக்கிறது. அவரது நேரடியான பளபளப்பான கண்கள் பக்தன் மீது கருணையைப் பாய்ச்சுகின்றன.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதி, பத்தினெட்டாம்படி கருப்ப சுவாமி கோவில், அழகர் கோவில்"

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் இறைவனின் முதல் தரிசனத்திலேயே பக்தன் தன் தன்னம்பிக்கையை வலுப்படுவதை உணரலாம். இறைவனின் நேர்கொண்ட கருணை மிகு கடாக்ஷம் வாழ்வில் நேர்மையான அணுகுமுறையை ஏற்படுத்துவதும் உறுதி.    

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு: மே 2023


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+