home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

பெருமாள் திருக்கோயில், தல்லா குளம், மதுரை, தமிழ் நாடு

தல்லா குளம் பெருமாள் திருக்கோயில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி, மதுரை, தமிழ் நாடு

ஜீகே கௌசிக்


மதுரை

நீண்ட வரலாற்றைக் கொண்ட தென்னிந்தியாவின் இந்த கோயில் நகரம் தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது. மதுரை என்ற பெயர் 'மது' என்ற வார்த்தையிலிருந்து உருவானது, அதாவது சாதாரணமாக தேன் என்று பொருள்படும், உண்மையில் அமிர்தம் தான் இனிப்பின் இலக்கணம். சிவபெருமானரின் ஆசியில் உருவான நகரம் இது என்பதால் இது அமிர்தமான நகரம், மதுரை. கிருஷ்ணரின் ஆசியால் உருவான அமிர்தமான நகரம் உத்தரபிரதேசத்தின் மதுரா. மதுரை நகரத்திற்கு கூடல் மாநகரம், ஆலவாய் ஆகிய பிற பெயர்களும் உள்ளன.  

இந்த நகரம் பல வம்சங்களால் ஆளப்பட்டது, இந்த கோயில் நகரத்தின் வரலாற்றின் குறுகிய பதிப்பை எங்கள் முந்தைய பக்கங்களில் கொடுத்தோம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரமான மதுரை பற்றி மேலும் அறிய வாசகர்கள் அவற்றைப் படிக்க விரும்பலாம், மதுரை ஸ்ரீ மீனாட்சி தேவியின் வசிப்பிடமாகும்.  

மதுரையை ஆண்ட பல முக்கியமான ஆட்சியாளர்களில், ஸ்ரீ திருமலை நாயக் [1623 முதல் 1659 வரை] அவர்களும் ஒருவர். மதுரையை ஆண்ட பதின்மூன்று நாயக் ஆட்சியாளர்களில் இவர் ஏழாவதாவார். மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல இடங்களில் மிகவும் அற்புதமான கட்டிடங்கள் மற்றும் கோயில்களை கட்டிய பங்களிப்பு இவருக்கு உண்டு. திருமலை நாயக் கலை மற்றும் கட்டிடக்கலைக்கு சிறந்த புரவலர் ஆவார். பாண்டியர் காலத்து பல பழைய கோயில்களை இவர் புனரமைத்து புதுப்பித்தார். மதுரையில் உள்ள திருமலை நாயக் அரண்மனை என்று அழைக்கப்படும் அவரது அரண்மனை குறிப்பாக அவரது கட்டிடக்கலை நிபுணத்திற்கு ஒரு எடுத்துகாட்டாகும். இன்றும் இந்த தலைசிறந்த அரண்மனை பல பார்வையாளர்களை ஈர்க்கிறது.  

ஏப்ரல்-மே மாதங்களில் மதுரை

ஸ்ரீ அழகர் கோயில், மதுரை, தமிழ்நாடு இந்த மாநகரம் சித்திரை மாதத்தில் "சித்திரை திருவிழா"விற்காக களை கட்டிவிடும். "விழா கோலம்" என்று சொல்லுவார்களே அதன் அர்த்தம் என்ன என்று அப்பொழுது இந்நகரை பார்த்தால் புரியும். இந்த பன்னிரண்டு நாள் கொண்டாட்டத்தில், பௌர்ணமி அன்று ஶ்ரீ மீனாட்சி- ஶ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் தான் மிகவும் விசேடமாகும். இதனினும் மேலாக அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை குறிப்பிட வேண்டும். இந்த விழாவிற்கு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்திருந்து பங்கேற்கிறார்கள் என்பதை பார்த்தால் தான் நம்ப முடியும். இப்பொழுது ஸ்ரீ மீனாட்சியின் திருமணமும், ஸ்ரீ அழகர் வைகை நதியில் இறங்கும் வைபவம் எல்லாம் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. முன்னதாக இந்த இரண்டு பண்டிகைகளும் முறையே மாசி மற்றும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்பட்டு வந்தது.

திருமலை நாயக்கின் முயற்சிகள்

ஸ்ரீ மீனாட்சி திருமண வைபவம் சைவர்களுக்கு மிகவும் முக்கியமான விசேடமான திருவிழாவாகும். அழகர் வைகையில் இறங்குவது என்னும் வைபவம் வைணவர்களுக்கு ஒரு முக்கியமான திருவிழாவாகும். இந்த இரு பண்டிகைகளின் போதும் மதுரை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் இருந்து மக்கள் இந்த புனித நகரத்திற்கு வருவார்கள். விவசாயமே முக்கியமான தொழிலாக கொண்டவர்கள் இங்கு வந்துவிடுவதால் இரண்டு மாதத்திற்கு இராஜ்யத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பக்தர்களின் இரு பிரிவுகளும் இதனால் பிரிக்கப்பட்டு ஒன்று கூடாமலே இருந்தனர். ஆகையால், உற்பத்தி இழப்பைக் குறைப்பதற்கும், பக்தர்களின் இந்த இரு பிரிவினரிடையே ஒற்றுமையைக் கொண்டுவருவதற்கும், திருமலை நாயக் ஆழ்ந்த உரிய ஆய்விற்கு பின்னும் சரியான பரிசீலிப்புக்குப் பிறகும் இந்த இரண்டு பண்டிகைகளையும் இணைத்து சித்திரை மாதத்தில் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இன்று வரை திருமலை நாயக்கால் அமைக்கப்பட்ட இந்த பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. 

இதைப் பற்றி மேலும் அறிய அழகர் கோயில் மற்றும் அதன் பாரம்பரியம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

அழகர் கோவில்

பெருமாள் கோயில், தல்லாகுளம், மதுரை, தமிழ்நாடு மதுரையிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் அமைதியான சூழ்நிலையில் மிக சிறந்த வைணவ தலம் உள்ளது. இந்த கோயில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது, இது காடுகளால் சூழப்பட்டுள்ளது. இன்றும் காடு நன்கு பாதுகாக்கப்பட்டு, கோயிலின் இருப்பிடம் பழமை மாறாமல் உள்ளது.  

இந்த கோவிலில் மூலவர் ஶ்ரீமகாவிஷ்ணு கள்ளழகர், சுந்தரராஜ பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். புராணங்களின் படி, இந்த கோயில் தர்மதேவரால் கட்டப்பட்டது. பின்னர் இதை மலையத்வஜன் என்ற பாண்டியன் மன்னர் புதுப்பித்தார். இந்த கோயிலில் மலையத்வஜன் ஸ்ரீ அழகரைப் பிரார்த்தனை செய்து மீனாட்சி தேவியை தனது மகளாகப் பெற்றார் என்றும் கூறப்படுகிறது. 

பெருமாளைப் புகழ்ந்து பாசுரங்கள் பாடிய பன்னிரண்டு ஆழ்வார்களில் ஆறு ஆழ்வார்கள் இக்கோயில் அழகரை போற்றிப் பாடியுள்ளனர். இந்த கோவிலை மேம்பட்டுக்கு பல ஆட்சியாளர்கள் பங்களித்திருந்தனர். இந்த கோயிலுக்கும், ஸ்ரீ சுந்தரராஜ பெருமாளுக்கும் பல நயம்மிகு கலை பொக்கிஷங்களை திருமலை நாயக் வழங்கியுள்ளார். தமிழில் மூலவர் கள்ளழகர் என்றும் பொதுவில் அழகர் என்றும் அழைக்கப்படுகிறார்.

மதுரைக்கு வருகை தரும் அழகருக்கு திருவிழா

சித்திரை திருவிழா இந்த கோயிலில் பத்து நாட்கள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரையில் அழகர் பெருமாள், அழகர் கோயிலிலிருந்து புறப்பட்டு ராயில், பௌர்ணமி அன்று மதுரையை அடைவார். கள்வர் வேடமேற்று பயணிக்கும் அவர் வழியில் பல இடங்களில் தங்கி உள்ளூர் மக்களை கௌரவிப்பார். அவரது சகோதரி மீனாட்சியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அழகர் மதுரைக்கு வருகை தருகிறார். அவர் மதுரை நகரத்தை அடைவதற்கு முன்பு, அவருடைய சகோதரியின் திருமணம் முடிந்துவிடுகிறது, எனவே அவர் தம்முடைய வாசஸ்தலம் ஆகிய ஆழகர்கோயிலுக்கேத் திரும்ப முடிவு செய்கிறார். திரும்பும் முன் மதுரை நகரில் அவர் வைகை நதியில் இறங்குகிறார். மதுரை மக்கள் அழகரை வரவேற்பது ஒரு பாரம்பரியம். அழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முந்தைய தினம் அழகருக்கு "எதிர் சேவை" என்று விழா எடுக்கப்படும் . விமர்சையாக இவ்விழா கொண்டாடப்படுகின்றது.  

அழகர் வண்டியூர் தசாவதாரம் திருவிழாவில் இரவு முழுவதும் வைகை நதியின் வடக்கு பகுதியில் உள்ள ராமாரையர் மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வுக்குப் பிறகு அழகர் அலங்கரிக்கப்பட்ட அனந்தராயர் பல்லக்கினில் மைசூர் வீர மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். மறுநாள் காலையில் கள்ளர் வடிவத்தில் உள்ள அழகர் 'பூ பல்லக்கு' (மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு) இல் அழகர் கோவிலுக்குத் திரும்புகிறார்.

அழகர் கள்ளழகர் ஆகிறார்

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்கு ஒரு திருடன் வேடமணிந்து புறபடுகிறார். அவர் திருமணத்திற்கு எடுத்துச் செல்லும் விலைமதிப்பற்ற பொருட்கள் வழியில் கொள்ளையடிக்கப்படாமல் இருக்க என்று காரணம் கூறப்படுகிறது. மறுநாள் விடியற் காலை தல்லாகுளம் பெருமாள் கோயிலிருந்து ( சித்ரா பௌர்ணமியன்று ) அழகர் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வைகையை நோக்கி செல்வார். புறப்படும் முன்பு ஸ்ரீவில்லிபுதூரிலிருந்து சூடிக் கொடுத்த நாச்சியராகிய ஸ்ரீ ஆண்டாளின் மாலையை சாற்றிக் கொள்கிறார். இது தவறாமல் நடந்து வரும் விஷேசம்.

அழகர் இப்போது ஒரு 'வெட்டி வேர்' பல்லக்கில் பயணத்தை தொடர்கிறார், பின்னர் மைசூர் வீர மண்டபத்தில் இருந்து அனதராயர் ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை வரை செல்கிறார். வைகையில் ஸ்ரீ வீரராகவா பெருமாள் அவரைப் வரவேற்க காத்திருப்பார். தனது சகோதரியின் திருமணம் முடிந்துவிட்டது என்பதை அவர் இப்போது அறிந்திருப்பதால், அவருடன் இங்கு கொண்டு வரப்பட்ட பரிசுகளை அவர் ஒப்படைத்துவிட்டு, அவருடைய தங்குமிடத்திற்குத் திரும்ப முடிவு செய்கிறார்.

தல்லாகுளம் பெருமாள் கோயில்

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி சன்னிதி, பெருமாள் கோயில், தல்லாகுளம், மதுரை தல்லாகுளத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோயில் திருமலை நாயக்கால் கட்டப்பட்டது. அழகர் வைகை நதிக்குச் செல்வதற்கு முன் இங்கு வந்து தங்கியிருப்பதிலிருந்து இந்த கோயிலின் முக்கியத்துவத்தை நாம் காண முடியும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிருந்து ஆண்டாள் வழங்கிய மாலையை அழகர் சீனிவாச பெருமாளின் முன்னிலையில் ஏற்றுக்கொள்கிறார்.  

திருமலை நாயக் இந்த கோயிலை ஏன் கட்டினார் என்று வரலாறு உள்ளது. அதற்கு முன்னர் அவர் எதிரிகள் வருவது/ தாக்குதல் ஆகியவற்றை முன்னமே தெரிந்து கொள்ள அல்லது பிற செய்திகளைத் தெரிந்துக் கொள்ள தொடர் [ரிலே] தகவல்தொடர்பு முறையைப் பயன்படுத்தினார் என்பதை நாம் அறிந்து கொள்வோம். மதுரையை சுற்றி உள்ள இடங்களிலிருந்து தொடர்ச்சியான மணி ஓசைகள் மூலம் செய்தி அனுப்ப அவர் வசதி செய்து வைத்திருந்தார்.

அவர் வழியில் பல மண்டபங்களை கட்டியிருந்தார், இம்மண்டபங்கள் சத்திரமாகவும் அதே சமயத்தில் செய்திகளை மதுரைக்கு அனுப்பும் இடமாகவும் செயல்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டளின் தீவிர பக்தரான திருமலை நாயக் அக்கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னரே தனது காலை உணவை உட்கொள்ளுவார். கோவிலில் பூஜைகள் முடிந்துவிட்டன என்ற தகவலைப் பெற, ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் மதுரைக்கும் இடையில் அவர் கட்டியிருந்த மண்டபங்கள் இருந்தன. பூஜைகள் முடிந்ததும், இந்த இரண்டு இடங்களுக்கிடையில் வரிசையாக அமைக்கப்பட்ட சத்திரங்களில் மணி ஓசை மூலம் ஶ்ரீவில்லிபுத்தூரில் பூஜை முடிந்துவிட்ட செய்தி மதுரைக்கு ஒளிபரப்பப்படும். 

நாயக்கின் அதிகாரிகளால் மண்டபங்களையும் சத்திரங்களின் செயல்பாடுகளை அவ்வப்போது ஆய்வு செய்து வந்தனர். சில சந்தர்ப்பங்களில் திருமலை நாயக்கரே ஆய்வை மேற்கொள்வார்.

இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில், தற்போது தல்லகுளம் என்று அழைக்கப்படும் தனது அரண்மனைக்கு அருகிலுள்ள மண்டபத்தை பார்வையிட்டபோது, ​​அங்கு வெங்கடேஸ்வர பெருமாள் இருப்பதை போன்று உணர்ந்தார். அந்தப் பகுதியைத் தேடியபோது அங்கே ஒரு ஆஞ்சநேயரின் சிலை இருப்பதைக் கண்டார்கள். எனவே திருமலை நாயக், ஆஞ்சநேயருக்கும் வெங்கடேஸ்வரருக்கும் கோயில் கட்ட முடிவு செய்தார். எனவே மதுரை தல்லகுளத்தில் உள்ள தற்போதைய ஸ்ரீ பிரசன்னா வெகடச்சலபதி கோயில் வந்தது.

தல்லாகுளத்தின் ஸ்ரீ அஞ்சநேயர்

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி சன்னிதி முன் உள்ள தூண், பெருமாள் கோயில், தல்லாகுளம், மதுரை கர்பகிரகத்தை எதிர்புறம் கோயிலின் பிரதான கட்டிடமாக பெரிய தூண்களைக் கொண்ட ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. இங்குள்ள பிரதான தெய்வம் ஸ்ரீ பிரசன்னா வெகடச்சலபதி. ஆனால் இந்த க்ஷேத்திரத்தின் முக்கிய ஈர்ப்பு ஶ்ரீ ஆஞ்சநேயர். 

பிரதான கோயிலின் இடதுபுறத்தில் ஒரு தனி சன்னதியில் ஆஞ்சநேய பகவான் இருக்கிறார். பிரபுவின் சிலை அழகான அலங்காரமான திருவாச்சியுடன் கூடி ஒரே கல்லில் மிகவும் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. கருங்கல்லினாலான சிலை ஏறக்குறைய ஆறு அடி உயரமுள்ளது.

பிரபுவின் தண்டைகள் அணிந்துள்ள தாமரை பாதங்கள் நடக்கும் பாணியில் இருக்கிறது. அவர் இரு திருகரங்களும் அலங்கார ஆபரணங்களுடன் காணப்படுகின்றன. பிரபு தனது இடது கையில் தாமரை மொட்டினை வைத்திருக்கிறார், அதே நேரத்தில் அவரது வலது கை அபய முத்திரையை காண்பிக்கிறது. அவரது இடுப்பில் அவர் ஒரு சிறிய குத்து கத்தி வைத்திருக்கிறார். அவரது வால் தலைக்கு மேலே உயர்ந்து செல்கிறது, வால் முடிவில் ஒரு மணி இருப்பதைக் காணலாம்.  பிரபுவின் பரந்த மார்பினை யக்யோபவீதமும், மற்றும் சில ஆபரணங்களும் அலங்கரிக்கின்றன. அவரது கழுத்தினை ஒட்டி மணிகளால் ஆன நெக்லஸ் உள்ளது. காதினில் அணிந்துள்ள குண்டலம் அவரது தோள்களைத் தொடுவதைக் காணலாம். அவரது தலைமுடி தலையின் மேற்புறத்தில் அழகாக கட்டப்பட்டு, 'கேசபாந்தம்' என்று அழைக்கப்படும் ஆபரணத்தால் உறுதியாக வைக்கப்பட்டுள்ளது. அவரது கன்னங்கள் இரண்டும் சற்றே உள்ளடங்கியுள்ளது [ஹனுமான்]. கன்னங்கள் உள்ளடங்கியுள்ளதால் ’கோர பற்கள்’ சற்றே நீண்டு காணப்படுகிறது. இத்தோற்றம் பார்க்க சற்று ’உக்ரமா’க இருப்பது போலிருக்கும். ஆனால் அவருடைய ஒளிரும் கண்கள் நமக்கு தெய்வீக தொண்டுக்கான ஆறுதலை அளிக்கிறது 'உக்ரம்' என்னும் உணர்வை நம் மனதில் இருந்து எடுத்துவிடுகிறது.

சன்னதிக்கு எதிரே உள்ள தூண்

ஆஞ்சநேய பகவான் சன்னதிக்கு எதிரே ஒரு தனி மண்டபம் உள்ளது, அதில் 'சங்கு' மற்றும் 'சக்ரம்' பொறிக்கப்பட்ட தூண் உள்ளது. இந்த க்ஷேத்திரத்தில் ஆஞ்சநேயர் பிரபு நிறுவப்பட்டபோது அவர் 'உக்ர' மனநிலையில் இருந்தார், எனவே பெரியவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த தூண் பிரபுவின் எதிரே நிறுவப்பட்டது. இதனால் இந்த க்ஷேத்திரத்தின் ஆஞ்சநேய பகவானின் ’உக்ரம்’ அடக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிரார்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீ ஆஞ்சநேயர், பெருமாள் கோயில், தல்லாகுளம், மதுரை"

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் இறைவனிடம் பிரார்த்தனை செய்து அனைவரின் அன்பையும் பெறுங்கள், எதிரிகளிடமுள்ள வேறுபாடுகளை புதைத்து மன அமைதியுடன் வாழவும்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: அக்டோபர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+