பாண்டியர்கள் ஆட்சிகாலத்தில் மதுரை சிறப்பு மிகு நகரமாக விளங்கியது. தில்லியில் சுல்தான்களின் ஆட்சியின் போது, மாலிகாபூர் மதுரையை சூரையாடினான்.
மாலிகாபூர் என்னும் ....நங்கை, தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படை தளபதியாக 1296இல் இருந்து 1316 வரை இருந்தான். தில்லி சுல்தானின் ஆதிக்கம் விந்தியாவிற்கு தெற்கே வர வேண்டி, மாலிகாபூரை படையுடன் கில்ஜி அனுப்பினான். மாலிகாபூர் சுல்தானின் ஆட்சியை தென் இந்தியாவில் விரிவு செய்தது மட்டும் இல்லாமல், தென் இந்திய அரசர்கள் மற்றும் மக்களின் கஜானாவை சூரையாடிச் சென்றான். அவன் தென் இந்திய கோயில்களின் நகைகள் சொத்துகள் முதலியவற்றை சூரையாடியதோடு நில்லாமல் கோயில்களை அழித்ததும், சிலைகளை உடைத்ததும் தென் இந்திய வரலாற்றில் பதிவாகியுள்ளது. இவனுடைய இந்த அட்டகாசத்திற்கு இரையான பல நகரங்களில் மதுரையும் ஒன்று. பின் பல இடங்களில் தில்லி சுல்தானின் பிரதிநிதியாக அரசாட்சியை சிலரிடம் ஒப்படைத்துவிட்டு, தனது சூரையாடிய செல்வத்துடன் தில்லி திரும்பினான்.
மாலிகாபூர் தில்லி திரும்புகையில் 241 டன் பொன்னும், 20000 குதிரைகளும், 612 யானைகளும் கொள்ளையடித்த பொருளாக தென் இந்தியாவிலிருந்து எடுத்து சென்றதாக வரலாற்று அறிஞர் ஜயுத்தின் பாரனி, கூறுகிறார் .
மதுரை விஜயநகர் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் வந்த பிறகே, திரும்பவும் ஒளிவிட்டது. மதுரை நாயக்கர்கள் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் பிரதிநிதிகளாக மதுரையை ஆளவந்தவர்கள். விஜயாநகர சாம்ராஜ்ஜியத்தின் ஆதரவில் இருந்த மதுரை பாண்டியனை வீரசேகர் சோழன் வென்று தனது ஆட்சியை மதுரையில் துவங்கினான். இதை எதிர்த்து கிருஷ்ண தேவ ராயர் தனது படை தளபதி நாகமா நாயக்கர் என்பவரை மதுரைக்கு அனுப்பினார். வீரசேகர சோழனை வீழ்த்திய நாகமா தன்னை மதுரையின் அரசன் என்று அறிவித்துக்கொண்டான். இதை அறிந்த கிருஷ்ணதேவ ராயர், நாகமாவின் மகன் விஸ்வநாத நாயக்கர் என்பவரை மதுரைக்கு அனுப்பி நாகமாவை தனது அரசசபைக்கு அழைத்து வருமாறு கட்டளையிட்டார். அரச கட்டளையை ஏற்று தன் தந்தை நாகமாவை தோற்கடித்து, அரச சபைக்கு அழைத்து வந்தான். 1530இல் இதற்கு வெகுமதியாக விஸ்வநாத நாயக்கரை மதுரையின் பிரதிநிதியாக நியமித்தார். 1565 வரை மதுரை நாயக்கர்கள், விஜயநகர் சாம்ராஜ்யத்துக்கு கட்டுபட்டு வந்தனர். பின், விஸ்வநாத நாயக்கரின் மகன் கிருஷ்ணப்பா நாயக்கர் தனது மதிநுட்பமிகு மந்திரி ஆர்யநாத முதலியாரின் ஆலோசனையின் பெயரில் மதுரையை விஜயநகரத்திலிருந்து தனியாக்கி ஆட்சி புரியலானான்.
இன்றைய சூழலில் மதுரை மிக பெரிய நகரமாக விளங்குகிறது. நாயக்கர்கள் காலத்திலும் அதற்கு முன்பும் கட்டப்பட்ட கோயில்கள் தவிர புதிய கோயில்களும் வந்துள்ளன. பல இடங்களுக்கு போக்குவரத்து வசதிகள் உள்ளன. உள்ளூர் வியாபாரம் யாத்திரிகர்களை மையமாகக் கொண்டுள்ளதால் வணிகர்கள் மிக நட்புடன் பழகுகிறார்கள். இராமேஸ்வரம் பயணிக்கும் அனைத்து யாத்திரிகர்களும் மதுரை நகரத்தின் வழியாகவே பயணிக்கிறார்கள். ஶ்ரீமீனாக்ஷி அம்மையார் திருக்கோயிலை மையமாக அமைந்துள்ள மதுரையில் இக்கோயில் தான் பிரதானம். யாத்திரிகர்கள் இக்கோயிலை தவிர மதுரையிலும், சுற்றும் உள்ள முருகன், விஷ்ணு கோயில்களுக்கும் விஜயம் செய்கிறார்கள்.
"கிருஷ்ண ராயர் தெப்பக்குளம்" என்னும் இடம் மதுரையில் அண்ணா பஸ் நிலையத்திற்கும், திருபரங்குன்றத்திற்கும் இடையில் இருக்கிறது. அண்ணா பஸ் நிலையம் அல்லது பெரியார் பஸ் நிலையத்திலிருந்து இங்கு வருவதற்கு பஸ் வசதி உள்ளது. ’தெப்ப குளம்’ என்பது சாதாரணமாக ஒரு திருக்கோயிலை சேர்ந்த திருக்குளமாகும், ஆண்டுதோறும் கோயில் உத்ஸவ மூர்த்தித்தை அழகாக ஜோடிக்கப்பட்ட தெப்பத்தில் வைத்து குளத்தில் ஊர்வலம் வருவது வழக்கம். இப்படி "தெப்பத்தை" மிதக்க விடும் அளவு மிக பெரிய குளமாக இருக்கும் அதனை "தெப்பக்குளம்" என்று அழைப்பார்கள்.
இன்று இங்கு குளம் இல்லை. ஆனால் இங்கு குளம் இருந்திருக்க வேண்டும். மேலும் கோயில் உத்ஸவ மூர்த்திகளை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உலா அழைத்துச் செல்லும் ஆண்டு விழா நடந்திருக்க வேண்டும். அதனால் தான் இப்பெயர் "தெப்பக்குளம்" வந்திருக்கிறது.
இந்த திருக்குளத்திற்கு இதனை கட்டிய அரசனின் பெயரையே வைத்திருக்கிறார்கள். கிருஷ்ணராயா என்பதால் இது கிருஷ்ண தேவராயரையோ அல்லது கிருஷ்ணப்பா நாயக்கரையோ குறிக்கும், ராயா என்பது ஆட்சியாளர் என்னும் பொருளில் எல்லா அரசருக்கும் பொருந்தும். விஸ்வநாத நாயக்கரும், மகன் கிருஷ்ணப்பா நாயக்கரும் கிருஷ்ணராய தேவருக்கு விச்வாசிகள் என்பதால் இது கிருஷ்ணதேவ ராயரை குறிக்கும் பெயராக இருக்கலாம்
சாதாரணமாக "தெப்பக்குளம்" என்பது ஏதாவது ஒரு கோயிலுக்கு சொந்தமாக இருக்கும். அக்குளத்தில் அக்கோயில் சுவாமியின் உத்ஸவர் மிதவை-பரப்பில் செல்வது உண்டு. ஆனால் இக்குளத்தினை "தெப்பக்குளம்" என்று அழைத்தாலும் இது எந்த கோயிலுக்கு சொந்தமாக இருந்தது என்ற விவரம் தெரியவில்லை.
ஶ்ரீவியாச ராஜாவின் தாக்கத்தால் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த ராஜ்ஜியங்களில் ஶ்ரீஆஞ்சநேயர் வழிபாடு இருந்து வந்தது. மாத்வாசாரியாரின் சித்தாந்தமான "த்வைத"த்தை இவர்கள் பின்பற்றினார்கள். ஶ்ரீஆஞ்சநேயரை "முக்கிய பிராணா" என்று முக்கிய தெய்வமாக கொண்டாடுவார்கள். சாதாரணமாக மாத்வ மடங்கள் நதிக்கரையிலோ அல்லது குளக்கரையிலோ அமைப்பது வழக்கம். இவர்கள் மடத்தில் முக்கிய தெய்வமாக ஶ்ரீஆஞ்சநேயரை பிரதிஷ்டைச் செய்து வழிபடுவார்கள். ஶ்ரீஆஞ்சநேயருக்கு கோயில் குளக்கரையிலோ அல்லது படியிலோ அமைப்பார்கள்.
இந்த முறையில் இங்கு இயங்கிவந்த மாத்வ மடம், ஶ்ரீமுக்கிய பிராணா எனவழைக்கப்படும் ஶ்ரீஆஞ்சநேயருக்கு கிருஷ்ணராயா தெப்பகுளத்தின் கரையில் கோயில் கட்டினர். கர்ப்பகிருஹமும் சுற்றி மண்டபம் கட்டப்பட்டது. கர்ப்பகிருஹத்தில் ஶ்ரீஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர். சுற்று மண்டபம் மடமாகவும் பயணிகள் தங்கும் விடுதியாகவும் பயனில் இருந்திருக்கிறது. ஆஞ்சநேயருக்கு தினசரி பூஜைகள் மாத்வர்களால் செய்யப்பட்டு வந்திருக்கிறது.
கிடைக்கும் தகவல்படி 1903ஆம் ஆண்டு செப்பனிடப்பட்ட கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்துவைக்கப்பட்டது. பின் 1984ஆம் ஆண்டு கர்ப்பகிருஹம் விரிவு படுத்தப்பட்டு புனருத்தாரணம் நடத்தப்பட்டது, அடுத்த ஆண்டே பிராமணர்கள் சங்கம் அறுபதுக்கு முப்பத்தைந்து அடிக்கு பெரிய கூடம் கட்டினார்கள். கோயில் சம்பந்தபட்ட விசேடங்களுக்கும், பஜனை, சொற்பொழிவு முதலியவற்றிற்கும் உபயோகமாக இருக்கிறது இக்கூடம்.
1988ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் நாள் ஶ்ரீவள்ளி, ஶ்ரீதேவசேனா உடனுறை ஶ்ரீசெந்திலாண்டவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் நாள் புதிய மூன்று நிலை இராஜ கோபுரமும், புதிய விமானங்களும் கட்டப்பட்டு திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
1995ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், கோயிலின் சில பக்தர்கள் முன்வந்து, திருக்கோயிலின் தளங்களை புதிய கல் வேய்து செப்பனிட்டார்கள்
கர்ப்பகிருகஹம் முக்ய சாலையிலிருந்தே தெரியும். ஶ்ரீஆஞ்சநேயர் அஞ்சலி ஹஸ்தனாக இருக்கிறார். சிலா மூர்த்தம் சுமார் இரண்டரை அடி உயரம் இருக்கும். பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளார் பகவான். அவர் கம்பீரமாக அங்கு நடப்பவை எல்லாவற்றையும் மேற்பார்வை பார்ப்பதுப்போல் இருக்கிறார். அவரின் காதுகள் கூற்மையாக, கவனமாக இருப்பது, பக்தர்களின் வேண்டுதலை ஶ்ரீஇராமரிடம் எடுத்து செல்ல தான்.
ஶ்ரீமாத்வ மடங்களில் அஞ்சலி ஹஸ்தனாக ஶ்ரீமுக்கிய பிராணாவை பார்ப்பது மிக அரிது. சாதாரணமாக அர்த்தசிலை ரூபத்தில் புடைப்பு சிலையாக வால் தூக்கிய நிலையில் தான் காணப்படுகிறது. மூலபடிவம் ஏதோ ஒருகாலத்தில் மாற்று சிலை வைக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் பூஜைகள் என்றும் தடைபடவில்லை என்பது தான் முக்கியம்.
அனுபவம்
மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளத்தில் இருக்கும் ஶ்ரீமுக்கிய பிராணாவிடம் உங்களது பிராத்தனைகளை "காதில்
போட்டுவையுங்கள்". நிச்சயம் நல்ல பலன் கிடைப்பதை உணர்வீர்கள்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: டிசம்பர் 2018
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020