home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் திருக்கோவில், மஹால் 5வது வீதி, மதுரை

ஜீகே கௌசிக்

ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் திருக்கோவில், மஹால் 5வது வீதி, மதுரை


மதுரை

ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் திருக்கோவில், மஹால் 5வது வீதி, மதுரை மதுரையை நினைக்கும் போது முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோயிலும் அதன் அழகான மற்றும் பிரம்மாண்டமான கோபுரங்களும் தான். இந்தக் கோயிலுக்குச் சென்ற பிறகு கிடைக்கும் மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை. இக்கோயிலை மய்யமாகக் கொண்டு நிர்மானிக்கப்பட்டது மதுரை. இதனை தலைநகரமாகக் கொண்டு பல வம்சங்களால் ஆளப்பட்டது மதுரை. ஒவ்வொரு வம்சத்தினரும் மீனாட்சி கோயிலையும் நகரத்தினையும் செம்மை செய்வதில் பங்களித்துள்ளனர்.

தென்பாரதத்தின் நுழைவாயிலாக மதுரை இருந்தது. இது பல யாத்ரீகர்கள் மற்றும் பயணிகளுக்கு உபசரித்து விருந்தோம்பல் செய்யும் பாரம்பரியத்தைக் கொண்ட நகரமாக இருந்ததுள்ளது. "தூங்காத நகரம்" என்று அழைக்கப்படும் இந்த பரபரப்பான நகரம் இன்று மிகவும் விரும்பப்படும் யாத்திரை மையமாகவும் மற்றும் சுற்றுலா ஸ்தலமாக உள்ளது. இன்று நாம் காணும் நகரம் மதுரை நாயக்கர் வம்சத்திற்கு, குறிப்பாக திருமலை நாயக்கர் மற்றும் இந்த வம்சத்தின் ராணி மங்கம்மா ஆகியோருக்கு மிகவும் கடன்பட்டுள்ளது. மாலிக் கஃபூரின் ஆட்சியின் போது (1296-1316) மற்றும் மதுரை சுல்தானகத்தின் காலங்களில் அழிக்கப்பட்ட பல கோயில்கள் அடுத்தடுத்த ஆட்சி நாயக்கர் வம்சத்தால் புதுப்பிக்கப்பட்டு பழைய பெருமைக்கு கொண்டு வரப்பட்டது.

மதுரை மற்றும் நாயக்கர் வம்சம்

1378 முதல் மதுரை சுல்தானகத்தை ஒழித்து மதுரைக்கு அமைதியை ஏற்படுத்தியவர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஸ்ரீ குமார கம்பண்ணா. ஆனால் ஆட்சியின் அதிகாரத்திற்கான சண்டை தொடர்ந்தது. ஆனால், விஜயநகரப் பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலத்தில்தான், மதுரைக்கு நிரந்தர அமைதி ஏற்பட்டது.

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர், விஜயநகரத்தின் பாதுகாப்பில் இருந்த பாண்டியர்களைக் கொள்ளையடித்ததற்காக வீரசேகர சோழனைத் தண்டிக்கும் பொருட்டு, தனது தளபதி நாகம நாயக்கரை மதுரைக்கு அனுப்பினார். சோழனை தோற்கடித்த நாகம, மதுரையை தனக்கு சொந்தமான தனி ஆட்சியாக அறிவித்தார். இதனால் கோபமடைந்த கிருஷ்ணதேவராயர், நாகம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயக்கரை தந்தையை தனது அரசவையில் ஆஜர்படுத்த அனுப்பினார். அவரும் அவ்வாறே செய்ய, அவரது விசுவாசத்திற்கு வெகுமதியாக 1529 இல் விஸ்வநாத நாயக்கர் மதுரையை ஆட்சியாளராக்கினார். விஸ்வநாத நாயக்கரும் அவரது மகன் கிருஷ்ணப்ப நாயக்கரும் 1565 வரை அடுத்தடுத்த விஜயநகர பேரரசர்களுக்கு ஆதரவளித்தனர், அதன் பிறகு கிருஷ்ணப்ப நாயக்கர் தனது தந்தையின் உதவியுடன் ஒரு சுதந்திர மதுரை அரசை நிறுவினார். இவ்வாறு மதுரை நாயக்கரின் வம்சம் 1529 முதல் தொடங்கியது.

திருமலை நாயக்கர் மஹால்,மதுரை மதுரை நாயக்கர்கள் ஆட்சி 1529 முதல் 1736 வரை ஏறகுறைய இருநூறு ஆண்டுகள் தொடர்ந்தது. வம்சத்தின் பல நாயக்கர்களில் திருமலை நாயக்கர் மற்றும் ராணி மங்கம்மா ஆட்சி காலம் நாயக்கர்களின் பொற்காலமாக கருதப்படுகிறது. இந்த இரண்டு ஆட்சியாளர்களும் தங்கள் குடிமக்களின் நலனை மனதில் கொண்டு பல நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவர்கள் தங்கள் எதிரிகளுக்கு எதிராக ராஜதந்திரத்தை தங்கள் முக்கிய கருவியாகப் பயன்படுத்தினர் மற்றும் போரைத் தவிர்த்தனர். இவர்களது காலத்தில் பல கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டன. கலாச்சார மையங்களாக விளங்கும் கோவில்கள் இப்பகுதியின் துடிப்பான கலாச்சாரத்தை மீண்டும் செயல்படுத்தின. அவர்கள் தங்கள் கண்ணோட்டத்தில் மதச்சார்பற்றவர்களாக இருந்தனர் மற்றும் மதங்களின் அனைத்து பிரிவுகளையும் கவனித்துக் கொண்டனர். பல நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன; மதுரை மற்றும் பிற இடங்களுக்கு இடையே சரக்குகள் மற்றும் யாத்ரீகர்கள் எளிதாக செல்ல வழிவகைகளை பல சத்திரங்கள் அமைத்தனர். இருவரும் சிறந்த கட்டிடக் கலைஞர்கள், கலையில் ஆர்வம் மிக்கவர்கள் அதனால் பிராந்தியத்தின் கலை மற்றும் கைவினைகளை ஊக்குவித்தனர்.

திருமலை நாயக்கர் மஹால்

திருமலை நாயக்கர் 1623 முதல் 1659 வரை கிட்டத்தட்ட முப்பத்தாறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவருடைய காலத்தில் மீனாட்சியம்மன் கோயிலில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டன. அவர் செய்த பங்களிப்புகளைப் பற்றி நிறைய பேச முடியும் என்றாலும், மதுரையில் அவர் கட்டிய அரண்மனை பல விதத்தில் முன்மாதிரியாக உள்ளது. இந்த அரண்மனை இன்று திருமலை நாயக்கர் மஹால் என்று அழைக்கப்படுகிறது. இது அந்தக் காலத்தின் கட்டமைப்பு அதிசயம் மற்றும் பொறியியல் அற்புதம் என்று தான் சொல்ல வேண்டும்.

திருமலை நாயக்கர் மஹால் என்ற பெயரில் இன்று நாம் காணும் மாபெரும் கலைப் பொக்கிஷம் அன்று திருமலை நாயக்கரால் கட்டப்பட்டதில் ஒரு பங்கு. இன்று மஹாலாக எஞ்சியிருக்கும் தூண்கள், வளைவுகள் மற்றும் பலகனிகள் அளவு ஆச்சரியமாக இருக்கிறது. அற்புதமான அரண்மனையிலிருந்து விலையுயர்ந்த கற்கள் எடுத்துச் செல்லப்பட்ட பின்னரும் கூட, வளைவுகளில் ’ஸ்டக்கோ’ வேலைப்பாடுகள் மற்றும் கூரையில் ஓவியங்கள் இருப்பதைப் பார்த்து ஒருவர் மெய்மறந்து போவது உறுதி.

அன்றைய காலத்தில் பிரமாண்டமாக இருந்த வளாகம் தற்போது அதன் அளவில் நான்கில் ஒரு பங்காக துண்டிக்கப்பட்டுள்ளது. அன்றைய மஹாலின் பகுதியாக இருந்த பகுதிகள் தற்போது மஹால் பகுதி என்று அழைக்கப்படுகிறது. இன்று இப்பகுதியில் பல கோவில்கள் காணப்படுகின்றன. இவற்றில் பல கோயில்கள் சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த மக்களால் பராமரிக்கப்படுகின்றன. மஹால் பகுதியின் ஐந்தாவது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிக்கான கோயிலும் அத்தகைய கோயிலாகும்.

மதுரையின் சௌராஷ்டிரர்கள்:

சௌராஷ்டிரர்கள், அவர்களின் மொழி, மதுரை சௌராஷ்டிரர்கள் மற்றும் மதுரைக்கு அவர்களின் பங்களிப்பு பற்றி மேலும் அறிய, “ஸ்ரீ ஆஞ்சநேயா, சீதாராம ஆஞ்சநேய மாதாலயம், அலங்கார் தியேட்டர் பின்புறம், மதுரை” என்ற எங்கள் மற்ற கட்டுரையில் படிக்கவும்.

ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் கோவில்

ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் திருக்கோவில், மஹால் 5வது வீதி, மதுரை ஸ்ரீ முத்தையா ஸ்வாமி கோவிலுக்கு மிக அருகில், மஹால் 5வது தெரு மற்றும் மஞ்ஞனகார தெரு சந்திப்பில் "ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் கோவில்" உள்ளது. கோவிலின் பக்கத்தில் “ஸ்ரீ சீதாராமஞ்சநேய சத்சங்க அரங்கம்” - உள்ளது. இங்கு கலைநிகழ்சிகளும் பிரவசனங்கள் நடத்தப் படுகிறது மற்றும் நிர்வாகத்திற்கான அலுவலகமும் உள்ளது.

முப்பது வருடங்களுக்கு முன்பு இந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தேன். இது இரண்டு வரிசையில் நான்கு தூண்கள் கொண்ட மண்டப்பதில் ஸ்ரீராம பரிவார சந்நிதியுடன் கொண்ட ஒரு சிறிய கோயிலாகும். ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீராம பரிவாரத்தை நோக்கி எழுப்பப்பட்ட மேடையில் காட்சியளித்தார். ஸ்ரீ ஆஞ்சநேயருடன் பல 'நாக பிரதிஷ்டை'களும் காணப்பட்டன.

எட்டு தூண்களும் கடினமான கிரானைட் கல்லினால் ஆனது, அவற்றில் ஒரு தூணில் ஸ்ரீ ஆஞ்சநேயரை எதிர்கொண்டு ஸ்ரீராம பரிவாரத்தை வேண்டி நிற்கும் அரச பெண்மணியின் புடைப்பு சிற்பம் இருந்தது. ஸ்ரீராமர் கோயிலுக்கு நாயக்கர்களின் அரச அனுசரணை இருந்தது என்பதை இந்தச் சிற்பத்திலிருந்து ஊகிக்கிறேன். சந்நிதிக்கு இருபுறமும் விமானம் எதுவும் தென்படவில்லை.

நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்குச் சென்றேன், நவீன முறையில் கிரானைட், மார்பிள் தரை, சந்நிதிகளுக்கான விமானம், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தனி சந்நிதி, நேர்த்தியாக வரிசையாக 'நாகப் பிரதிஷ்டை', கோயில் மற்றும் விமானங்கள் அனைத்தும் தங்க நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டது. கர்பக்ரஹத்தை சுற்றி வர பக்தர்களுக்கு இரண்டு அடி பாதை அமைக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் திருக்கோவில், மஹால் 5வது வீதி, மதுரை இந்த இரண்டாவது வருகையின் போது கிரானைட் தூண்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. தனி சந்நிதிகளில் ஸ்ரீஆஞ்சநேயர் கிழக்கு நோக்கியும், ஸ்ரீராம பரிவாரம் வடக்கு நோக்கியும் உள்ளனர். ஸ்ரீராமரின் வலதுபுறத்தில் ஸ்ரீ சீதாதேவியும், இடதுபுறத்தில் ஸ்ரீலக்ஷ்மணரும், சந்நிதியில் உற்சவ மூர்த்தியும் காட்சியளிக்கின்றனர். ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதியில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் உற்சவ மூர்த்தி காணப்படுகிறது.

ஸ்ரீ ஆஞ்சநேயர்

இறைவனின் சிலை கிரானைட்டில் செதுக்கப்பட்டுள்ளது மற்றும் சுமார் நான்கு அடி உயரம் புடைப்பு சிலை வடிவத்தில் உள்ளது.

இறைவன் தனது இரண்டு தாமரை பாதங்களையும் நேராகவும் தரையில் உறுதியாகவும் வைத்து நிற்கிறார். தலையை சற்று வலப்புறமாக சாய்த்துக்கொண்டு ‘திரிபங்கா’ தோரணையில் அவர் நிற்கும் மனதை மயக்குகிறது.

நூபுரம் மற்றும் தண்டை ஆகிய இரண்டும் அவரது தாமரை பாதங்களை அலங்கரிக்கின்றன. அவரது வலது முழங்காலில் ஒரு மெல்லிய சங்கிலி காணப்படுகிறது. மணிக்கட்டில் கங்கணமும், மேல்கையில் அங்கதமும் இறைவனின் இரு கரங்களையும் அலங்கரிக்கின்றன. இறைவனின் இடது கரம் இடுப்பில் ஊன்றி, சௌகந்திகா மலரின் தண்டைப் பிடித்துள்ளது. இன்னும் பூக்காத மலர் இறைவனின் இடது தோளுக்கு சற்று மேலே காணப்படுகிறது. இறைவனின் உயர்த்தப்பட்ட வலது கரம் தனது பக்தர்களுக்கு ‘அபய முத்திரை’ மூலம் ஆசிகளைப் பொழிகிறது. இறைவனின் வளைந்த மற்றும் உயர்ந்து நிற்கும் வால் அருளும் வலது உள்ளங்கைக்கு அடுத்ததாகக் காணப்படுகிறது. வாலின் வளைந்த முனையில் ஒரு சிறிய மணியும் காணப்படுகிறது. நெக்லஸ் மற்றும் இரண்டு மாலைகள் அவரது மார்பை அலங்கரிக்கின்றன. அவரது நீண்ட காதுகளில் உள்ள ‘குண்டலம்’ தோள்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. இறைவனின் கேசம் கட்டியாகக் கட்டப்பட்டிருப்பதைக் காணமுடியவில்லை, கட்டப்படாத கேசம் காதுகளுக்கு அருகில் பாய்ந்தோடுகிறது. அவர் நிற்கும் தோரணை மெய்சிலிர்க்க வைக்கும் அதே வேளையில், அவரின் அருள்பாலிக்கும் கண்கள் வெளிப்படுத்தும் அருள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் கோவில், மஹால் 5வது தெரு மதுரை"

 

அனுபவம்
முற்கால அரசகுடியினருக்கு நீதியான சிந்தனையை அருளிய இறைவனின் தரிசனம், நமது வாழ்வில் நீதிக்காக வேண்டிக் கொள்ளும் அனைவருக்கும் செழிப்பைத் தரும் என்பது உறுதி.   

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு: மார்ச் 2023


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+