home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ வீர ஆஞ்சநேயர், கோட்டை பெருமாள் கோவில், திருப்பத்தூர், தமிழ்நாடு

ஜீகே கௌசிக்

கஜேந்திர வரதராஜ சந்நிதி,கோட்டை பெருமாள் கோவில், திருப்பத்தூர், தமிழ்நாடு


திருப்பத்தூர்

திருப்பத்தூர் தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்று. இது பெங்களூர்-சென்னை பிரதான ரயில் பாதையில் அமைந்துள்ளது. ஜோலார்பேட்டை சந்திப்பிலிருந்து இந்த ஊர் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த இடத்தின் வருவாய் அதிகமாக இருந்ததால், இந்த இடம் வருவாய் வட்டமாக கருதப்பட்டது. சோழர் ஆட்சிக் காலத்திலும், இது உற்பத்தித்திறனுக்காக அறியப்பட்டது மற்றும் இந்த பகுதி "ஸ்ரீ மாதவ சதுர்வேதி மங்கலம்" என்று அழைக்கப்பட்டது. அவர்களின் ஆட்சியின் போது இது "நிகரிலி சோழ மண்டலம்" கீழ் செயல்பட்டது. திருப்பத்தூரில் இந்திய தொல்லியல் துறை இதுவரை ஆய்வு செய்த கல்வெட்டுகளில் இருந்து, இந்த நகரம் 1600 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் 2019 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு திருப்பத்தூர் என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் இப்போது திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களையும், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு தாலுகாக்களையும் கொண்டுள்ளது.

திருப்பத்தூர் பெயர் காரணம்

கஜேந்திர வரதராஜ கோவில்,கோட்டை பெருமாள் கோவில், திருப்பத்தூர், தமிழ்நாடு திருப்பத்தூர் என்றால் பத்து கிராமங்கள்/சிறு நகரங்கள் அடங்கிய தொகுப்பு என்று பொருள். நகரின் தெற்கு எல்லையில் ஆதியூர் (ஆதி என்றால் ஆரம்பம்) என்றும், நகரின் வடக்கு எல்லையில் கோடியூர் (கோடி என்றால் முடிவு) என்றும் இந்த இடம் இருக்கிறது இடைப்பட்ட இடங்களுடன் இவை பத்து கிராம தொகுதியும் சேர்ந்து "திருப்பத்தூர்" என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ மாதவ சதுர்வேதி மங்கலம், வீர நாராயண சதுர்வேதி மங்கலம், திருப்பேரூர் மற்றும் பிரம்மபுரம் (பிரம்மேஸ்வரம்) என்ற பல பெயர்களால் இவ்விடம் அறியப்படுகிறது. தற்போதைய பெயர் "திருப்பத்தூர்" என்பது "திருப்பேரூரில்" இருந்து வந்திருக்கலாம் என்று கூறும் இரண்டாவது கருத்தும் உண்டு.

திருப்பத்தூர் கோட்டை

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, நகரின் கிழக்குப் பகுதியில் ஒரு கோட்டை இருந்தது. கோட்டையை முதலில் கட்டியது யார், எப்போது இடிக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியவில்லை. இருந்தும் இன்றும் பெரிய ஏரியை ஒட்டிய பெரும் பகுதி கோட்டை பகுதி என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரம் விஜயநகர வம்சத்தின் (ஹொய்சளர்கள்) ஆட்சியின் கீழ் இருந்ததால், அவர்கள் ஆட்சியின் போது கோட்டை வந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆம்பூர் போன்ற அருகிலுள்ள இடங்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் போர் நடக்கும் பகுதியாக இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கள் இப்பகுதியில் தங்கள் பிடியை பலப்படுத்தினர். ஆங்கிலேயர்கள் அனைத்து கோட்டைகளையும் இடிக்க நடவடிக்கை எடுத்தனர். அனேகமாக இந்த நேரத்தில் ஆங்கிலேயர்கள் இங்கிருந்த கோட்டையை இடித்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

ஹைதர் அலியின் கீழ் மைசூர் இராணுவம் 1767 ஆம் ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் வாணியம்பாடியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போருக்கு புதிதாக படையெடுத்து வந்த பொழுது முக்கிய இராணுவம் வாணியம்பாடியை நோக்கி அணிவகுத்துச் சென்றது, மற்றொரு பிரிவினர் முன்னதாக திருப்பத்தூர் திசையில் அனுப்பப்பட்டனர். சில காலம் திருப்பத்தூர் மைசூர் ஆட்சியின் கீழ் இருந்தது.

கோட்டை கோவில்

முன்பு குறிப்பிட்டது போல, சோழர்கள், விஜயநகர சாம்ராஜ்யம், மைசூர் சாம்ராஜ்யம் போன்றவற்றின் ஆட்சியின் கீழ் இந்த பிரதேசம் இருந்தது. திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் ஆகிய இரண்டு இடங்களிலும் பல்வேறு தெய்வங்களுக்கான பல கோயில்கள் இந்த பேரரசர்களால் அவர்களின் ஆட்சியில் கட்டப்பட்டன. இன்றும் அவர்களால் கட்டப்பட்ட சில கோயில்கள் உள்ளன. திருப்பத்தூரில் உள்ள பழமையான கோவில்களில் கஜேந்திர வரதராஜர் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோவில்கள் இரண்டும் கோட்டை பகுதியில் அமைந்துள்ளன. எனவே முதல் கோவில் "கோட்டை பெருமாள் கோவில்" என்றும் இரண்டாவது "கோட்டை ஈஸ்வரன் கோவில்" என்றும் அழைக்கப்படுகிறது.

கோட்டைப் பெருமாள் கோவிலில் கஜேந்திர வரதராஜரும், பெருந்தேவி தாயாரும் முதன்மைக் கடவுளாக உள்ளனர். உத்சவர் - மனத்துக்கு இனியன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். மற்றும் கருடாழ்வார், நம்மாழ்வார், லட்சுமி நாராயணன், வேணுகோபாலன் மற்றும் வீர ஆஞ்சநேயர் ஆகியோருக்கு கோயிலில் சன்னிதிகள் உள்ளன.

கோட்டை ஈஸ்வரன் கோயிலில் பிரம்மபுரீஸ்வரர், திருபுரசுந்தரி ஆகியோர் முக்கிய தெய்வங்களாக உள்ளனர். இக்கோயிலின் தனிச்சிறப்பு திருபுரசுந்தரி தேவியின் பீடத்தில் ஸ்ரீசக்கரம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கோவில்களும் இந்த ஊரின் மிகவும் பழமையான கோவில்கள். ராஜராஜ சோழனின் கல்வெட்டுகளில் இக்கோயில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதால், இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

கோட்டை பெருமாள் கோயில்

ஆண்டாள், ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன், ஸ்ரீ வேணுகோபாலன் மற்றும் வீர ஆஞ்சநேய சந்நிதி, கோட்டை பெருமாள் கோவில், திருப்பத்தூர், தமிழ்நாடு கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. கோயிலின் முன் ஒரு பெரிய துவஜ ஸ்தம்பம் உள்ளது. மூன்று அடுக்கு ராஜகோபுரம் பக்தர்களை வரவேற்கிறது. முதலில் வரிசையாக மூன்று சந்நிதிகள் உள்ளன, இச்சந்நிதிகளில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன், ஸ்ரீ வேணுகோபாலன் மற்றும் வீர ஆஞ்சநேயர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். ஸ்ரீ கஜேந்திர வரதன் சந்நிதி பின்புறம் மேற்கு நோக்கி உள்ளது. ஸ்ரீ கஜேந்திர வரதனின் கருவறை முதலில் எழுப்பபட்டது, பின்னர் மற்ற சந்நிதிகள் வந்தன. சன்னதியில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் ஸ்ரீ வரதராஜர் காட்சியளிக்கிறார். பிருகு மற்றும் மார்க்கண்டேய மகரிஷிகளுக்கு ஸ்ரீ வரதராஜர் தரிசனம் கொடுத்தமையால் இரு மகரிஷிகளும் சன்னதியில் உள்ளனர்.

இந்த கோவிலின் புராணம் - ஸ்ரீ மஹாவிஷ்ணு கஜேந்திரனை முதலையின் பிடியில் இருந்து காப்பாற்றி, இந்த க்ஷேத்திரத்தில் கஜேந்திரனுக்கு முக்தி அளித்தார். எனவே பிரதான தெய்வம் கஜேந்திர வரதராஜப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். மார்க்கண்டேயர் மற்றும் பிருகு முனிவர்கள் இங்கு தவம் செய்து மகாவிஷ்ணுவினை திவ்ய தரிசனம் செய்தனர். நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்ட தூண் ஒன்றில் “கஜேந்திர மோக்ஷம்” சித்திரிக்கப்பட்டுள்ளது.

பஞ்சேபர பிரதிஷ்டையின்விதி படி தெய்வங்கள் நிறுவப்பட்டு, இந்த க்ஷேத்திரத்தில் வைகானச ஆகமப்படி பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த கோவில் சென்னையில் அமைந்துள்ள 'திவ்ய தேசம்' ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோவிலின் அபிமான க்ஷேத்திரம் ஆகும்.

ஆஞ்சநேய வழிபாடு

இந்த நகரம் ஹொய்சாலர்கள், விஜயநகரம் மற்றும் மைசூர் வம்சத்தின் ஆட்சியின் கீழ் ஒரு கோட்டையைக் கொண்டிருந்தது. இந்த ஆட்சியாளர்கள் அனைவரும் ஸ்ரீ ஆஞ்சநேயரின் பக்தர்கள். இந்த ஆட்சியாளர்கள் அனைவரும் ஸ்ரீ ஆஞ்சநேயரை தங்கள் எல்லைகளின் பாதுகாவலராகக் கண்டனர். ஒவ்வொரு கிராமத்தின் எல்லையிலும் ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டுவது வழக்கம். ஒவ்வொரு கோட்டைக்கும் ஆட்சியாளர்கள் ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டினர். அவர்கள் காலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய வழிபாடு உச்சத்தில் இருந்தது. எனவே இந்த ஊரில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு தனித்தனி கோவில்களும், மற்ற கோவில்களில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு சிறப்பு சந்நிதியும் இருந்ததில் ஆச்சரியமில்லை. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு இந்த கோவிலில் அப்படி ஒரு தனி சந்நிதி உள்ளது. பக்தர் ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் நுழைந்தவுடன் முன்பு குறிப்பிட்டது போல் மூன்று சந்நிதிகள் காணப்படுகின்றன. வடக்கே உள்ள சந்நிதி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சந்நிதி.

ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்

ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்,கோட்டை பெருமாள் கோவில், திருப்பத்தூர், தமிழ்நாடு நின்ற கோலத்தில் உள்ள இறைவனின் மூர்த்தம் கடினமான கிரானைட் கற்களால் ஆனது மற்றும் எட்டடி உயரம் கொண்டது. தெய்வம் 'அர்த்த ஷீலா' எனப்படும் புடைப்பு பாணியில் ஒரே கல்லில் பிரபாவளியுடன் செதுக்கப்பட்டுள்ளது. சிலையின் அழகும், அமைப்பும் நாயகர் கால அமைதியில் காணப்படுகிறது.

வடக்கு நோக்கி அடியெடுத்து வைக்கும் இறைவனின் தாமரை திருப்பாதங்களில் நூபுரமும் தண்டையும் உள்ளன. அவரது வலுவான ஆடுதசை மற்றும் உறுதியான தொடை அவரது உடல் வலிமையை பிரதிபலிக்கிறது. இறைவன் ஒரு பிரம்மச்சாரியாக இடுப்பு வஸ்திரம் [கௌபீனம்] அணிந்துள்ளார். வால் உயர்ந்து, தலைக்கு மேலே சென்று, வால் நீளமாக இருப்பதால் அது ஒரு சுருள் போல் முடிகிறது. அவர் தனது இடது கையில் சௌகந்திகா மலரின் தண்டை லாவகமாக இடது இடுப்புக்கு அருகில் பிடித்திருக்கிறார். இன்னும் பூக்காத அப்பூ இடது தோளுக்கு மேல் காணப்படுகிறது. இறைவனின் வலது திருக்கரம் ஓங்கி, ‘அபய முத்திரை’ காட்டி, பக்தர்களுக்கு அச்சமின்மையிற்கு ஆசீர்வதிக்கிறது. அவர் தனது இரு மணிக்கட்டுகளிலும் கங்கன் மற்றும் மேல் கரத்தில் கேயூரம் எனப்படும் அங்கதத்தை அணிந்துள்ளார். அவரது அகன்ற மார்பில் அவர் இரு அகலமான மாலையையும், மற்றொரு மெல்லிய நீண்ட மாலையும் அணிந்துள்ளார். கழுத்தில் அட்டிகை உள்ளது. அவரது மார்பின் குறுக்கே யக்யோபவீதம் காணப்படுகிறது. தோள்களைத் தொடும் குண்டலம் காதுகளில் அணிந்துள்ளார். அவரது கேசம் நேர்த்தியாக சீவப்பட்டு, பின்னி, குடுமியாக இறுக்கமாகப் பிடிக்கப்படுகிறது. காதுகளின் மேல் பகுதியில் ‘கர்ண புஷ்பம்’ காணப்படுகிறது. இறைவனின் நேர்த்தியான மூக்கு கவர்ச்சிகரமாக இருந்து கன்னங்களை மேலும் அழகாக்குகிறது. கனிந்த கன்னங்கள் அவரது கண்ணை மேலும் கவர்ச்சியாக்குகிறது. இறைவனின் கருணையால் பிரகாசிக்கின்றன அற்புதமான கண்கள் அவரது பக்தர்களுக்கு அருளுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "கஜேந்திர வரதராஜர் கோவில், திருப்பத்தூர்"

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ பெருமாள், யானைகளின் மன்னனை கவலையிலிருந்து விடுவித்து, அவருக்கு மோட்சம் அளித்து, தனது பக்தரான ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தரிசனம் அளித்தார். இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஆஞ்சநேயர் தனது பக்தர்களை இந்த உலகத்தின் அனைத்து அச்சங்களிலிருந்தும் விடுவிப்பதோடு, எல்லா கவலைகளிலிருந்தும் அவர்களை விடுவிப்பார் என்பது தின்னம்.   

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு: ஆகஸ்ட் 2022


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+