நெரிசை வெண்பா
அநுமா ரநுபூதி யன்பா யான்பாடத்
தநுவாள் சங்காழி கதைதாங்கி-மனுமோர்
புருடன் றிருவடிகள் பொற்புய மேற்கொள்ளும்
கருடன் றிருவடிகள் காப்பு.
கலிவிருத்தம்
வித்தையும் பத்தியும் உண்டாக
ஆதிப்பரமான விராமனுயர்
சோதிப்பதமே தொழுதூயவனே
நீதித்துணையே யநுமந்தநினை
ஓதித்தொழ வென்னையுகந்தருளே.
தீர்க்காயுசு உண்டாக
புரஞ்சீறியபுண் ணியனாமெனவே
உரஞ்சீரியரோ துயர்மாருதியே
வரஞ்சீதைமணா ளன் மகிழ்ந்துதவச்
சிரஞ்சீவியனாகிய திண்ணியனே.
அருள் உண்டாக
ஒலிநான் மறையோ னரலும்பர்பிரான்
மலிவானவர்வந்து வழுத்தியருள்
சலியாவரமுற் றுயர் தன்மையனாம்
வலிமாருதிநல் லருள்வாருதியே.
பராக்கிரமம் உண்டாக
காய்ந்தேறுகடும் பசியாலுதயம்
தோய்ந்தேயெழு சூரியனைக்கனியென்
றேய்நதேயகல்விண் ணினிளந்தையினே
பாய்ந்தாயநுமந்த பராக்கிரமனே.
மங்களம் உண்டாக
கருவாழிகடத்து பிரான்பிரிவால்
உருவாழியதுன் புறுசீதைதனக்
கிருவாழியெனா வுயிரீந்ததுபோல்
திருவாழிகொடுத்த திறற்கரனே.
பூர்வகர்மம் தொலைய
கள்ளத்தடுகன்ம மலைப்பவிடர்
வௌளத்திடைவீழ் தருவேனையருள்
உள்ளற்கருவேக மொடேங்கியநீள்
பள்ளக்சுடறாவிய பண்ணவனே.
பிணியும் பிறப்பும் நீங்க
பிணிகொண்டலமந்து பிளந்துழலா
தெணிபண்டலமீ தெனையாண்டருளைப்
பணிவிண்டலமே வொளிர்பானுவென
அணிகுண்டலவஞ் செவிமாருதியே.
பாததரிசனம் பெற
வாளாமணின் மன்னுவதோவடியேன்
தாளாமணிமா மலர் தந்நருணீ
ஆளாய்பணிவண்ண னகங்குளிரச்
சூளாமணி தந்தனைசுந்தரனே.
பில்லி சூனிய முதலிய அகல
துன்பேதரு சூனியம்வம்புபகை
புன்பேய்பல பூதகணங்களெலாம்
நின்பேர்சொல் நீறுபடும்படுமே
அன்பேபுரி யஞ்சனையஞ்சுதனே.
இதயத்தில் வைக்க
அநுமன் அநமான் அநுமந்தனெழில்
மனுசஞ்சிவிராய னல்வாதசுதன்
தனுராகவதூதன் லங்காதகனன்
எனுமாருதியென் னிதயத்துளனே.
எத்திக்கிலுங் காவல்
முத்திக்கொரு மூலமுதற்றிருமால்
பத்திக்கொருபாற் கடன் மாருதியென்
உத்திக்குயர்வாய வெலாமுறவே
எத்திக்குமிருந்து புரந்திடுமே.
அடைக்கலம்
உய்யாவுடலுய்யு மருத்துமலைக்
கையாவனுமந்த கலாநிதியே
மையார்களனாகிய வானவனே
ஐயாவடியேனு னடைக்கலமே
சரணாகதம்
சரணஞ்சரணந் தருமன்புடனே
சரணஞ்சரணந் தமியேனுன தாள்
சரணஞ்சரணந் தயைசெய்தெனையாள்
சரணஞ்சரணந் தனிமாருதியே