தற்பொழுது தில்லியை புதுதில்லி, தில்லி என்றே அறிவோம், ஆனால் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சரித்திர ரீதியாக பார்ப்பின் எட்டு தில்லி உள்ளதாக கூறுவர். தில்லி சிந்து கங்கை சமவெளிக்கு திறவு வாயிலாக இருப்பதாலும் அன்னியர் படையெடுப்பினாலும், சரித்திரத்தில் பலமான இடத்தைப்பிடித்துள்ளது. தில்லியின் சரிதம் பொதுவாக மகாபாரதத்தினுடன் ஆரம்பிக்கிறது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பெரிய அளவில் பகை வர காரணமாக இருந்த இந்திரப்ரஸ்தா நகரம் தான் பழமையான தில்லியாக இன்று கருதப்படுகிறது. இந்திரப்ரஸ்தா நகரம் தற்பொழுது "புராண கிலா" என்று கூறப்படும் பழையக் கோட்டை இருக்கும் இடமாகும். தற்பொழுது பாண்டவர்களின் இந்திரப்ரஸ்தாவின் சுவடு ஒன்றும் இல்லை என்ற போதும், புராண கிலாவில் நடந்த அகழாய்வில் கிடைத்த தடயங்கள் இவ்விடம் இந்திரப்ரஸ்தா நகரமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பாரதப்போருக்கு புறப்படும் முன் பீமனால் நிறுவப்பட்ட பைரவர் கோயில் புராணா கிலா பகுதியில் உள்ளது. இது மிக பழமையான கோயிலாக கருதப்படுகிறது. இதை தவிர சமகாலத்தை சார்ந்ததாக கருதப்படும் மற்ற கோயில்கள் தருமரால் நிறுவப்பட்ட நிகம்போத் காட்டில் உள்ள "நீலே சத்ரி மந்திர்" என்று வழங்கப்படும் சிவன் கோயில், கால்காஜியில் உள்ள அம்பாள் கோயில், மெஹ்ரோலியில் உள்ள யோகமாதா கோயில், புது தில்லியிலுள்ள பால அனுமான் கோயில் ஆகியவை.
வாருங்கள் மகாபாரத காலத்தை சேர்ந்த பால அனுமார் கோயிலின் அருமையைப் பற்றி பார்ப்போம். அதற்கு முன் சற்று புராணத்தையும் நினைவு கூறுவோம். மகாவிஷ்ணு ஸ்ரீஇராமராக அவதரித்து மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதனை நமக்கு படிப்பித்தார். அவரை உதாரணமாகக் கொண்டு அவர் அடி பின்பற்றி முழுமையாக அவரிடம் சரணடைந்து தன்னையே அர்பணித்தவர் ஸ்ரீ அனுமார். அவதார காலம் முடிந்து ஸ்ரீஇராமர் வைகுண்டம் சென்றபொழுதும் அவரின் கீர்த்தனங்களை கேட்டு மகிழ்ந்து அவ்வானந்தத்தில் திளைக்க வேண்டி ஸ்ரீஇராமருடன் வைகுண்டம் செல்ல மறுத்து இவ்பூவுலகில் இருப்பவர் ஸ்ரீ அனுமார். யுகம் யுகமாக சிரஞ்சீவியாக இருப்பர் அனுமார்.
மகாபாரதகாலத்தில் பாண்டவர்கள், கௌரவர்களின் கட்டாயத்தால் வனவாசம் சென்றனர். கானகத்தில் அவர்கள் இருந்தப் போது பாஞ்சாலி மிக நளினமான சுகந்தமான வாசனை குறிப்பிட்ட திசையிலிருந்து வருவதை உணர்ந்து பீமனிடம் கூறினாள். அவ்வாசனை தெய்வீக மலரான சௌகந்திகாவிலிருந்து வருவதாக பீமன் கூறினான். தனக்கு அம்மலர் வேண்டுமென பாஞ்சாலி வேண்டினாள். பீமன் சுகந்தமான வாசனை எங்கிருந்து வருகிறதோ அந்த திக்கில் பயணித்தான். பீமன் சென்ற பாதையில் நடுவில் தடங்கலாக ஒரு வானரம் படுத்திருந்தது. பீமன் தான் சௌகந்திகா புஷ்பத்தினை தேடி செல்வதாகவும் வானரத்தை வழி விடுமாறும் கூறினான். தான் ஒரமாக படுத்திருப்பதால் காட்டு பாதையில் நடக்க தான் தடங்கலாக இல்லை என்று கூறியது அவ்வானரம். இதை கேட்ட பீமன் வெகுண்டான். தான் முதியவன் என்பதால் தன் வாலை கூட தான் நகர்த்தமுடியவில்லை அதனால் தன் வாலை நகர்த்திவிட்டு மேலே செல்லக்கூறியது அவ்வானரம். அவ்வானரத்தின் வாலினை நகர்த்திவிட்டு மேலே செல்ல பீமன் தலைப்பட்டான். ஆனால் வானரத்தின் வாலினை பீமனால் நகர்த்த முடியவில்லை. பீமன் என்றாலே பலசாலி என்றுப் பொருள். அவனாலேயே நகரத்த முடியவில்லை என்றவுடன் அவனுக்கு அவ்வானரம் யார் என்று புரிந்து விட்டது. தனது ஆணவத்தை குறித்து வருந்தினான், மன்னிப்புக் கேட்டான். ஆணவமற்ற வலிமையே வலிமை மிக்கது என்பது பீமனுக்கு புரிந்தது. வாயுவின் அம்சமான அனுமாரை, ஆணவம் நீங்கிய பீமன் வணங்கி ஆசிகள் பல பெற்றான்.
இப்படி மகாபாரதகாலத்தில் பீமனால் எதிர்க் கொள்ளப் பட்ட அனுமாருக்கு அருமையான கோயில் தற்போதைய ராஜீவ் காந்தி சவ்க் (கன்னாட் ப்ளேஸ் என்று தான் பிரபலம்) அருகாமையில் உள்ளது. இக்கோயில் மகாபாரதகாலத்தை ஒட்டியதாக கூறுவர். பல படையெடுப்பினால் தோமர்களும், சௌஹான்களும் தில்லியில் கட்டிய பல கோயில்கள் இடிப்பட்டன. இடிபாடுகள் மற்ற கட்டிடங்கள் கட்ட உபயோகிக்கப் பட்டன. இதை இன்றும் குதுப்மினார் பகுதியில் பார்க்கலாம். ஆனால் இந்த அனுமார் கோயில் எந்த வித சேதமும் அடையாமல் இன்றும் திகழ்கிறது. பழமையான இந்த அனுமாரின் சுயம்பூ (தான் தோன்றி) விக்கிரஹம் நீண்டகாலமாக பூசிக்கப் பட்டு வந்த போதும், அக்பரின் காலத்தில் மகாராஜா மான்சிங் அவர்களால் தான் இவ்வனுமாருக்கு கோயில் எழுப்பப் பட்டது. பின்னர் மகாராஜா ஜெய் சிங் அவர்களால் சுமார் 1724ம் வருடம் இக்கோயில் விரிவு படுத்தப் பட்டது. இன்றைக்கு நாம் பார்77க்கும் கோயில் பல காலகட்டத்தில் விரவு படுத்தப் பட்டதாகும்.
கோயிலை சுற்றி என்றும் திருவிழா கோலம் தான். பெண்களுக்காக நிறைய வண்ணங்களில் வளையல்கள் விற்கும் நூற்றுக்கும் மேலான கடைகள். மான்சிங், ஜெய்சிங் காலத்தில் ராஜஸ்தானிலிருந்து இங்கு வந்து நிலைத்துவிட்ட கலை மெஹன்தி. பெண்கள் தங்கள் கைகளில் அலங்காரமாக பல வித டிஸைன்களில் மருதாணி இட்டுக் கொள்ளுகிறார்களே அதை தான் மெஹன்தி கலை என்கிறார்கள். அப்படிப் பட்ட மெஹன்தி கடைகள் நூற்றுக்கும் மேல் இங்குள்ளது. தில்லியில் பல இடங்களிலிருந்தும் பெண்கள் இப்பொழுதும் இதற்காகவே இங்கு வருகிறார்கள்.
சாதாரணமாக சூரியனின் பிம்பமோ அல்லது ஓங்கார பிம்பமோ தான் வட இந்திய கோயில்களின் கோபுரங்களின் மேல் காணப்படும். ஆனால் இக்கோயில் கோபுரத்தில் சந்திர பிரபை பிம்பம் காணப்படுவது விசேடமாக கூறப்படுகிறது. மற்றும் இடைவிடாது "ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய்ராம்" என்ற ராமநாம ஜபம் இடைவிடாது ஆகஸ்ட் 1, 1964 முதல் நடைப்பெறுகிறது. இச்சாதனை ஜின்னீஸ் புக் ஆப் ரெகார்டில் இடம் பெற்றுள்ளது.
இந்த பழமையான கோயிலில் உள் நுழையும் முன் நம்மை, மிக அருமையாக வடிவமைக்கப் பட்ட கதவுகள், அதில் செப்புத்தகட்டில் வடிக்கப்பட்ட புடைப்பு சித்திரங்கள் நம் சிந்தனையை இராமாயணகாலத்திற்க்கே அழைத்துச் செல்கிறது. இராமரின் பிறப்பு, வனவாசம், முடிசூட்டு விழா, அஸ்வமேத யாகம், முதலியன இடம் பெற்றுள்ளன. பளிங்கு படிகளில் எறிச் சென்றால் விஸ்தாரமான கூடம். தலை நிமிர்ந்து பார்த்தால் மேலே நான்கு புறமும் துளசிதாஸ் இராமாயணத்தின் சுந்தர காண்டத்தை பளிங்கு கற்களில் எழுதி வைத்துள்ளார்கள். அதற்கும் மேல் சில இராமயண காட்சிகளை புடைப்பு சித்திரங்களாக பளிங்கில் வடித்துள்ளார்கள். மிக அருமையான நேர்த்தியான அழகான காண கண்கொள்ளா காட்சிகள். மேற்கு நோக்கி அங்கு நின்றால் மூன்று வேலைபாடுகள் நிறைந்த பளிங்கு வளைவுகள். அதன் உள்புறம் நீளவாட்டில் மண்டபம். நடு வளைவின் நேர் எதிரில் இராம தர்பார் பளிங்கு சிலைகள். வலபுற வளைவின் நேர் எதிரில் பால அனுமாரின் தரிசனம். இடது வளைவுக்கு நேர் எதிரில் வேணுகோபாலனும் ராதையும் மூர்த்தங்களாக நமக்கு அருள் புரிகிறார்கள். நாம் நிற்கும் இடத்தின் பின் புறம் பளிங்கினால் ஆன ஸ்ரீமாதா, லட்சுமியுடன் நாராயணன், மகாகணபதி மூர்த்திகள் வரிசையாக நிறுவப்பட்டுள்ளன. சற்று நகர்ந்தால் சந்தோஷி மாதா அம்மனின் சன்னதி. அம்மனின் விக்கிரகம் பெரிதாக இருக்கிறது. அமைதியாக உருவம், சாந்தமான கண்களினால் நமக்கு அருள் பொழிகிறாள். அம்மன் சந்நதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் "ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய்ராம்" என்ற இராமநாம ஜபம் இடைவிடாது ஜபிக்கபடுகிறது. பிரகாரத்தை சுற்றி வந்தால் வடக்கு பிரகாரத்தில் சிவனின் சன்னதி. அவரையும் வணங்கி விட்டு சுற்றை முடித்துக் கொண்டு நாம் உள் பிரகாரத்தில் நுழைகிறோம்.
நுழைந்ததும் இடது புறத்தில் வடக்கு நோக்கிய சன்னதியில் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட அருமையாக மூர்த்தங்கள், தென்னிந்திய பாணியிலே இருக்கிறது. விசாரித்ததில் கடந்த பல வருடங்களாக அருகில் உள்ள தென்னிந்தியர்கள் மார்கழி மாதம் வரும் அனுமாரின் ஜயந்தியை இங்கே கொண்டாடுவார்களாம். பூசைகள் செய்தும் பலருக்கு அன்னமிட்டும் கொண்டாடுவார்களாம். சற்ற அருகில் ஸ்ரீவேணுகோபாலனும் ராதையும் நாம் தரிசித்து விட்டு அடுத்ததாக ஸ்ரீஇராம தர்பாரில் ஸ்ரீராமர், சீதாமாதா, இளவள், அனுமார் நமக்கு அருள் பொழிவதையும் தரிசிக்கிறோம். ஸ்ரீராம தர்பாருக்கு வலது புறமாக சற்றே தள்ளி "ஸ்ரீபால அனுமார்" காட்சி தருகிறார்.
நுணுக்கமான வெள்ளி வேலைப்பாடுகள் அமைந்த மிக அழகிய சன்னதி. வெள்ளி வேலைபாடுகளின் நடுநாயகமாக ஸ்ரீஇராம தர்பார். சற்றே கீழே பால அனுமார். அனுமாரின் இவ்வடிவம் செந்தூரத்தில் திளைக்கிறது. வட இந்திய மாநிலங்களில் அனுமானின் திருவுருவங்களை சாதாரணமாக செந்தூரம் பூசி தான் வழிபாடு நடத்துவது மரபு. அனுமார் இங்கு சிறுவனாக - பாலனாக காட்சி தருகிறார். பால அனுமார் தெற்கு நோக்கி நடக்கும் பாவனையில் உள்ளார். புடைப்பு சித்திரமாக இருப்பதால் நமக்கு அவரின் ஒரு கண் தெரிகிறது. ஆனால் மற்றது இருக்கும் உணர்வை நமக்கு தரும் பிம்பம் இவருடையது. இவர் சுயம்பூ மூர்த்தி என்பதை நாம் நினைவில் கொண்டு கூர்ந்து நோக்கினால் அனுமாரின் இடது கை அவரின் மார்பினில் இருப்பதும், வலது கையில் கதாயுதம் இருப்பதும் விளங்கும். ஔதவீசும் கண்கள் நம்மை கவர்கிறது. மேல் நோக்கிய அந்த கண்கள் நம்மை ஆட்கொள்வதில் ஆச்சரியம் இல்லை.
இந்த அருமையான காட்சி சிறுவனாக - பாலனான அனுமார் சூரியனை கனியென்று நினைத்து வௌதயிடை தாவியதை நினைவு படுத்துகிறது. பாலனான இருந்த போதிலும் எப்படிப் பட்ட காரியம் செய்திருக்கிறான். இந்த சிறுவனை, பால அனுமாரை நோக்கும் கால், சாம்பவான் வாயிலாக கம்பர் அனுமாரை போற்றியது நினைவுக்கு வருகிறது.
"மேரு கிரிக்கும் மீதுற நிற்கும் பெரு மெய்யீர்
மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்வீர்
பாரை எடுக்கும் நோக்கை வலத்தீர் பழி அற்றீர்
சூரியனைச் சென்று ஒண்கையகத்தும் தொட வல்லீர்".
அனுபவம்
அனுமாரால் முடியாது எதுவும் இல்லை. அவரை உளமாற நினைத்தால் நமக்கு நடாக்காதது எதுவும் இல்லை. அனுமரின் புகழ் பாடுவோம், நல்லவை நினைப்போம் ஆனந்தத்தில் திளைப்போம்.
தமிழாக்கம் :தர்முபுத்திரன்
சிவ ஒளி மாதஇதழில் (டிசம்பர் 2008) வெளிவந்துள்ளது
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020