home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

கல்யாண வேங்கடேச திருக்கோயில், கருப்பூர், கும்பகோணம், தமிழ்நாடு 2007ஆம் ஆண்டு

ஶ்ரீ ராமநாம ஆஞ்சநேயர், கல்யாண வேங்கடேச திருக்கோயில், கருப்பூர், கும்பகோணம், தமிழ்நாடு

ஜீ.கே.கௌசிக்


கருப்பூர்

கருப்பூர் கும்பகோணம் அருகாமையில் இருக்கும் கிராமம், இத்தலத்தில் ஶ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயில் இருப்பதால் வைப்புத் தலமாகிறது. இக்கோயில் ஶ்ரீசுந்திர மஹா காளி அம்மன் என்னும் பெட்டி காளி அம்மன் இருப்பதாலும் பிரபலம். கொரநாட்டு கருப்பூர் என்னும் இத்தலம் கும்பகோணத்திலிருந்து திருவிசைநல்லூர் செல்லும் பாதையில் உள்ளது. பஸ் நிறுத்தம் அருகில் ஶ்ரீகல்யாண வேங்கடச சுவாமி திருக்கோயில் இருக்கிறது. இக்கோயில் ஶ்ரீசுந்தரஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. பழைமையான இக்கோயில் முன்பு மிகவும் பிரபலாகவும் செழிப்பாகவும் இருந்தது, ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக [2012] புனர்நிர்மாண பணிகள் நடைபெறுகின்றன. இக்கோயில் புராணத்தில் மருதாநல்லூர் ஶ்ரீசத்குரு சுவாமிகளுக்கு தொடர்ப்பு இருக்கிறது மிகவும் சுவாரஸ்யமான விசயம்.

திருவிசைநல்லூர்

கல்யாண வேங்கடேச திருக்கோயில், கருப்பூர், கும்பகோணம், தமிழ்நாடு 2007ஆம் ஆண்டு திருவிசைநல்லூர், தென் இந்திய நாம சங்கீர்த்தன சம்பிரதாயத்தில் போற்றப்படும் இரு மகான்களின் இருப்பிடமாக இருந்தது. முதலாவதாக ஶ்ரீதர அய்யாவாள் அவர்கள் மைசூர் தர்பாரில் கிடைத்த பணியை வேண்டாம் என்று கூறி தனது மனைவி சுந்தரி அம்மாளுடன் இந்த கிராமத்தில் குடியேறினார். இரண்டாவதாக மருதாநல்லூர் ஶ்ரீசத்குரு சுவாமிகள் இங்கு பிறந்து சிறுவயதில் வாழ்ந்தவர். திருவிசைநல்லூர் என்னும் இவ்வூர் தஞ்சாவூரை ஆண்ட இரண்டாம் ஸாஜியால் (1685-1712) பண்டிதர்களுக்கு தானமாக கொடுக்கப்பட்டதால் ஸாஜிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது

திருவிசைநல்லூர் ஶ்ரீவெங்கட ராமன்

ஶ்ரீசத்குரு சுவாமிகள் திருவிசைநல்லூர் கிராமத்தில் பிறந்தவர். ஆத்திரேய கோத்திரத்தை சேர்ந்த ஶ்ரீவெங்கட சுப்பிரமணியருக்கு பிறந்து வெங்கட ராமன் என்று பெயர் சூட்டப்பட்டார். ஏழை பிராமணரான இவர் தந்தை அருகில் இருக்கும் கிராமங்களில் நடக்கும் சிரார்த்தம், பூஜைகள் இவைகளை நடத்தி வைத்து தனது ஜீவனத்தை நடத்திவந்தார். தனது குழந்தையிற்கு பக்தர்களான பிரகலாதர், துருவர், அனுமார் ஆகியோர்களின் சரிதையை கூறி மகிழ்வார்கள் பெற்றோர்கள். குழந்தை எல்லாவற்றையும் உன்னிப்பாக கேட்டபோதும் மூன்று வயது வரை பேச்சு வரவில்லை. கவலைப்பட்ட பெற்றோர்கள் பல பண்டிதர்களிடமும் அழைத்து சென்று ஆசிகள் பெற்றனர். பண்டிதர்கள் அனைவரும் குழந்தை இறைவனின் அருள் பெற்றவன் என்றும் கவலை பட அவசியமில்லை என்றே கூறினார்கள். பெரியவர்கள் கணித்தது போல் சில நாட்களில் குழந்தை பேச ஆரம்பித்தது. "ராமா" என்பதே குழந்தையின் முதல் சொல்லாக திருவாயினின்று வந்தது.

குழந்தைக்கு தக்க வயதில் உபநயனம் நடத்தி, பண்டிதர்களிடம் அனுப்பி வேதங்கள் படிக்க வைத்தார்கள் பெற்றோர்கள். குழந்தையில் அதிபுத்திசாலதனத்தால் ஒருமுறை சொல்லிக் கொடுத்ததை உடனே கிரகித்துக்கொள்வானாம். நாமசங்கீர்த்தனத்தின் பெருமை, உள் அர்த்தம், கீர்த்தனங்கள், அவைகளை இயற்றியவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் இவை எல்லாம் குழந்தை வெங்கடராமனுக்கு மிகவும் பரிச்சியம். இதனை பார்க்க பெற்றோர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வெங்கடராமன் வேதங்கள் கற்காத சமயத்திலெல்லாம் ராமநாம ஜபம் மணிகணக்கில் செய்வது வழக்கமாயிற்று. தன்னுடன் வேதம் படிக்கும் குழந்தைகளுக்கும் நாம ஜபம் செய்வதின் மஹிமையை பற்றி எடுத்து சொல்லுவான்.

மானசீக குரு

தென் இந்திய நாம சங்கீர்த்தன சம்பிரதாயத்தில் போற்றப்படும் மூவருள் முதல்வர் ஶ்ரீபோதேந்திர சுவாமிகள் ஆவார். அவர் ஶ்ரீராம ஜபம் செய்வதால் மட்டுமே மோக்ஷம் அடையலாம் என்ற சித்தாந்தத்தை வலியுறித்தியவர். அதனால் நாம சங்கீர்த்தனத்தை கடைபிடித்து, பிரபல படுத்தியவர். இதனால் இவர் "பகவன்நாம போதேந்திரர்" என்று அழைக்கப்பட்டார். வெங்கடராமன் ஶ்ரீபோதேந்திரரை தனது மானசீக குருவாக பாவித்து ராம ஜபத்தில் ஈடுப்பட்டான். ராம நாமத்தின் அமுதம் அவனை தீண்டும் பொழுது, மணிகணக்கில் ஜபம் தொடரும், அன்னம் ஆகாரம் அற்று ஜபம் தொடரும். அவன் தன்னை மறந்து அவருடன் ஐய்க்கியம் ஆகிவிடுவான் இல்லை ஆகிவிடுவார்.

ஶ்ரீஆஞ்சநேயர் சன்னிதியில் ராம நாம ஜபம்

ஶ்ரீ ராமநாம ஆஞ்சநேயர் சன்னிதி,கருப்பூர், கும்பகோணம், தமிழ்நாடு 2007ஆம் ஆண்டு இவருடைய தந்தை வெங்கட சுப்பிரமணியம் தனது குடும்பத்தை, அருகிலிருக்கும் பிராமணர்கள் வீட்டு விசேசங்களுக்கு சென்று சிரார்த்தம், பூஜை முதலியவைகளை செய்துவைத்து வரும் சம்பாத்தியத்தில் நடத்தி வந்தார். ஒரு முறை இப்படி பக்கத்து கிராமத்தில் சிராத்தத்திற்கு வருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அந்நாள் அவரது உடல்நலம் இல்லாமையால் செல்ல முடியாத நிலைமை. சிராத்தம் அன்றே நடக்க வேண்டும் தள்ளி போட முடியாது என்பதால் தனது மகன் வெங்கட்ராமனை அங்கு அனுப்ப தீர்மானித்து கூப்பிட்டார்.

கடமை உணர்ந்த வெங்கட்ராமன் அக்கிராமத்திற்கு சென்று வருவதாக தந்தையிடம் கூறி புறப்பட்டார். ஆனால் ராம ஜபம் செய்யாமல் இவரால் இருக்கமுடியாது இருந்தும் சிரார்த்தம் செய்ய கடமைப்பட்டவனார். தான் என்ன செய்கிறோம் என்பது அறியாமல், இவர் செல்லும் பாதையில் வரும் கல்யாண வேங்கடேச சுவாமி கோயிலுக்குள் நுழைந்தார். அங்கிருந்த ஶ்ரீஆஞ்சநேய சுவாமி சன்னிதியில் நுழைந்தார், சுவாமியின் பின் அமர்ந்தார், ராமஜபம் செய்ய தொடங்கினார். அவரது தவநிலை கலையும் பொழுது மாலை ஆயிற்று. உலகுக்கு திரும்பிய அவர், தான் செய்துள்ள தவறை உணர்ந்தார். சிரார்த்தம் செய்ய செல்ல வேண்டியவன் இங்கு இருக்கிறோமே என்று எண்ணினார். சூரியன் மறைவிற்கு பிறகு என்ன செய்வது என்றும், தனது தந்தைக்கு அவபெயர் வந்துவிடுமே என்றும் குழம்பினார் அவர். எது எப்படி இருந்தாலும் தந்தையிடம் உண்மையை சொல்லி அவர் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்று கொள்வது என்று தீர்மானித்து வீடு செல்ல திரும்பினார்.

தந்தையின் தடுமாற்றம்

வெங்கட்ராமன் வீடு திரும்பி தனது தந்தையிடம் நடந்ததை கூறினார். தந்தைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிரார்த்தம் என்பதை அன்றே தான் செய்ய வேண்டும் அதுவும் சூரியன் மறைந்த பிறகு சிரார்த்தம் செய்ய முடியாது. இப்படி இவர்கள் பேசி கொண்டிருக்கும் பொழுது, பக்கத்து கிராமத்தின் பெரியவர் ஒருவர் கையில் இரண்டு வேஷ்டிகளும் சில காசுகளும் எடுத்து வந்தார். வந்தவர் வெங்கட்ராமன் தன்னுடன் எடுத்து வந்த இந்த பொருட்களை ஆஞ்சநேய சன்னிதியில் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டதால், திரும்ப கொடுப்பதாக கூறினார். இப்போது எல்லோருக்கும் ஒன்றும் புரியவில்லை. தடுமாற்றம் அதிகமாயிற்று. தந்தையார் மனதில் தைரியத்தை வரவழித்துக் கொண்டு அடுத்த கிராமத்திற்கு சென்று நடந்ததை கூறிவது என்று முடிவு செய்தார்.

நல்வரவு

வெங்கடசுப்பிரமணியம் அடுத்த கிராமத்தில் அவர்கள் இல்லத்திற்கு சென்றபோது, அவர்கள் இவரை மரியாதையுடன் வரவேற்றனர். அவரது மகன் மிக சிறப்பாக சிராத்தத்தை நடத்தி வைத்ததாக கூறி மகிழ்ந்தனர். தந்தையை மிஞ்சிவிட்டதாக புகழ்ந்தனர், அதனால் இரட்டிப்பு தக்ஷணை தந்ததாகவும் கூறினர். தந்தையின் குழப்பம் இன்னும் அதிகரித்தது. சிறிது யோசனையில் ஆழ்ந்த பின் அவருக்கு என்ன நடந்திருக்கிறது என்பது தெளிவாகியது.

ப்ரோகிதரான ஶ்ரீஆஞ்சநேயர்

வெங்கடசுப்பிரமணியம் அங்கிருந்து நேராக ஶ்ரீகல்யாண வேங்கடேச சுவாமி திருக்கோயிலில் உள்ள ஶ்ரீஆஞ்சநேயர் சன்னிதிக்கு சென்றார். அங்கம் குளிர அவருக்கு நமஸ்காரம் செய்தார், தனது மகன் வெங்கட்ராமனை அவர் ஆசிர்வதித்தை நினைத்து கண்ணீர் விட்டார். தனது மகன் இவ்வுலகில் பிறந்ததின் காரணத்தை தனக்கு தெளிவுபடுத்தியதற்கு மனதாற நன்றிகள் சொன்னார். மிக சீரிய ராம பக்தரான ஶ்ரீஆஞ்சநேய சுவாமியே தனது மகனுக்காக சிரார்த்தம் செய்ய ப்ரேகிதராக மாறினார் என்றால், தனது மகனின் பிறப்பு சிறப்பானது என்பது தெள்ளம்தெளிவாக தனக்கு புரிவாதக கூறினார். அன்று முதல் தந்தை தன் மகனுக்கு இறைவன் காட்டிய வழியில் செல்ல எல்லா உதவிகளும் செய்யலானார்.

மருதாநல்லூர் ஶ்ரீசத்குரு சுவாமிகள்

ஶ்ரீ ராமநாம ஆஞ்சநேயர் சன்னிதி,கருப்பூர், கும்பகோணம், தமிழ்நாடு 2012ஆம் ஆண்டு ஶ்ரீவெங்கட்ராமன் அவர்கள் பின்காலத்தில் மருதாநல்லூர் ஶ்ரீசத்குரு சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். தென் இந்திய நாம சங்கீர்த்தன சம்பிரதாயத்தில் போற்றப்படும் மூவருள் இவரும் ஒருவர். ஶ்ரீபோதேந்திர சுவாமிகள், ஶ்ரீதர் வெங்கடேச அய்யாவாள் மற்ற இருவர்கள் ஆவர். தனது மானசீக குருவாகிய ஶ்ரீபோதேந்திர சுவாமிகளின் ஜீவசமாதியினை இவர் அடையாளம் காட்டி புதிப்பித்தார்.

குருவின் ஜீவசமாதியினை அடையாளம் கண்டுபிடிக்க தனது கால்கள் பீமியில் படக்கூடாது என்று கால்களை கட்டிக்கொண்டு முட்டியினால் எல்லா இடமும் தேடி பின் தேட ஆரம்பித்தார். பூமியில் எங்கு ஶ்ரீராமநாமம் கேட்கிறதோ அந்த இடம் தான் தன் குருநாதரின் ஜீவசமாதி என்பதில் உருதியாக இருந்து அதனை கண்டுபிடித்தார். ஆனால் அந்த இடம் காவிரி நதியின் நடுவில் இருந்தது. அந்த சமயத்தில் தஞ்சாவூரின் ஆட்சி பீடத்தில் இருந்த ஶ்ரீசர்போஜியை இவர் கேட்டுக் கொண்டதின் பெயரில், காவிரி சற்றே திருப்பிவிடப்பட்டு ஶ்ரீபகவன்நாம போதேந்திரருக்கு நிலையான சமாதி மண்டபம் கட்டப்பட்டது. இன்று கோவிந்தபுரம் என்று அழைக்கப்படும் இடம் எல்லா பாகவதர்களுக்கும் சரணாலயமாக விளங்குகிறது.

இவர் பாரத தேசத்தில் இருக்கும் பல பகவன்நாமா கிருதிகளை திரட்டினார். பின் கிருதிகளை பாட வேண்டிய முறையினை வகுத்தார். அவர் புதுபித்து கொடுத்த சம்பரதாயம் தென் இந்திய நாம சங்கீர்த்தன சம்பிரதாயம் என்று இன்றும் பின்பற்றபடுகிறது. பின் அவர் மருதாநல்லூர் என்னும் கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் கிராமத்தில் வாழ்ந்தார். அங்கு மடம் அமைத்து பகவன்நாமாவின் மஹிமையை பரப்பினார். மடம் இங்கு அமைந்துள்ளதால் இவரை மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் என்று அழைக்கலாயினர்.

ஶ்ரீகல்யாண வேங்கடேச சுவாமி திருக்கோயில்-இன்று

கல்யாண வேங்கடேச திருக்கோயில், கருப்பூர், கும்பகோணம், தமிழ்நாடு 2012ஆம் ஆண்டு ஶ்ரீராம பக்தர் ஒருவருக்காக ப்ரோகிதராக மாறிய ஶ்ரீஆஞ்சநேய சுவாமி கொரநாட்டு கருப்பூரில் இருக்கும் ஶ்ரீகல்யாண வேங்கடேச சுவாமி திருக்கோயிலில் இருக்கிறார். கட்டுரை ஆசிரியர் 2007இல் இக்கோயிலுக்கு சென்றிருந்தபோது கோயிலை சீரமைக்க பணிகள் துவங்கியிருந்தன. ஶ்ரீஆஞ்சநேய சுவாமியின் சன்னிதி கிழக்கு எல்லை சுவருக்கு அருகில் தெற்கு நோக்கி இருந்தது சன்னிதிக்கு முன் மண்டபம் இருந்ததற்கு அடையாளமாக இரு தூண்கள் இருந்தன. ஶ்ரீஆஞ்சநேய சுவாமியின் மூர்த்தம் அருகில் இருந்த குடிலில் வைக்கப்பட்டு இருந்தது.

2012இல் திரும்பவும் சென்றிருந்தபோது ஶ்ரீகல்யாண வேங்கடேச சுவாமி மூலவர் சன்னிதி சீர்ரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் ஶ்ரீஆஞ்சநேய சுவாமி சன்னிதி பணிகள் முடிவடைந்திருந்தது. ஆனால் இப்பொழுது சன்னிதி வடக்கு பார்த்து இருந்தது.

கெரநாட்டுகருப்பூர் ஶ்ரீஆஞ்சநேய சுவாமி

அவர் மேற்கு நோக்கி நடப்பது போல் இருக்கிறார். அவரது வலது திருக்கரம் அபய முத்திரை தரித்துள்ளது, இடது திருக்கரம் அவரது மார்பில் வைத்துள்ளார். அவரது மலர்ச்சியான முகமும் அதில் தாமரை போன்ற விரிந்திருக்கும் கண்களும் பக்தர்களை காந்தம் போல் ஈர்க்கிறது. பிரம்மசாரிகளுக்கு மிகவும் விசேடமாக அலங்காரமாக கருதப்படும் நீண்ட சிகையை மிகவும் அழகாக முடிந்து வைத்துள்ளார். ஶ்ரீஇராமநாமாவையே கேட்டுக்கொண்டிருக்கும் செவிகளுக்கு குண்டலங்கள் அணிகலமாக உள்ளது. கழுத்தில் மாலை அணிந்துள்ளார். அவரது இரு திருக்கரங்களிலும் கங்கணமும், கேயூரமும் அணிகலமாக உள்ளது. அவரது திருப்பாதங்களிலும் தண்டை அணிகலமாக உள்ளது.

 

 

திருக்கோயில் இருப்பிடம் :     கல்யாண வேங்கடேச திருக்கோயில், கருப்பூர், கும்பகோணம்

 

அனுபவம்
மனதில் ஶ்ரீஇராமநாமத்தை தரித்து இந்த புண்ய க்ஷேத்திரத்திற்கு வாருங்கள். இறைவனை வணங்குங்கள். பக்தரான தாங்களுக்கு இந்த ஜன்மத்தின் பலனை அடைய நிச்சயமாக வழிகாட்டுவார்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜூலை 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+