home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீவீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், எம்.கே.என்.சாலை, மாங்குளம், கிண்டி, சென்னை

ஶ்ரீவீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், எம்.கே.என்.சாலை, மாங்குளம், கிண்டி, சென்னை

ஜீ.கே.கௌசிக்


கிண்டி

சென்னைப்பட்டிணத்திற்கு கிண்டி நுழைவாயிலாக இருந்தது. நுழைவாயிலில் காவலுக்கு நின்றிருக்கும் காவலர் முன்காலத்தில் வாள் வைத்து கொண்டிருந்தனர். பின் ’பைனட்’ சொருகிய துப்பாக்கியுடன் காவல் புரிந்தனர். இதனால் இவ்விடம் "கத்தி-பாரா" என்று அழைக்கப்படலானது. இன்று இந்த சந்திப்பு மிகவும் முக்கியமான சாலைகள் பிரிவதால் வாகனப்போக்குவரத்து அதிகமாக உள்ளது. அதனால் இங்கு சென்னையிலே மிக பெரிய மேம்பாலம் கட்ட வேண்டியதாகியது. இச்சந்திப்பு கிண்டியில் உள்ளது. கிண்டியையும் ஸெயின்ட் தாமஸ் மலை பகுதியும் பிரிக்கும் சந்திப்பு.

ஆலந்தூர்

கிண்டி ஆலந்தூரின் ஒரு பகுதியாகும். ஆல் என்றால் நீர்/வெள்ளம். நீர்தேக்கங்கள் அதிகம் உள்ள இடமாதலால் இவ்விடத்திற்கு ஆலந்தூர் என்று பெயர். ஆலந்தூரில் பல குளங்களும், ஏரிகளும் இருந்தன. இன்றும் இங்கு ஒரு பகுதியை ’மதுவன்கரை’ என்று அழைக்கிறார்கள். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் வரை இங்கு இருந்த ஏரி உபயோகத்தில் இருந்தது. இவை எல்லாம் ஆலந்தூர் என்பது நீர் நிலைகள் இருந்த இடம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

சென்னையின் நுழைவாயில்கள்

சென்னைக்கு வருபவர்கள் புலிகாட், வடக்கில் தொண்டயார்பேட்டை, தென்மேற்கில் பூவிருந்தமல்லி-கிண்டி அல்லது அமிஞ்சிகரை, தெற்கில் செங்கல்பேட்டை-கிண்டி வழியாக வருவார்கள். புலிகாட்டில் போர்ச்சிகீஸியர்கள் நிர்வாகம் இருந்ததால் பயணிகள் புலிகாட்டை அதிகம் உபயேகபடுத்துவதில்லை. ஆற்காடு, காஞ்சிபுரம், செங்கல்பேட்டை முதலிய உற்பத்தி தலங்களிலிருந்து விவசாய விளைப்பெருள்களை பட்டிணத்து சந்தைக்கு கொண்டு வர கிண்டியே பயன்பட்டது. ஆலந்தூர் முதலில் இருப்பதால், நாளடைவில் இது மிக பெரிய வியாபார மண்டியாக உருவெடுத்தது.

மக்களும் மூர்த்தங்களும் இடம் பெயர்ந்தது

ஒரு காலகட்டத்தில் பாரதத்தில் மக்கள் தங்கள் மதநம்பிக்கையை மாற்றிக்கொள்ள கட்டாயபடுத்தப்பட்டனர். அந்த சமயத்தில், மக்கள் பாதுகாப்பு கருதி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம்மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்படி இடம் மாறிய மக்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களின் மூர்த்தங்களையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர். ஆற்காடு, காஞ்சிபுரம், செங்கல்பேட்டை ஆகிய இடங்களிலிருந்து தெய்வ மூர்த்தங்கள் இடம்மாறியதை ஆவணங்கள் பல உறுதிப்படுகின்றன.

ஆலந்தூரின் மாங்குளம்

ஶ்ரீவீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், எம்.கே.என்.சாலை, மாங்குளம், கிண்டி, சென்னை வடபாரதத்திலிருந்து பல தவசிகள் பாரதம் முழுவதும் யாத்திரை செய்வது வழக்கம். அவர்கள் "பைராகி"கள் என்று அழைப்பார்கள். அப்படி தென்பாரதம் வந்திருந்த பைராகிகள் இன்றைய கிண்டியில் உள்ள மங்கம்மா குளம் என்னும் குளக்கரையில் கூடாரமிட்டு தங்கியிருந்தனர். அவர்கள் தங்களுடன் தங்களது இஷ்ட தெய்வத்தின் [ஹனுமார்] விக்ரஹத்தையும் எடுத்து வந்திருந்தனர். அவர்கள் தங்கள் முகாமில் அம்மூர்த்தியை பிரதிஷ்டை செய்து தினமும் தங்கள் வழக்கப்படி வழிபாடு நடத்தினர்கள். சில நாட்களில் மங்கம்மா குளம் அருகில் வசிக்கும் உள்ளூர் வாசிகளும் பைராகிகளின் வழிபாட்டில் ஈர்ப்பு ஏற்ப்பட்டது. அவர்களும் நாளடைவில் கலந்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

பைராகிகளும் ஶ்ரீஹனுமார் மூர்த்தியும்

பைராகிகள் சாதாரணமாக ஒரே இடத்தில் அதிக நாட்கள் தங்குவது கிடையாது. அவர்கள் சுபாவமாக புலம்பெயர்வர்கள். மாங்கம்மா குளம் அருகில் தங்கியிருந்த பைராகிகளும் அப்படி இங்கேயே அதிக நாட்கள் தங்கிவிட்டதால், வேறு இடத்திற்கு மாற முடிவெடுத்தனர். அவர்கள் முகாம் மாற்றும் பொழுது அவர்களது இஷ்ட தெய்வத்தின் மூர்த்தத்தையும் தங்களுடன் எடுத்துச் சென்று விடுவார்கள். ஆனால் இங்கு மங்கம்மா குளம் உள்ளூர்வாசிகள் தாங்களை ஈர்ந்த ஶ்ரீஹனுமாரை விட்டு பிரிய மனமில்லாமல், பைராகிகளிடம் விக்ரஹத்தை இங்கேயே விட்டு செல்லுமாறு வேண்டிக்கொண்டனர். நீண்ட தயக்கத்திற்கு பிறகு பைராகிகள் ஶ்ரீஹனுமாரின் விக்ரஹத்தை மாங்கம்மா குளம் வாசிகளின் வழிபாட்டுக்கு விட்டுகொடுப்பது என்று தீர்மானித்தார்கள்.

இன்றைய ஶ்ரீவீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில்

பைராகிகள் பிரதிஷ்டை செய்துவிட்டு சென்ற ஶ்ரீஹனுமாரை "ஶ்ரீவீர ஆஞ்சநேயர்" என்ற திருநாமத்தை சூட்டி உள்ளூர்வாசிகள் பூஜை செய்து வரலாயினர். நாளடைவில் மங்கம்மா குளம் மாங்குளம் ஆயிற்று. மிகவும் சக்திவாய்ந்த இவர் பக்தர்களிடையே மிகவும் பிரபலமாயினார். அவரை தரிசனம் செய்ய பல இடங்களிலிருந்து இன்று பக்தர்கள் வருகிறார்கள்.

திருக்கோயில் இருப்பிடம்

கிண்டி இரயில் நிலையத்திலிருந்து கத்திபாரா சந்திப்புக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 200 மீட்டர் சென்றால் இடது சாரியில் வரும் சாலை எம்.கே.என். சாலை. இச்சாலையில் சுமார் 200மீட்டர் சென்றால் வலது சாரியில் பஸ் நிறுத்தம் தெரியும், அதை ஒட்டியுள்ளது இத்திருக்கோயில். கோயிலின் நுழைவாயில் பஸ் நிறுத்தத்திற்கு பக்கத்தில் உள்ள சாலையில் உள்ளது. தமிழக அரசு நிர்வாகத்தில் உள்ளது இக்கோயில். கோயிலைச்சுற்றி பயணற்ற சரக்குகள் வாங்கும்/விற்கும் வியாபாரிகள் உள்ளனர். இருந்தும் கோயிலினுள் புனித தன்மை மேலோங்கியே நிற்கிறது.

ஶ்ரீவீர ஆஞ்சநேயர்

ஶ்ரீவீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், எம்.கே.என்.சாலை, மாங்குளம், கிண்டி, சென்னை மேற்கு நோக்கி இருக்கும் மூலவர் தெற்கு நோக்கி நடப்பது போல் இருக்கிறார். அவரது திருப்பாதங்களில் தண்டை, நூபூரம் அணிந்துள்ளார். அவரது வலது திருக்கரம் அபயமுத்திரை தரித்துள்ளது. அவரது இடது திருக்கரம் இடுப்பில் இருக்கிறது, அதே சமயம் சௌகந்திகா புஷ்பத்தின் தண்டினை பிடித்துள்ளார். புஷ்பம் அவரது இடது தோளுக்கு மேல் தெரிகிறது. மணிகட்டில் கங்கணமும், புஜத்தில் கேயூரமும் அணிந்துள்ளார். வலது புறமாக மேல் நோக்கி செல்லும் வாலின் நுனியில் அழகிய சிறிய மணியுள்ளது. முப்புரி நூல் அவரது அழகிய மார்பினை மேலும் அழகு சேர்க்கிறது. கழுத்தில் இரண்டு மணிமாலைகள் அணிந்துள்ளார். கேசத்தை அழகாக கட்டி வைத்துள்ளார். அவரது கருணைமிகு கண்கள் பக்தர்களை பக்தியில் பரவசபடுத்துகிறது. அவரது பார்வையில் பெருமிதமும், கருணையும் கலந்து தெரிகிறது.

ஶ்ரீவியாசராஜாவும் ஶ்ரீவீர ஆஞ்சநேயரும்

ஶ்ரீவியாசராஜா பிரதிஷ்டை செய்த ஶ்ரீஆஞ்சநேயருக்கு இருக்கும் எல்லா லக்ஷணமும் மாங்குளம் ஶ்ரீவீர ஆஞ்சநேயருக்கு உள்ளது. வாலில் மணி, முடிந்த கேசம், சௌகந்திகா புஷ்பம் ஆகிய எல்லாம் பார்க்கும் பொழுது ஶ்ரீவியாசராஜா பிரதிஷ்டை செய்திருக்கலாம் என தெரிகிறது. பைராகிகள் எந்த க்ஷேத்திரத்திலிருந்து இவ்விக்ரஹத்தை கொண்டு வந்தனர் என்பது தெரியாது, இருந்தும் அவர்கள் ஶ்ரீவியாசராஜா விஜயம் செய்த க்ஷேத்திரத்திலிருந்து எடுத்து வந்தற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஶ்ரீவீர ஆஞ்சநேயர் மங்கம்மா குளத்தில்/மாங்குளத்தில் சுமார் இருநூறு ஆண்டுகளாக இருப்பதாக தெரிகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீவீர ஆஞ்சநேய சுவாமி கோயில், மாங்குளம், கிண்டி

 

அனுபவம்
"எதிர்முகி" ஶ்ரீஆஞ்சநேயர் தனது இருநேத்திரங்களாலும் பக்தர்களுக்கு நல்லவை எல்லாம் அருளுகிறார்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+