அது தர்மபுரியில் ஸர். தாமஸ் மன்றோ என்னும் ஆங்கிலேயர், பிரிட்டிஷர் காலத்தில் கலக்டராக பணி புரிந்த நேரம். அவரிடம் உயரிய பதவி வகித்தவர் ஸ்ரீமான் ஆதிலக்ஷ்மணராவ் என்னும் அந்தணர். மாதவ பிரிவினர். மிகவும் ஆசாரத்துடன் நியம நிஷ்டையுடன், அந்தரங்க சுத்தியுடனும் விளங்கிய அவர் தீவிர அனுமத் உபாசகர்.
தினசரி ஆத்மார்த்த பூஜை முடிந்த பின் தமது ஊரான கம்பை நல்லூரில் கோவில் கொண்ட அனுமனை தரிசித்தபின் தமது இல்லத்தில் கட்டியுள்ள பெரிய மணியை ஒலிக்கச் செய்வாராம். மணியோசை கேட்டவுடன் அதே ஊரில் குடியிருக்கும் சுமார் நாற்பதைந்து மாத்வ குடும்பங்களும் மொத்தமாக அவரது வீட்டில் குழுமிவிடுவார்கள்.
அங்கு அனைவரும் சேர்ந்தவுடன் பெரிய பெரிய கூடங்களில் வரிசையாக இலைபோட்டு பந்தியாக அன்னம் பரிமாறப்படும். இவ்வாறாக அன்னம் எல்லோரும் சாப்பிட்ட பின் ஸ்ரீமான் லக்ஷ்மணராவ் உணவருந்துவார். இது அவரது நித்ய விரதம். அவர் ஊரில் இல்லாதபோது அவர் சார்பில் அன்னதானம் தவறாமல் நடைபெறுமாம். இவ்வாறு மூன்று தலைமுறைகள் அன்னதானம் நடைபெற்றதாம்.
நாளடைவில் தர்மபுரியில் அமைந்த அனுமன் கோயில் சிறிது சிறிதாக பொலிவு குறைந்து ஒரு கட்டத்தில் மிகவும் ஒளிமங்கியது. இதன் காரணத்தை அந்த மஹாப் பிரபு அனுமனே அறிவார். ஆனால் இதிலும் ஒரு அதிசயம். ஒரு நாள் கூட பூஜைகள் நிற்கவில்லை. இருந்தும் தினசரி பக்தர் வருகை மிக குறைந்து விட்டது.
அக்கோவிலின் அர்ச்சகர்களுள் கிருஷ்ணமூர்த்தி ராவ் என்ற கிருஷ்ணாச்சார்யார் என்பவர் தினமும் மனம் உருகி அழுது இக்கோவில் இக்கதியில் இருந்து மீட்க பிரார்த்தனை செய்து வந்தார். அவர் ஒரு ஆரம்ப பள்ளியில் ஆசிரியர். ஆலய அர்ச்சகராக பயன்கருதாது பணி செய்தவர். தினமும் அவர் சன்னதியில் நின்று "பெருமானே! நான் என்று உன்னை புதிய கோவிலில் புனர் நிர்மாணம் செய்யப் போகிறேன். இதனை எவ்வாறு நான் செய்வேன் எனத் தெரியவில்லையே" என வேண்டி வந்தார்.
அன்னாரது கனவில் ஸ்ரீஆஞ்சநேயர் தோன்றி ஸ்ரீபுரந்தரதாஸரின் கிருதிகளை தினசரி பஜனை செய்தால் கோயில் பொலிவடையும் என அருளினார். அன்று முதல் பஜனை மண்டலி மூலம் நாம சங்கீர்த்தனம் தொடங்கியது. பல அன்பர்கள் பஜனை நடைபெறும் போது மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஆஞ்சநேயர் கைத்தாளம் போட்டுக்கொண்டு நர்த்தனம் செய்வதை நேரில் கண்டிருக்கிறார்கள்.
இவ்வதிசயம் பரவவே பக்தர்கள் கூட்டம் பெருகியது. ஆனாலும் திருப்பணி வேலைகள் நடைபெறுவது தாமதமாகவே இருந்தது. இந்த நிலையில் பஜனை மண்டலியில் ஈடுபாடுள்ள ஒரு அன்பருக்கு ஆஞ்சநேயர் தேன் அபிஷேகப்பிரியர் எனவும் அவருக்கு தேன் அபிஷேகம் செய்தால் கோரிக்கைகள் நிறைவுபெறும் என்பதும் நினைவுக்கு வந்தது.
மறுநானே விசேஷ பூஜைகளுடன் ஸ்வாமிக்கு குளிரக்குளிர தேனாபிஷேகம் நடந்தது. அன்று இரவே ஓர் அற்புதம் நடந்தது. தர்மபுரியில் வாழும் டாக்டர் ஜி. ஜகதீஷ் காமத் என்பவரது கனவில் ஸ்ரீஆஞ்சநேயர் தோன்றி தனது கோவிலையும் விக்ரஹம் மற்றும் அனைத்து அடையாங்களையும் காட்டி மறுநாளே கோவிலுக்குச் சென்று திருப்பணிக்கு உதவுமாறு பணித்து மறைந்தார்.
அன்றுவரை அனுமன் கோவிலின் இருப்பிடம் அறிந்திராத டாக்டர் ஜி. ஜகதீஷ் காமத் தர்மபுரியில் பல இடங்களிலும் சுற்றி அலைந்தார். வழியில் தேன்பட்ட ஒரு நபரிடம் கோலில் பற்றி விசரித்தார். அந்த அன்பர் வேறுயாரும் அல்லர். கோவிலின் திருப்பணிக்குழு செயலர். டாக்டர் காமத் கோவிலைக் கண்டு திக்பிரமை பிடித்தவர் போல ஆனார். அவர் கனவில் கண்டது போலவே கோவிலும் மூலவரும் இருந்தது கண்டு உள்ளம் உருகி உடனேதான் கொண்டு வந்திருந்த பணத்தை திருபணிக்குச் செலுத்திவிட்டார். ஶ்ரீகாமத் அவர்கள் கொடுத்த தொகை கொண்டு திருபணி ஆரம்பித்து, முதல் கட்டம் முடிவடைந்துள்ளது. முளுபாகல் ஶ்ரீபாதராஜா மடத்தை சேர்ந்த ஶ்ரீ ஶ்ரீ விக்யானநிதி தீர்த்தர் அவர்கள் திருக்கரங்களால் 14 மே 1993 அன்று திருக்கோயில் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. அன்றிலிருந்து பக்தர்கள் வருகையும் இரண்டாம் கட்டத்திற்கான திருப்பணி நிதியும் பெருகியது.இன்று ஸ்ரீகோவில் அருமையான சூழ்நிலையில் மாற்றி புதுப்பிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி ஸ்ரீஹரிஹரநாதஸ்வாமி கோவில் தெருவில் ஸ்ரீ ஆஞ்சநேயர் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தர்மபுரி முக்கிய பஸ் நிலத்திலிருந்து சுமார் ஒன்னரை கி.மீ. தொலைவில் உள்ளது.
கோவில் முகப்பிலிருந்து பார்க்கும் போதே ஸ்ரீஆஞ்சநேயர் தரிசனமாவார். கோயில் நுழைவாயிலின் அடுத்து இடப்புறம் முதலில் அலுவலகம் செயல்படுகிறது. அடுத்ததாக சுமாராக பெரிய நீள்சதுர மஹா மண்டபம் கிரானைட் தளத்துடன் உள்ளது. ஸ்வாமி எழிந்தருளியுள்ள கருவறையை அர்த்தமண்டபம் இணைக்கிறது.
மூலவர் சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்டு கை கூப்பிய நிலையில் கிழக்குப் பர்த்து ஸேவை ஸாதிக்கிறார். இச்சிலையில் தலையில் ஒரு சிறிய குழி உள்ளது. இதன் மீது அபிஷேக காலங்களில் அனந்த பத்ம ஸ்வாமி ஆவிர்பவித்துள்ள ஸாலக்கிராமம் வைக்கப்படும். இவ்வாறு அனுமன் சிலையின் தலையில் ஸாலகிரமத்துடன் தேனாபிஷேகம் நடை பெறுகிறது. இது வேறு எங்கும் இல்லாத விசேஷமாகும். ஸ்வாமியின் பின்புறமாக சுமார் மூன்று அடி உயர் மேடையில் நூதனமாக ஸ்ரீஸிதாராமர் விகரகம் 1993ம் வருடம் முளுபாகல் மடாதிபதியவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஆஞ்சநயர் மிகச்சிறிய உருவமாக ஒன்றரை அடியளவில் வாலை பின்புறம் தூக்கியபடி "தாஸ ஆஞ்சநேயர்" என்ற பெயருக்கேற்ப அஞ்சலி ஹஸ்தராகக் காணப்படுகிறார். தினசரி வடைமாலைகளும், வேற்றிலை மாலைகளும் குவிகின்றன. இங்கு வெண்ணை காப்பும், சந்தனக் காப்பும் விசேஷம். அனைத்திலும் மிகவும் உயந்ததாக தேனாபிஷேகம் கருதப்படுகிறது.
தேனாபிஷேகம் நடைபேறும் போது ஸ்ரீஹரிவாயு ஸ்துதி என்று போற்றப்படும் ஸ்துதி ஓதப்படுகிறது. தேனாபிஷேகத்தால் பலர் பலவித நோய் நீங்கி உள்ளார்கள். பல திருமணங்கள் கூடியிருக்கின்றன. மாதவ ஸம்பிரதாயத்தை அனுசரிக்கும் இக்கோயிலில் தினசரி காலைநேரம் மட்டுமே தேனாபிஷேகம் நடைபெறும். எனவே காலை நேரமே பக்தர்கள் சேவைகளைக் காண ஏற்றது. சனிக்கிழமைகள் விசேடமானவை. ஏகாதசியன்று எவ்வித சேவைகளும் நடைபெறாது.
மேல் விபரங்களுக்கு:
கே.ஸ்ரீநிவாசன்,
பரம்பரை அர்ச்சகர்,
ஸ்ரீ தாஸ ஆஞ்சநேயர் ஆலயம்,
106, ஸ்ரீஹரிஹர நாதஸ்வாமி கோவில் தெரு,
தர்மபுரி, தமிழ் நாடு
அனுபவம்
நினைத்த நியாயமான வேண்டுதல்கள் நிறைவேற தாஸ ஆஞ்சநேயரை வேண்டினால் அம்மஹா பிரபு அளவற்ற அருளை அள்ளி வழங்குவார்.
தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020