home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி, தமிழ்நாடு

ஶ்ரீ அபயஹஸ்த்த ஜயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி, தமிழ்நாடு

ஜி.கே.கௌசிக்


கிருஷ்ணாபுரம்

மிக அருமையான நெல் விளையும் பூமியில் சுற்றும் வயல்களில் நெற்கதிர்கள் இருக்க நடுவில் அமைந்திருக்கிறது இந்த ஆஞ்சநேயரின் திருக்கோயில். திருநெல்வேலி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை பின்னணியாகவும் சுற்றும் பசுமை நிறைந்த நெற்வயல்களையும் கொண்டு அமைந்திருப்பதை காணும் போது ஏதோ கற்பனையில் சித்திரம் வரைந்ததை காண்பதுப் போல் இருக்கிறது. கிருஷ்ணாபுரம் என்னும் இக்கிராமம், கடையநல்லூர் அருகில் திருநெல்வேலியில் இருக்கிறது. இவ்வருமையான கிராமத்தை தென்காசியிலிருந்தோ அல்லது சங்கரன்கோயிலிலிருந்தோ அடையலாம்.

கிருஷ்ணாபுரம் அனுமார் கோயில் பஸ் நிருத்தத்தில் இறங்கி செங்குத்தாக உள்ள வீதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் சென்றால் திருக்கோயிலை காணலாம். இங்கிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வயல்களுக்கு இடையே செல்ல வேண்டும். கப்பி ரோடு தான். இந்த இடத்தை அனுமார்க்கோயிலுக்கு செல்வதாற்காக இந்த கிராமத்தை சேர்ந்த பணிநிறைவடைந்த ஆசிரியர் தானமாக கொடுத்துள்ளார். அவர் கோயிலை பராமரிப்பதிலும், கோயிலில் அன்னதானம் நடத்தவும் உதவுகிறார். வயற்காட்டின் நடுவில் நடந்து சென்று கோயிலை அடைய வேண்டும். நடக்கும் நேரத்தில் தலப்புராணத்தை காண்போமா?

தலபுராணம்

ஶ்ரீஇராமரின் உதவியால் சுக்ரீவன் கிஷ்கிந்தையின் மன்னனாக முடிசூடிய பிறகு தனது வானர சேனைகள ஶ்ரீசீதா பிராட்டியாரை தேட எண்திக்கிலும் அனுப்புகிறான். எல்லோருக்கும் ஒரு கால அவகாசம் கொடுத்திருந்தான். தென்திசை நோக்கி சென்ற சேனைத்தலைவனாக அங்கதன் இருக்க, ஜாம்பவான், அனுமார் முதலியவர்கள் உதவிக்கு சென்றனர். ஶ்ரீஅனுமரிடம் நம்பிக்கை வைத்திருந்த ஶ்ரீஇராமர் அவரிடம் தன் கைணையாழியை கொடுத்து அனுப்புகிறார்.

ஶ்ரீ அபயஹஸ்த்த ஜயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம், திருநேல்வேலி, தமிழ்நாடு அங்கதன் தலைமையில் புறப்பட்ட குழுவுக்கு, சுக்ரீவன் குறிப்பிட்ட கால அவகாசத்தினுள் அவர்கள் தேட வேண்டிய இடங்கள் முடியவில்லை. கிஷ்கிந்தைக்கு திரும்புவதற்கு பதில், மேலும் தேடுவது என்று முடிவு செய்தனர்.

மேற்கு தொடற்சி மலை பகுதியில் தேடிய அவர்கள் ஒரு கட்டத்தில் மிகவும் களைப்பும், தாகம் அதிகமுள்ளவர்களாகவும் ஆனார்கள். அப்பொழுது ஆஞ்சநேயர் உடல் நனைந்த ’சுக்ரவாஹ பக்ஷி’ [பறவை] ஒரு குகையின் உள்ளிருந்து வெளிப்படுவதை பார்த்தார். பின்பு தன்னுடன் வந்த வானரங்களை தன்னை பின்பற்ற சொல்லி, அக்குகையினுள் நுழைந்தார். அந்தோ ஆச்சரியம்! அங்கு அவர்கள் மிக பெரிய நகரத்தையே கண்டனர். எங்கு நோக்கினும் பழம் தரும் மரங்கள், பூத்து குலுங்கும் செடிகள், தாமரை நிறைந்த தடாகம், வீடுகளின் கூரைகள் தங்க தகட்டினால் வேயப்பட்டிருந்தன. இப்படியான சூழலில் மிகவும் தேஜஸுடன் ஒரு மாதுவை கண்டனர்.

ஶ்ரீஆஞ்சநேயர் அந்த தபஸ்வீயான மாதுவை வணங்கி தங்களின் திட்டப்பணியைப் பற்றி விளக்கி தங்கள் குழுவினற்கு உணவும், நீரும் அளிக்க வேண்டினார். தருவதாக கூறிய மாது, இந்த நகரத்தினைப்பற்றி கூறினாள். மாயன் என்னும் விஸ்வகர்மா வம்சத்தை சேர்ந்த மாயாவி இந்நகரை பிரம்மனின் அருள் கொண்டு உருவாக்கினான். அவன் ஹேமா என்னும் தேவகன்னிகை மீது காதல் கொண்டான். இந்திரனுக்கு இது தெரிந்து மயனுடன் சண்டையிட்டு, அவனை கொன்றுவிட்டான். மயனை மாய்த்ததால் இந்திரனுக்கு பாவங்கள் சேர்ந்தன. இதை அறிந்த பிரம்மா இந்நகரத்தை ஹேமாவிற்கு திரும்ப கொடுத்து உதவினார் என்பதை அம்மாது கூறினாள். பின் தனது பெயர் சுயம்பிரபா என்றும் தான் ஹேமாவிற்காக இதை காத்து வருவதாகவும் தெரிவித்தாள்.

நீரும், ஆகாரமும் வந்த வானரங்களுக்கு அளித்தாள் சுயம்பிரபா. பின் அனைவரையும் தங்கள் கண் மூடிக்கொள்ள சொல்லி குகையின் வாய்வரை அழைத்துச் சென்றாள். அதன் பின் அவள் குகையினுள் மறைந்தாள். [இது வரை நமக்கு இராமயணத்தில் கிடைக்கிறது]

உள்ளூர் புராணத்தின் படி, ஶ்ரீஇராமரும், ஶ்ரீஆஞ்சநேயரும், ஶ்ரீசீதா பிராட்டியுடன் இலங்கையிலிருந்து திரும்பி வந்த பின்பு, சுயம்பிரபாவை இங்கு சந்தித்தார்கள். அவர்கள் இங்கு ஒரு யாகமும் செய்கிறார்கள்.

ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில் வளாகம்

ஶ்ரீ அபயஹஸ்த்த ஜயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி, தமிழ்நாடு மிக அழகான சிறிய திருக்கோயில் இது. திருக்கோயிலுக்கு முன் திருக்குளம் இருக்கிறது. அக்குளத்தில் இரண்டு பீலியின் வாய்கள் [குகை வாயில்கள்] தெரிகின்றன. ஒன்று செயல்பாட்டில் இல்லை. மற்றது வழியாக கர்ப்பகிரஹத்திற்கு செல்லலாம் என்கிறார்கள். ஶ்ரீஇராமர் யாகம் செய்த இடத்தில் கர்ப்பகிரஹம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. திருக்கோயிலை சுற்றியுள்ள பூமியில் இன்றும் சாம்பல்கூறுகள் கிடைக்கிறதாம். குகை வாயிலை தரிசித்த பின் நேர வந்தால், கர்ப்பகிரஹத்தை ஒட்டி கிழக்கு நோக்கி பெரிய கூடம் - சமீபத்திய கட்டமைப்பு. அதில் ஶ்ரீஇராமர் பரிவாரங்களுடன் தரிசனம் தருகிறார். அருகில் தெற்கு நோக்கிய கர்ப்பகிரஹம். ஶ்ரீஅபயஹஸ்த ஜயவீர ஆஞ்சநேயர் கம்பீரமாக தரிசனம் தருகிறார். இவ்விரு இடங்களை சுற்றி பல சித்தர்களின் சமாதியுள்ளது, அவைகளை அங்குள்ள துளசி மாடத்தாலோ அல்லது வில்வ மாடத்தாலோ தெரிந்துக் கொள்ளலாம். வளாகத்தின் தென்மேற்கில் தியான மண்டபம் உள்ளது. எதிரில் இருக்கும் யோக ஆஞ்சநேயரை நோக்கி தியானம் செய்யலாம்.

கர்ப்பகிரஹத்தை ஒட்டியே பல விரிவுகள் செய்திருக்கிறார்கள்.

ஶ்ரீஅபயஹஸ்த ஜயவீர ஆஞ்சநேயர்

தெற்கு நோக்கிய சன்னிதியில் ஶ்ரீஆஞ்சநேயரும் தெற்கு நோக்கியுள்ளார். பூமிக்கு மேல் சுமார் ஆறு அடி உயரத்தில் மிக கம்பீரமாக அமைந்துள்ளது ஶ்ரீஆஞ்சநேயரின் சிலாரூபம். அந்த பாறை பூமியினுள் மிகுந்த ஆழம் வரை செல்கிறது. அவரது திருப்பாதங்கள் பக்தர்களை நோக்கி ஆசிகள் வழங்க வருவது போல் உள்ளது. வலது திருக்கரம் ’அபய முத்திரை’ காட்டி, பக்தர்களுக்கு பயத்தை போக்குகிறது. இடுப்பின் இடதுபுறத்தில் அவரது இடது திருக்கரம் பதிந்துள்ளது. மார்பினை மூன்று மணிமாலைகள் அலங்கரிக்கின்றன. அவற்றில் ஒன்றில் பதக்கம் உள்ளது. காதுகளை மணிகுண்டலங்களும், காதில் மேல்பகுதியில் அணிகலமும் அணிந்திருக்கிறார். அவரது வால் தலைக்கு மேல் சென்று, நுனி சற்றே வளைந்து, சிறிய மணியுடன் காணப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது கண்களில், நேர் கொண்ட பார்வையில் - ஒளிர் விடும் பிரகாசம், கூடவே ஒளிர் விடும் காருண்யம் - இதனை காண கண் ஆயிரம் வேண்டும்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி"

 

அனுபவம்
பயம் நீங்கி, தெளிந்த மனதுடன் சிந்தித்து செயல்பட இந்த க்ஷேத்திரத்தில் அருளும் ஶ்ரீஅபயஹஸ்த ஜயவீர ஆஞ்சநேயரை தரிசனம் செய்யுங்கள். கிட்டும் அவரது அருளை அள்ளிச் செல்லுங்கள் மனநிம்மதியுடன்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: மே 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+