home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீஹனுமார், ஶ்ரீராமர் திருக்கோயில், திருப்பரயார், கேரளா


ஶ்ரீஹனுமார், ஶ்ரீராமர் திருக்கோயில், திருப்பரயார், கேரளா

ஶ்ரீ எம்.பி.சேகரன், திருச்சூர்


திருப்பரயார்

திருப்பரயார் என்னும் புண்ய க்ஷேத்திரம் திருச்சூரிலிருந்து சுமார் இருபத்துநான்கு கி.மீ. தொலைவில் உள்ளது. மூன்று புறமும் நதிகளால் சூழப்பட்ட கோயில் உள்ள ஊர் என்பதால் இத்க்ஷேத்திரத்திற்கு திருப்பரயார் என பெயர். [த்ரி-மூன்று, புர-புறமும், ஆறு-நதி - த்ரிபுரயாறு என்பது மழுவி திருப்பரயார் என அழைக்கப்படுகிறது]. இங்குள்ள நதியின் பெயரும் திருப்பரயார் என்பது விசேடம். புராணங்களின் கூற்றுப்படி, கங்கை, யமுனை, சிந்து, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா மற்றும் காவிரி என நதிகளின் நீரினை பிரம்ம தேவர் இங்கு வழங்கினார் என்பதாகும். சிலர் மஹா விஷ்ணுவின் திருப்பாதங்களை அலம்பிய நீர் இங்கு பரசுராமரால் கொண்டு வரப்பட்டதாகவும், அது தீவீரமாக பரசுராம க்ஷேத்திரமான கேரளத்தில் பாய்ந்ததால் இப்பெயர் என்றும் கூறுவர்.

ஶ்ரீராமர் கோயில் உள்ளதால் இவ்விடம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. சுற்றிலும் தென்னை தோப்புகள் சூழ திருப்பரயார் நதிகரையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலை வெளியிலிருந்து பார்த்த மாத்திரத்தில் மனதில் நிம்மதி கவ்விக் கொள்ளும்.

தல புராணம்

ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா துவாரகையில் ஶ்ரீராமர், ஶ்ரீபரதர், ஶ்ரீலக்ஷ்மணர், ஶ்ரீசத்ருகுணன் ஆகியோர்களை அழகிய சிலாரூபத்தில் வடித்து வைத்து பூஜை செய்துவந்தார். கலியுகம் பிறக்கும் சமயம் ஶ்ரீகிருஷ்ணர் வைகுண்டம் அடைந்தார். துவாரகை கடலில் மூழ்கியது. அவர் வழிபட்டுவந்த இந்த விக்ரகங்களும் கடலில் மூழ்கியிருந்தது.

ஶ்ரீராமர் திருக்கோயில், திருப்பரயார், கேரளா அதற்கு நீண்ட நாட்களுக்கு பின் சில மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கையில், அவர்களின் வலையில் ஶ்ரீகிருஷ்ணரால் பூஜிக்கப்பட்ட விக்ரகங்கள் சிக்கின. மிகவும் ஜ்வலிக்கும் இவ்விக்ரங்களை கண்ட மீனவர்களுக்கு பிரமிப்பாக இருந்தது. மீனவர் தலைவர் இதை பற்றிய தகவலை அருகாமையில் இருக்கும் "வைக்கயத் கைமல்" என்பரின் மூதாதியருக்கு தெரிவித்தார்.

இந்த விஷயம் காட்டு தீ போல் பரவி, அங்கு மக்கள் திரளாக கூடினர். "கைமல்"லும் மற்ற ஊர் தலைவர்களும் கூடின பிறகு, தாந்திரிகர்களும் வரவழிக்கப்பட்டனர். தாந்திரிகர்கள் அனைவரும் கூடி "விக்கிரஹ மகிமை" பற்றி விவாத்த பின் இவ்விக்ரஹங்கள் ஶ்ரீகிருஷ்ணரால் பூஜிக்கப்பட்டது என்பதனை தெரிவித்தனர். அதன் பின் ’பிரஸ்னம்’ போட்டு பார்த்து, இந்த நான்கு விக்ரஹங்களையும் எங்கு பிரதிஷ்டை செய்யலாம் என்பதனையும் தெரிவித்தனர். ஶ்ரீராமரை திருப்பரயாரிலும், ஶ்ரீபரதனை இருஞ்சாளகுடாவிலும், ஶ்ரீலக்ஷ்மணரை மூழிக்குளத்திலும், ஶ்ரீசத்ருகுணனை பாயம்மிலிலும் பிரதிஷ்டை செய்ய முடிவாகியது.

அப்பொழுது, "பொன்மயில் ஒன்று ஆகாயத்தில் தென்படும் அவ்விடத்தின் கீழ் ஶ்ரீராமரை பிரதிஷ்டை செய்யவும்" என்று அசரீரியின் வாக்கு ஒன்று கேட்டது

மையில் வந்த புராணம்

குறிப்பிட்ட நாளில், நேரத்தில் எல்லோரும் திருப்பரயாரில் கூடினர். மையிலின் தரிசனத்திற்காக காத்திருந்த நேரத்தில், திவ்ய ஜோதியாக விளங்கும் ஒருவர் மையில் பீலிகளை கையில் வைத்துக் கொண்டு மக்களை பூஜைக்கு கூப்பிட்டார். அப்படி அவர் காண்பித்த இடத்தில் பூஜைகள் செய்து, ஶ்ரீராமரை பிரதிஷ்டை செய்தனர்.

ஆனால் பின்பு உண்மையில் ஒரு மையில் வந்தது. வந்த மையில் வேறு இடத்தினை காண்பித்தது. தாந்திரிகர்கள் அழைக்கப்பட்டு ’பிரஸ்னம்’ போட்டு பார்த்தனர். நீண்ட விவாதத்திற்கு பிறகு மையில் காண்பித்த இடத்தில், "பலிக்கல்லு" நாட்டுவது என்று தீர்மானம் ஆயிற்று. பலிக்கல்லினை நிறுவிய பின் பல நாட்கள் வரை, சுழண்டு கொண்டே இருந்தது. ஶ்ரீநாரநாத் ப்ராந்தன் என்னும் யோகீஸ்வரர் மந்திரங்களால் பலிக்கல்லை கட்டுப்படுத்தி கல்லால் தயாரிக்கப்பட்ட ஆணியால் அதனை ஸ்திரப்படுத்தினார். பின்பு ஶ்ரீதேவி, பூதேவியர்களின் பிரதிமைகளும் ஶ்ரீராமரின் இருபுறமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நாலம்பல தரிசன மகாத்மியம்

மேலே கூறப்பட்ட நான்கு க்ஷேத்திரங்களான திருப்பரயார், இருஞ்சாளகுடா, மூழிக்குளத்திலும், பாயம்மில் ஆகியவற்றில் இறைவனின் சாந்தித்யம் இருப்பது உண்மை கேரள தேசத்தில் ’கர்கடக’ மாதம் ’இராமாயண மாதம்’ என மிக விசேடமாக கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் இராமாயணம் படிப்பதையும் ராமர் கோயில் செல்வதையும் மிக விசேடமாக செய்வார்கள்.

ஶ்ரீராமர் திருக்கோயில், திருப்பரயார், கேரளா இந்த நான்கு க்ஷேத்திரங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வது மிகவும் விசேடமாக கருதப்படுகிறது. அதிகாலை-நிர்மால்ய தரிசனம் ஶ்ரீராமரை திருப்பரயாரிலும், உஷா கால பூஜை ஶ்ரீபரதனுக்கு இருஞ்சாளகுடாவிலும், உச்சகால பூஜை ஶ்ரீலக்ஷ்மணருக்கு மூழிக்குளத்திலும், சாயரக்ஷ்ஷை பூஜை ஶ்ரீசத்ருகுணனுக்கு பாயம்மிலிம் காண்பது என்பது மரபாக கொண்டுள்ளனர். பழம்காலாம் தொட்டு வரும் இப்பழக்கம் இப்பொழுதும் பலரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திருப்பரயார் ஶ்ரீராமர்

இத்திருக்கோயிலின் கர்ப்பகிரஹம் சதுரமாக அமைந்துள்ளது, மேற்கூரை conicalஆக அமைந்துள்ளது. மிகவும் வசீகரமான சிலாரூபத்தில் ஶ்ரீராமர் நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கோதண்டம், அக்ஷமாலா ஆகியவைகளுடனும், அகண்ட மார்பில் ஶ்ரீவத்ஸமும் கௌஸ்துபமும் கொண்டு அருளாட்சி செய்கிறார். ஶ்ரீமகாவிஷ்ணுவின் உருவத்தை ஒத்து இருந்தாலும், கையில் கோதண்டம் இருப்பதால் இவர் ஶ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரமான ஶ்ரீராமரகவே வந்திக்கப்படுகிறார். கையில் இருக்கும் அக்ஷமாலை ப்ரம்மனின் அம்சமாக கருதப்படுகிறது. இங்கு தக்ஷிணாமூர்த்தியும் இருப்பதால் இங்கு மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ளதாக கருதப்படுகிறார்.

திருப்பரயார் ஶ்ரீஹனுமார்

எங்கெங்கெல்லாம் ஶ்ரீராமரின் பெயரோ அங்கெல்லாம் ஶ்ரீஹனுமார் இருப்பார் என்பது தெரியாதா? இத்திருக்கோயிலின் விசேடமே ஶ்ரீஹனுமாருக்கு என்று தனி சன்னிதி கிடையாது. அவர் கர்ப்பகிரஹத்திற்கு நேர் எதிரில் இருக்கும் நமஸ்கார மண்டபத்தில் எப்பொழுதும் இருப்பார் என்பது தின்னம். இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீராமரிடம் ஶ்ரீஹனுமார் ’திருஶ்டா ஶீதா, திருஶ்டா ஶீதா’ என்னும் அருமையான ஶ்ரீராமருக்கு நிம்மதி அளித்த செய்தியை கூறினார் என்பது பிரபலம். மிக அருமையான இருப்பத்து நான்கு மர வேலைப்பட்டு சித்திரங்கள் நமஸ்கார மண்டபத்தை அலங்கரிப்பது மிகவும் ரம்யமாக இருக்கிறது. கேரளத்திற்கே உரிய சித்தரங்கள் சுற்று சுவர்களை அலங்கரிக்கின்றன.

மற்ற சன்னிதிகள்

பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் ஶ்ரீகணபதிக்கு சன்னிதி உள்ளது. வெளிச்சுற்றில் தென்பகுதியில் ஶ்ரீசாஸ்தாவிற்கும், வடக்கு பகுதியில் கோசாலை ஶ்ரீகிருஷ்ணருக்கும் தனி சன்னிதிகள் உள்ளன.

வழிபாடு

வெடி வழிபாடு, ஶ்ரீராமர் திருக்கோயில், திருப்பரயார், கேரளா இந்த க்ஷேத்திரத்தின் மிக விசேடமாக கருதப்படும் வழிபாடு ’வெடி வழிபாடு’ என்பதாகும். ஶ்ரீசாஸ்தா சன்னிதிக்கு சற்று முன் கோயில் மதிலை ஒட்டிய இடத்தில் வெடி வைக்கிறார்கள். குழாய் மாதரி இருக்கும் ஒன்றில் மருந்திட்டு வெடி வைக்கிறார்கள். அதினின்று ஒலிக்கும் ஒலி "திருஶ்டா ஶீதா" என்பது போல் இருக்கிறது. பக்தர்கள் தங்கள் ஹனுமாருக்கான வேண்டுதலை, வழிபாட்டினை கோயிலில் சிறிய தொகை கட்டி வெடி வெடிக்க வைக்கிறார்கள்.

திருப்பரயார் ஆறு கோயிலின் முன் ஓடுகிறது. அங்கு இருக்கும் மீன்களுக்கு ஆகாரம் இடுதல் ஒரு வழிபாடு, இதனை இங்கு "மீண்ணுட்டு" என்று அழைக்கிறார்கள். அவல், செங்கதலி [செவ்வாழை] இவைகள் மீனகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.

கோயில் விசேடங்கள்

கார்த்திகை மாதம் இத்திருக்கோயிலில் மிகவும் விசேடமாக இருப்பத்தொரு நாட்களுக்கு அனுசரிக்கபடுகிறது. ஆன்கிய கூத்து என்னும் இசை நாடகம் நடத்தப்படுகிறது. ஶ்ரீஹனுமார் ஶ்ரீஶீதா தேவியாரை இலங்கையில் சந்தித்து உரையாடியது மிகவும் பக்திமயமாகவும், உணர்ச்சிமயாமகவும் கூறப்படுகிறது. ஶ்ரீராமரிடம் தான் கண்டதை விவரிக்கும் ஶ்ரீஹனுமாரை நேரிலேயே நிறுத்திவிடுவார்கள். அவ்வளவு உருக்கம், அவ்வளவு பக்தி.

தசமியன்று ஶ்ரீசாஸ்தாவும், ஏகாதசியன்று ஶ்ரீராமரும் ஊர்வலம் வருவார்கள். யானைகளின் அணிவகுப்பு மிகவும் அழகாகவும் பார்க்க பரவசமூட்டுவதாகவும் இருக்கும்.

பங்குனி மாதத்தில் ஏழு நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. பங்குனி பூரத்தில் விசேடமான ஊர்வலத்துடன் இவ்விழா நிறைவு பெறும்.

தினசரி பூஜைகள்

ஐந்து கால பூஜைகள் தினசரி செய்யப்படுகிறது. மூன்று முறை சிவேலி என்னும் உற்சவ மூர்த்தி கோயிலை சுற்றி உலா செல்வதும் நடைப்பெறுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீஹனுமார், ஶ்ரீராமர் திருக்கோயில், திருப்பரயார், கேரளா"

 

அனுபவம்
எங்கும் நிறைந்திருக்கும் ஶ்ரீஹனுமார் இங்கு விக்ரஹம் இல்லாமல் பூஜிக்கப்படுகிறார். "திருஶ்டா ஶீதா" என்ற மங்களமான சொற்களால் ஶ்ரீராமரின் துக்கத்தினை கரைத்தவர் அவர். வாருங்கள், திருப்பரயார் க்ஷேத்திரத்திற்கு நமது துக்கத்தினையும் கரைத்துக் கொள்வோம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: மார்ச் 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+