home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், பாவாஸ்வாமி அக்ரஹாரம், திருவையாறு, தமிழ்நாடு

ஜி.கே.கௌசிக்


திருவையாறு

ஐயாறப்பர் திருக்கோயில் திருவையாறு தமிழ்நாடு திரு+ஐந்து+ஆறு காவிரி,மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் திருவையாறு என்று பெயர் பெற்றது. இவ்வூரில் ஐயாறப்பர் கோயில் மிக பிரசுத்தம். ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் இங்கு வாழ்ந்து முக்தி பெற்றதால் கர்நாடாக சங்கீத பிரியர்களுக்கு இவ்விடம் மிகவும் பிரசுத்தம். ஶ்ரீராமபிரானிடம் பக்தி கொண்டவர் இவர், ஶ்ரீராமர் இவருக்கு தரிசனம் கொடுத்ததும் உண்டு. பகுள பஞ்சமி அன்று இவரின் ஆராதனை தினம். அன்று கர்நாடக இசை வல்லுனர்கள் இங்கு வந்து ஆராதனையில் பங்கு கொள்வதை பெரும் பாக்யமாக கருதுகின்றனர்.

திருவையாறு தஞ்சாவூரிலிருந்து பதிமூன்று கி.மீ. தூரமும், குடந்தையிலிருந்து முப்பத்திமூன்று கி.மீ. தூரத்திலும் உள்ளது.

ஐயாறப்பர் திருக்கோயில் திருவையாறு தமிழ்நாடு

இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவன் சிவனார் ஐயாறப்பன் என்று அழைக்கப்படுகிறார். இறைவி தருமசம்வர்த்தினி. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில் மிக பெரிதாகாவும் அழகாகவும் உள்ளது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய சமய குரவர்களால் பாடல் பெற்ற ஸ்தலம் இது. மூலவர் ஐயாரப்பர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த லிங்கம் ஒரு பிருத்வி லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். நித்ய அபிஷேக பிரியரான சிவனுக்கு இங்கு அபிஷேகம் கிடையாது. மூன்றாம் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையிலிருந்து ’ஐயாரப்பா’ என்று அழைத்தால் ஏழு முறை எதிரொலிக்கும்.

தருமசம்வர்த்தினி கோயிலின் தனித்துவம்

சாதாரணமாக சிவன் கோயில்களில் சக்தியின் கோயிலும் உள்ளடங்கி இருக்கும். ஆனால் இவ்வூரில் சக்தியின் கோயில் சற்றே தள்ளி தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் சக்தி தென்திசை நோக்கிய வண்ணம் இருப்பது தான் வழக்கம், ஆனால் இவ்வூரில் தருமசம்வர்த்தினி கிழக்கு நோக்கியுள்ளார்.

தருமசம்வர்த்தினி கோயிலின் கட்டமைப்பு, உபயோகிக்கபட்டுள்ள கட்டுமான பொருள்கள் அகியவை ஐயாரப்பன் கோயிலின் கட்டுமானத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளது. இத்தலத்தில் இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை மஹாவிஷ்ணு ஸ்வரூபத்தில் போற்றபடுகிறாள்.

ஶ்ரீராமர் கோயில்

தற்போதய தருமசம்வர்த்தினி கோயில் கொண்டுள்ள இடத்தில் ஶ்ரீராமரின் கோயில் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு ஆதாரமாக, சன்னதிக்கு எதிரில் சேது பாவா அக்ரஹாரத்திலுள்ள ஶ்ரீஅனுமார் கோயில் காட்டப்படுகிறது. காலபோக்கில் இங்கிருந்த ஶ்ரீராமர் கோயிலினை மோஹனாம்பாள் என்னும் மராட்டிய அரசி காவிரியின் தென்கரைக்கு மாற்றி அவ்விடத்திக்கு தனது பெயரையும் சூட்டி ’பஞ்சநத மோஹனாம்பாள் புரம்’ என்று அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

பிரதாப சிம்மனும் இரண்டாம் துளஜாவும்

தஞ்சாவூரினை தலைநகரமாக கொண்டு மராட்டி மன்னர் பிரதாப சிம்மன் 1739-1763 லும், அவருக்கு பின் அவரது மகன் இரண்டாம் துளஜாவும் ஆண்டனர். தலைநகரமான தஞ்சாவூர் நகரத்தினை பிரதாப சிம்மன் விஸ்தரிக்க தொடங்கிய காலம். கோயில்களும் சத்திரங்களும் தனது குருநாதர் ஶ்ரீசேது பாவா ஸ்வாமிகளின் ஆணைபடி கட்டிவந்தார். தஞ்சையில் மூலை ஆஞ்சநேயர் கோயிலும் அவ்வாரே உருவானது தான். ஶ்ரீசேது பாவா ஸ்வாமிகள் அவர்கள் தங்குவதற்காக திருவையாறு தருமசம்வர்த்தினி சன்னதிக்கு எதிர்புறம் ஒரு அக்ரஹாரத்தினை பிரதாப சிம்மன் கட்டினார். அதற்கு பாவா சுவாமி அக்ரஹாரம் என்று பெயர் சூட்டினார். அங்கு அவர் குருநாதர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அங்கு ஶ்ரீராமருக்கான கோயிலும் அனுமாருக்கான கோயிலும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஶ்ரீஅனுமார் கோயில் மட்டுமே உள்ளது.

ஶ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், பாவாஸ்வாமி அக்ரஹாரம்

ஶ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், பாவாஸ்வாமி அக்ரஹாரம் பாவாஸ்வாமி அக்ரஹாரத்திலுள்ள ஶ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி கோயில் வடமேற்கு திசையை நோக்கிய வண்ணமுள்ளது. வடமேற்கு திசையை வாயு மூலை என்றும் அழைப்பார்கள். ஶ்ரீஆஞ்சநேயர் தனது தந்தை வாயு பகவானை நோக்கியுள்ளார் போலும்! கர்பகிரஹத்திற்கு முன் அமைந்துள்ள மண்டபம் நவகிரஹ மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நவகிரஹ மேடையில் எப்படி கோள்கள் அமைக்கப்பட்டிருக்குமோ அப்படி அமைக்கப்பட்டுள்ளது இம்மண்டபம். பக்தர்கள் தங்கள் ராசியாதிபதியின் இடத்தின் கீழ் நின்று தங்கள் வேண்டுகோளை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம். கர்பகிரஹத்திற்கு முன் பலிபீடமும் கொடிமரமும் உள்ளது. ஆஞ்சநேயருடன் கூடிய ஶ்ரீராமபரிவாரத்தின் உருவங்கள் கொடிமரத்தின் அடிபாகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கும் இல்லா முறையில் இரண்டு விசேடங்கள் இங்கு. முதலாவதாக கோஷ்டங்களில் நாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக கோயிலின் நாற்புறமும் மான் திக்பாலகர்களாக வடிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீவீர ஆஞ்சநேயர்

நவகிரஹ மண்டபத்தில் எங்கிருந்து நோக்கினும் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைக்கும். துங்கபத்ரா நதியிலிருந்து கிடைக்கப் பெற்ற சிலை, பச்சை கல்லினால் ஆனது. அனுமார் தனது இடது திருகரத்தில் அம்பு ஒன்றினை வைத்துள்ளார். வலது திருகரத்தினால் பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறார். அவரது இடையில் சிறிய புச்சுவா உள்ளது. தனது திருகண்களினால் பக்தர்களை பார்த்து தனது அருளினை பொழிகிறார்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், பாவாஸ்வாமி அக்ரஹாரம், திருவையாறு"

 

அனுபவம்
பக்தர்கள் பலருக்கு பற்பல நலன்கள் நடத்திக்கொடுத்தவர் இவர். மன நிம்மதியும் உள்ள தூய்மையும் பெற இவ்விறைவனை வாருங்கள் பிரார்த்திப்போம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜூலை 2016
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+