home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீவியாசராஜா பிரதிஷ்டை ஹனுமான்

ஶ்ரீ காலி ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், மைசூர் ரோடு, பெங்களூரு

ஜி.கே.கௌசிக்


பெங்களூரூம் கெம்பே கௌடாவும்

இன்றைய பெங்களூரு முன்பு விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஓர் அங்கமாக இருந்தது. யலங்கா பகுதியை தலைநகரமாக கொண்டு கெம்பே கௌடா (1513-1569), விஜய நகர பிரிதிநிதியாக ஆண்டார். இன்றைய இந்நகரத்திம் உருவக காரணமாக இருந்தவர் இவர். இவர் திட்டமிட்டு பல ஏரிகளும் கோயில்களும் கட்டுவதில் வல்லவர். பெங்களூர் என்னும் இந்நகரை தனது தலைநகரமாக்க மிக அழகாக திட்டமிட்டு 1527ல் இருந்து உருவாக்கியவர் இவர். 1537ம் ஆண்டு தனது நகரத்திற்கு மையமாக மண்ணாலான கோட்டை ஒன்றை உருவாக்கினார். விஜயநகர மன்னரான அச்சுதராயரின் உதவியுடன் கோட்டையுள்ளேயே பேளபேட், காட்டன்பேட், சிக்பேட், என பல வணிக தலங்களுடன் இந்நகரம் உருவெடுத்தது. அன்றிருந்து இன்று வரை இவை பிரபல வணிக தலங்களாக விளங்குகிறது.

பெங்களூரின் மேற்கு எல்லை

ஶ்ரீ காலி ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், மைசூர் ரோடு, பெங்களூரு மன்னர்கள் நதிகரையை ஒட்டியே நகரங்களை உருவாக்குவதை மரபாக கொண்டிருந்தனர். இவ்வழக்கத்தை ஒட்டியே பெங்களூரும் விரஷபவதி, பச்சிமவாஹினி என்னும் நதிகரையில் உருவாக்கப் பட்டது. விரஷபவதி நதியை மேற்கு எல்லையாக கொண்டு பெங்களூர் உருவாக்கப்பட்டது. தற்பொழுது இந்நதிகளைப் பற்றி பெங்களூரில் பலருக்கு தெரியாது. பெங்களூரில் மைசூர் ரோட்டில் இருக்கும் சிடி மார்கேட்டிலிருந்து சற்றே தொலைவில் உள்ளது இந்நதிகளின் கூடல். பழைய பெங்களூர் வாசிகளை கேட்டால் சுமார் ஐம்பது வருடம் முன் வரை விரஷபவதியில் வெள்ளம் இருந்ததை நினைவு கூறுவார்கள். இன்றைய நிலைமை வேறு தொழிற்சாலைகளின் கழிவுகளே இந்நதியில் அதிகம் என்பதால் கழிவுகால்வாயாக தோற்றமளிக்கிறது.

ஶ்ரீ வியாசராஜா என்னும் மகான்

ஶ்ரீ வியாசராயா தீர்த்தர் ஶ்ரீ வியாச தீர்த்தர் என்னும் ஶ்ரீ யதிராஜா மைசூருக்கும் பெங்களூருக்கும் இடையிலுள்ள சென்னப்பட்டணா-இல் பிறந்து, சன்யாசம் வாங்கிய பிறகு ஶ்ரீ வியாசராயா தீர்த்தர் என்னும் பெயர் பெற்றார். விஜய நகர அரசு சுலுவர்களிடமிருந்து துலுவர்களுக்கு மாறிய பொழுதும் இவர் விஜய நகர மன்னர்களுக்கு ராஜ குருவாக இருந்தார். விஜய நகர துலுவ வம்ச மன்னர் ஶ்ரீ கிருஷ்ண தேவராயா தனது ராஜ்யத்தை இச்சன்யாசிக்கு அற்பணித்துவிட்டதால் இவருக்கு ஶ்ரீவியாசராஜா என்னும் பெயர் நிலைத்துவிட்டது. ஶ்ரீ ஆஞ்சநேயரிடம் மிகுந்த பக்தி கொண்டவர் இவர். 732 கோயில்கள் ஹனுமனுக்காக எழுப்பியுள்ளார். அவர் தன் காலத்தில் மைசூர், சென்னப்பட்டணா, பெங்களூர் இடையில் பிரயாணம் செய்துள்ளார்.

வான்நோக்கிய ஹனுமத் குடி

விரஷபவதி, பச்சிமவாஹினி நதிகளின் கூடலில் பழைய காலம் முதல் ஶ்ரீ அனுமாரின் வான்நோக்கிய கோயில் ஒன்றிருந்தது. மகான் ஶ்ரீ வியாசராஜா அவர்கள் தனது விஜயத்தின் பொழுது இவ்வனுமாரை புனருத்தாரனம் செய்தார் என்பர். மாற்றாக இவ்விடத்தில் அனுமாரை பிரதிஷ்டை செய்தவர் ஶ்ரீ வியாசராஜா என்பர். எப்படியானாலும் விரஷபவதி பெங்களூருக்கு மேற்கு எல்லை என்பதால் வருவோரை வரவேற்கிறார் என்றும், எல்லையில் காவல் தெய்வமாகவும் இருக்கிறார் என்பதும் தான் உண்மை.

இன்றைய கோயில்

இன்றைய பெங்களூரில் மிகவும் நெறிசலான மைசூர் ரோட்டில் இருக்கிறது வான்நோக்கிய ஶ்ரீஹனுமார் கோயில். அழகிய பெரிய இராஜ கோபுரம் பக்தர்களை வரவேற்கிறது. இராஜ கோபுரத்தடியிலுள்ள ஶ்ரீமஹா கணபதியையும் ஶ்ரீவேணுகோபாலனையும் வணங்குவோம். கோயிலுக்குள் நிலவும் நிசப்தம், போக்குவரத்து வாகனங்களின் சப்தமும் நெரிசலும் இருந்து நுழைந்து உள்ளே வந்த பிறகு சற்று அதிகமாகவே தெரிகிறது. நம் மனதினை அமைதி ஆட்கொண்டு இறைவனை வணங்க நிலைபடுத்துகிறது. ஶ்ரீராம பாதங்களுக்கு நமது பிராத்தனைகளை முடித்துக் கொண்டு, பக்கவாட்டில் சென்றால் ஶ்ரீராமர் தன் பரிவாரங்களுடன் நமக்கு காட்சி தருகிறார். அருகில் ஶ்ரீசத்திய நாராயணமூர்த்தியையும் வணங்குவோம். ஶ்ரீராம பரிவார சந்நிதிக்கு நேர் எதிரில் ஶ்ரீ அனுமனுடைய சந்நிதி.

காலி ஶ்ரீ ஹனுமாருடைய தனித்துவம்

ஶ்ரீ காலி ஆஞ்சநேய ஸ்வாமி, மைசூர் ரோடு, பெங்களூரு 1. இங்கு குடிகொண்டுள்ள அனுமாரை "காலி ஶ்ரீ ஆஞ்சநேயர்" என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். காலி [Gali] என்றால் கன்னடத்தில் காற்று எனப்பொருள். இப்பெயர் இவருக்கு வருவதற்கு நாம் இரு காரணப்பொருள் கொள்ளலாம். முதலாவதாக திறந்த வெளியில் வான்நோக்கி இருந்தார் என்பதாலும், இரண்டாவதாக காற்றின் மைந்தன் என்பதனாலும் இப்பெயர் வந்திருக்கிறது என்பதே அவைகள்.

2. மேற்கு நோக்கியுள்ள ஶ்ரீ காலி ஆஞ்சநேயருக்கு சிந்தூரத்தினால் கவசம் அணிவித்துள்ளனர். மங்களமாக கருதப்படும் சிந்தூரத்தினால் அலங்கரிக்கப் பட்ட ஆஞ்சநேயர் தென் இந்தியாவின் காண்பது மிக மிக அறிது.

3. ஶ்ரீ காலி ஆஞ்சநேயரின் வால் நெளிந்தும் வளைந்தும் நுனி சுருண்டும் உள்ளது இவர் சாந்த ஸ்வரூபி என்பதை காட்டுகிறது. சுருண்டிருக்கும் வாலின் நுனியில் சிறிய மணியும் உள்ளது ஶ்ரீ வியாச ராஜரின் முத்திரை.

4. இவரின் தனித்துவம் இவரது மீசையிலும் நேர் முகமாக உள்ளதிலும் தெரிகிறது. இப்படிப் பட்ட நேர் முகத்தில் ஶ்ரீ ஆஞ்சநேயரை இங்கே மட்டுமே தரிசிக்கலாம். இவரின் கண்களின் பிரகாசம் ஒரு குருவின் கண்களிலிருந்து வருவது போல் உள்ளது. ஞான ஸ்வரூபியான இவரின் கண்களில் பிரகாசத்தில் பெருகும் ஞானம் தரிசித்தால் ஆனந்தம்.

5. அனுமாரின் இடது திருக்கரம் அவரது இடையில் ஊன்றியுள்ளார் அதே சமயம் சுகந்திகா மலரின் தண்டையும் பிடித்துள்ளார். வலது திருக்கரம் அபய முத்திரையுடன் இருந்து பக்தர்களுக்கு ’யாம் இருக்க பயமேன்’ என காணப்படுகிறது.

6. அலங்காரத்துடன் பல பல ஆபரணங்கள் அணிந்துள்ள இந்த சாந்த ஸ்வரூபியின் இடையின் வலது புறம் அழகிய சிறிய பிச்சுவா உறையினுள் உள்ளது அழகாகவே உள்ளது.

7. கடந்த நூற்றிமுப்பது வருடங்களாக தேர் திருவிழா நடத்தப்படும் ஒரே ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில் இதுவாக தான் இருக்கும்.


 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீ காலி ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், மைசூர் ரோடு, பெங்களூரு"

 

அனுபவம்
பெங்களூரில் ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில்கள் ஏராளம். இருந்தும் இந்த பழமையான கோயிலில் குடி கொண்டிருக்கும் "எதிர்முகி-சாந்த-ஞான ஸ்வரூபி" காலி ஶ்ரீ ஆஞ்சநேயரின் தரிசனம் ஒவ்வொரு ஹனுமத் பக்தர்களுக்கும் வாழ்நாட்களில் முக்கியம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: மே 2016
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+