அனந்தபூர் மாவட்டம் ஆந்திராவில் உள்ள காசாபுரம் கிராமம் குண்டகல்லுக்கு அருகாமையில் உள்ளது. குண்டகல் பஸ் நிலயத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டரும், இரயில் நிலயத்திலிருந்து பதினோரு கிலோ மீட்டரும் உள்ள காசாபுரத்திற்கு பஸ், ஆட்டோ, டக்ஸி வசதிகள் உள்ளது.
ஶ்ரீ வியாச தீர்த்தா, மாத்வசாரியார் உபதேசித்த த்வைத வேதாந்ததை பின்பற்றுபவர். 1476-ம் ஆண்டு பூர்வாதி மடத்தின் மடாதிபதி பதவிக்கு வந்தார். சாலுக்யர் ஆட்சியில் விஜயநகர சாம்ராஜ்யம் இருந்தது. அப்பொழுது அரசர் நரஸிம்ஹா அவர்கள் ஶ்ரீவியாச தீர்த்தாவை தங்கள் இராஜகுருவாக் ஏற்றுக்கொண்டு தக்க மரியாதைகள் செய்தார். அரசரின் வேண்டுகோளை ஏற்று 1486-ம் ஆண்டு ஶ்ரீ வியாச தீர்த்தா அவர்கள் திருப்பதியில் ஶ்ரீ வெங்கடேஸ்வரருக்கு பூஜைகள் பன்னிரெண்டு ஆண்டுகள் செய்தார். விஜயநகர ஆட்சி சாலுக்யர்களிடம் இருந்து சுலுக்கர்களிடம் வந்தது. ஆனால் ஶ்ரீ வியாசதீர்த்தா அவர்கள் இவர்களூக்கும் இராஜ குருவாக திகழ்ந்தார். 1509-ம் ஆண்டு விஜய நகர சாம்ராஜ்யத்தின் அரசனாக ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் பதவி ஏற்றார். இவர் ஶ்ரீவியாச தீர்த்தரிடம் மரியாதையும், நன்மதிப்பும் வைத்திருந்தார்.
ஒரு சமயம் கோள்களின் அமைப்பு சரியாக இல்லாததால் அரசர் கிருஷ்ண தேவராயரின் உயிருக்கே ஆபத்து என்று வந்தது. இராஜ குருவான ஶ்ரீவியாச தீர்த்தாவிடம் இராஜ்யத்தை அந்த நாட்களில் கிருஷ்ண தேவராயர் ஒப்படைத்தார். அப்பொழுது ஒரு நாள் இராஜ சபையில் நாகம் ஒன்று வந்தது. அரசணையில் வீற்றிருந்த ஶ்ரீ வியாச தீர்த்தர் தன் காவி மேல் துண்டினை அப்பாம்பின் மேல் வீசினார். நாகம் தீண்டி மேல் துண்டு எரிந்து சாம்பலாகியது. அரசர் கிருஷ்ணதேவ ராயருக்கு வந்த மரணம் தவிர்க்கப்பட்டது. ஶ்ரீ வியாச தீர்த்தா அரசாட்சியை கிருஷ்ணதேவ ராயரிடம் திரும்பவும் ஒப்படைத்தார். இடைகாலத்தில் இராஜ குருவே இராஜாவாக இருந்ததால் ஶ்ரீ வியாச தீர்த்தர், ஶ்ரீ வியாச ராஜ தீர்த்தர் என் அழைக்கப்படலானார்.
ஶ்ரீ வியாச ராஜ தீர்த்தர் ஶ்ரீ ஆஞ்சநேயரிடம் அதீத பக்தி கொண்டவர். அவர் தன் வாழ் நாட்களில்
732 ஆஞ்சநேயரை ஸ்தாபனம் செய்துள்ளார். அவர் ஸ்தாபித்த முதல் ஆஞ்சநேயர் ஹம்பியிலுள்ள சக்ர தீர்த்தம்
அருகிலுள்ள ’யந்தோர்தாரக ஹனுமார்’ ஆவார்.
ஶ்ரீவியாச ராஜா அவர்கள் ஹம்பியிற்கும் திருப்பதிக்கும் இடையே அதிகம்
பயணித்துள்ளார். குண்டகல் இவைக்கு இடைப்பட்ட வழியில் உள்ளது.
ஒரு முறை சில்பகிரி என்னும் சிப்பாகிரி கிராமத்தில் அவர் தங்கியிருந்தார். காசாபுரத்திலிருந்து
இருபது கிலோமீட்டர் தெலைவில் உள்ள கிராமம் இது. அன்று இரவு ஶ்ரீ ஆஞ்சநேயர், ஶ்ரீ வையாச ராஜாவின்
கனவில் தேன்றி தான் இருக்கும் ஓர் இடத்தை அடையாளம் காட்டி, தன்னை அங்கு பிரதிஷ்டை செய்யச்
சொல்லி கட்டளையிட்டார்.
மறுநாள், ஶ்ரீ ஆஞ்சநேயர் காட்டிய இடத்தை தேடி வியாச ராஜா புறப்பட்டார். காடுகளிடையே நீண்ட
பயணத்திற்கு பிறகு ஒரு சிறிய மணல் மேட்டின் அருகில் வந்து நின்றார். தன்னுடன் கொண்டு வந்த காய்ந்த
வேப்பம் குச்சியை மணல் மேட்டில் நட்டார். கூடியிருந்தவர்கள் பார்த்துக்கோண்டிருக்கும் போதே காய்ந்த வேப்பம்
குச்சியில் புதிய இலைகள் துளிர் விட ஆரம்பித்தது. ஶ்ரீ வியாசராஜாவால் தனது இஷ்ட தெய்வமான ஶ்ரீ
ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்ய வேண்டிய இடம் கண்டு பிடிக்கிப்பட்டது.
காட்டின் நடுவில் காய்ந்த வேப்பம் துளிர்விட்டது என்பதை குறிக்க அந்த காட்டிக்கே ‘நீட்டிகல்லு’ என்று பெயர் வந்தது. அங்கு ஶ்ரீ வியாசராஜாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீஆஞ்சநேயர் ஶ்ரீநிட்டிகண்டி ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படலானார். காசாபுரத்தின் அருகாமையிலிருந்த நிட்டி கல்லுவையும் தற்பொழுது காசாபுரம் உட்கொண்டுவிட்டது. அதனால் இக்கோயில் காசாபுரத்தில் உள்ளதாக இப்பொழுது கூறப்படுகிறது.
அறுபதடி உயரம் உள்ள கம்பீரமான் இராஜ கோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்று
கலசங்களும் தங்க தகட்டால் போர்த்தப்பட்டுள்ளது. மற்ற திக்குகளிலும் இராஜ கோபுரம் விரைவில் கட்டப்பட
உள்ளது. [மேற்கு கோபுரம் முடிவடைந்து விட்டது]. அர்த மண்டபத்தின் நுழைவு துவாரம் அழகிய
வேலைபாடுகளுடன் கூடிய மர கதவு உள்ளது. கதவு முழுவதும் வெள்ளி தகட்டினால் போர்த்தப்பட்டு
நாஸுக்கு வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளது. கருவறை மேலுள்ள விமானம் தங்க தகட்டினால் போர்த்த பட
உள்ளது.
வடமேற்கு மூலையில் குளம் உள்ளது. அழகிய படிகட்டுகள் நான்கு புறமும் உள்ளது. இப்புனித நீரில் நீராடி
இறைவனை தரிசித்தால் உள்ளமும், புறமும் நோயற்று இருக்கலாம் என்பார்கள். திருப்பதியிலுள்ள மாதரி,
குளத்தின் அருகில் குழாய் வழியாக இப்புனித நீர் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குளம் சுத்தமாக
உள்ளது. சுற்றுபுறமும் சகாதாரமாக உள்ளது.
நிட்டி கண்டி ஆஞ்சநேயர் நெடிந்து உயந்து புடைப்பு சிலையாக பக்தர்களுக்கு ஆசிகள் வழங்குகிறார். ’யாம்
இருக்க கவலை ஏன்?’ என்று அவருடைய கண்கள் கூறுகின்றன. காந்த மயமான கண்கள் ஆகர்க்ஷிப்பதில்
வியப்பில்லை. ஆசிகளை அள்ளி வழங்கும் கண்கள் அவை.
தினமும் அதிகாலை 4.30 மணிக்கு ஸ்வாமிக்கு அபிஷேகம். அதன் பின் ஸ்வாமிக்கு அலங்காரம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை தர்ம தர்சனம். திரும்பவும் மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை தர்சனம். சனிகிழமை தோறும் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை இடைவிடாது தர்சனம் உண்டு. கோயில் அலுவகத்தில் பணம் கட்டினால் பக்தர்கள் பெயரில் வெற்றிலை மாலை வடமாலை ஸ்வாமிக்கு அணிவிக்கப்படும். அஷ்டோத்திரம் அர்ச்சனையும் செய்யப்படுகிறது. கட்டணத்தை செலுத்தி வெள்ளி கவசம் அல்லது தங்க கவசமோ ஸ்வாமிக்கு பக்தர்கள் விரும்பினால் அணிவிக்கலாம்.
தெலுங்கு வருடப்பிறப்பு ’யுகாதி’ மிக சிறப்பாக இங்கு கொண்டாடப்படுகிறது. அன்று புது
பானையில் பொங்கல் வைத்து தானம் அளிப்பார்கள் மறுநாள் ஸ்வாமி தேரில் வலம் வருவார்.
ஶ்ரீராம நவமியின் பொழுது ஒன்பது நாட்களும் விசேடமாக் கொண்டாடப்படும். அப்பொழுது சீதாராம கல்யாண
வைபவம் நடைப்பெறும். வைகாச மாதம் ஶ்ரீஹனுமத் ஜயந்தியும், விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பல்குண
பௌர்ணமி அன்று ஸ்வாமிக்கு விசேடமான அபிஷேகம் நடைப்பெறுகிறது.
பக்தர்கள் 4ரூபாய் முதல் 400ரூபாய் வரையிலான செலவில் தங்குவதற்கு வசதியுள்ளது. தினம் அன்னதானம்
உண்டு. சனிகிழமைகளில் அதிக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அவசர மருத்துவ வசதியும்
உள்ளது.
அனுபவம்
உலர்ந்த வேப்பம் குச்சிக்கு உயிரூட்டி முளைக்க வைத்தவர் இந்த க்ஷேத்திரத்து ஸ்ரீ நித்தி கண்டி ஆஞ்சநேயர்
பக்தர்களுக்காக காத்திருக்கிறார், நம் அனைவருக்கும் நம் வாழ்வில் அனைத்து செழிப்பையும் வெற்றியையும் கொடுத்து ஆசீர்வதித்து, வாழ்க்கைக்கு ஒரு நல்ல
புதிய அர்த்தத்தை கொடுப்பார்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: அக்டோபர் 2015
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020