லக்ஷ்மணபுரியின் நவாப்பின் மனைவி பேகம் ரூபியா அவர்களுக்கு மகபேறு இல்லை. தாய்மைக்கு ஏங்கிய அவர் பல இடங்களில் தனது பிரார்த்தனையை செய்தார் ஆனால் பலன் ஏதும் இல்லை. சிலர் கோமதி நதிக்கு அக்கரையிலுள்ள ’ஹனுமான் பாடி’யிலுள்ள ஶ்ரீஹனுமாரை வேண்டிக் கொள்ள யோசனை கூறினர். ஆனால் பேகத்திற்கு சற்று தயக்கமாக இருந்தது. சில நாட்களில் ஶ்ரீஹனுமான் பாடி கோயிலுக்கு செல்ல கனவு வந்தது. இப்பொழுது அவர் தயக்கத்தை விட்டு ஹனுமான் பாடி கோயிலுக்கு சென்று தனது குறையை ஶ்ரீஹனுமானிடம் கூறி, ஆசிகள் வேண்டினாள். சில நாட்களில் கருவுற்று குழந்தையும் ஈன்று எடுத்தார்.
குழந்தை பாக்கியம் பெற்ற பிறகு, ஹனுமான்பாடி கோயிலுக்கு அடிக்கடி வருவார். ஶ்ரீஹனுமாருக்கு பல ஆபரணங்கள் செய்வித்து சமர்பித்தார். ஏழைகளுக்கு அன்னம் அளிப்பது, கோயிலில் சங்கீத கச்சேரிகள் வைப்பது என்று தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டினார்.
அப்படி குதுகூலமாக இருந்த நாட்கள் ஒன்றில், அவர் சிறிய குன்றின் அடிவாரத்தில் ஹனுமார் சிலை இருப்பதாக கனவு கண்டார். மறுநாள் தான் கண்ட கனவில் வந்த குன்றின் விவரங்களை கூறி, அது எங்குள்ளது என்று கண்டுபிடிக்க ஆட்கள் அனுப்பினார். அதே போன்ற குன்றினை ஆட்கள் அடையாளம் காட்டிய உடன் பேகம் ரூபியாவின் ஆச்சரியத்திற்கு எல்லையில்லாமல் போயிற்று. தன் கனவில் கண்ட குன்றின் அடிவாரத்தில் சில இடங்களை தோண்ட கூறினார். அங்கு ஶ்ரீஹனுமார் சிலையை கண்டு அவர் பரவசமானார். ஶ்ரீஹனுமாரின் பரிபூரண நம்பிக்கைக்கு தான் ஆளானமைக்கு அவர் ஶ்ரீஹனுமாருக்கு நன்றி செலுத்தினார். ஶ்ரீஹனுமாருக்கு உன்னதமான கோயில் எழுப்ப விருப்பம் கொண்டார். பின் தன் மந்திரிகளை ஆலோசித்து ஹஸி போடவ்லா ஹிமாம்பாடி என்னும் லக்ஷ்மணபிரியில் இருக்கும் இடத்தில் ஶ்ரீஹனுமாருக்கு கோயில் எழுப்ப முடிவாயிற்று.
சிலை கண்டு பிடித்த இடத்திலிருந்து ஹிமாம்பாடிக்கு ஶ்ரீஹனுமாரை ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அலங்காரம் செய்யப்பட்ட யானை மீது சிம்மாசனம் வைத்து அதில் ஶ்ரீஹனுமாரை அமர்த்தி ஊர்வலம் புறப்பட்டது. சாந்த்கஞ் என்னும் இடத்துக்கு வந்த உடன் யானை களைப்பானது மாதரி மெல்ல செல்ல தொடங்கியது. சிறிது நேரம் இளைப்பாரிய பிறகும் யானை நகர மறுத்தது. பின் ஶ்ரீஹனுமாரை சிம்மாசனத்திலிருந்து இறக்கினார்கள். யானை இப்பொழுது நன்றாக நடக்க தொடங்கியது. பேகம் ரூபியாவிற்கு இது ஒரு புதிராக தெரிந்தது. உடனே பழைய ஹனுமான்பாடிக்கு சென்று அங்குள்ள மஹந்த் அவர்களை பார்த்து விவரம் கேட்டறிய பேகம் சென்றார். மஹந்த் ஆழ்ந்து யோசித்துவிட்டு கோமதியின் மறுகரையில் உள்ள லக்ஷ்மணபுரிக்கு செல்ல விரும்பாததோ அல்லது சாந்த்கஞ்ஞிலேயே தான் தங்க விரும்புவதாகவோ ஶ்ரீஹனுமார் விருப்பமாக இதை கொள்ள வேண்டும் என கூறினார்.
பேகம் ரூபியா அவர்கள் ஶ்ரீஹனுமாரை, லக்ஷ்மணபுரியிலுள்ள ஹிமாம்பாடிக்கு எடுத்து செல்ல நினைத்த முடிவை கைவிட்டதுடன், ஶ்ரீஹனுமார் நின்ற சாந்த்கஞ்ஞிலேயே பிரமாண்டமான கோயில் கட்ட முடிவு செய்தார். அரசாங்க செலவில் புதிய மஹந்த்துடன் கோயில் செயல்பட தொடங்கியது. கோயிலுக்கான நிலமும் நன்கொடையாக கொடுக்கப்பட்டது.
இப்படி உருவான பழமையான கோயில் இன்று ’அலிகஞ் ஶ்ரீஹனுமார் மந்திர்’ என்ற பெயரில் மிக பிரபலம். தற்பொழுது டிரஸ்ட் அமைக்கப்பட்டு கோயிலை டிரஸ்ட் நிர்வாகிக்கிறது.
பேகம் அலியா, என்பவர் நவாப் வாஜித் அலி ஷா-வின் சகோதரி. அவர் திடிர் என்று நோய்வாய் பட்டார். பல ஹகீம்களும் வைத்தியர்களும் பார்த்தும் என்ன நோய் என்பதே பிடிபடாமல் இருந்தது. அவரின் உடல் நலனுக்காக பல இடங்களில் பிராத்தனைகள் செய்யப்பட்டன. இருந்தும் நோய் குணமாகவில்லை. சில முதியோர்கள் கூறிய யோசனையின்படி நவாப் வாஜித் அலி ஷா அவர்கள் அலிகஞ் (புதிய) ஶ்ரீஹனுமார் மந்திர் சென்று தனது சகோதரியின் நோய் குணமாக வேண்டிக்கொண்டார். கண்டிறாத நோயால் பீடிக்கப்பட்டிருந்த பேகம் விரைவிலே குணமாகத் தொடங்கினார்.
அலிகஞ் (புதிய) ஶ்ரீஹனுமார் மந்திர் கோயிலில் குடிகொண்டுள்ள ஶ்ரீஹனுமாருக்கு, நவாப் தனது சகோதரியை குணபடுத்தியமைக்கு நன்றி சொல்ல விரும்பினார். மிக பெரிய மேளா ஒன்றினை அவ்வருடம் வரும் ஶ்ரீஹனுமார் ஜயந்தி அன்று ஏற்பாடு செய்து அன்ன தானம் [படா போக்] பெரிய அளவில் வழங்கினார். பாரம்பரியமாக சந்திர மான்ய ஜ்யேஷ்ட மாதத்தில் [மே-ஜூன்] வரும் பௌர்ணமி அன்று ஶ்ரீஹனுமார் ஜெயந்தி இங்கு அனுசரிக்கப் படுகிறது. அம்முறை செவ்வாய் கிழமையாக அது அமைந்தது.
அதன் பிறகு ஜ்யேஷ்ட மாதத்தில் வரும் முதல் செவ்வாய் கிழமை அன்று ’படா மங்கள்’ என்ற பெயரில் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்னும் படா மங்கள் அன்று படா போக் என்னும் அன்னதானம் நடைப்பெறுகிறது. இந்த பழக்கம் புதிய ஶ்ரீஹனுமார் மந்திரில் ஆரம்பித்தாலும் அலிகஞ் பழைய ஶ்ரீஹனுமார் பாடியிலும் இன்று நடைபெறுகிறது. படா மங்கள் வைபவம் மிக சிறப்பாக இங்கு அனுசரிக்கப்படுகிறது.
படா மங்கள் அன்று ஶ்ரீஹனுமாரை இக்கோயிலில் தர்சிக்க வரும் பக்தர்கள் ’சயன தபஸ்’ என்னும் முறையில் தர்சிக்க வருவார்கள். அதாவது நெடுஞ்ஞாணாக பக்தர் பூமியில் நமஸ்கரிப்பார். அவரது இருகரங்களும் தலைக்கு மேல் கும்பிட்டபடி இருக்கும். அந்த இடத்தில் ஒரு செங்கல் வைக்கப்படும். இப்பொழுது பக்தர் எழுந்து அக்கல்லில் இருந்து திரும்பவும் நமஸ்கரிப்பார். இப்படி நமஸ்கரித்த வண்ணம் தன் வீட்டிலிருந்து கோயில் வரை வந்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.
இப்பொழுது சாலையில் வாகனங்கள் போக்குவரத்து அதிகமாகி விட்டதால் இப்பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. முன்பு பக்தர்கள் இவ்விசேட ’படா மங்கள்’ வைபவத்திற்கு சீதாபூர், கான்பூர், ஹர்டோய், பராபங்கி என்று பல இடங்களிலிருந்து வருவார்கள்.
இப்பொழுது லக்னோவிலோ அல்லது சுற்று வட்டாரத்திலோ புதிய ஶ்ரீஹனுமார் கோயில் கட்டினால், அந்த ஹனுமாருக்கான புதிய துணியோ, கதை- வாள் முதலிய ஆயுதமோ, சிந்தூரமோ முதல் முதலில் அலிகஞ் ஶ்ரீஹனுமார் [புதிய, பழைய] கோயில்களில் முறைப்படி ஆசிப்பெற்று எடுத்து செல்வது வழக்கமாக உள்ளது.
அனுபவம்
ஶ்ரீஹனுமார் மூர்த்தி சிறியதே, அவர் குடி கொண்டுள்ள
கோயிலும் சிறியதே. ஆனால் அவர் அருளும் ஆசிகள் நினைக்க முடியாத அளவு பெரியவை. காத்து, அருளும்
அனுமார் அவரை கரம் கூப்பி சரணடைவோம்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு ஏப்ரல் 2015
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020