home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

கரன்ஜி ஆஞ்சநேயர், பஸவன்குடி, பெங்களூரு, கர்நாடகா

ஜீகே கௌசிக்


இலங்கையில் ஆஞ்சநேயர்

பெங்களூரின் கரஞ்சி ஆஞ்சநேய கோயிலில் ஸ்ரீ ராமர் ஶ்ரீ ஆஞ்சநேயர் அடக்கம், பிரம்மசரியம், சமயோசிதம், வீரம், தைரியம் எல்லாவற்றின் உறைவிடம். ஶ்ரீ ராமரின் தூதனாக மாதா ஸீதா தேவியை தேடி இலங்கை செல்கிறார். இலங்கையில் ராவணனின் மைந்தன் இந்திரஜித் எய்த பிரம்மஸ்திரத்திரத்துக்கு கட்டுண்டவர் போல் ஆனார். மீதமிருந்த அரக்கர்கள் ஶ்ரீ ஆஞ்சநேயர், இந்திரஜித் விட்ட பிரம்மாஸ்திரத்தில் கட்டுகுள்ளார் என அறியாமல் கயிறுகளாலும், சங்கலிகளாலும் அவரை கட்டி பிரம்மாஸ்திரத்திலிருந்து விடுவித்து விட்டனர். இருந்தும் கட்டுண்டது போலவே இருந்து ராவணனின் சபையை அடைகிறார் ஆஞ்சநேயர். அவரின் வாலில் நெருப்பிட செய்கிறான் ராவணன். இலங்கையில் பாதி நகரத்தை அந்நெருப்பினால் தீயிட்டுவிட்டு மாதா ஸீதாதேவி கொடுத்த சூடாமணி அடையாளத்துடன் ஶ்ரீராமரிடம் திரும்புகிறார்.

பெங்களூரில் உள்ள ’கரன்ஜி ஆஞ்சநேய ஸ்வாமி இலங்கையிலிருந்து மாதா ஸீதா தேவியை தரிசித்து விட்டு திரும்பும் ஸ்வரூபத்தை காண்பிக்கிறார். தான் தோன்றி ஸ்வரூபம் இவருடையது.

பெங்களூரும் தென் எல்லை கரன்ஜியும்

விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்த பெங்களுரை, சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியாக கெம்பேகௌவுடா – I [1513-1569] ஆண்டு வந்தார். யலங்காவை தலை நகரமாக கொண்ட அவர் தற்போதைய பெங்களுருவை உருவாக்கினார். திட்டமிட்டு கட்டப்பட்ட நகரமாக இதை அவர் உருவாக்கினார். அவர் ஊரின் தென் எல்லையாக மிக பெரிய ஏரியை நிர்ணயித்தார். கன்னட மொழியில் ’கரே’ என்றால் ஏரி என்றும் ’எஞ்சி’ என்றால் மீதம் என்றும் பொருள். தற்போது உள்ள நேஷனல் காலேஜிலிருந்து நந்தி கோயில் வரை அப்பொழுது ஏரியிருந்தது. அதனால் அவ்விடம் முழுவதும் ’கரன்ஜி’ என்று அழைக்கப்பட்டது.

கெம்பேகௌடாவும் கரன்ஜியும்

தனது புதிய தலைநகரின் தென் எல்லையை தீர்மானிக்க வந்த கெம்பேகௌடா அங்கிருந்த குன்றையும் குன்றின் சுயம்பூ ஆஞ்சநேயரையும் கண்டார். கரன்ஜியை தென் எல்லையாக தீர்மானித்தார். [விஜய நகர பாரம்பரியத்தில் ஶ்ரீஆஞ்சநேயர் எல்லை தெய்வம் ஆதலால் இப்படி ஒரு தீர்மானம்.] ஆஞ்சநேயருக்கு கருவறை கட்டி, ப்ராண பிரிதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்தார். தின பூஜை மேற்கொள்ளவும் வகை செய்தார். அபிமன்யூவின் பேரன் ஜனமேஜயன் இங்கு தவம் செய்திருக்கிறார். இக்கோயிலின் சுற்றுவட்டாரத்தில் எங்கும் பாம்புகள் கிடையாது என்பது இதை உருதிச் செய்கிறது.

கரன்ஜி பசவன்குடி ஆனது

தென் எல்லையை குறிக்கும் மண்டபம் ஒன்றை ஆஞ்சநேய ஸ்வாமி கோயில் அருகில் நிருவிய கெம்பேகௌடா அருகாமையில் சிவபெருமானின் வாகனமான ரிஷபருக்கு ஒரு கோயில் கட்டினார். இதனை நந்தி கோயில், ஆங்கிலத்தில் புல் டெம்பிள், கன்னடத்தில் பசவன்குடி என்றும் அழைப்பார்கள். பெங்களூர் விரிவடைந்த பொழுது, கரன்ஜி என்பது நந்தி கோயில் உள்ள இடமாதலால் பசவன்குடி என்றானது. சுற்றுலா பயணிகள் இங்கு நந்தி கோயிலுக்கு அதிகம் வருவார்கள். ஆனால் அருகாமையிலுள்ள கரன்ஜி ஆஞ்சநேயர் கோயில் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் இன்றும் அமைதி காத்து நிற்பது குறிப்பிட தக்கது. அங்கு சொல்லபடும் ஒவ்வொரு மந்திரமும் காதில் ரீங்காரமிட்டு மனதிற்கு சாந்தியை அளிக்கிறது.

கரன்ஜி ஆஞ்சநேயர்

கரன்ஜி ஆஞ்சநேயர் கோயில், பஸவன்குடி, பெங்களூரு, துஜஸ்தம்பம் இருபத்திரெண்டு அடி உயரமுள்ள ஒரே கல்லில் அமைந்திருக்கும் அனுமார் கண்களுக்கு விருந்து. இலங்கையிலிருந்து திரும்பும் வேளை என்பதால் அனுமார் வடக்கு நோக்கி அமைந்துள்ளார். தனது இரு திருகரங்களினால் மாதா சீதாதேவி கொடுத்த சூடாமணியை பக்தியுடன் பிடித்திருப்பது அழகு. அக்ஷயகுமாரன், இந்திரஜித் மற்றும் இதர அரக்கர்களுடன் இலங்கையில் யுத்தம் புரிந்துவிட்டு வரும் தாக்கம் அவரின் கோர பற்கள் நன்றாக வெளியே தெரிவதிலிருந்தும், அவிழ்ந்து அலை மோதும் தலைமுடிலிருந்தும் தெரிகிறது. கச்சம் கட்டியுள்ள அவரது இடையில் பிச்சுவா கத்தி தெரிகிறது. அவரது திரு கரங்களை கங்கணங்கள் அலங்கரிக்கும். அதே வேளையில் அறுபட்ட சங்கலிகளும் தெரிகிறது. அவரது திருபாதத்தை தண்டை அலங்கரிக்கும் அதே சமயம் அறுபட்ட சங்கலிகளும் காணப்படுகிறது. இந்திரஜித்துடன் வந்த மற்ற அரக்கர்களால் இலங்கையில் கட்டப்பட்ட சங்கலியின் மீதியே இவைகள்.

கடாக்ஷம்

தனது கரங்களில் பிடித்திருக்கும் சூடாமணியின் பாதுகாப்பை ஒரு கண் நோக்கியிருந்த போதும், அங்கு வரும் பக்தர்களை ஆசி வழங்குகிறது மற்றொரு கண். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக ஆர்வமுடன் இருக்கும் கண்களில் தெரியும் ஒளி நம்மை ஆட்கொண்டு விடுகிறது.

ஶ்ரீராம் மந்திர்

இறைவனின் ஆணையின் படி ஶ்ரீமுக்தன்ஜிராவ் என்னும் மராட்டிய சேனாதிபதி ஶ்ரீராமருக்கு இங்கு கோயில் கட்டினார். கரன்ஜி ஆஞ்சநேயர் சன்னதியின் வடக்கு சுவரில் உள்ள ஜன்னல் வழியாக அனுமார் நித்தமும் ஶ்ரீலக்ஷ்மணர், ஶ்ரீசீதாதேவியுடன் இருக்கும் ஶ்ரீராமரை தரிசித்த வண்ணம் உள்ளார்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "கரன்ஜி ஆஞ்சநேயர் கோயில், பஸவன்குடி, பெங்களூரு"

 

அனுபவம்
அடுத்த முறை நீங்கள் பெங்களூருக்குச் செல்லும்போது, கரேன்ஜி ஸ்ரீ அஞ்சநேய சுவாமியின் ஆசீர்வாதங்களை பெற்று வாருங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு ஜூன் 2014
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+