புராணத்தின்படி, ஹிரண்யாக்ஷனிடமிருந்து பூமியைக் காப்பாற்ற ஸ்ரீ மகா விஷ்ணு வராஹ மூர்த்தியின் அவதாரத்தை எடுத்தார். பூமியைக் காப்பாற்றிய ஸ்ரீ விஷ்ணு தற்போது திருமலை என்று அழைக்கப்படும் மலையில் ஸ்ரீ வராஹ மூர்த்தியாக தங்கினார். எனவே திருமலை ஆதி வராஹ க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
தற்போதைய கலியுகத்தின் தொடக்கத்தில், ஸ்ரீ மகா விஷ்ணு தனது மனைவியான மகாலட்சுமியைத் தேடி ஸ்ரீ வெங்கடேஸ்வரராக பூமியில் அவதரித்தார். இந்த ரூபத்தில், அவர் ஸ்ரீ வராஹ மூர்த்தியின் சம்மதத்துடன் திருமலையில் குடியேறினார். இந்தச் செயலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பூஜை மற்றும் நைவேத்யம் பிரசாதங்கள் முதலில் ஸ்ரீ வராஹ மூர்த்திக்கும், பின்னர் இந்த க்ஷேத்திரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரருக்கும் சமர்ப்பிக்கப்படுகின்றன.
ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் ஸ்ரீ வராஹ சுவாமி கோயிலுக்கு தெற்கே அமைந்துள்ளது. இந்த இரண்டு கோயில்களையும் ஒட்டி சுவாமி புஷ்கர்ணி என்று அழைக்கப்படும் ஒரு பெரிய கோயில் குளம் உள்ளது. குளம் ஒன்றாகத் தோன்றினாலும், ஸ்ரீ வராஹ சுவாமி கோயிலுக்கு எதிரே உள்ள குளம் ஸ்ரீ வராஹ புஷ்கர்ணி என்றும், தெற்கே உள்ள குளம் ஸ்ரீனிவாச புஷ்கர்ணி என்றும் அழைக்கப்படுகிறது. இதை பக்தர்கள் சுவாமி புஷ்கர்ணி என்றே அழைக்கிறார்கள். இந்த புஷ்கர்ணி கருடனால் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து திருமலைக்கு கொண்டு வரப்பட்டதாக புராணம் கூறுகிறது.
ஸ்ரீ வராஹ சுவாமி கோயில் சுவாமி புஷ்கர்ணியின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு எதிரே, வராஹ புஷ்கர்ணியில் சுதர்சன சக்கரம் காணப்படுகிறது. இந்தப் புஷ்கர்ணியின் வடக்குக் கரையில், வியாச அஹ்னிக மண்டபமும், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கான கிழக்குக் கரை சன்னதியும் காணப்படுகின்றன.
கோயில்களால் சூழப்பட்ட புஷ்கர்ணியுடன், புஷ்கர்ணியின் வடக்குக் கரையில் இந்தப் புனிதக் கோயிலாக 'அஹ்னிக மண்டபம்' எவ்வாறு உருவானது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அஹ்னிக என்ற சொல் பயன்பாட்டின் சூழலுக்கு ஏற்ப வெவ்வேறு அர்த்தங்களைப் பெறுகிறது, பொதுவாக, அதை 'ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய ஒரு மதச் சடங்கு' என்று எடுத்துக் கொள்ளலாம். முதலில் வியாசர், அதாவது ஸ்ரீ வியாசராஜா பற்றிய சில முக்கியமான விவரங்களைப் புதுப்பிப்போம்.
ஸ்ரீ பூர்வதி மடத்தின் மடாதிபதியான ஸ்ரீ பிரம்மண்ய தீர்த்தரின் ஆசியுடன், பன்னூர் தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் அந்தக் குழந்தைக்கு யதிராஜா என்று பெயரிட்டனர். உறிய வயதில் அந்தக் குழந்தைக்கு ஸ்ரீ பிரம்மண்ய தீர்த்தரால் வியாச தீர்த்தர் என்ற தீக்ஷை பெயரில் சந்நியாசம் வழங்கப்பட்டது. ஸ்ரீவியாச தீர்த்தர் அவர்கள் துவைத தத்துவத்தில் மேல் படிப்பினை காஞ்சியிலும், பின்னர் முல்பாகலில் ஸ்ரீ ஸ்ரீபாதராஜ தீர்த்தரிடம் படிப்பதன் மூலம் அவர் தனது துவைத சித்தாந்தத்த அறிவை அதிகப்படுத்திக் கொண்டார். ஸ்ரீ ஸ்ரீபாதராஜ தீர்த்தரின் வழிகாட்டுதலின் கீழ், சாளுவ மன்னர் நரசிம்மர் ஸ்ரீ வியாச தீர்த்தரை கௌரவித்து, அவரை ராஜகுருவாக நியமித்தார். அதன் பின் அவர் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் என்று அழைக்கப்படலானார்.
அவருடைய சுருக்கமான வாழ்க்கை வரலாற்றை எங்கள் வலைப்பக்கத்தில் படிக்கவும்: வியாசராஜ தீர்த்தர்
முல்பாகலில் ஸ்ரீ ஸ்ரீபாதராஜ தீர்த்தரிடம் அவர் கற்றது பற்றி எங்கள் வலைப்பக்கத்தில் படிக்கவும்: ஸ்ரீ ஸ்ரீபாதராஜ தீர்த்தர்
ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமிக்கு பூஜை செய்வதைத் தவிர, ஸ்ரீ மூல கோபால கிருஷ்ணருக்கு தினசரி பூஜை செய்தார். எனவே 'அஹ்னிகா' என்ற சொல் குறிப்பிடுவது போல, அவர் தனது தினசரி வழக்கத்தை சமரசம் செய்யாமல் ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் பூஜையையும் செய்ய புஷ்கர்ணியின் வடக்குக் கரையில் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார்.
அன்றைய காலக்கட்டத்தில், நம் கலாசாரத்தின் மீது நம்பிக்கையை வளர்க, மக்களின் துணிவையும், வீரத்தையும் வெளிக்கொண்டு வர ஸ்ரீ ஹனுமான் வழிபாட்டைப் பரப்புவது அவசியமானது. ஸ்ரீவியாசராஜரை விஜயநகர சாம்ராஜ்யத்தின் சிறந்த மன்னர்களில் ஒருவரான ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் ராஜகுருவாகவும், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 732 கோயில்களைக் கட்டியதற்காகவும் இன்று ஹனுமத் பக்தர்கள் பலர் அறிவார்கள்.
அவர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் வேண்டுகோளின் பேரில், அவர் பன்னிரண்டு ஆண்டுகள் திருமலையில் தங்கியிருந்து ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் பூஜையைச் செய்து வந்தார். ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் பூஜையைச் செய்வதற்காக திருமலையில் வசித்து வந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமிக்கு பூஜை செய்வதைத் தவிர, ஸ்ரீ மூல கோபால கிருஷ்ணரின் தினசரி பூஜையையும் செய்து வந்தார். வாசகர்கள் ஸ்ரீ வியாச தீர்த்தரின் ஸ்ரீ மூல கோபால கிருஷ்ணரின் பூஜையை பற்றி அறிய, ஸ்ரீ ஸ்ரீபாதராஜ தீர்த்த மடம் என்னும் எங்கள் வலைப்பக்கத்தில் படிக்கவும். "அஹ்னிக" என்ற சொல் குறிப்பிடுவது போல, அவர் தனது அன்றாட வழக்கத்தை சமரசம் செய்யாமல் ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் பூஜையை நிறைவேற்ற புஷ்கர்ணியின் வடக்குக் கரையில் தங்கியிருந்தார், எனவே அவ்விடத்திற்கு அஹ்னிக மண்டபம் என்று பெயர் வந்தது.
பக்தர்கள் மண்டபத்தில் ஸ்ரீ பிராணதேவர் [ஆஞ்சநேயர்] பிரதிஷ்டை செய்திருப்பதைக் காணலாம். இன்றும் திருமலை ஸ்ரீ வியாசமடத்தைச் சேர்ந்த ஆசாரி ஸ்ரீ பிராணதேவருக்கு தினசரி பூஜைகளைச் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ முக்யபிராண [ஸ்ரீ ஆஞ்சநேயர்] சிலை முழு விக்ரஹமாக செதுக்கப்பட்டுள்ளது, சுமார் மூன்று அடி உயரமுள்ள ஒரு கல் மேடையில் வைக்கப்பட்டுள்ளது. அபிஷேக நீர் வெளியேறுவதற்கான வழி வகுக்கப்பட்டுள்ளது.
இறைவன் நின்ற நிலையில் கைகளை அஞ்சலி செய்யும் காட்சியளிக்கிறார். இறைவன் தனது தாமரை பாதங்களில் தண்டை மற்றும் நூபூரம் அணிந்துள்ளார். கணுக்கால் மேலே மற்றொரு ஆபரணம் காணப்படுகிறது, மேலும் கச்சம் வைத்து வேட்டி குதிகால் வரை உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாகப் பார்த்தால், பகவான் பஜனையில் நடனமாடத் தயாராக இருப்பது போல் தெரிகிறது.
ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் முல்பாகலில் ஸ்ரீ மூல கோபால கிருஷ்ணரை முதலில் கண்டதை நினைவூட்டும் காட்சி இது.
அஞ்சலிக்கும் கைகளின் மணிக்கட்டில் கங்கணம் மற்றும் மேல் கையில் கேயூரம் ஆகியவற்றைக் காணலாம். 'புஜ வளையம்' என்று அழைக்கப்படும் ஒரு ஆபரணம் அவரது தோள்களை மூடுகிறது. அவரது மார்பில் இரண்டு மாலைகள் காணப்படுகின்றன. முப்புரி நூல் அவரது மார்பின் குறுக்கே காணப்படுகிறது. நீண்ட காதுகளில், அசைந்தாடும் பதக்கத்தைக் காணலாம். அவரது காதுகளுக்கு மேல் ஒரு சங்கிலி போன்ற ஆபரணம் தொங்குகிறது. அவர் அணிந்திருக்கும் கிரீடத்தின் கீழ் கேசத்தின் பெரும்பகுதி மடிந்திருந்தாலும், கேசத்தின் ஒரு பகுதி தோள்பட்டைக்கு அருகில் பாய்கிறது. பின்புறத்தில் இருப்பதால் வால் தெரியவில்லை, இறுதியில் ஒரு வளைவுடன் அவரது பாதங்களுக்கு அருகில் முடிகிறது.
குமிழ் போன்ற கன்னம், நீண்ட தாடை மற்றும் நீண்ட காதுகளுடன் இறைவன் பக்தரை ஈர்க்கிறார். பெரிய பிரகாசமான கண்கள் பக்தர்களின் மீது ஆசீர்வாதங்களைப் பொழிகின்றன.
அனுபவம்
சொல்லிலடங்காது
தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு: மார்ச் 2025