home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

கல்யாண ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், ராத்திரி சத்திரம், ஈரோடு

ஸ்ரீ ஹரி சுந்தர்

கல்யாண ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், ராத்திரி சத்திரம், ஈரோடு

ஈரோடு

ஈரோடு சந்திப்பு ரயில் நிலையம்- உபயம்:விக்கி காமன்ஸ் ஈரோடு இன்று மாவட்டத் தலைமையகம். இந்த நகரம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது மற்றும் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இது கி.பி 850 இல் சேர இராச்சியத்தில் இருந்தது. எனவே இந்த பழங்கால நகரம் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அக்காலத்திலிருந்து பல மாற்றங்களுக்கு உட்பட்டது.

15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஈரோடு விஜயநகரத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது, பின்னர் திருமலை நாயக்கரைத் தொடர்ந்து ஹைதர் மற்றும் திப்பு பின்னர் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. வ.உ.சி பூங்காவில் உள்ள 1628 ஆம் ஆண்டு கால கல்வெட்டு, சந்திரமதி முதலியார் ஒரு ‘சத்திரம்’ கட்டுவதற்கு நிலத்தை தானமாக வழங்கியதாக கூறுகிறது. இவர் சுதந்திரமான ஆட்சியாளர் என்றும் வேறு எந்த அரசருக்கும் கீழ்படிந்தவர் அல்ல என்றும் கருதப்படுகிறது.

விஜயநகரத்தின் செல்வாக்கு

ஈரோடு நீண்ட காலமாக விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்ததால், ஈரோட்டில் விஜயநகரத்தின் கலாச்சார தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில், கொங்குநாடு பகுதி முழுவதும் விஜயநகரப் பேரரசின் கீழ் அல்லது அவர்களின் பிரதிநிதிகளின் கீழ் இருந்தது. இது இங்கு பிரபலாமாக நடைபெறும் ஸ்ரீ ஆஞ்சநேய வழிபாட்டின் மூலம் அறிய முடிகிறது. ஈரோட்டில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பல கோவில்கள் உள்ளன அல்லது தற்போதுள்ள கோவில்களில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தனி சந்நிதி கட்டப்பட்டது. ஸ்ரீ வியாசராஜர் அவர்களே மூலஸ்தானத்தை பிரதிஷ்டை செய்த ஆலயம் ஒன்று இன்றைய ஈரோடு பெரியார் தெருவில் அமைந்துள்ளது.

ராத்திரி சத்திரம்

வியாசதீர்த்தர் வியாசதீர்த்தர் மத்வாச்சாரியாரின் த்வைத தத்துவத்தைப் பின்பற்றுபவர். அவர் 1460 மற்றும் 1539 க்கு இடையில் வாழ்ந்தார். அவர் புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் ராஜ குரு என்றும், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 732 கோயில்களைக் கட்டிய துறவி என்பதும் பலரும் அறிந்ததே. இவர் கொங்கு நாட்டில் பல இடங்களுக்குப் பயணம் செய்து, ஸ்ரீஆஞ்சநேயருக்காக நிறுவிய கோயில்கள் ஏராளம். அவற்றில் ஒன்று ஈரோட்டில் "ராத்திரி சத்திரம்" என்ற இடத்தில் உள்ளது. இந்த ஹனுமத் பக்தரைப் பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்.

சத்திரம் மறுசீரமைப்பு

சத்திரம் என்பது யாத்ரீகர்கள் தங்குவதற்காக மன்னர்கள் அல்லது பிற பரோபகாரர்களால் கட்டப்பட்ட இடம். இந்த இடங்களில் யாத்ரீகர்களுக்கு உணவு வழங்கப்படுவது வழக்கமானது. ஸ்ரீ வியாசராஜர் தனது புனித யாத்திரையின் போது ஸ்ரீ ஆஞ்சநேயரை நிறுவி, தற்போதைய ஈரோட்டில் தங்கியிருந்த இடம் பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்தது என்பதால் 'சத்திரம்' என்று பிரபலாமானது. இங்கு பக்தர்கள் இரவு தங்க வசதியும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த இடம் இந்த வசதிகளை வழங்கியதால், இது யாத்ரீகர்களிடையே "ராத்திரி சத்திரம்" என்று பிரபலமாக அறியப்பட்டது.

"ராத்திரி சத்திரம்" என்ற பெயர் நிலைத்திருந்தது, ஆனால் அன்றைய அரசியல் சூழலின் காரணமாக யாத்திரையின் செயல்பாடுகள் மெதுவாகவே குறைந்தன. பின்பு ஈரோடு மைசூர் உடையார்களின் ஆட்சியின் கீழ் வந்ததும் பல நடவடிக்கைகள் மெதுவாக துவங்கின. புதிய ஆட்சியின் வருகையுடன் மதம் சார்ந்த நடவடிக்கைகளுக்கான ஊக்கம் அதிகரித்தது. இந்நிலையில், 1819 இல் சத்திரம் ஸ்ரீ வியாசராஜர் ஸ்ரீ முக்ய பிராணனை [ஸ்ரீ ஆஞ்சநேயரை] நிறுவிய நிலத்தை கையகப்படுத்தி, மீண்டும் ஒருமுறை சத்திரம் புதுப்பிக்கப்பட்டு ஆர்வத்துடன் செயல்படத் தொடங்கியது.

இன்று ராத்திரி சத்திரம்

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மிருத்திகா பிருந்தாவன கல்வெட்டு,ராத்திரி சத்திரம், ஈரோடு இன்று இது உடுப்பி ஸ்ரீ பெஜாவர் மடத்தின் ஒரு பிரிவாக அனந்த த்ரீர்தா அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது.

ஸ்ரீ வியாசராஜரால் நிறுவப்பட்ட ஸ்ரீ முக்ய பிராணன் [ஆஞ்சநேய ஸ்வாமி] இந்த க்ஷேத்திரத்தில் "கல்யாண ஸ்ரீ ஆஞ்சநேயா" என்று அழைக்கப்படுகிறார்.

05.02.2015 அன்று உடுப்பி ஸ்ரீ பேஜாவர மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ விஸ்வ பிரசன்ன தீர்த்தரு அவர்களால் நிறுவப்பட்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருடன் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மிருத்திகா பிருந்தாவனமும் இங்கு உள்ளது.

இந்த சந்நிதிகள் தவிர ஸ்ரீ பாண்டுரங்க-ருக்மணி சந்நிதியும் உள்ளது.

கல்யாண ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதி

கல்யாண ஸ்ரீ ஆஞ்சநேயரின் சந்நிதியின் முகப்பில் அஷ்ட லட்சுமிகள் செதுக்கப்பட்ட மரத்தால் ஆன முகப்பு-பலகை உள்ளது. பின்னர் முன் மண்டபம், அதைத் தொடர்ந்து கர்ப்பகிரகம். முன் மண்டபத்தில் கல்யாண ஸ்ரீ ஆஞ்சநேயரின் உற்சவ மூர்த்தி உள்ளது. கர்ப்பகிரஹத்தில் அபிஷேகப் பொருட்கள் வெளியேறும் வசதியுடன் சுமார் நான்கு அடி உயர பீடத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். சந்நிதியும், ஸ்ரீஆஞ்சநேயரும் கிழக்கு நோக்கி உள்ளனர்.

கல்யாண ஸ்ரீ ஆஞ்சநேயர்

கல்யாண ஸ்ரீ ஆஞ்சநேயர், ராத்திரி சத்திரம், ஈரோடு முழு விக்ரஹமாகச் செதுக்கப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அஞ்சலி தோரணையில் கைகளால் காணப்படுகிறார். அவர் தனது தாமரை பாதங்களில் தண்டை மற்றும் நுபூரம் இரண்டையும் அணிந்துள்ளார். அவரது வலது முழங்காலுக்கு கீழே ஒரு ஆபரணம் கட்டப்பட்டுள்ளது. அவரது முழங்காலுக்கு அருகில் ஆபரணம் போன்ற ஒரு பெரிய மாலையும் காணப்படுகிறது. கட்சம் பாணியில் கட்டப்பட்டுள்ள வேட்டியானது ஒரு அலங்கார இடுப்பு அணிகலத்தால் பிடிக்கப்பட்டிருக்கிறது. கூப்பிய கரங்களில் கங்கணமும், மேல் கையில் கேயூரமும் காணப்படுகின்றன. 'பூஜ வளையம்' எனப்படும் ஆபரணம் அவரது தோள்களை மூடியுள்ளது. அவரது மார்பில் இரண்டு மாலைகள் காணப்படுகின்றன. மௌஞ்சியுடன் முப்புரி நூல் அவரது மார்பின் குறுக்கே காணப்படுகிறது. குமிழ் போன்ற கன்னங்கள் மற்றும் நீண்ட காதுகள் கொண்ட பிரகாசமான முகம் பக்தரின் கவனத்தை ஈர்க்கிறது. நீண்ட காதுகளில், குண்டலம் தொங்குவதைக் காணலாம். நேர்த்தியாகக் கட்டப்பட்ட கேசம் அவர் மீது கிரீடம் போல தோற்றமளிக்கும் 'கேச பந்தா'வால் பிடிக்கப்படுகிறது. மணியுடன் கூடிய வால் தலைக்கு மேல் காணப்படுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "கல்யாண ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், ஈரோடு"

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் இறைவனை தரிசனம் செய்யும் போது பக்தர் அடையும் அளவற்ற மகிழ்ச்சியை எந்த வார்த்தைகளாலும் வெளிப்படுத்த முடியாது. உண்மையின் இன்பத்தை உணரவும், அவ்வின்பத்தை அனுபவிக்கவும் ஒருவர் ஒரு ராத்திரி [இரவு] சென்று அங்கு தங்க வேண்டும்.       

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு:  டிசம்பர் 2024


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+