தென்னகத்தின் புண்ணிய ஸ்தலங்களைப் பற்றி நினைக்கும் போது, மதுரை நினைவுக்கு வரத் தவறுவதில்லை. இந்த நகரம் சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள் மற்றும் செயல்பாடுகளால் மிகவும் பரபரப்பான நகரமாகும். அதனால் இந்த நகரம் "எப்போதும் தூங்காத நகரம்" என்று பொருள்படும் விதமாக "தூங்கா நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த புராதன நகரம் சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி கோயிலுக்காக பழங்காலத்திலிருந்தே பிரபலம். இக்கோயிலின் நான்கு பெரிய கோபுரங்கள் நன்கு உலக பிரசுத்தம். மெட்ராஸ் அரசாங்கத்திற்கான (அப்போது- இப்போது தமிழ்நாடு) ஒரு சின்னத்தை வடிவமைக்கும் பணியை மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸின் ஸ்ரீ கிருஷ்ணா ராவ்விடம் ஒப்படைத்தனர். அவர் ஸ்ரீ மீனாட்சி கோவிலின் மேற்கு கோபுரத்தை மாதிரியாக தேர்வு செய்து அரசாங்க சின்னத்தினை உருவாக்கினார் என்பதை நினைவு கூறுவோம்.
மதுரையில் எல்லாமே அழகு. இந்த க்ஷேத்திரத்தின் இறைவன் தமிழில் ‘சொக்கநாதன்’ என்றும் சமஸ்கிருதத்தில் ‘சுந்தரேசன்’ என்றும் அழைக்கப்படுகிறார். மதுரைக்கு அருகில் உள்ள மற்றொரு பிரசித்தி பெற்ற கோவிலானது அழகர் கோயில் ஆகும். இங்குள்ள முதன்மைக் கடவுள் தமிழில் “அழகர்” என்றும் சமஸ்கிருதத்தில் “சுந்தரராஜன்” என்றும் அழைக்கப்படுகிறார். அதே போல மதுரையில் கூடல் அழகருக்கு ஒரு கோவில் உள்ளது, அங்கு மூலவர் தமிழில் "கூடல் அழகர்" என்றும் சமஸ்கிருதத்தில் "வியுக சுந்தர்ராஜன்" என்றும் அழைக்கப்படுகிறார். தமிழில் "சொக்கன்" மற்றும் "அழகர்", சமஸ்கிருதத்தில் "சுந்தர்" என்றால் அழகான என்பதை குறிக்கும் சொல்களாகும். க்ஷேத்திரத்தின் அதிபதிகள் அனைவரும் அழகாக இருக்கிறார்கள், அதே போல் க்ஷேத்திரமும் அழகாக இருக்கிறது. அழகர் கோயில் பற்றிய விவரங்களை “தமிழ்நாடு தல்லாகுளம் பெருமாள் கோயில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி” மற்றும் “ஸ்ரீ ஆஞ்சநேயா, பதினெட்டாம்பாடி கருப்ப சுவாமி கோயில், அழகர் கோவில், மதுரை” என்ற எமது இணையதள பக்கங்களில் விவரித்திருந்தோம், விவரங்களுக்கு படிக்கவும்.
இந்த பழமையான கோவில் கிருதுமால் ஆற்றின் கரையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த திருக்கோயிலாகும். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இத்திருக்கோயில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக மதிப்பிடப்படுகிறது. ஆழ்வார்களால் துதி பாடப்பட்ட மூலவர் - அதனால் 108 திவ்ய தேசங்களில் இக்கோயில் ஒன்றாகும். இக்கோயிலின் தெய்வங்கள் கீழ் தளத்தில் அமர்ந்த கோலத்திலும், இரண்டாம் தளத்தில் சாய்ந்த கோலத்திலும், மூன்றாம் மாடியில் நின்ற கோலத்திலும் காட்சி தருகிறார்கள். இது காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் நாம் காணும் காட்சியை நினைவுக்கு கொண்டு வரும்.
பொதுவாக விமானம், கருவறையின் மேல் இருக்கும் சந்நிதி, அதிஷ்டானம் (அடித்தளம்), பாதங்கள் (கட்டமைப்பு), பிரஷ்டானம் (மூட்டு), க்ரீவா (முன்னணி அமைப்பு), ஷிகாரா (கொடுமுடி) மற்றும் ஸ்துபி (மேல் பகுதி). ஆனால் இந்த கோவிலில் மூன்று மாடிகள் இருப்பதால், மூன்று பாதங்கள்; விமானம் எட்டு பகுதிகளைக் கொண்ட கட்டிடக்கலையானதால் "அஷ்டாங்க விமானம்" என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள ஸ்ரீராமர், ஸ்ரீ சீதை, ஸ்ரீ லக்ஷ்மணர் சிலைகள் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதால், இக்கோயிலுக்கு பாண்டிய வம்சத்தினரும் ஆதரவளித்துள்ளனர் என்பது புலனாகிறது. சுல்தான்கள் மற்றும் பிறரின் படையெடுப்பின் போது, இக்கோயிலின் சிலா ரூபங்கள் சேதுபதியின் ஆட்சியின் கீழ் இருந்த மானாமதுரையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
1378 முதல் மதுரை சுல்தானகத்தை ஒழித்து மதுரைக்கு அமைதியை ஏற்படுத்தியவர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஸ்ரீ குமார கம்பண்ணா. கம்பண உடையார் என்று அழைக்கப்படும் குமார கம்பனா, முதல் புக்கவின் விஜயநகரப் படையை வழிநடத்தி, 1378 இல் மதுரை மீது படையெடுத்து, கடைசி மதுரை சுல்தானான அலா-உத்-தின் சிக்கந்தர் ஷாவை தோற்கடித்தார். இவ்வாறு சுல்தானிய ஆட்சி முடிவுக்கு வந்து, விஜயநகரப் பேரரசின் கீழ் பிரதேசங்கள் கொண்டு வரப்பட்டது. இருந்தும் அதிகாரத்திற்கான சண்டை தொடர்ந்தது. ஆனால், விஜயநகரப் பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் ஆட்சியின் போதுதான், மதுரைக்கு நிரந்தர அமைதி ஏற்பட்டது.
மதுரை ஒரு காலத்தில் விஜயநகர பேரரசர்களால் நாயக்கர் என நியமிக்கப்பட்ட வைஸ்ராய் மூலம் ஆட்சி செய்யப்பட்டது. ஒரு கட்டத்தில் மதுரையை ஆள நாயக்கருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது, இதனால் மதுரை நாயக்கர் வம்சம் உருவானது. மதுரை நாயக்கர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் தொடர்ந்தது. வம்சத்தின் பல நாயக்கர்களில் திருமலை நாயக்கர் மற்றும் ராணி மங்கம்மா ஆட்சி காலம் நாயக்கர்களின் பொற்காலமாக கருதப்படுகிறது. நிர்வாக ஓட்டம் மற்றும் மக்கள் நலனுக்கு அதிக முன்னுரிமை அளித்து, நாயக்கரின் ஆட்சி மதுரை ஒரு நலன்புரி மாநிலமாக இருந்தது. கோயில்கள் புதுப்பிக்கப்பட்டன, இருந்த கோயில்களுடன் புதிய கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டன, அவர்களின் காலத்தில் கலை மற்றும் கலாச்சாரம் ஏற்றம் பெற்றது. மக்கள் மகிழ்ச்சியடைந்தனர், யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருகியது, வர்த்தகம் செழித்தது. மதுரையில் இவ்வாறு தழைத்தோங்கிய வணிகங்களில் ஒன்று ஜவுளி வணிகம் ஆகும்.
கிமு 300க்கு முற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ள சங்க காலத்தில் மதுரை அருவாய் வாணிகன் இளவேட்டனார் என்றொரு புலவர் வாழ்ந்தாக குறிபிட்டுள்ளது. ஜவுளித் துணிகளை துண்டு துண்டாக விற்கும் வியாபாரிகள் ‘அருவை வணிகன்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இது பழங்காலத்திலிருந்தே இங்கு நெசவுத் தொழிலே முக்கியத் தொழிலாக இருந்ததைக் காட்டுகிறது. நூற்பு மற்றும் நெசவு ஆகியவை பரவலாக நடைமுறையில் உள்ள கைவினைகளாக இருந்தன.
கிபி 1000 மற்றும் 1027 க்கு இடையில் கஜனி முகமது கதியவாரில் உள்ள சோம்நாத் பகுதியை பதினேழு முறை தாக்கியதன் விளைவாக சௌராஷ்டிரா பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் சௌராஷ்டிரர்கள். இப்பகுதியின் செல்வங்கள் அனைத்தும் சூறையாடப்பட்டதால், மக்கள் வேலை தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயரத் தொடங்கினர். எந்த ராஜ்ஜியம் [ஆட்சி] அவர்களுக்கு ஆதரவாக இருந்தார்களோ அந்த நாட்டிற்கு செல்வதில் அவர்கள் பாதுகாப்பாக உணர்ந்தனர். அதன் விளைவாக அவர்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்து பயணம் செய்தனர்.
சௌராஷ்டிரர்கள் தங்கள் பகுதியில் இருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பயணத்தைத் தொடங்கியவர்கள், தங்கள் வாழ்க்கையில் பெரும் கொந்தளிப்பை சந்திது, அனுபவித்தனால், தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஒரு தொழிலை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் பலர் நுண்ணிய நூல் மற்றும் துணிக்கு சாயமிடும் கலையில் சிறந்தவர்களாக இருந்ததால் நெசவு தொழிலை தேர்ந்தெடுத்திக் கொண்டனர். நெசவு மற்றும் பட்டு நூல் மற்றும் மெல்லிய பருத்தி நூல் ஆகியவற்றை கொண்டு நெசவு செய்கிறார்கள். இதனால் இந்த சௌராஷ்ர மக்கள் நெசவு சமூகம் என்று அழைக்கப்பட்டனர், இன்று அவர்கள் "பட்டு நூல் மக்கள்" என்று பொருள்படும் "பட்நூல்காரர்" என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் கொண்டிருந்த சிறந்த கைவினைத்திறன் காரணமாக, பல அரச குடும்பத்தார் அவர்களுக்கு ஆதரவளித்தனர். இப்படி மதுரை ஆட்சியாளர்களும் இவர்களுக்கு ஆதரவைக் கண்டனர். இதன் காரணமாக சௌராஷ்ரா சமூகத்தினர் அதிக அளவில் மதுரையில் குடியேறினர். காலம் கடந்த பிறகும் அவர்கள் தங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் பேணுகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது. அவர்கள் குடியேறிய பல்வேறு இடங்களிலும் மற்றும் மதுரையிலும் பல கோவில்களை பராமரித்து வருகின்றனர்.
மதுரையில் அவர்களால் பராமரிக்கப்படும் கோயில்களில் ஒன்று கூடல் அழகர் கோயிலுக்கு அருகில் உள்ள அனுமன் கோயிலாகும்.
கூடல் அழகர் கோயிலுக்கு அருகில் வசிக்கும் சௌராஷ்டிர குடும்பங்கள் கூடல் அழகர் கோயில் தெற்கு மாடத் தெருவில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு கோயிலைப் பராமரித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் சௌராஷ்டிர ஆஞ்சநேய ஆலய பரிபாலன சபா என்று ஒரு சபையை உருவாக்கினர். சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, விளாங்குடி அருகே வைகை ஆற்றங்கரையில் ஆஞ்சநேய விக்ரஹம் ஒன்று இங்கு வசிக்கும் ஒரு குடும்பத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. சௌராஷ்டிர சமூகத்தினர் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு கோயில் கட்ட தீர்மானித்த போது, பரிசீலனைகளுக்குப் பிறகு தற்போதுள்ள இடம் தேர்ந்தெடுத்தனர். அன்றிலிருந்து இந்தப் பகுதியைச் சேர்ந்த சௌராஷ்டிரர்கள் இந்தக் கோயிலைப் பராமரித்து வருகிறார்கள்.
கூடல் அழகர் கோயிலின் தெற்கு மாட வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் மற்றும் முக்கிய தெய்வம் கிழக்கு நோக்கி உள்ளது. பக்தர்கள் தொலைவில் இருந்தே இறைவனை தரிசனம் செய்யலாம். கர்ப்பகிரஹத்திற்கு எதிரே ஒரு சிறிய மண்டபம் உள்ளது. அனைத்தும் சற்று உயரமாக இருக்கிறது. கர்ப்பகிரஹத்தில் இறைவன் ஒரு உயரமான மேடையிலிருந்து சேவை சாதிக்கிறார்.
இக்கோவில் சனிக்கிழமையன்று அதிக பக்தர்களை ஈர்க்கிறது. இந்த கோவிலில் அனைத்து முக்கிய திருவிழாக்களும் குறிப்பாக ஸ்ரீ ராம நவமி மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
கருங்கற்களால் ஆன இறைவனின் சிலை நான்கு அடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் உள்ளது.
இறைவன் வடக்கு நோக்கி நடக்கத் தயாராக இருப்பவராக காட்சியளிக்கிறர். இறைவனின் தாமரை திருப்பாதங்களில் தண்டை மற்றும் நூபூரம் காணப்படுகிறது. அவர் வேட்டியை கச்சம் வைத்து அணிந்துள்ளார். அதன் மேல் "உதரபந்தா" எனப்படும் அலங்கார இடுப்பு துணி காணமுடிகிறது. மேல் கையில் கேயூரம், மணிக்கட்டில் கங்கனம் காணப்படுகின்றது. வலது திருக்கரத்தை உயர்த்தி, அபய முத்திரை மூலம் பயமின்மைக்கு அருள் புரிகிறார். இடது திருக்கரம் இடது தொடையில் தங்கி சௌகந்திகா மலரைப் பிடித்திருக்கிறது. பிரபுவின் இடது தோளுக்கு சற்று மேலே அம்மலர் காணப்படுகிறது. மார்பில் மூன்று மாலைகள் [ஜெபமாலைகள்] மற்றும் முப்புரிநூல் காணப்படுகின்றன. அனுமாரின் வால் தலை வரை உயர்ந்து இடது பக்கத்தில் முடிவடைகிறது. பகவான் தனது பிரகாசமான கண்களால் நேராகப் பார்க்கிறார், இறைவனின் கடாக்ஷம் நேரடியாக பக்தர் மீது விழுவது விசேஷம்.
அனுபவம்
சன்மார்க்க வாழ்க்கையை நடத்தும் போது நாம் எதிர்கொள்ளும் அனைத்து
புதிர்களுக்கும் சிறந்த தீர்வை அடைய இந்த க்ஷேத்திரத்தின் இறைவன் தனது கடாக்ஷத்தால் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.
தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு: அக்டோபர் 2024