இன்று புனே இந்தியாவின் சிறந்த நகரங்களில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவின் கலாச்சார தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது. மனிதர்கள் வசிக்கும் இடம் மற்றும் குடியிருப்புகள் எப்போதும் ஒரு நதியை ஒட்டியே பூக்கும் என்பது பாரம்பரியம். பழங்காலத்திலிருந்தே, முத்தா ஆற்றின் கரையில் ஒரு குடியிருப்பு இருந்தது. முத்தா நதி முலா நதியுடன் சங்கமிக்கிக்கும் இடத்தில் முத்தாவின் வலது கரையில் உள்ள குடியேற்றம் இன்றைய புனேவின் பூர்வீகம் அல்லது தொடக்கமாகும். இந்தக் குடியிருப்புப் பகுதி தற்போது கசபே என்று அழைக்கப்படுகிறது.
1630 ஆம் ஆண்டு அடில் ஷாஹி படைக்கு தலைமை தாங்கிய முரர் ஜக்தேவால் முற்கால கசாபே முற்றிலுமாக அழிக்கப்பட்டது. சிவாஜி மஹாராஜ் காலத்தில் தான் இந்த நகரம் கசபே புனே என மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. கசபே கணபதி கோயில் மற்றும் லால் மஹால் (அவரது தாயாருக்காகக் கட்டப்பட்டது) ஆகியவற்றுடன் புனே மீண்டும் வசிக்கத் தகுதியான பகுதியாக மாற்றப்பட்டது.
ஷாஹு ராஜேவின் ஆட்சியின் போது, அவர் புனே மாகாணத்தை பேஷ்வாக்களுக்கு வழங்கினார். பேஷ்வாக்கள் காலத்தில், புனேவின் வளர்ச்சி தொடங்கியது. பாஜிராவ் பேஷ்வா தனது நிர்வாகத்தின் தலைமையகமாக புனேவில் குடியேறியவுடன் புனேவின் உண்மையான நகரமயமாக்கல் மற்றும் வளர்ச்சி தொடங்கியது. புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டு பேட் [பேட்டை] என்று அழைக்கப்பட்டன. பேட் அடிப்படையில் ஒரு வணிக இடம். [பெங்களூரு கூட பல ’பேட்’களை கொண்டு தான் வளர்ச்சியை கண்டது.] புனேவில் புதிய பேட் அதை உருவாக்கியவரின் பெயரால் அல்லது வாரத்தின் ஒரு நாளின் பெயரால் அழைக்கப்பட்டது.
மக்களுக்கு வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கத்திற்காக சில காலம் பழைய பேட்கள் பிரிக்கப்பட்டு, புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டு புதிய பெயர்களுடன் மறுசீரமைக்கப்பட்டது. ஸ்ரீ மாருதிக்கு கோவில் அமைத்து கிராமங்களின் எல்லைகள் குறிப்பிடுவது உள்ளூர் வழக்கம். இந்த பாரம்பரியம் ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களிலும் முக்கிய/பரவலாக காணப்படுகிறது. எனவே புனேவில் புதிய பேட் உருவாகும் போதெல்லாம் எல்லையில் ஒரு மாருதி கோயில் நிறுவப்படுவது வழக்கமானது. புனேயில் மாருதிக்கு பல கோவில்களை இன்று நாம் காண இதுவும் ஒரு காரணமாகும்.
சதாசிவ் பேட் கஸ்பாவின் தெற்கே அமைந்துள்ளது, இது அப்போதைய புனேவின் மையமாக இருந்தது. மூன்றாவது பானிபட் யுத்தத்தில் சாகசம் பல புரிந்த வீரர் தளபதி ஸ்ரீ சதாசிவராவ் பேஷ்வா ஆவார். அவரை கௌரவ படுத்தும் வகையில் 1769 இல், ஸ்ரீ மாதவ்ராவ் பேஷ்வா தென்மேற்கு புத்வார் பேட்டில் சில பகுதிகளை எடுத்து சதாசிவ் பேட் உருவாக்கினார்.
ஆரம்பத்தில் மக்கள் இங்கு வந்து குடியேறத் தயங்கியனர், பிறகு சதாசிவ் பேட் இன்று புனே நகரத்தின் மிகவும் வசதியான பகுதியாக மாறியிருக்கிறது. இன்றைய சதாசிவ் பேட்டின் எல்லைகள் - நாக்நாத் பார், ஷானி பார், பிகார்தாஸ் மாருதி மற்றும் பவன் மாருதி ஆகிய இடங்களின் மூலம் அறியப்படுகிறது.
சரஃப் என்பது வங்கி மற்றும் பணக்கடன் வழங்குவதில் ஈடுபடுபவர்களுக்கான குடும்பப்பெயர். குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீ பிகார்தாஸ் சரஃப் புனே வந்து சதாசிவ பேட்-இல் குடியிருந்தார். தர்ம இயல்புடைய அவர் சாதுக்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் அளித்து வந்தார். ஸ்ரீ மாருதியின் பக்தரான அவர், அவர் வசிப்பிடத்தை ஒட்டிய தோட்டத்தில் ஸ்ரீ மாருதிக்கு ஒரு திருக்கோயில் எழுப்பினார். சுற்று வட்டார மக்களும் ஸ்ரீ மாருதிக்கு பூஜை செய்து வந்தனர். பின்னர், இந்த மாருதியின் நிறுவனர் ஸ்ரீ பிகார்தாஸ் சரஃப் என்பதால் மக்கள் இந்த மாருதிக்கு "பிகார்தாஸ் மாருதி" என்று பெயரிட்டனர். நாளடைவில் இத்திருகோயிலையும் சமயப் பணிகளையும் கவனித்துக்கொள்ள ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணதாஸ் மடிவாலே அறங்காவலராக இருந்த காலத்தில் ஒரு தர்மசாலையைக் கட்டினார். அறக்கட்டளையால் வேத பாடசாலையும் நடத்தப்படுகிறது. தற்போது ஸ்ரீ உபேந்திரா மடிவாலே மற்றும் ஸ்ரீ ஹேமந்த் மடிவாலே ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர்.
இந்த திருக்கோயில் சதாசிவ் பேட்டில் உள்ள மஹாராணா பிரதாப் உத்யன் [தோட்டம்] அருகில் அமைந்துள்ளது. தோட்டத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்து மடிவாலே காலனிக்கு செல்லும் சிறிய பாதையில் நுழைய வேண்டும். பாதையில் நுழையும் போது கோயில் தெரியும். ஸ்ரீ மாருதி மந்திர் தெற்கு நோக்கியும், ஸ்ரீ ராம் மந்திர் வடக்கு நோக்கியும் உள்ளது.
ஒரு மண்டபத்தின் நடுவில் ஸ்ரீராமர் சந்நிதி உள்ளது. சந்நிதி அந்தராலாவும் கர்ப்பகிரஹமும் கொண்டது. கர்ப்பகிரஹத்தில், ஸ்ரீ ராமர், ஸ்ரீ சீதை, ஸ்ரீ லக்ஷ்மணர் மற்றும் ஸ்ரீ மாருதி ஆகியோர் உயரமான பீடத்தில் உள்ளனர். ஸ்ரீ மாருதி ஸ்ரீ ராம பரிவாரத்தை நோக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இறைவனின் விக்ரஹங்கள் தூய வெள்ளை பளிங்குக் கற்களால் ஆனவை. ஸ்ரீ சமர்த் ராம்தாஸ், அக்கல்கோட் ஸ்ரீ சமர்த் மற்றும் ஸ்ரீ தத்தாத்ரேயா ஆகியோரின் படங்களும் காணப்படுகின்றன.
ஸ்ரீ மாருதி மந்திர் ஸ்ரீராம் மந்திருக்கு எதிரே உள்ளது. மந்திர் ஒரு பெரிய மண்டபத்தையும், வடக்குப் பகுதியில் கர்ப்பகிரஹம் மற்றும் அந்தராலாவும் கொண்டுள்ளது. ஸ்ரீராமர் பாதத்தின் அருகில் உள்ள பிரதான தெய்வத்தின் பிரமாண்டமான திருவுருவம் பக்தர்களை வரவேற்கிறது. ஸ்ரீராம பாதமும் கூர்மமும் பிரதான தெய்வத்தை நோக்கியவாறு காணப்படுகின்றன. பிரதான சந்நிதி அந்தராளாவையும் கர்ப்பகிரஹத்தையும் கொண்டது. அந்தராலா கண்ணாடியால் மூடப்பட்டிருக்கிறது. கர்ப்பகிரஹத்திற்கு கதவுகள் இல்லை. கண்ணாடி வழியாக ஸ்ரீ மாருதியை தரிசனம் செய்யலாம். கர்ப்பகிரஹத்தில் கிழக்கு நோக்கிய ஸ்ரீ கணேஷ் மற்றும் ஸ்ரீ சங்கரர் காணப்படுகின்றனர். பக்தர்கள் தெய்வங்களை வலம் செய்ய ஏதுவாக கர்ப்பகிரஹத்தை சுற்றி பரந்த பாதை உள்ளது.
இறைவனின் முதல் தரிசனமே பக்தனை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த க்ஷேத்திரத்தின் இறைவன் மருத்துவ மூலிகைகள் கொண்ட மலையை கொண்டு வரும் "சஞ்சீவிராயனாக" காட்சியளிக்கிறார். மூர்த்தம் புடைப்பு சிலை வடிவில் உள்ளது.
பிரபு நடந்து செல்லும் பாணியில் காட்சியளிக்கிறார். அவருடைய இரண்டு தாமரை பாதங்களையும் தண்டை அலங்கரிக்கிறது. அவரது வலது கால் தரையில் உறுதியாக இருக்கும் போது, சற்று உயர்த்தப்பட்ட இடது கால் ஒரு அரக்கனை மிதித்த வண்ணம் காணப்படுகிறது. இறைவன் கச்சம் வைத்து வேட்டி அணிந்துள்ளார். அவர் தனது மார்பினை ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன. அவரது இரு கைகளிலும் மேல் கரத்தில் கேயுரமும், முன் கரத்தில் கங்கணமும் அணிவிக்கப்பட்டுள்ளன. அவரது இடது கையில் இறைவன் மருந்து மலையை ஏந்தியிருக்கிறார். அவரது வலது கை அவரது பரந்த மார்பில் வைத்துள்ளார். பிரபுவின் உயர்ந்த வால் அவரது வலது தோளுக்கு மேல் உள்ளது. சீவி முடிந்த அவரது கேசத்தை அலங்கார தலைக்கவசத்தால் மூடியுள்ளது. அவரது முகத்தின் லேசான சாய்வு வசீகரமான முகத்திற்கு மேலும் வசீகரத்தை சேர்க்கிறது. கம்பீரமான முகத்திற்கு அவரது அபரிமிதமான அழகு கண்கள் கம்பீரத்தை கூட்டுகிறது. ஸ்ரீ மாருதியின் மிளிரும் கண்கள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறது.
அனுபவம்
மெய்சிலிர்க்க வைக்கும் இந்த க்ஷேத்திரத்தின் இறைவனின் தரிசனம் நம்
இதயத்தில் உள்ள அனைத்து தீய எண்ணங்களையும் அகற்றி, நம் எண்ணங்களைத் தூய்மைப்படுத்தி, நம்மைச் சரியான
பாதையில் அழைத்துச் செல்வது உறுதி.
தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு: செப்டம்பர் 2024