home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

மகர துவாரம், வீர மங்கள அனுமார் திருக்கோயில், நல்லத்தூர், திருத்தணி, தமிழ்நாடு

வீர மங்கள அனுமார் திருக்கோயில், நல்லத்தூர், திருத்தணி, தமிழ்நாடு

ஜீ.கே.கௌசிக்


வியாச ராஜா

ஸ்ரீ வியாசராயர் தென் இந்தியாவில் நலிந்து கொண்டிருந்த சனாதன தர்மத்தை தழைக்க வைத்தது விஜயநகர சாம்ராஜ்யம். விஜயநகர அரசு சாளுவர்கள் ஆளுகையில் இருந்த பொழுதும், பின் துளுவர்கள் ஆளுகையின் கீழ் இருந்த பொழுதும், அரசின் ஆன்மீக குருவாக இருந்தவர் ஸ்ரீ வியாசராயர். இவர், ஸ்ரீ மாத்வாசாரியாரின் த்வைத சம்பிரதாயத்தை பின்பற்றுபவர். விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்ரீ கிருஷ்ணதேவர் ஆளுகையில், அரசருக்கு மரணம் சம்பவிக்கும் என்று ஜாதக குறிப்பு கூறுவதாக இராஜ ஜோதிடர்கள் கணித்தார்கள். ஸ்ரீ வியாச ராயர் அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் இடத்தில் அரியாணை ஏறி அரசனானார். அரசராக இருந்த அவருக்கு வந்த மரணத்தை தனது காவி மேல்துண்டினால் தடுத்து நிறுத்தினார். பின் அரியாணையை ஸ்ரீ கிருஷ்ணதேவராயரிடமே கொடுத்தார். அந்நாள் முதல் ஸ்ரீவியாசராயர், ஸ்ரீவியாசராஜா என்று அழைக்கப்பட்டார்.

சனாதன தர்மம் தழைக்க உதவிய ஸ்ரீவியாசராஜா பெரும் அனுமார் பக்தர். அவர் 732 அனுமார் விக்ரஹங்கள் இம்மகனீயரால் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அப்படி அவரின் திருகரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது தான் ஸ்ரீ வீர மங்கள ஆஞ்சநேய ஸ்வாமி.

நல்லத்தூர்

நல்லத்தூர் என்னும் புண்ய பூமி திருத்தணி தாலுகா திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ளது. குசஸ்ஸதலி நதி கரையில் மிக அருமையான சூழலில் பசுமையான கிராமம் இது. ஒரு முறை ஸ்ரீவியாசராஜா அவர்கள் திருப்பதியில் ஸ்ரீவேங்கடேசருக்கு பணிவிடை செய்து, தனது சாதுர்மாச பூஜையை அங்கு நடத்த நினைத்தார். ஆனால் அவர் திருத்தணியை தாண்டி குசஸ்ஸதலி கரைக்கு வந்த போது, ஆற்றில் வெள்ளப் பெருக்கு மிக அதிகமாக இருந்தமையால் திருப்பதிக்கு போக முடியாத நிலை உண்டாயிற்று.

ஶ்ரீயோக ஆஞ்சநேயர், நல்லத்தூர், திருத்தணி ஆண்டவனின் சித்தம் இது என்று உணர்ந்த ஸ்ரீவியாசராஜர் திருப்பதியில் பிரதிஷ்டைச் செய்ய தன்னுடன் எடுத்து வந்த அனுமாரின் சிலையினை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். தனது சாதுர்மாச பூஜையை குசஸ்ஸ்தலி நதி கரையில் அனுசரித்தார்.

அனுமாரின் புனர்உத்தாரன சாகசம்

காலப்போக்கில் குசஸ்ஸ்தலி நதி கரையில் அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனுமார் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார். சுமார் முப்பது வருடங்கள் முன் சென்னையில் பிரபல ஹோட்டல் அதிபரின் கனவில் அனுமார் வந்து மேற்கூறிய சம்பவத்தை கோடி காட்டினார். அவர் ஒன்றும் செய்யாதது குறித்து மறுமுறை கூறினார். பின் இது தனக்கு அனுமாரின் அருளால் கிடைத்த பிரசாதம் என்பதை உணர்ந்த அவர், அடையாளங்களை நினைவு கூர்ந்து, குசஸ்ஸ்தலி நதிகரையில் தேடி அலசி அனுமார் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தார். அனுமாருக்கு அவர் கிடைத்த இடத்திலேயே பெரிய கோயிலும் கட்டினார்.

இன்றைய கோயில்

இன்று மிக பசுமையான சூழலில், குசஸ்ஸ்தலி நதிகரையில் அமைந்துள்ளது இந்த கோயில். ஸ்ரீஅனுமாருக்கு என்று இருக்கும் தனிக்கோயில்களில் தனிப் பெருமையுடன் விளங்குகிறது இக்கோயில். திருத்தணியிலிருந்து நதிமீது அமைந்துள்ள பாலத்தை தாண்டுவதற்கு முன் இடது புறமாக இருக்கிறது கோயில் வளாகம். பெரியதாக உள்ள யோக ஆஞ்சநேயர் சிலை நம்மை வரவேற்கிறது. பின்புறம் உள்ள தென்னை மரத் தோப்பின் தென்னம் கீற்றுகளிடையே உண்டாகும் சங்கீதம் நம்மை வருடி வரவேற்கிறது. அருகில் தெரியும் நுழைவு வளைவு கோயிலுக்கு வழிகாட்டுகிறது. வலது புறம் ஆற்றங்கரையும் இடது புறம் தென்னைத் தோப்பும் நமது மனதினை இதமாக்குகிறது.

கோயில் வளாகம்

ஶ்ரீ வீர மங்கள ஆஞ்சநேயர், நல்லத்தூர், திருத்தணி ஸ்ரீவீர மங்கள ஆஞ்சநேயர், ஸ்ரீராமர், ஸ்ரீவினாயகர், நவகிரஹங்கள் அனைவருக்கும் தனி தனி சன்னதி உள்ளது. ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சன்னதியின் மேலுள்ள விமானத்தின் தெற்கு முகத்தில் சங்கு, சக்ரம், யோக மாலை, அபயம் கூடிய நான்கு கரங்களுடன் யோக ஆஞ்சநேயரும், கூப்பிய கரங்களுடன் உள்ள பக்த ஆஞ்சநேயர் கிழக்கு முகத்திலும், மேற்கு முகத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயரும், வடக்கு முகத்தில் வாலும் வலக்கரமும் ஓங்கிய வீர ஆஞ்சநேயரும் அலங்கரிக்கிறார்கள்.

ஸ்ரீசீதா தேவி, லக்ஷ்மணர், ஆஞ்சநேயருடன் கூடிய ஸ்ரீராமர் சன்னதியை இரண்டு அடுக்கு விமானம் அலங்கரிக்கிறது. ஸ்ரீவினாயகரின் சன்னதி அருகில் உள்ளது. தங்கள் வாஹனங்களுடன் கூடிய நவகிரஹ சன்னதி தனியாக உள்ளது.

இவ்வருமையான கோயிலுக்கு ஜூலை ஏழாம் நாள் 1998-ம் வருடம் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. கோயிலில் பூஜை பஞ்சரத்ன ஆகமமுறைப்படி நடக்கிறது.

ஸ்ரீவீர மங்கள ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயரின் திருவடிகளை நூபுரம் [பாதங்களின் மேல் பதிந்துள்ளது] தண்டை [கனுகால்களில் இருப்பது] இரண்டும் அலங்கரிக்கின்றன. உறுதியான தொடைகளை கச்சம் கவ்வி பிடித்துள்ளது. இடுப்பில் உத்ரீயம் என்னும் மேல்துண்டை கட்டியுள்ளார். சிறிய ’பிச்வா’ கத்தியினை இடுப்பில் வைத்துள்ளார். தன்னுடைய நேர்த்தியான பார்வையால் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் ஸ்ரீவீர மங்கள ஆஞ்சநேயரை நிச்சயம் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டும், வீரத்தையும் மங்களங்களையும் அள்ளி வர வேண்டும்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " "வீர மங்கள அனுமார் திருக்கோயில், நல்லத்தூர், திருத்தணி"

 

அனுபவம்
ஶ்ரீ வெங்கடேஸ்வரரின் விருப்பப்படி ஸ்ரீ வியாசராயர் ஸ்ரீ வியாசபூஜை நிகழ்த்திய குசஸ்தலையின் கரையில் ஸ்ரீ பாலா ஆஞ்சநேயரை தரிசனம் செய்யுங்கள். ஸ்ரீ வியாசர், ஸ்ரீ வெங்கடேஸ்வரர், ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ வியாசராயர் ஆகியோரின் ஆசீகளை பெற்று செழிப்புடன் வாழுங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு ஜனவரி 2014
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+