மைசூர் உடையார் அரண்மனை இந்தியாவின் மிக அழகான அரண்மனைகளில் ஒன்றாகும். இந்தியாவில் தாஜ்மஹாலுக்குப் பிறகு அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தளம் இந்த அரண்மனைதான். அரண்மனையின் அற்புதமான அமைப்பு, தூரத்திலிருந்தே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும். இந்த சுற்றுலா தலமானது ஆண்டுதோறும் அறுபது லட்சம் பார்வையாளர்களை ஈர்க்கிறது. 1399க்கும் 1947க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த ராஜ்ஜியத்தை தடையின்றி ஆண்ட பாரதத்தின் ஒரே வம்சம் உடையார் வம்சம் மட்டுமே. உடையார்களைப் போலவே அவர்கள் வாழும் அரண்மனையும் நீண்ட கால சுவாரசியமான மற்றும் சிறந்த வரலாற்றைக் கொண்டது.
14 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளர்களாக இருந்த உடையார்கள் மைசூரைக் கைப்பற்றியபோது, அவர்கள் ஒரு மண் கோட்டையையும், தங்கள் அரண்மனையையும் மண் கோட்டைக்குள் [பழைய கோட்டை] கட்டினார்கள். இந்த அரண்மனை பல முறை புதுப்பிக்கப்பட்டது.
தற்போது பழைய அரண்மனை அல்லது மர அரண்மனை என்று அழைக்கப்படும் அசல் அரண்மனை 1896 ஆம் ஆண்டு இளவரசி ஜெயலக்ஷ்மி அம்மன்னியின் திருமணத்தின் போதோ அல்லது தசரா பண்டிகையின் போது ஏற்பட்ட விபத்தினாலோ நெருப்புக்கு இரையானது.
மகாராஜா நான்காம் கிருஷ்ணராஜ உடையார் மற்றும் அவரது தாயார் மகாராணி கெம்பனஞ்சம்மன்னி தேவி அடுத்த ஆண்டு புதிய அரண்மனையைக் கட்டும் பணியை மேற்கொண்டனர். புதிய அரண்மனை 1912 இல் கட்டி முடிக்கப்பட்டது. இன்று நாம் பார்க்கும் அரண்மனை அம்பா விலாஸ் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக 1799 ஆம் ஆண்டில் தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டினத்திலிருந்து மைசூருக்கு மாற்றப்பட்டது. மூன்றாம் கிருஷ்ணராஜா ராஜாவாகவும், அவருக்கு நிர்வாகத்தில் உதவுவதற்காக திவான் பூர்ணய்யா நியமிக்கப்பட்டார். அப்போது மைசூரில் இருந்த கோட்டையும், அரண்மனையும் சிதிலமடைந்திருந்தன. வெலிங்டன் டியூக் தலைமையிலான ஐந்து வயது மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையாரின் முடிசூட்டு விழா லட்சுமிரமணசுவாமி கோவிலில் நடந்தது என்பதை கற்பனை செய்து பாருங்கள். உடையார்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டபோது அரண்மனை வளாகத்தின் நிலை இதுதான்.
1804 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட கோட்டை-அரண்மனை வளாகத்தில் திவான் பூர்ணய்யாவின் திறமையான உதவியுடன் மூன்றாம் கிருஷ்ணராஜ உடையாரின் பாட்டி மகாராணி லட்சுமி அம்மனி தேவி அரண்மனையை கட்டினார். இடைப்பட்ட காலத்தில் அரச குடும்பத்தினர் தங்குவதற்கு பரகால மடத்திற்கு அருகில் அரண்மனை ஒன்று கட்டப்பட்டது. ஜக்மோகன் அரண்மனை என்று அழைக்கப்படும் இவ்வரண்மனை தற்போதைய கோட்டை-அரண்மனை வளாகத்திற்கு மேற்கே ஐந்து நிமிட நடை தூரத்தில் இது அமைந்துள்ளது. அவர்கள் ஆரம்பத்தில் ஒரு அலங்கரிக்கப்பட்ட மர அரண்மனையாக கட்டினார்கல்.
கோட்டை அரண்மனை வளாகத்தில் உள்ள அரண்மனை 1896 இல் எரிந்த பிறகு, உடையார் அரச குடும்பம் மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் கட்டிய ஜெகன்மோகன் அரண்மனைக்கு குடிபெயர்ந்தது. 1912 இல் புதிய அரண்மனை கட்டி முடிக்கப்படும் வரை அரச குடும்பத்தார் ஜக்மோகன் அரண்மனையில் தங்கியிருந்தனர்.
நல்வாடி கிருஷ்ணராஜ உடையார் என அழைக்கப்படும் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் [கன்னடத்தில் நல்வாடி என்றால் நான்காவது] உரிய வயதடையாத இளவல் என்பதால் அவரது தாயார் வாணி விலாச சன்னிதானா என அழைக்கப்படும் மகாராணி கெம்பனஞ்சம்மன்னி தேவி ஆட்சியாளராக இருந்தார்.
இன்றைய குஜராத் மாநிலத்தின் கத்தியவார் பகுதியில் உள்ள வானாவைச் சேர்ந்த ராணா சாஹிப் ராணா ஸ்ரீ பனே சின்ஜி சாஹிப்பின் இளைய மகளான மகாராணி பிரதாப குமாரி அம்மனியை நல்வாடி கிருஷ்ணராஜ உடையார் மணந்தார். 1900 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி ஜெகன்மோகன் அரண்மனையில் திருமணம் நடந்தது, அங்கு இந்த திருமணத்திற்காக ஒரு பெரிய மண்டபம் சிறப்பாக கட்டப்பட்டது.
1902 ஆம் ஆண்டில், ஜெகன்மோகன் அரண்மனைக்குள் பிரத்யேகமாக கட்டப்பட்ட ஒரு மண்டபத்தில் நடந்த விழாவில், மன்னர் ராஜரிஷி நல்வாடி கிருஷ்ணராஜ உடையார் மைசூர் அரியணையில் அமர்த்தப்பட்டார். இந்த விழாவில் அன்றைய வைஸ்ராய் மற்றும் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் லார்ட் கர்சன் கலந்து கொண்டார். இவ்விழாவிற்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட மண்டபம், பின்பு ராஜா தனது தினசரி தர்பாருக்காகவும், தசரா காலத்தில் சிறப்பு தசரா தர்பாருக்காகவும் பயன்படுத்தப்பட்டது.
வைணவ வழிபாட்டின் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் "ஸ்ரீ பரகாலன்" என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீ வேதாந்த தேசிகரின் சீடரான ஸ்ரீ பிரம்மதந்திர ஸ்வதந்திர ஜீயர், மைசூரை தலைமையிடமாகக் கொண்டு இந்த மடத்தை நிறுவி, அதற்கு "பரகால மடம்" என்று பெயரிட்டார்.
மடம் 1399 முதல் மைசூர் இராச்சியத்தின் மன்னர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டு இருந்தது. மைசூர் மன்னர்கள் இம்மடத்தை தங்கள் அதிகாரப்பூர்வ குருகுலமாக வைத்துள்ளனர். இன்றும் அனைத்து அரச விழாக்களும் இம்மடத்தின் ஆலோசனைக்குப் பிறகே நடைபெறுகின்றன. மடம் தற்போதைய அரண்மனை வளாகத்தின் மேற்குப் பகுதியில் ஐந்து நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ளது.
முன்பு குறிப்பிடப்பட்டுள்ளபடி, மகாராஜாக்கள் எந்த முக்கிய முடிவும் எடுப்பதற்கு முன், பரகால மடத்தின் பீடாதிபதியிடம் ஆலோசித்து, பின்னர் நடவடிக்கையை முடிக்கிறார்கள். 15.10.1906 அன்று புதிய அரண்மனைக்கான “கிரஹப்பிரவேசம்” தொடர்பாக மகாராஜா அவர்கள் மடத்தின் தவத்திரு சுவாமிகளிடம் ஆலோசனையைப் பெற்றார். அதன் பிறகு 05.06.1907 அன்று மகாராஜா அவர்கள் ஸ்ரீ பரகால மடத்தின் ஆசிர்வாதத்துடன் புதிய அரண்மனைக்கு சம்பிரதாயப் பிரவேசம் செய்தார்.
மகாராஜாவின் வேண்டுகோளின்படி, 17 ஜூன் 1907 அன்று, மடத்தின் தவத்திரு சுவாமிகள் ஸ்ரீ ஹயக்ரீவர் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மிநாராயணருடன் [மடத்தின் மூல தெய்வங்கள்] மூன்று கால ['திரிகால'] பூஜை செய்து அரச குடும்பத்தை ஆசீர்வதிப்பதற்காக மேற்கு வாயில் வழியாக புதிய அரண்மனைக்கு விஜயம் செய்தார். ஸ்ரீ பிரம்மதந்திர ஸ்வதந்திர பரகால மடத்தின் மடாதிபதிகள் அரண்மனைக்கு மைசூர் அரச குடும்பத்தினரை ஆசீர்வதிக்க வருவதற்காக பயன்படுத்திய நுழைவாயில் மேற்கு வாயில். இக்காரணத்தால் அரண்மனையின் தற்போது மேற்கு வாசல் பிரம்மபுரி கேட் என்று அழைக்கப்படுகிறது.
இளம் மகாராஜா மகாராணி லக்ஷ்மி விலாச சன்னிதானத்துடன் ஜக்மோகன் அரண்மனையில் இருந்து புதிய அரண்மனைக்கு 1907 இல் குடியேறினார். அரச குடும்பத்தினரும் பரிகால மடத்தின் மடாதிபதி அவர்களும் பயன்படுத்தும் மேற்கு வாயில் அதாவது பிரம்மபுரி வாயில் ஆரம்பத்தில் ஸ்ரீ விநாயக சுவாமி கோவில் இருந்தது. மகாராணி லட்சுமி விலாச சன்னிதானத்தின் விருப்பப்படி 1916 ஆம் ஆண்டு நல்வாடி கிருஷ்ணராஜ உடையார் விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஒரு கோயிலைக் கட்டினார் என்று கூறப்படுகிறது. ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு கோயில் இருக்கும் வடக்கு வாயில் மற்றும் தெற்கு வாசல் விஷயத்தில் அரண்மனை வளாகத்தின் மேற்கு வாயில் இந்த தெய்வங்களுக்கான கோயில்களுடன் சிறப்புரிமை பெற்றது. ஸ்ரீ ஆஞ்சநேயரின் திருவுருவம் சுமார் ஐந்தடி உயரம் கொண்ட பளிங்குக்கல்லால் ஆனது. தென்னிந்தியாவில் பளிங்குக்கல்லால் உருவாக்கப்பட்ட தெய்வ சிலைகள் அரிதாகவே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ விநாயக சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீ சஞ்சீவாஞ்சநேய ஸ்வாமி கோவில் இரண்டும் வடக்கு நோக்கி உள்ளது.
பளிங்கு கல்லால் வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயரின் மூர்த்தம் சுமார் ஐந்தடி உயரம் இருக்கும். பிரபாவளி என்னும் திருவாசியுடன் கூடிய இவ்விக்கிரகம் ஒற்றை வெள்ளை பளிங்குக் கல்லால் ஆனது. அவர் நின்ற கோலத்தில் வடக்கு நோக்கி இருக்கிறார். அவரது வலது தாமரை பாதம் தரையில் உறுதியாக இருக்கும் போது, இடது தாமரை பாதம் மடித்து, ஒரு பெண் கால்களுக்குக் கீழே மிதிக்கப்படுவதைக் காணலாம். கச்சம் ஸ்டைலில் வேட்டி அணிந்துள்ளார். இரண்டு மணிக்கட்டுகளிலும் கங்கணம் அணிந்திருக்கிறார், மேல் கரத்தில் கேயூரம் அணிந்திருக்கிறார். கதையை பிடித்திருக்கும் அவரது வலது கை அவரது மார்பு அருகில் காணப்படுகிறது. அவரது இடது கரம் சஞ்சீவி மலையை ஏந்தியுள்ளது. அவரது அகன்ற மார்பில் பதக்கத்துடன் கூடிய நெக்லஸ் மற்றும் உத்திரியம் காணப்படுகிறது. அவரது வால் அதன் இறுதி வளைவுடன் அவரது வலது பக்கத்தில் உயர்ந்து காணப்படுகிறது. அவரது கருணை முகம் பக்தர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. அவரது காதுகளில் குண்டலம் மற்றும் 'கர்ண புஷ்பம்' காணப்படுகிறது. அவரது நீண்ட தாடையும் மற்றும் வாயும் பார்வைக்கு அழகு சேர்க்கிறது. அவரது பெரிய விழிப்புடன் கூடிய கண்கள் பக்தர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. பக்தன் அவரது கண்களை உற்று நோக்கினால், இறைவனின் முகத்தில் இருந்து வெளிப்படும் வசீகரத்தின் காரணம் புரியும். கண்களின் அருள் அப்படி! இறைவன் தலைக்கு மேல் சிறிய கிரீடத்துடன் காட்சியளிக்கிறார்.
குஜராத்தின் சாரங்பூரில் உள்ள ஹனுமனின் "கஷ்ட்பஞ்சன்" [கஷ்டங்களை விரட்டுபவர்] கோவிலில் ஒரு பெண்ணை அவரது காலடியில் மிதித்துள்ளார். இக்கோயிலின் புராணத்தில் இறைவனின் கீழ் உள்ள உருவம் சனிச்சரா என்று கூறப்படுகிறது. புராணத்தின் படி, சனிச்சரர் தனது நாட்காட்டியின்படி ஸ்ரீ ஹனுமானின் பக்தருக்கு தொந்தரவு கொடுத்தார். பக்திமிக்க பக்தர் ஒருவத் தனது பகவான் ஹனுமானிடம், சனிசராசரனால் கொடுக்கப்பட்ட பிரச்சனைகளில் தலையிட்டு அவற்றைக் குறைக்குமாறு வேண்டினார். ஒரு கட்டத்தில் ஹனுமான் தனது பக்தருக்கு உதவ தோன்றினார், ஸ்ரீ ஹனுமானுக்கு பயந்து சனிச்சரா ஒரு பெண் வேடத்தில் தன்னை மறைத்துக்கொண்டார். பெண் வேடத்தில் சனிச்சராவை ஹனுமான் அடையாளம் கண்டபின்பு, சனிச்சரா பாவமன்னிப்புக் கோரி அனுமனின் பாதத்தில் சரணடைந்தார். இக்கோயிலில் அனுமனின் காலடியில் பெண் இருப்பதைக் காண்கிறோம்.
குஜராத்தின் கத்தியவாரின் இளவரசியான மகாராணி லக்ஷ்மி விலாச சன்னிதானாவின் வேண்டுகோளின் பேரில் இந்த கோயில் கட்டப்பட்டது என்பதை நினைவில் கொள்க. அந்த மாநிலத்தின் சிறப்பான புராணத்தை மகாராணி இங்கு கொண்டு வந்தார்கள் என்றே சொல்லலாம்.
அனுபவம்
இறைவனின் வசீகரமான கண்களின் தரிசனம், பக்தனுக்கு எந்த பிரச்சனையும் வராது என்று உறுதியளிக்கும்.
இறைவனின் கையிலுள்ள சஞ்சீவி, பக்தனின் ஆரோக்கிய வாழ்வில் பல நல்ல செயல்களைச் செய்ய உறுதியளிக்கிறார்.
தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு: ஜூன் 2024