home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ ஹனுமான் மந்திர், தால் பஜார், குவாலியர்

ஸ்ரீ பான் சிங் சவுகான், குவாலியர்

ஸ்ரீ ராமர் சந்நிதி, குவாலியரின் ஆப மகாராஜ் மடம்


சமர்த்த ராமதாஸர்

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் ஹனுமானின் மறு அவதாரம் என்று நம்பப்படும் துறவி சமர்த்த ராமதாஸர் சத்ரபதி மகாராஜா சிவாஜியின் குருவாக இருந்தார். பாரத தேசத்தில் இந்து தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதில் சத்ரபதி மகாராஜா சிவாஜி முக்கிய பங்கு வகித்தார். இந்தச் செயலில் சத்ரபதி சிவாஜியின் தார்மீக சக்திக்கு உத்வேகம் அளித்தவர் சமர்த்த ராமதாஸர். இந்தியாவில் இந்து மதத்தை மறுசீரமைப்பதில் ராமதாஸின் அசாதாரண பொறுமை மற்றும் உறுதிப்பாட்டிற்கு மரியாதை செலுத்தும் வகையில், மக்கள் அவருக்கு சமர்த்தா (சக்தி வாய்ந்த) ராமதாஸர் என்று பெயரிட்டனர், அந்த பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமே. காலையில் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும் போது, ‘ராம் ராம்’ என்று வாழ்த்துப் பரிமாறப்படும் வழக்கம் உள்ளது, இந்த வாழ்த்துப் பழக்கம் சமர்த்தரால் ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிட தக்கது. இப்பழக்கம் இன்றும் இது பாரதத்தின் பல பகுதிகளில் நடைமுறையில் உள்ளது.

அவரது தத்துவம் மற்றும் மடங்கள்

தனது கோட்பாடான அத்வைத தத்துவத்தை பிரச்சாரம் செய்ய இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார். சென்ற இடங்களில் பல மடங்களை நிறுவினார். இந்த மடங்கள் அவரது செய்தியை மக்களுக்கு எடுத்துச் சென்றன. அவர் தனது மடத்தை நிறுவிய இடமெல்லாம் மாருதிக்கு கோயில் எழுப்பினார். அப்படி அமைக்கப்பட்ட மாருதி திருக்கோயில்கள் பல சமூக செயல்களுக்கு மையமாகவும் ஆக்கினார். மடத்தின் குறிப்பிட்ட கிளைக்கு தலைமை தாங்குவதற்கும், செயலைச் செய்வதற்கும் அவர் திறமையான நபரைத் தேர்ந்தெடுத்தார்.

ஶிர்காவ் ஸ்ரீ தத்தாத்ரேயர் மடம்

ஸ்ரீ ஹனுமான் சந்நிதி, குவாலியரின் ஆப மகாராஜ் மடம் மகாராஷ்டிராவின் சத்தாரா மாவட்டத்தின் ஶிர்காவ் என்னும் இடத்தில் சமர்த்தரால் நிறுவப்பட்ட ஒரு மடம் உள்ளது. வழக்கபடி இங்கும் மாருதியை நிறுவி ஒரு கோயிலைக் கட்டினார். சமர்த்தரால் கட்டப்பட்ட ஆரம்பகால கோவில்களில் இதுவும் ஒன்று. இன்று மாருதி பகவானின் சித்த பீடங்களில் ஒன்றாக கருதப்படும் இக்கோயில், அனுமனின் பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு நிறுவப்பட்ட மடம் ஸ்ரீ சமர்த்த ராமதாஸிரின் நேரடி சீடரான ஸ்ரீ தத்தாத்ரேயரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்ரீ தத்தாத்ரேயார் குரு சமர்த்த ராமதாஸிரின் போதனைகளை ஶிர்காவ்-இல் உள்ள இந்த மடத்தை அடிப்படையாக கொண்டு ஸ்ரீராமதாஸரின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மராட்டியத்தைத் தாண்டி மராட்டிய இராஜ்யம் இந்தியா முழுவதும் பரவியதால், ராமதாஸரின் செய்தி மற்றும் போதனைகளை மக்களுக்குச் சென்றடைவதற்காக சமர்த்தர் நிறுவிய மடத்தின் செயல்பாடும் பரவியது.

குவாலியரின் ஆபா மடம்

குவாலியரைத் தலைநகராகக் கொண்டு மராட்டியர்கள் ஆட்சியை நிறுவியபோது, ஸ்ரீ தத்தாத்ரேய மடமும் அவர்களது செயல்பாட்டைப் புதிய பகுதிக்கும் பரப்பலானார்கள். ஸ்ரீ தத்தாத்ரேயரின் மகன் ஸ்ரீ ராகவஸ்வாமி யஷ்வந்த்சுவாமி. இவரது மகன் ஸ்ரீ லக்ஷ்மண் ஸ்வாமி குவாலியருக்கு விஜயம் செய்தபோது, இங்கு மடத்தின் கிளையை நிறுவினார். இது இப்போது 'ஆப மஹாராஜ்' மடம் என்று பிரபலமாக அறியப்படுகிறது. அப்போது நிறுவப்பட்ட மடம், மகாராணி லக்ஷ்மிபாய் தன்னாட்சி வணிகப் பட்டயக் கல்லூரிக்கு மிக அருகில் உள்ள ’தால் பஜார்’ பகுதியில் உள்ளது. முன்னதாக, ஸ்ரீ ஏ.பி.வாஜ்பாய் படித்த இந்தக் கல்லூரி விக்டோரியா டிகிரி கல்லூரி என்று அறியப்பட்டது.

நடைமுறையின் படி ஸ்ரீ லக்ஷ்மண சுவாமிகள் மாருதி கோவிலைத் மூலமாகக் கொண்டு மடத்தை நிறுவினார். கல்லால் ஆன 'வீர ரூபம்' உடைய மாருதி பகவான் ஶிர்காவ் சித்த பீடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு குவாலியரில் நிறுவப்பட்டது. இவர் வலது கையில் கதாயுதம் மற்றும் இடது கையில் சஞ்சீவி பர்வத்துடன் நின்ற கோலத்தில் வீர ரூபத்தில் காட்சியளிக்கிறார். அவரது வலது திருப்பாதத்தின் கீழ் அஹி ராவணன் இருப்பதைக் காணலாம்.

ஸ்ரீ ராமர் கோவில்

ஸ்ரீ ராமர் சந்நிதி, குவாலியரின் ஆப மகாராஜ் மடம் மாருதியை நோக்கியபடி ஸ்ரீராமர் கோயிலும் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் நீண்ட நாட்களாகியும் ஸ்ரீராமர் கோயில் பணிகள் தொடங்க முடியவில்லை. ஒரு எளிய பணியாகக் கருதப்பட்டது, அவ்வாறு இல்லை என்று நிரூபனம் ஆனது. திட்டமிட்டதில் ஏதோ தவறு இருக்கிறது என்பது பண்டிதர்களுக்கு அப்போதுதான் புரிந்தது. மாருதி பகவானை வணங்கி துதித்து தங்களை வழி நடத்துமாறு வேண்டிக் கொண்டனர். இவர்களது வேண்டுகோளுக்கு இறைவன் செவி சாய்த்து தான் ஸ்ரீராமருக்கு முன் ’வீர ரூபத்தில்’ நிற்க முடியாது என்று தெய்வீக வழிகாட்டுதலைக் கொடுத்தார். இவர்கள் இதனை அடுத்து தாஸ ரூபத்தில் மாருதி விக்ரஹம் செய்து வீர மாருதிக்கு எதிரே ‘தாஸரூபத்தில்’ பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். அதன் படி தாஸ மாருதியை நிறுவினர். தாஸ ரூப மாருதியின் ‘பிராண பிரதிஷ்டை’க்குப் பிறகு, ஸ்ரீராமருக்குக் கோயில் கட்டும் பணி எந்த இடையூறும் இல்லாமல் இனிதே நடைப் பெற்றது.

தெற்கு நோக்கி ஸ்வாமிஜீயின் யாத்திரை

மடத்தின் கிளையை ஸ்தாபித்ததும், கோயில் கட்டும் சங்கல்பமும் முடிந்ததும் ஸ்ரீ லக்ஷ்மண் ஸ்வாமிகள் தெற்கில் உள்ள ராமேஸ்வரத்திற்கு யாத்திரை மேற்கொண்டார். அவர் ராமேஸ்வரம் செல்லும் வழியில் தஞ்சாவூரில் ஸ்ரீயக்ஞவஹ்னாச்சாரியாரின் பராமரிப்பில் இருந்த சமர்த்த மடத்தில் தங்கினார். அந்த மடத்தின் தினசரி பூஜைகள் சப்த தாது (ஏழு உலோகங்களால் ஆன அச்சு) செய்யப்பட்ட மாருதி சிலைக்கு ஸ்ரீ ஸ்ரீ யக்யவஹ்னாச்சாரியாரால் செய்யப்பட்டு வந்தது. ஸ்ரீ லக்ஷ்மண ஸ்வாமிகள் தஞ்சாவூரில் தங்கியிருந்த காலத்தில் மடத்தின் தினசரி பூஜைகளில் கலந்துகொண்டார். பின் தனது யாத்திரையை ராமேஸ்வரம் நோக்கிச் சென்றார்.

மாருதியின் சப்த தாது விக்ரஹம்

ஸ்ரீ ராமர் சந்நிதி, குவாலியரின் ஆப மகாராஜ் மடம் தஞ்சாவூர் மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ யக்ஞவாஹ்னாச்சாரியார் வயதானவர். தனது முதுமை காரணத்தால், மடத்தின் பாரம்பரியம் தொடரும் வகையில் சப்த தாதுக்களால் ஆன மாருதி சிலையின் தினசரி பூஜையை ஒப்படைக்க வேண்டிய நேரம் இது என்று அவர் உணர்ந்தார். தேவையான சக்தியுடனும் பக்தியுடனும் பூஜை செய்யக்கூடிய திறமையான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் கருதினார். ஆனால் சப்த தாது சிலையை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் அவருக்கு தெளிவில்லாமல் இருந்தது. ஒரு நல்ல நாள் அந்தச் சிலையை குவாலியரின் ஸ்ரீ லக்ஷ்மண ஸ்வாமியிடம் ஒப்படைக்கும்படி அவருக்கு ‘திருஷ்டாங்கம்’ (தெய்வீக வழிகாட்டல்) கிடைத்தது. மாருதி பகவானின் இந்த தெய்வீக வழிகாட்டுதலை தனது சீடர்களிடம் தெரிவித்தார். ஆனால் அவரது சீடர்களுக்கு குருவின் இம்முடிவு மகிழ்ச்சி அளிக்கவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, ஸ்ரீ குரு யக்ஞவஹ்னாச்சாரியார் பிருந்தாவனம் எய்தினார். அதற்கு முன் அவர் சப்த தாது சிலையை ஸ்ரீ லக்ஷ்மண ஸ்வாமி ராமேஸ்வரத்திலிருந்து திரும்பியதும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீடர்களிடம் அறிவுறுத்தினார். அதே நாளில் ராமேஸ்வரம் யாத்திரை முடித்துத் திரும்பும் ஸ்ரீ லக்ஷ்மண ஸ்வாமி, ஸ்ரீ ஸ்ரீ யக்ஞவஹ்னாச்சாரியார் செய்த பூஜைகளுக்கு இடையூறு ஏற்பட்டதால், மீண்டும் அவரை தஞ்சாவூருக்குச் செல்லும்படி கனவு கண்டார். சப்த தாது விக்கிரகத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி ஸ்ரீ ஸ்ரீ யக்ஞவஹ்னாச்சாரியார் அறிவுறுத்தியதை அறியாத ஸ்ரீ லக்ஷ்மண ஸ்வாமிகள், தஞ்சாவூரில் உள்ள மடத்துக்குத் திரும்பினார். இதற்கிடையில், தங்கள் குரு வழிபட்ட சிலையை பிரிந்து செல்ல விரும்பாத மடத்தின் சீடர்கள், அந்த சிலையை மடத்திலேயே வைக்க முடிவு செய்தனர். எனவே ஸ்ரீ லக்ஷ்மண் ஸ்வாமிகளை விசாரித்தபோது, ஸ்ரீ ஸ்ரீ யக்யவஹ்னாச்சாரியார் பிருந்தாவனம் ஏய்து விட்டார் என்றும், அவர்களால் பூஜைகள் தடையின்றி நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீ லக்ஷ்மண ஸ்வாமியிடம் சிலையை ஒப்படைக்க குருவின் ஆக்ஞை பற்றியோ அல்லது அவர் கண்ட தெய்வீக வழிகாட்டுதல் பற்றியோ சீடர்கள் எதுவும் குறிப்பிடவில்லை.

தஞ்சாவூர் மாருதி குவாலியர் செல்கிறார்

ஸ்ரீ ஹனுமான் சந்நிதி, குவாலியரின் ஆப மகாராஜ் மடம் ஸ்ரீ லக்ஷ்மண ஸ்வாமிகள் தன்னை ஏன் தஞ்சாவூருக்கு வர உத்தரவு ஆயிற்று என்று யோசிக்க ஆரம்பித்தார். சிறிய யோசனைக்குப் பிறகு, விடை கிடைக்காமல், அடுத்த நாள் குவாலியருக்குத் திரும்பும் பொருட்டு வடக்கு நோக்கிப் புறப்பட்டார். அவர் தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியில் இருந்தபோது ஸ்ரீ ஸ்ரீ யக்ஞவஹ்னாச்சாரியாரின் சீடர்கள் அவரைச் சந்திக்க வந்தனர். பின்னர் அவர்கள் அவரிடம் சப்த தாதுவால் செய்யப்பட்ட மாருதியின் சிலையை ஒப்படைக்குமாறு தங்கள் குரு ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் பிருந்தாவனம் ஏய்தும் முன் கூறிய விஷயத்தை கூறினார்கள். தங்கள் குருவால் பூஜிக்கப்பட்ட விக்ரஹத்தை பிரிய மனமில்லாமல், தாங்களே பூஜிக்க வேண்டும் என்ற எண்ணதினால் இது பற்றி ஸ்ரீ லக்ஷ்மண சுவாமிக்கு கூறாமல் விட்டதையும் தெரிவித்தனர்.

ஆனால் ஸ்ரீ லக்ஷ்மண சுவாமி அவர்கள் சப்த தாது மாருதி இல்லாமல் மடத்தை விட்டு வெளியேறிய முந்தைய நாள் இரவு, மடத்தின் சீடர் ஒருவரின் கனவில் மாருதி பகவான் தோன்றி, ஸ்ரீ ஸ்ரீ யக்ஞவஹ்னாச்சாரியாரின் ஆக்ஞையே தம்முடைய ஆக்ஞையாகும், எனவே அவர்கள் சிலையை ஸ்ரீ லக்ஷ்மண சுவாமி ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார் என்பதையும் தெரிவித்தனர்.

தங்கள் குருவின் கட்டளைக்கு அநீதி இழைத்ததை உணர்ந்து, மாருதியின் சப்த தாது விக்ரகத்தை ஸ்ரீ லக்ஷ்மண சுவாமியிடம் ஒப்படைக்க வந்துள்ளதாக கூறிய சீடர்கள் விக்ரகத்தை ஸ்ரீ லக்ஷ்மண சுவாமியிடம் ஒப்படைத்தனர்.

சப்த தாது மாருதி

பின்னர் இந்த ஆப மடத்தில் தஞ்சாவூர் ஸ்ரீ ஸ்ரீ யக்ஞவஹ்னாச்சாரியாரால் வழிபடப்பட்டு, குவாலியருக்கு ஸ்ரீ லக்ஷ்மண ஸ்வாமியால் கொண்டு வரப்பட்ட விக்ரகம் வழிபடப்படுகிறது. மாருதி பகவானின் இந்த சப்த தாது விக்ரகத்திற்கு ‘ஷோடசோபசார’ பூஜை இந்த அபா மடத்தில் தினமும் செய்யப்படுகிறது. விக்ரகம் சுமார் ஐந்து அங்குல உயரம் கொண்டது மற்றும் பகவானின் வலது கை 'அபய முத்திரை' காட்டுகிறது, அவரது இடது கை இடுப்பில் உள்ளது. இறைவனின் வலது திருப்பாதம் நல்ல அறிகுறியைக் காட்டும் விதம் முன் செல்வதைக் காணலாம். ஸ்ரீராமர் சந்நதியின் உள்ளேயே வீற்றிருக்கும் இந்த மாருதி பெருமாளுக்குச் செய்யப்படும் ஷோடசோபசார பூஜையைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீ ஹனுமான் மந்திர், தால் பஜார், குவாலியர் "

 

அனுபவம்
குவாலியர் பார்க்க நல்ல இடங்கள் பல உள்ளன. கூடுதல் நாள் தங்கி, இந்த அமைதியான கோவிலை தரிசனம் செய்து, இந்த மாருதிக்கு ஆப மஹாராஜ் மடத்தில் செய்யப்படும் பூஜையைக் காணவும். சொர்க்கத்தை உணர்வீர்கள்.       

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு:  ஏப்ரல் 2024


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+