home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

தேரடி ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில், வடுவூர்

ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி ராகவன்

ஸ்ரீராம பரிவாரம் - உத்ஸவ மூர்த்தி, ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில், வடுவூர்


கோவில்வெண்ணி

தஞ்சாவூருக்கு அருகில் கோவில்வெண்ணி என்ற இடம் உள்ளது. பாண்டிய, சேர மற்றும் பதினொரு சிற்றசர்களுடன் கூட்டுப் படையினை எதிர்த்து கரிகால சோழன் இந்த இடத்தில் போரிட்டு வெற்றி பெற்றார். போரில் முதுகில் காயம் அடைந்த சேர மன்னன் உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்து கொண்டான். இது கரிகால சோழனின் வீரத்தையும், போர் நடந்த வீரத்தையும் காட்டுகிறது. போரின் வடுவாக விட்டுச் சென்றது, போரில் பல ஆண்கள் தங்கள் உயிரை இழந்திருந்தனர்கள் மற்றும் பலர் காயமடைந்திருந்தர்கள் என்பதே ஆகும். காயம்பட்டவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டது, ஆனால் காலப்போக்கில் போரில் துணிச்சலான போர் புரிந்த வீரர்களுக்கு காயங்கள் ஆறிய போதும் சில வடுக்கள் எஞ்சி நின்றன.

வடுவூர்

கோவில்வெண்ணியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்போரில் பங்கேற்ற வீரர்கள் குடியேறினர். அப்படிப்பட்ட ஒரு இடம் இப்போது வடுவூர் என்று அழைக்கப்படுகிறது. காயங்கள் குணமான பிறகு விட்டு சென்ற வடு குறி, இந்த இடத்திற்கு அருகில் வளரும் மூலிகைகளால் சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்தது. தமிழில் “வடு” என்றால் தழும்பு என்று பொருள், இவ்வூர் வடு சிகிச்சை மையமாக இருந்ததால் வடுவூர் என்று பெயர் பெற்றது. இந்த இடம் கோவில்வெண்ணி மற்றும் தஞ்சாவூரில் இருந்து சம தூரத்தில் உள்ளது. இன்று இந்த ஊரின் ஸ்ரீ கோதண்டராமர் ஆலயம் மிகவும் புகழ் வாய்ந்த திருக்கோயிலாகும்.

கோதண்டராமர் வடுவூருக்கு வருகிறார்

இவ்வூரில் உள்ள ருக்மணி-சத்யபாமா சமேத ஸ்ரீ கோபால் ஸ்வாமி கோவில் எப்படி "ஸ்ரீ கோதண்டராமர் கோவில்" என்று அழைக்கப்பட்ட படுகிறது என்பது மிகவும் சுவாரஸ்யமான வரலாறு.

ஸ்ரீராமர் அயோத்திக்குத் திரும்பியபோது லங்காவில் நடந்த போரினால் ஏற்பட்ட பாவங்களைப் போக்க திருக்கண்ணபுரம் என்ற இடத்தில் சிவனை வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. துறவிகளின் பிரார்த்தனையின் பேரில், அந்த இடத்தில் துறவிகள் கொண்டு வந்த சிலையில் ஸ்ரீராமர், தன் சந்நிதியை விட்டு சென்றார். பிற மதத்தினரின் தென்பகுதி படையெடுப்பின் போது, திருக்கண்ணபுரத்தில் வழிபாட்டிலிருந்த ஸ்ரீராமர் சிலை, வேதாரண்யம் அருகே தலைஞாயிறு என்ற இடத்தில் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டது.

பின்பு தஞ்சாவூர் இரண்டாம் சரபோஜியின் ஆட்சியின் கீழ் இருந்த சமயம் நடந்த சம்பவம் மிகவும் சுவாரசியமானது. ஒரு நாள் தலைஞாயிறு இடத்தில் ஸ்ரீராமர் சிலையாக இருப்பதைப் பற்றி மன்னன் கனவு கண்டார். ஸ்ரீராமரை தஞ்சாவூருக்குத் திரும்ப கொண்டுவரும் பணிக்காக மன்னர் பரிவாரங்களுடன் தலைஞாயிறு சென்றார். ராஜா தனது கனவில் காணப்பட்ட ஸ்ரீராமர் சிலை இருக்கும் இடத்தை அடையாளம் காட்டினார். அரச மரத்தின் கீழ் ஸ்ரீராமர், சீதை, லக்ஷ்மணர், பரதன் மற்றும் அனுமன் ஆகியோரின் சிலைகளைக் கண்டெடுத்தார். அவர் அங்கிருந்து செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது, அப்பகுதி வாழ் மக்கள் அச்சிலைகளை அங்கிருந்து எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். லக்ஷ்மணன் மற்றும் பரதன் சிலைகளை அவர்கள் கிராமத்திலேயே விட்டுச் செல்ல மன்னர் ஒப்புக்கொண்ட பிறகு அவர்கள் சற்று சமாதானம் அடைந்தனர். இன்றும் தலைஞாயிறு ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீ லக்ஷ்மணர் மற்றும் பரதரின் இச்சிலைகள் ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மணராக வழிபாட்டில் உள்ளது.

பின்னர் மன்னர் ஸ்ரீராமர், சீதை, அனுமன் சிலைகளுடன் தஞ்சாவூரை நோக்கிச் சென்றார். வழியில் வடுவூரில் மன்னர் படைகளுடன் ஓய்வெடுத்தார். வடுவூர் மக்கள் சிலை திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்தது என்பதை அறிந்ததும், தங்கள் கிராமத்தில் சிலைகளை நிறுவுமாறு ராஜாவிடம் முறையிட்டனர். இந்த வேண்டுகோளுக்கு இணங்க தயங்கிய மன்னன் நீண்ட யோசனைக்குப் பிறகு கிராம மக்களின் கோரிக்கையை ஏற்க வேண்டியதாயிற்று. இதனால் ஸ்ரீராமர் இத்தலத்திற்கு வடுவூருக்கு வந்தார்.

கோதண்ட ராமருடன் ஸ்ரீ கிருஷ்ணர் வசிக்கிறார்

கோயில் தேர், தேரடி ஆஞ்சநேயர் சன்னிதி,ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில்,வடுவூர் அந்த கிராமத்தில் ஸ்ரீ ருக்மணி மற்றும் ஸ்ரீ சத்யபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணருக்கு ஒரு கோவில் இருந்தது. ஸ்ரீ கோதண்டராம ஸ்ரீ சீதை மற்றும் ஸ்ரீ அனுமன் வருகையில், இவர்களும் அதே கோவிலில் நிறுவப்பட்டனர். அன்றிலிருந்து இந்த ஸ்ரீ கோபாலன் கோவிலில் ஸ்ரீ ராமர் முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார்.

ஸ்ரீ லக்ஷ்மணன் இல்லாததை உள்ளூர்வாசிகள் உணர்ந்தனர் அதனால் அவர்கள் ஸ்ரீ லக்ஷ்மணருக்கு ஒரு சிலையை செதுக்கினார்கள். இவ்வாறு செதுக்கப்பட்ட சிலை ஒரு பெண்ணைப் போல் தோன்றியதால், மக்கள் அதற்கு ஸ்ரீ சுந்தரி அம்மன் என்று பெயரிட்டனர் மற்றும் அவளுக்காக ஒரு தனி கோயில் கட்டினார்கள். மீண்டும் ஸ்ரீ லக்ஷ்மணருக்கான சிலை செதுக்கப்பட்டு ஸ்ரீகோதண்டராமர், ஸ்ரீ சீதை மற்றும் ஸ்ரீ அனுமன் ஆகியோருடன் பிரதான சன்னதியில் நிறுவப்பட்டது.

கோதண்ட ராமர் கோவில்

கோயில் ஐந்து அடுக்கு ராஜகோபுரம் முன்புற அலங்கார "தோரண வாயில்" வளைவுகளுடன், அதில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களின் சுண்ணாம்பு கலவையில் பதிக்கப்பட்ட உருவங்கள் காணப்படுகிறது. மத்திய வளைவில் ஸ்ரீ கோதண்ட ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரின் மிக நேர்த்தியான உருவங்கள் காணப்படுகிறது.

கிழக்கு நோக்கிய கோயில் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன், வலதுபுறம் ஸ்ரீ அஹோபில மடத்தைக் காணலாம், அங்கு மாணவர்களுக்கு வேத வகுப்புகள் நடத்தப்படுகிறது. மடத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மற்றும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளது. தரிசித்து, பின் கோவில் வளாகத்திற்குள் நுழையும் போது இடதுபுறம் 'மடப்பள்ளி' [கோயில் சமையலறை] உள்ளது. கொடி கம்பத்தில் உங்களின் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கவும், பின்னர் ஸ்ரீ கருடாழ்வாரிடம் அனுமதியின் பெரில் பெருமாளை சேவிக்க மேலே செல்லவும். இடதுபுறம் ஹயக்ரீவர்-தேசிகர் சந்நிதியும், வலதுபுறம் மணவாள மாமுனிவர் சந்நிதியும் காணப்படுகின்றன. பின் இடதுபுறத்தில் ஸ்ரீ கோபாலன் சன்னிதியும் வலதுபுறத்தில் பள்ளியறையும் [கண்ணாடி அறை] காணலாம்.

ஸ்ரீ கோபாலன், ஸ்ரீ ருக்மணி மற்றும் ஸ்ரீ சத்யபாமாவுடன் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் காணப்படுகிறார். மன்னார்குடி கோவிலில் காணப்படுவது போல் ஸ்ரீ கோபாலனின் உற்சவர் சாட்டையுடன் காட்சியளிப்பதையும் காணலாம். கோயிலின் மற்ற உற்சவ மூர்த்திகள் இந்த சந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன.

மைய கருவறையில் ஸ்ரீ ராமர், வலதுபுறம் ஸ்ரீ சீதா தேவி, இடதுபுறத்தில் ஸ்ரீ லக்ஷ்மணர், இவருக்கு இடதுபுறத்தில் கூப்பிய கைகளுடன் ஸ்ரீ அனுமர் அகியோர்களுடன் காட்சி தருகிறார். இந்த பிரதான சந்நிதியிலேயே இவர்களின் உற்சவ மூர்த்திகளும் காணப்படுகின்றது.

பிரம்மோற்சவம் மற்றும் தேர் திருவிழா

தேர் திருவிழா, தேரடி ஆஞ்சநேயர் சன்னிதி,ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில், வடுவூர் இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் உற்சவங்கள் இருக்கும் ஆனால் பங்குனி [மார்ச் ஏப்ரல்] ஸ்ரீ ராம நவமிக்கு அடுத்த பத்து நாட்கள் பிரம்மோத்ஸவம் மிகவும் விசேஷமானது. பிரம்மோத்ஸவத்தின் போது ஸ்ரீ சீதா ராம கல்யாணம் [திருமணம்] ஏழாவது நாள் மற்றும் தேர் திருவிழா ஒன்பதாம் நாள் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீராமரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்தரிக்கும் ஏராளமான உருவங்கள் பொறிக்கப்பட்ட மரத்தால் செய்யப்பட்ட பிரமாண்டமான கோயில் தேர் பார்க்க கண்கவரும். ஒவ்வொரு ஆண்டும் வடுவூரைச் சுற்றியுள்ள பக்தர்கள் ஒன்பதாம் நாள் பிரம்மோத்ஸவத்திற்காக ஆவலுடன் காத்திருப்பது வழக்கம். ஸ்ரீராமர் தனது பரிவாரங்களுடன் கோயில் தேரில் கோயிலின் நான்கு மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக பவனி வருவது இத்தேர் திருநாளில்தான். "ஊர் கூடி தேர் இழுப்பது" என்னும் முதுமொழிக்கேற்ப ஆர்வத்துடன் இந்தப் பாதையில் தேரை வடம் பிடித்து இழுத்து செல்லும் மகத்தான பணியை மேற்கொள்வதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள் பக்தர்கள். இப்படி பங்குக் கொள்ளும் பக்தர்கள் இதனால் ஸ்ரீராமரின் ஆசியையும் அன்பையும் உணர்கிறார்கள்.

தேரடி அனுமன் சந்நிதி

கோயில் வளாகத்தில் ஸ்ரீ ஹனுமான் பிரதான கர்ப்பகிரஹத்தில் இருப்பதால் அவருக்கு தனி சந்நிதி இல்லை. ஆனால் ஐநூறு மீட்டர் தொலைவில் தேரடி அருகில் ஸ்ரீ ஹனுமானுக்கு தனி சந்நிதி, பிரதான ஸ்ரீ ராமர் கோவிலை நோக்கி உள்ளது. சந்நிதி சிறியதாகவும் உயரமாகவும் உள்ளது. சந்நிதிக்கு முன் சிறிய மண்டபத்துடன் உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது மற்றும் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி நாளில் [டிசம்-ஜன] தேரடி ஸ்ரீ அனுமனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

தேரடி ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில், வடுவூர் தேர் திருவிழா அன்று ஸ்ரீராமர் தனது பரிவாரங்களுடன் தேரடிக்கு வருகிறார். முதலில் அவர்கள் தேரடியில் ஸ்ரீ அனுமனால் வரவேற்கப்படுகிறார்கள். ஸ்ரீ ராமர் தேரடி ஸ்ரீ அனுமனின் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவரைக் கௌரவிக்கிறார். பின்னர் அவர் கோவில் தேரில் ஏறி ஊர்வலம் செல்கிறார்.

தேரடி அனுமன்

தேரடி ஸ்ரீ அனுமன் சிலை கிரானைட் கல்லால் ஆனது மற்றும் பீடத்துடன் சுமார் மூன்றடி உயரம் கொண்டது. அவர் மேற்கு நோக்கியும், பிரதான கோவிலின் ஸ்ரீ கோதண்டராமரையும் நோக்கி இருக்கிறார்.

ஸ்ரீ ஹனுமான் கூப்பிய கைகளுடன் நின்ற கோலத்தில் உள்ளார் மற்றும் அவரது உள்ளங்கைகள் அஞ்சலி முத்திரையில் இணைந்துள்ளன. அவரது தாமரை பாதங்களில் தண்டையும் நூபூரமும் அலங்கரிக்கின்றது. இறைவன் வேட்டியை கச்சம் வைத்து அணிந்துள்ளார். அவர் மேல் கையில் கேயூரமும் மணிக்கட்டில் கங்கணமும் அணிந்துள்ளார். அவரது அகன்ற மார்பின் குறுக்கே முப்புரி நூலும், கழுத்தில் அட்டிகையும் மற்றும் இரண்டு மாலைகளும் மார்பில் காணப்படுகின்றன. அவரது வால் அவரது தலைக்கு மேலே உயர்ந்து இடது தோள்பட்டைக்கு அருகில் முடிவடைகிறது. இறைவன் காதில் குண்டலம் எனப்படும் தொங்கலை அணிந்துள்ளார், இது அவரது தோள்களைத் தொடுகிறது. காதுகளுக்கு பின்னால் தோள்களைத் தொடும் அவரது மென்மையான கேசத்தின் ஒரு பகுதி, இறைவனின் கம்பீரமான தோற்றத்திற்கு நேர்த்தியை சேர்க்கிறது. இறைவனின் பிரகாசமான கண்களில் கருணை மற்றும் கிருபை நிரம்பி வழிகின்றது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில், வடுவூர்"

 

அனுபவம்
எப்பொழுதும் ஸ்ரீராமரை நேசிப்பவரும், பக்தியும் அடக்கமும் கொண்டவருமான ஸ்ரீராம பக்தரை - இந்த க்ஷேத்திரத்தின் அனுமனை வேண்டிக் கொள்வதால், பக்தன் தான் செய்யும் பணியை அணுகுவதில் பணிவும் அடக்கமும் பெறுவது உறுதி.      

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு:  அக்டோபர் 2023


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+