home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் கோயில், காஸ்மண்டி சாலை, செகந்திராபாத்

ஜீகே கௌசிக்

1874-ல் செகந்திராபாத் ரயில் நிலையம்-உபயம்-விக்கி காமன்ஸ்


செகந்திராபாத்

ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் கோயில், காஸ்மண்டி சாலை, செகந்திராபாத் இரட்டை நகரங்கள் என்று இன்று பிரபலமாக அறியப்படுகின்றன நகரங்களில் செகந்திராபாத் மற்றும் ஹைதராபாத் ஒன்றாகும். ஹுசைன் சாகர் ஏரி இவ்விரண்டு நகரங்களையும் பிரிக்கின்றது. சுல்தான் இப்ராஹிம் குதுப் ஷா ஆட்சியின் போது 1562 ஆம் ஆண்டு அவரது மருமகன் ஹஸ்ரத் ஹுசையன் ஷா வாலி என்பவரால் இந்த ஏரி உருவாக்கப்பட்டது.

ஹைதராபாத் நகரம் செகந்திராபாத் நகரத்தை விட பழமையானது, வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இவை இரண்டும் பல வழிகளில் வேறுபட்டவை. ஹைதராபாத் நிஜாம்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஹுசைன் சாகரின் வடகிழக்கில் இருந்த உல்வுல் கிராம பகுதி இன்று செகந்திராபாத் என்று அழைக்கப்படிகிறது.

கிழக்கிந்திய கம்பெனியால் இரண்டாம் நிஜாம் ஆசாப் ஜா தோற்கடிக்கப்பட்ட பிறகு, கி.பி 1798 ஒப்பந்தத்தின் கீழ் உல்வுல் கிராமம் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் இப்பகுதியை கன்டோன்மெண்டாக உருவாக்கப்பட்டது. பின்னர், 1803 ஆம் ஆண்டில், ஹைதராபாத்தின் மூன்றாவது நிஜாமான நிஜாம் சிக்கந்தர் ஜா, உல்வுலை தனது பெயரால் செகந்திராபாத் என்று மறுபெயரிட்டார். பிரிட்டிஷ் கன்டோன்மென்ட் அமைப்பதற்காக ஹுசைன் சாகரின் வடக்கே நிலத்தை ஒதுக்கும் உத்தரவில் நிஜாம் கையெழுத்திட்ட பிறகு, 1806 இல் நகரம் உருவாக்கப்பட்டது. பின்னர் செகந்திராபாத் என்ற பெயரில் புதிய நகரம் அனைத்து வளர்ச்சிகளையும் கண்டது. வணிகமும் வியாபாரமும் செழித்து வளர்ந்தது. கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை என்று பெயரிடப்பட்ட பொது மருத்துவமனை 1851 ஆம் ஆண்டில் இங்கு நிறுவப்பட்டது. பிரிட்டிஷ் பாணியில் புதிய கட்டிடங்கள் வரத் தொடங்கின. சுதந்திரத்திற்குப் பிறகு, செகந்திராபாத் கண்டோன்மென்ட் வாரியம் இந்திய இராணுவத்தின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டது.

செகந்திராபாத் ரயில் நிலையம்

ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் கோயில், காஸ்மண்டி சாலை, செகந்திராபாத் இப்பகுதியின் வளர்ச்சிக்கு உதவ புதிய ரயில் நிலையம் நிறுவ திட்டமிடப்பட்டது. இதன் மூலம் ஹைதராபாத் மாநிலத்தினை இந்தியாவின் மற்ற ரயில் நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட முடியும் என நிஜாம் திட்டமிட்டார். இதனை கருத்தில் கொண்டு ’நிஜாம்ஸ் ரயில்வேஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டது மற்றும் 1870 ஆம் ஆண்டு வேலை தொடங்கியது. அதே ஆண்டில் செகந்திராபாத்-வாடி இடையே ரயில் பாதை தொடங்கப்பட்டது. இதன் பின் ’நிஜாம்ஸ் ரயில்வேஸ்’ நிறுவனத்தை நிஜாம் அரசு தானே எடுத்து நடத்த திட்டமிட்டு "நிஜாம் உத்தரவாத மாநில இரயில்வே" என்ற பெயரில் 1879 இல் ஒரு நிறுவனம் உருவாகப்பட்டது. பின்னர் இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் யோசனைக்கு எல்லையே இல்லை, அதனால் பிராந்தியத்தின் வளர்ச்சியும் கூடியது. இவ்வாறு 1874 இல் நிறுவப்பட்ட செகந்திராபாத் ரயில் நிலையம் இன்று இந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.

ஹுசியன் சாகர் ஏரிக்கு வடக்கே உள்ள உல்வூலின் பல பகுதிகள் பாறைகளால் ஆனவை. அன்று இருந்த நிலையில் பல போர்கள் நடந்து வந்ததால், படைகள் எங்கு செல்கிறதோ அங்கிருந்து மக்கள் படையுடன் இடம் பெயர்ந்தனர். இப்படி பல நகரங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குடியேரினார்கள். செக்ந்திராபாத் இதற்கு விதிவிலக்கில்லை. அப்படி குடியேருவர்கள் குழுமம் குழுமமாக நகர பகுதியில் வாழ்ந்தனர். அப்படி பட்ட பகுதிகள் அவர்களின் வேலை அல்லது அவர்கள் பேசும் மொழி போன்றவற்றால் பெயரிடப்பட்டது. எடுத்துக்காட்டாக, கும்மாரி குடா, பார்சிடுட்டா, சிந்திகுடா ஆகியவை வட்டார மக்கள் செய்யும் வேலை அல்லது அவர்கள் பேசும் மொழியின் காரணமாக அந்தப் பெயரைப் பெற்றன.

ஹுசைன் சாகருக்கு வடக்கே ஒரு புனிதப் பாறை

வைஷ்ணவ துறவியும் பக்தி இயக்கத்தின் முன்னோடியுமான சுவாமி ராமானந்தைப் பின்பற்றுபவர்களான ராமநந்தி பிரிவுகள் [ராமவத் பிரிவு மற்றும் ஸ்ரீ பிரிவு என்றும் அழைக்கப்படுபவர்கள்] அத்தகைய ஒரு குழுவாகும். இக்குழுவை சார்ந்தவர்கள் தாங்கள் குடியேற செகந்திராபாத்தில் சரியான இடத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது, ​​ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் இருந்த ஒரு பெரிய பாறையைக் கண்டனர். ஆலமரத்தை ஒட்டியிருந்த வேப்பமரம் பாறைக்கு நிழல் தருவதையும் அவதானித்துள்ளனர். பொதுவாக ஆலமரம் குறிப்பாக வேப்ப மரத்துடன் இருக்கும் போது புனிதமாக கருதப்படுகிறது. கடவுளால் அனுப்பப்பட்ட நல்ல அறிகுறி என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் பாறையை ஆராய்ந்தபோது, ​​ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரின் சுயம்பு உருவம் இருப்பதைக் கண்டனர். அவர்கள் ஸ்ரீ ஹரியை வழிபடுபவர்களாகவும், ஸ்ரீ ராமரைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்ததால், சர்வவல்லமையுள்ள அவர்களே இவ்விடத்தை தாங்கள் குடியேற தேர்ந்தெடுத்தாதாக நினைத்தார்கள். ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி பாறைக்கு அருகாமையில் குடியேற முடிவு செய்தனர். அவர்கள் குடியேறிய இடம் தற்போதைய செகந்திராபாத் ரயில் நிலையப் பகுதிக்கு அருகில் உள்ளது.

பக்தாக்களுக்கான குழும-முனைவு

 துவாரங்கள் கொண்ட பாறையின் ஓரமாக துவஜ ஸ்தம்பம்,ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் கோயில், காஸ்மண்டி சாலை, செகந்திராபாத் பாறையைச் சுற்றியுள்ள பகுதியில் குடியேறிய பிறகு, அவர்கள் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடத் தொடங்கினர், அங்கு மக்கள் கூடுவதற்கு சிறிய கொட்டகை போடப்பட்டது. அவர்கள் அங்கு குடியேறிய சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த கோயில் ஸ்ரீ ஹரி மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேய பக்தர்களின் கூட்டத்தின் முக்கிய இடமாக மாறியது. ஆனால் மகிழ்ச்சி தொடரவில்லை, கோவில் இருப்பதே கடினமாகிவிட்டது. செகந்திராபாத் புதிய ரயில் நிலையம் கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு திட்டமிடப்பட்டபோது இதற்கான அச்சுறுத்தல்கள் ஆரம்பமாகியது.

செகந்திராபாத் ரயில் நிலைய கட்டுமானம்

முதற்கட்ட ஆய்வில் கும்மாரி குடாவிற்கு கிழக்கே உள்ள பகுதி புதிய ரயில் நிலையத்திற்கு மிகவும் பொருத்தமானது என கண்டறியப்பட்டது. நிஜாமின் ஆட்களால் திட்டமிட்டபடி செகந்திராபாத் ரயில் நிலையம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதைகள் வரவிருந்த நிலத்தை திட்டமிட்டபடி சமன்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. வழியில் வரும் பாறைகள் அனைத்தும் அகற்றிவிட்டு, நிலத்தை முடிந்தவரை சமவெளிகளாக்க திட்டம். இவ்வாறு வெட்டிய எடுக்கப்பட்ட பாறைகள் தண்டவாளங்கள் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்பதும் திட்டம்.

ஸ்ரீ ஆஞ்சநேயரின் புனிதப் பாறை

நிஜாமின் ஆட்கள் ஆஞ்சநேயர் குடியிருக்கும் பாறையை அகற்ற வேண்டி வந்தனர். சுற்றுவட்டார மக்களின் பல கோரிக்கைகளுக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. 'த்வஜ ஸ்தம்பம்' கீழே விழுத்தப்பட்டது. பெரிய பாறையை உடைக்க, வெடி மருந்து தூள்களை வைப்பதற்காக பாறையில் நீண்ட துளைகள் போடப்பட்டன. அடுத்த நாள் வேலை தொடர இருந்தது. இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் நாளை மறுநாள் மிக மோசமானது நடக்கப் போகிறது என்று அஞ்சினார்கள். ஆனால் என்ன நடக்க வேண்டும் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.

ஸ்ரீ ஆஞ்சநேயர் சமிக்ஞைகளை அனுப்புகிறார்

ஸ்ரீ சிவ பார்வதியின் சிற்பம்,ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் கோயில், காஸ்மண்டி சாலை, செகந்திராபாத் மறுநாள் வேலைக்கு ஆட்கள் வந்தனர். ஆனால், முந்தைய நாள் வெடிப்பதற்காக அவர்கள் குறியிட்ட பாறைக்கு அருகில் எங்கும் வருவதற்கு அவர்கள் மிகவும் பயந்தனர். மாறாக தாங்கள் கொண்டுவந்த பழங்களை குழுமத்திற்கு வழங்கிவிட்டு சென்றனர். ஒரே இரவில் இந்த மனிதர்களுக்கு என்ன நடந்தது என்று வட்டாரவாசிகள் ஆச்சரியப்பட்டனர். விசாரணையில் நேற்று மாலை இங்கு வேலை முடிந்து அந்த ஆட்கள் தங்கள் முகாமுக்குத் திரும்பினர்கள். எங்கிருந்தோ ஒரு சில குரங்குகள் வந்து அவர்கள் வேலையில் தலையிட்டன, அவர்களை தங்கள் உணவை கூட சமைக்க அனுமதிக்கவில்லை. இவர்கள் குரங்குகளைத் துரத்தத் தொடங்கியபோது, ​​மேலும் பல குரங்குகள் கூடின. இவர்கள் குரங்குகளை வெல்ல தங்கள் புத்திசாலித்தனத்தை எல்லாம் பயன்படுத்தினர் ஆனால் எல்லாம் வீண். அதற்குள் நள்ளிரவாகியிருந்தது, அந்த முகாமின் பெரியவர் ஒருவர் அவர்களிடம், இந்தக் குரங்குகள் அடுத்த நாள் குரங்கு கடவுள் பொறிக்கப்பட்ட பாறையை வெடிக்கச் செய்யவிருந்ததால் வந்திக்கும் எனக் கூறினார். இந்த குரங்குகள் ஒரு எச்சரிக்கையாக அனுப்பப்பட்டதாகவும், கடவுள் இருக்கும் பாறைக்கு எந்த தீங்கும் செய்ய வேண்டாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். பாறைக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டோம் என்று ஆண்கள் அனைவரும் ஒப்புக்கொண்டபோது, ​​​​குரங்குகள் இவர்களின் முடிவைப் புரிந்துகொண்டது போல் முகாமை விட்டு வெளியேறின.

அன்று இவர்கள் பாறைக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் சென்றனர். அதன் பிறகு ரயில் நிலையம் வந்தது. அதை அடுத்து பல வளர்ச்சிகள் செகந்திராபாத் வந்தடைந்தது. புனித பாறை அப்படியே இருந்தது. இன்றும் கூட செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள மோண்டா மார்க்கெட், காஸ்மண்டி சாலையில் உள்ள இந்த இடத்தைப் பார்க்கலாம்.

பஞ்சமுகி ஹனுமான் கோவில், காஸ்மண்டி சாலை

நீங்கள் செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும்போது ஸ்டேஷன் சாலையில் இடதுபுறம் திரும்பவும், சிறிது தூரம் சென்றதும் இடதுபுறத்தில் காஸ்மண்டி சாலை என்று அழைக்கப்படும் சாலை உள்ளது, இச்சாலை மொத்த விற்பனை சந்தையான மோண்டா சந்தைக்கு உங்களை அழைத்துச் செல்லும். சாலையில் நுழைந்தவுடன் இடதுபுறம் சில கெஜங்கள் தொலைவில் கிட்டத்தட்ட இருபது அடி உயரமுள்ள செவ்வக வடிவ காவி நிற வளைவு உங்களை வரவேற்கும். வட்டு, சூலாயுதம் மற்றும் பிற ஆயுதங்களுடன் பெரிய கோவில் காவலர்கள் இருபுறமும் நின்று கோவிலைக் காக்கிறார்கள். ஆலமரம் மற்றும் வேப்ப மரங்கள் வளைவுக்கு மேலே காணப்படுகின்றன. வளைவு ஒரு சிறிய மண்டபத்தால் முடிசூட்டப்பட்டுள்ளது, அதில் ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ சீதையின் தாமரை பாதங்களுக்கு அருகில் ஸ்ரீ ஹனுமான் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் கோவில் வளாகம்

ஆலமரத்துடன் வேப்ப மரம்,ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் கோயில், காஸ்மண்டி சாலை, செகந்திராபாத் வளைவு வழியாக உள்ளே நுழையும்போது ஸ்ரீ பஞ்சமுகி அனுமனின் பிரதான சன்னதியைக் காணலாம். கோவில் முழுமையாக ஒரே பாறையினால் ஆனது. ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் எதிரில் ஒரு சிறிய முக மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ பஞ்சமுகி ஆஞ்சநேயரின் வலம் வரும் பாதையாக பாறையைச் சுற்றி ஒரு சிறிய இடம் உள்ளது. இந்த வளாகம் கிழக்கு நோக்கி உள்ளது, மேலும் முக்கிய தெய்வம். ஸ்ரீ ராமர், ஸ்ரீ சீதை மற்றும் ஸ்ரீ லக்ஷ்மணர்களுக்காக ஒரு சிறிய தனி சன்னதி ஸ்ரீ ஹனுமான் சன்னதிக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. பாறையின் தெற்குப் பகுதியில் பாறையை வெடிக்கச் செய்வதற்காக அன்று செய்யப்பட்ட துளைகளைக் காணலாம். அவர்களால் அன்று உடைக்கப்பட்ட 'த்வஜ ஸ்தம்பம்' அருகில் உள்ளது. பாறையில் சிவபரிவாரம் சிற்பமாக உள்ளது, இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது.

ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான்

இக்கோயிலின் ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் நின்ற கோலத்தில் சுமார் எட்டடி உயரத்தில் இருக்கிறார். கிழக்கு நோக்கியிருக்கும் தெய்வத்தின் ஐந்து முகங்களும் பக்தர்களுக்குத் தெரியும். [ஹனுமான், நரசிம்மர், பகவான், கருடன், வராஹ, ஹயக்ரேவா] ஸ்ரீ ஆஞ்சநேயரின் பத்து கைகளிலும் [தச புஜங்கள்] , இரு கையைகளைத் தவிர மற்றவைகளில் ஆயுதம் இருப்பதைக் காணலாம். எல்லாக் கண்களும் கருணை ஒளிர்கின்றது. இந்த கோவிலின் முக்கிய தெய்வத்தை பார்த்த நொடியில் நீங்கள் இந்த பிரபுவின் மீது காதல் கொள்வீர்கள் என்பது உறுதி.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் கோவில், காஸ்மண்டி சாலை, செகந்திராபாத் "

 

அனுபவம்
அனைவரையும் தாராளமாக ஆசீர்வதிக்கும் இந்த கருணா மூர்த்தி ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமானை தரிசிக்க வாருங்கள். தரிசித்த மாத்திரத்தில் அவரால் ஈர்க்கபடுவதை உணர்வீர்கள். நல் நினைவுகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்.       

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு:  ஏப்ரல் 2024


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+