home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

வடக்கு வாசல் ஸ்ரீ அனுமார் கோவில், மதுரை, தமிழ்நாடு

ஜீகே கௌசிக்

வடக்கு வாசல் ஸ்ரீ அனுமார் கோவில், மதுரை, தமிழ்நாடு


மதுரை

வடக்கு வாசல் ஸ்ரீ அனுமார் கோவில், மதுரை, வடக்கு மாசி தெருவு நுழைவாசல் மதுரை தென்னிந்தியாவின் நீண்ட, பெரிய வரலாற்றைக் கொண்ட பழமையான நகரங்களில் ஒன்றாகும். ஸ்ரீ பார்வதியும் ஸ்ரீ சிவனும் ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீசுந்தரேஸ்வரராக தாங்களே ஆட்சி செய்த நகரம் இதுவாகும். மதுரையை ஆண்ட எல்லா ஆட்சியாளர்களும் ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோவிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில் ஆச்சரியமில்லை. மதுரையின் மனித குடியேற்றங்கள் மற்றும் ரோமானிய வர்த்தக தொடர்புகள் கிமு 300க்கு முந்தையது என்பது குறித்து மணலூரில் இந்தியத் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சியிலிருந்து தெளிவாகிறது. ரோமானிய வரலாற்றாசிரியர்களான பிளினி தி யங்கர் (61 – c. 112 CE), டோலமி (c. 90 – c. CE 168), கிரேக்கப் புவியியலாளர் ஸ்ட்ராபோ (கிமு 64/63 – c. 24 CE) ஆகியோரின் படைப்புகளில் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட வரலாறு, மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து மதுரை நகரம் எப்போதும் ஆட்சியாளர்களின் தலைநகரத்திற்கான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகிறது. பாண்டிய வம்சம் தமிழக வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த ஒரு முக்கிய ஆட்சியாளர்கள். அவர்கள் தொடர்ந்து மதுரையைத் தலைநகராகக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெவ்வேறு காலகட்டங்களில் மதுரை

தற்போதைய மதுரை மூன்றாவது மதுரை என்றாலும், முதல் மதுரை கடலுக்கு அடியில் அடித்துச் செல்லப்பட்டது, இரண்டாவது மதுரையும் கடலுக்கு அடியில் அடித்துச் செல்லப்பட்டது. பாண்டியர்கள் இப்பகுதியின் ஆட்சியாளர்களாக இருந்தனர் மற்றும் மூன்று மதுரையும் பாண்டியர்களின் தலைநகராக இருந்தது. பாண்டியர்கள் தமிழ் மொழியின் புரவலர்களாகவும், மொழி கற்றவர்களைக் கௌரவித்தவர்களாகவும் இருந்தனர். மதுரை பாண்டியர்களின் தலைநகராக மட்டுமல்லாமல் தமிழின் தலைநகராகவும் இருந்தது. பாண்டிய மன்னர்களின் ஆதரவில் 'தமிழ்ச் சங்கம்' எனப்படும் மொழி அறிஞர்களின் கூட்டம் தழைத்தோங்கியது. பாண்டியரின் இந்த ஆதரவின் காலம் ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகள் வரை நீண்டுள்ளது. இக்காலம் மூன்று தமிழ்ச் சங்க காலங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்த தகவல்கள் கல்வித் தன்மை கொண்டவையாக இருந்தாலும், பொதுவாக மூன்றாம் தமிழ்ச்சங்கம் மற்றும் இக்கால பாண்டிய மன்னர்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. இக்கால பாண்டிய மன்னர்கள் மற்றும் மதுரை பற்றிய பல தகவல்கள் இலக்கியங்கள், கல்வெட்டுகளில் கிடைக்கின்றன.

மதுரையின் முதல் கோட்டை

மாங்குடி மருதனார் அவர்களின் 2-3 ஆம் நூற்றாண்டுப் படைப்பான “மதுரைக்காஞ்சி” இலக்கியத்தில் மதுரை மாநகரம் பற்றிய விளக்கம் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 782 வரிகளைக் கொண்ட மிக நீளமான கவிதை இதுவாகும். 327 முதல் 724 வரையுள்ள வரிகள் மதுரை நகரத்தின் தளவமைப்பை விவரிக்கின்றன; அரண்மனையின் அமைப்பு; நான்கு வகையான ஆயுதப் படைகள்; பகல் மற்றும் இரவு நேரங்களில் கடைகள்; திருவிழாக்கள்; மக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகள்; விபச்சாரிகளின் வாழ்க்கை; மதுரையின் சிறப்பு அம்சங்கள் என்று மற்றும் பல.

வடக்கு வாசல் ஸ்ரீ அனுமார் கோவில், மதுரை, வடக்கு மாசி தெருவு நுழைவாசல் நகர நுழைவாயிலைப் பற்றி ஆசிரியர் கூறும் போது, ​​ஆழமான அகழி மற்றும் உயரமான உயர்ந்த அரண்களால் சூழப்பட்ட நகரத்தின் கோட்டையை விவரிக்கிறார். நகரின் நுழைவாயில்கள் பழமையானவை மற்றும் வலிமையானவை என்றும் நுழைவாயில்களில் உயர்ந்த கோபுரங்களும், பாதுகாப்பு தெய்வமும், வலுவான மற்றும் கனமான கதவுகளும் இருந்தன என்றும், கோட்டை கதவுகள் நன்றாக வேலைசெய்ய எண்ணெய் பூசப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறார். அப்போது ஆசிரியர் வைகை நதியை மதுரைக்கு ஒப்பிட்டு மதுரை வாசலில் மக்கள் கூட்டம் எப்போதும் வற்றாத ஓடும் வைகை போல நகர்கிறது என்கிறார். தெருக்களின் அகலம் ஆற்றின் அகலம் போலுள்ளதாகவும் இருபுறமும் வீடுகள் உள்ளதாகவும் கூறும் அவர் அவை சாதாரண வீடுகள் என்று நாம் சிந்திக்க அவசியமில்லாமல், அவை "பல அடுக்குகள் கொண்ட திறமை மிகு" என்று கூறுகிறார். அதாவது பல ஜன்னல்கள்/மேல்மாடத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட வேலைப்பாடுகளுடன் கூடிய வீடுகள் என்று ஆசிரியர் கூறுகிறார்.

மதுரையில் 2-3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே அகழியும், பெரிய வலிமையான நுழைவாயிலும் காவல் தெய்வங்களுடன் இருந்தது என்பது மேற்கூறியவற்றிலிருந்து தெளிவாகிறது.

நாயக்கர்களால் கட்டப்பட்ட மதுரைக் கோட்டை

பாண்டியர் காலத்து இக்கோட்டை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோயிலை மையமாகக் கொண்ட மதிரை நகரத்தினை சூழ்ந்திருந்தது. இன்றைய ஆவணி மூல வீதிகளுக்குள் அன்றைய பாண்டியர்களின் கோட்டை இருந்தது என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்து. பின்னர் மதுரை நகரம் நாயக்கர்களின் ஆட்சியின் கீழ் வந்த பொழுது நகரம் விரிவாக்கப்பட்டது. பாண்டியர்கள் கட்டிய முந்தைய கோட்டையின் வெளிப்புறம் வட்ட வடிவில் உருவாக்கி புதிய கோட்டை அவர்களால் கட்டப்பட்டது. நாயக்கர்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையும் கூட ஆங்கிலேயர் ஆட்சியின் போது நகரத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக வீழ்த்தப்பட்டது. இப்படி மதுரைக்கு வெவ்வேறு காலங்களில் இரண்டு கோட்டைகள் இருந்தன என்பது தெரிகிறது.

மதுரைக் கோட்டைகளின் எச்சங்கள்

மதுரை, விட்ட வாசல் என்று அழைக்கப்படும் பாண்டியர் கால கோட்டையின் கிழக்கு வாயிலை அறிவிக்கும் பலகை பாண்டியர்களால் கட்டப்பட்ட பழைய கோட்டையைப் பற்றி நமக்கு நினைவூட்டுவதற்கு இன்று எஞ்சியிருப்பது ஸ்ரீ மீனாட்சி கோவிலின் கிழக்குப் பகுதியிலிருந்த அன்றைய வாயிலின் எஞ்சியுள்ள கட்டமைப்பின் பகுதியாகும். பரவலாக விட்ட வாசல் என்று அழைக்கப்படுகிற இந்த பாண்டியர் கால கிழக்கு வாயிலில் "பிலிப்" என்பவரால் நிறுவிய கல்வெட்டு உள்ளது. இதன் வாசகம் பின்வருமாறு: "இந்த அமைப்பு முன்பு பழைய பாண்டியன் கோட்டையின் கிழக்கு வாயில் வழியாக இருந்தது. இதனை எந்தவொரு நபரும் அழிக்கிறார், அகற்றுகிறார், மாற்றுகிறார் என்றாலோ அல்லது இதன் எந்தப் பகுதியையும் காயப்படுத்தினாலோ அல்லது சேதப்படுத்தினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்." கிழக்கு வாயிலின் காவல் தெய்வமான ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் உள்ளது. அப்போதைய அகழியை நினைவூட்டும் வகையில், "மேல பாண்டியன் அகழ்த் தெரு" என்ற பெயரில் ஒரு தெரு உள்ளது.

நாயக்கர்களால் கட்டப்பட்ட கோட்டையில் எழுபத்திரண்டு கண்காணிப்பு கோபுரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேற்கு வெளி தெருவில் உள்ள மத்திய பெரியார் பேருந்து நிலையம் அருகே கோட்டைகளில் 72 கண்காணிப்பு கோபுரங்களில் ஒன்று காணப்படுகிறது.

கோட்டையின் நுழைவாயில்

வடக்கு மாசி தெரு, வடக்கு வெளி தெரு மற்றும் வாசல் ஹனூர் கோவில், மதுரை வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படி, நாயக்கர்கள் காலத்தில் மதுரை மாசி வீதிகள் மட்டுமே. நாயக்கர் காலத்திலிருந்த கோட்டைக்கு அப்பால் மதுரையை விரிவுபடுத்துவதற்காக, ஆங்கிலேயர் ஆட்சியின் போது கோட்டை இடிக்கப்பட்டது. பிளாக்பர்ன் என்பவர் நாயக்கர் காலத்துக் கோட்டையை வீழ்த்தினார். கோட்டை அகழியைச் சொந்த செலவில் நிரப்பக்கூடிய மக்களுக்கு அகழி நிலம் வழங்கப்பட்டது. சர்வேயர் மாரெட் மற்றும் மேற்பார்வையாளர் பெருமாள் மேஸ்திரி ஆகியோர் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகித்தனர். தற்போதைய மாரெட் தெருக்கள் மற்றும் வெளி வீதிகள் மதுரை நாயக்கர் காலத்துக் கோட்டையின் அகழி இருந்தது. கோட்டைச் சுவர்கள் இருந்த இடத்தில் இன்று பெருமாள் மேஸ்திரி வீதிகள் உள்ளன.

எழுபத்திரண்டு கொத்தளங்களைக் கொண்ட கோட்டை அனைத்துத் திசைகளிலும் முக்கிய வாயில்களைக் கொண்டிருந்தது. இன்று கோட்டை வாசல் இருந்த பகுதி வடக்கு வாசல், கிழக்கு வாசல், தெற்கு வாசல், முதலிய பெயர்களில் அழைக்கப்படுகிறது.

வடக்கு வாசல்

வடக்கு வாசல் ஸ்ரீ அனுமார் கோவில், வடக்கு வெளி தெருவு நுழைவாசல் வடக்குவாசல் ஸ்ரீ ஹனுமார் கோவில் என்று குறிக்கப்பட்ட கூகுள் வரைபடத்துடன் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இக்கோவில் வடக்கு மாசி தெரு மற்றும் வடக்கு வெளி தெருவை இணைக்கிற பாதையாகவும் உள்ளது. எந்த தெருவிலிருந்தும் பக்தர்கள் கோயிலுக்குள் செல்லலாம். வடக்கு பெருமாள் மேஸ்திரி தெருவில் கோயில் குறுக்கிடப்பட்டிருப்பதைக் கவனத்தில் கொள்ளவும், வேறுவிதமாகக் கூறினால், கோட்டைச் சுவர் அங்கு முடிவதின் காரணம் அங்கு கொத்தளமோ அல்லது கோட்டையின் நுழைவாயிலுக்காகவோ இருந்திருக்க வேண்டும் என்று கூறலாம். கோட்டையின் வாசல் - வடக்கு வாசல் இந்த இடத்திலிருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த இடத்தில் ஸ்ரீ ஹனுமான் கோவில் இருப்பதால் நிகழ்தகவு மேலும் அதிகரிக்கிறது. கோயில் வளாகத்தின் அகலமும் நீளமும் அக்காலக் கோட்டையின் நுழைவாயிலுடன் ஒப்பிடத்தக்கது. மாநகராட்சி அலுவலகம் செயல்படும் பெரியார் பேருந்து நிலையில் அருகில் இன்னும் எஞ்சியிருக்கும் கோட்டை கொத்தளத்தின் அளவுடனும் ஒப்பிடலாம். இது நாயக்கர்கள் காலத்தின் அப்போதைய கோட்டையான வடக்கு வாசலை நிலைநிறுத்துவதற்கான சாத்தியத்தை மேலும் ஆதரிக்கிறது.

கோட்டையின் பாதுகாவலர் அனுமன்

ஹனுமான் கிராமத்தின் பாதுகாவலராகவும், ராஜ்யத்தின் பாதுகாவலராகவும், ஆண்களுக்கும், பெண்களுக்கும், தலைவனுக்கும், அரசனுக்கும் வலிமை, வீரம் ஆகியவற்றைக் கொடுக்கும் தெய்வமாக வணங்கப்படுகிறார். இது விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களின் முழுமையான நம்பிக்கை. விஜயநகர சாம்ராஜ்யத்தின் நிலப்பிரபுத்துவ மன்னர்களால் கட்டப்பட்ட அல்லது பராமரிக்கப்பட்ட பல கோட்டைகளில், ஸ்ரீ ஹனுமான் காவல் தெய்வமாக நிறுவப்பட்டிருந்தார் என்பது பிரபலம். இந்த ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட கோட்டைகளில் ஸ்ரீ ஹனுமானுக்கு கோயில் இருப்பது பொதுவாக் காணப்படுகிறது. மதுரை நாயக்கர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் நன்கு அறியப்பட்ட நிலப்பிரபுக்களில் ஒருவர், எனவே அவர்கள் மதுரையில் கோட்டையைக் கட்டியபோது அவர்கள் காவல் தெய்வமான ஸ்ரீ ஹனுமானையும் நிறுவியதில் ஆச்சரியமில்லை. மதுரையில், கோட்டையின் வடக்கு நுழைவாயிலில் ஸ்ரீ ஹனுமானுக்கான கோவில் ஒன்று உள்ளது.

ஸ்ரீ ஹனுமான் கோவில் வளாகம்

முன்பு கூறியது போல், பக்தர்கள் கோயிலுக்குள் வடக்கு வெளி தெரு அல்லது வடக்கு மாசி தெருவில் நுழையலாம். வடக்கு வேளி தெருவில் கோவிலின் நுழைவாயிலில் ஒற்றை அடுக்கு கோபுரம் உள்ளது, அதன் மையத்தில் ஸ்ரீ சீதா, ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மணர் ஆகியோரை சித்தரிக்கும் வளைவு உள்ளது. கோபுரத்தின் இருபுறங்களிலும் யோக நரசிம்மர் மற்றும் யோக ஆஞ்சநேயரின் உருவம் கொண்ட மேலும் இரண்டு வளைவுகள் காணப்படுகின்றன. யோக ஆஞ்சநேய வளைவுக்கு அடுத்ததாக ஸ்ரீராம தர்பார் சித்தரிக்கப்பட்ட மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வளைவு உள்ளது. யோக நரசிம்மரின் பக்கத்தில், ஆஞ்சநேயர் வாலால் ஆன இருக்கையில் அமர்ந்திருப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது. சுண்ணாம்பு மற்றும் சிமெண்டால் செய்யப்பட்ட இவை அனைத்தும் அற்புதமான கலைப்படைப்பு. இவ்வழியில் நுழைந்தால் திறந்த வெளி, பிறகு வலது பக்கம் ஸ்ரீ ஆஞ்சநேயரின் சன்னிதியைக் காண்கிறோம். ஆஞ்சநேயர் சன்னிதியின் இடப்புறம் விநாயகரும், வலதுபுறம் ஸ்ரீ கிருஷ்ணரும் உள்ளனர். ஆஞ்சநேயரின் கிழக்கு நோக்கிய சன்னிதியின் மூன்று பக்கங்களிலும், தெற்கே ஸ்ரீ யோக ஆஞ்சநேயரும், மேற்கில் பஞ்சமுக ஆஞ்சநேயரும், வடக்கே பக்த ஆஞ்சநேயரும் கோஷ்ட தெய்வமாக நிறுவப்பட்டுள்ளனர். அருகில் இருக்கும் அரச மரத்தடியில் ஸ்ரீ மாரியம்மன் சன்னிதியுள்ளது. சில நாக ப்ரதிஷ்ட்டைகளும் இங்குக் காணப்படுகின்றன. இதை ஒட்டி வடக்கு மாசி வீதிக்குச் செல்லும் நீண்ட பாதையைப் பார்க்க முடிந்தது.

ஸ்ரீ ஹனுமான்

ஸ்ரீ அனுமார், வடக்கு வாசல் கோவில், மதுரை இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஹனுமான் கிழக்கு நோக்கி இருக்கிறார். கிரானைட் கல்லால் செய்யப்பட்ட மூர்த்தம் சுமார் மூன்றடி உயரத்தில் புடைப்பு சிலை வடிவில் உள்ளது.

இறைவன் தனது இடது தாமரை பாதத்தை முன்னால் வைத்து வடக்கு நோக்கி நடப்பதைக் காணலாம். அவரது வலது தாமரை பாதம் தரையிலிருந்து சற்று உயர்ந்து காணப்படுகிறது. அவருடைய பாதங்கள் இரண்டும் நூபுரம் மற்றும் தண்டை அலங்கரிக்கின்றது. இடது இடுப்பில் ஊன்றியுள்ள அவரது இடது கையில் அவர் சௌகந்திகா பூவின் தண்டுகளைப் பிடித்துள்ளார். இன்னும் மலர இருக்கும் பூ அவரது இடது தோளுக்கு மேலே தெரிகிறது. மணிக்கட்டில் கங்கணமும் மேல் கரத்தில் கேயுரமும் காணப்படுகின்றது. மற்றொரு கையை மேலே உயர்த்தி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்பை அலங்கரிக்கும் ஆபரணங்களை அணிந்துள்ளார். யக்ஞோபவீதம், உத்திரியமும் காணப்படுகின்றன. இறைவனின் வால் சிறிய அழகிய மணியை அலங்கரிக்கும் வளைந்த முனையுடன் அவரது தலைக்கு மேலே உயர்த்தப்பட்டுள்ளது. இறைவன் குண்டலம் அணிந்திருக்கிறார், அவருடைய கேசம் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. தலைக்கவசம் போன்ற அழகான சிறிய கிரீடம் கம்பீரத்தைச் சேர்க்கிறது. அவரது ஒளிமயமான கண்கள் பக்தன் மீது கருணை பொழிவதைக் காணலாம்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "வடக்கு வாசல் ஹனுமார் கோவில், மதுரை"

 

அனுபவம்
ஏறக்குறைய இருநூறு ஆண்டுகால நாயக்கர்களின் ஆட்சியில் நகரத்தையும் மக்களையும் பாதுகாத்து, எல்லா இடர்பாடுகளுக்கும் எதிராக, ஆட்சியாளர்களுக்குத் துணையாக நின்ற அவர், தம் பக்தரை எந்தக் கஷ்டத்திலும் இருந்து காப்பாற்றி, அவரை நேர்வழியில் நடத்தத் துடிக்கிறார்.       

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு:  மார்ச் 2024


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+