home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

சனிவார் வீர் மாருதி மந்திர், சனிவார் பேட், புனே

ஜீகே கௌசிக்

சனிவார் வீர் மாருதி மந்திர், சனிவார் பேட், புனே


புனே

இன்று புனே இந்தியாவின் சிறந்த நகரங்களில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவின் கலாச்சார தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது. புனேவின் தோற்றம் தற்போது கசபே என்று அழைக்கப்படும் குடியேற்றப் பகுதியுடன் தொடங்குகிறது.

முந்தைய நாட்களின் கசபே முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. சிவாஜி மகாராஜ் காலத்தில், நகரம் கசபே புனே என மறுஉரு எடுத்தது. கசபே கணபதி கோயில் மற்றும் லால் மஹால் ஆகியவற்றை சிவாஜி அவர்கள் தனது தாயாருக்கான நிறுவி, புனேவை மீண்டும் வாழக்கூடியதாகவும், கலகலப்பாகவும் மாற்றினார்.

புனேயின் தோற்றம் மற்றும் அதன் பெயர் பற்றி மேலும் அறிய கிளிக் செய்யவும்

புனே, மாருதி, கணேஷ் மற்றும் மசோபா

சனிவார் வீர் மாருதி மந்திர், சனிவார் பேட், புனே ஒவ்வொரு கிராமத்தின் எல்லையிலும் ஸ்ரீ மாருதி மற்றும்/அல்லது ஸ்ரீ விநாயகருக்கு கோயில் இருப்பது வழக்கம். தற்போதைய ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் கூட இந்த நடைமுறை பரவலாக உள்ளது. இந்த இரண்டு தெய்வங்கள் தவிர, மகாராஷ்டிராவின் பல கிராமங்களில் ஸ்ரீ மசோபாவிற்கும் ஒரு கோவில் உள்ளது. இத்தெய்வங்கள் அனைத்து தடைகளையும் நீக்கி, கிராமத்தை காத்து நல்ல செழிப்பை தருவதாக நம்பப்படுவதால், இத்தெய்வங்களுக்கு கிராமத்தின் எல்லையில் கோயில்கள் கட்டியுள்ளனர்.

புனேயும் இந்த நடைமுறைக்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பேட்டையை உருவாக்கும்போதும் அல்லது ஏற்கனவே உள்ள பேட்டையை மாற்றியமைக்கும்போதும், ​​இந்த கோயில்கள் பேட்டையின் எல்லையை வரையறுக்க வரும் விதம் அமைக்கப்படும்.

புனேவின் பேட்டைகள்

ஷாஹு ராஜேவின் ஆட்சியின் போது, அவர் புனே மாகாணத்தை பேஷ்வாக்களுக்கு வழங்கினார். பேஷ்வாக்கள் காலத்தில், புனேவின் வளர்ச்சி தொடங்கியது. முதலாம் பாஜிராவ் பேஷ்வா தனது நிர்வாகத்தின் தலைமையகமாக புனேவுடன் குடியேறியவுடன் புனேவின் உண்மையான நகரமயமாக்கல் மற்றும் வளர்ச்சி தொடங்கியது. புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டு ’பெத்’ [பேட்டை] என்று அழைக்கப்பட்டன. பெத் அடிப்படையில் ஒரு வணிக இடம். புதியதாக உருவாகிய பெத் அதை உருவாக்கிய நபரின் பெயரால் பெயரிடப்பட்டது அல்லது வாரத்தின் ஒரு நாளின் பெயரால் அழைக்கப்பட்டது.

குடிமக்களுக்கு வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கத்திற்காக, சில பழைய பெத்-கள் பிரிக்கப்பட்டு, புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டு, இந்த பெத்-கள் புதிய பெயர்களுடன் மறுசீரமைக்கப்பட்டன. முன்பு கூறப்பட்டபடி, ஸ்ரீ மாருதிக்கு ஒரு கோயிலை நிறுவுவதன் மூலம் பீடங்களின் எல்லைகள் குறிக்கப்பட்டன. புனேயில் மாருதிக்கு பல கோவில்களை நாம் காண இதுவும் ஒரு காரணம்.

சனிவார் பெத்

முதலாம் பாஜிராவ் புனேவை தனது தலைமையகமாக மாற்றியபோது, அந்த நகரத்தில் ஏற்கனவே கஸ்பா, சனிவார், ரவிவார், சோம்வார், மங்கள்வார் மற்றும் புத்வார் ஆகிய ஆறு "பெத்-கள்" இருந்தன. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த முர்தாசாபாத், சனிவார் பெத் ஆக மாற்றப்பட்டது. மூன்றாம் பானிபட் போரில் பங்கேற்ற வீரர்கள் பலர் இங்கு இருந்துள்ளனர். இந்த சனிவார் பெத் மிகவும் பெரியது.

பார் சன்னதி மற்றும் வீர மாருதி மந்திர்

சனிவார் வீர் மாருதி மந்திர், சனிவார் பேட், புனே சனிவார் பெத் வீர மாருதி கோவில், புனே முனிசிபல் கார்ப்பரேஷன் தரம் II பட்டியலில் வெளியிடப்பட்ட பாரம்பரிய பட்டியலில் எண் 77 இல் உள்ள பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

புனேயில் பல மாருதி மந்திர்கள் இருந்தாலும், புனேவில் ஒரே ஒரு வீர மாருதி மட்டுமே உள்ளது. இது ஓம்காரேஷ்வர் பாதை, நம்தேவ் ராவுத் பாதை மற்றும் நிரஞ்சன் மகாதேவ் பாதை ஆகியவற்றின் சந்திப்பில் சனிவார் பெத்தில் அமைந்துள்ளது. கோவில் அமைந்துள்ள இடம் சனிவார் பெத்தின் நடுப்பகுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு குறிப்பிட்டது போல, பீடத்திற்கு எல்லைக் கல் நடுவதும், எல்லையில் மாருதிக்கு ஆலயம் அமைப்பதும் வழக்கம். புனேவில் எல்லைக் கல் "பார்" என்று அழைக்கப்படுகிறது. எல்லைக் கல்லில் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தால், அது வழிபடப்படுகிறது, அது "பார் சன்னதி" என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய "பார்" ஒரு மரத்தின் கீழ் வைக்கப்படுகிறது. இதுவரை புனேவைப் பொறுத்த வரையில், இப்பகுதியில் மற்ற வளர்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், அத்தகைய "பார்" தொடப்படாமல் உள்ளது. இத்தகைய பாதுகாக்கப்பட்ட பார் சன்னதிகள் புனேவின் பழைய வரலாற்றையும் அதன் பங்களிப்பையும் நமக்குச் சொல்லி நினைவூட்டுகின்றன. பொதுவாக பார் சன்னிதிக்கு இணையாக மாருதிக்கும் கோயிலும் கட்டப்படுகிறது.

இந்த [வீர்] மாருதி மந்திர் சனிவர் பெத்தில் உள்ள பார் சன்னதியுடன் அமைக்கப்பட்ட அத்தகைய ஒரு மந்திர் ஆகும். முக்கிய சந்திப்புகளில் ஒன்றாக இருந்தாலும், ஆலயத்தின் அருகில் அமைதியாக இருப்பது விசேடமே. இந்த ஆலயம் ’பானிபட்’ டில் போரிட்டு உயிர் தியாகம் செய்த வீர மராத்தியர்களை நினைவுகூரும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது பானிபட் போருக்கான புனே தொடர்பை மேலும் அறிய கிளிக் செய்யவும்

மூன்றாம் பானிபெட் போரில் போராடிய பல வீரர்கள் சனிவார் பெத்தைச் சேர்ந்தவர்கள். இப்போதும் கூட பானிபட்டின் அந்த "வீரர்களின்" சந்ததியினர் இந்த பெத்-தில் வசிக்கின்றனர். "வீர்" குடும்பத்தின் வம்சாவளியின் மூத்த மகன் சனிவார் பெத்தின் வீர மாருதியை வணங்கி பூஜை செய்வது என்பது பாரம்பரியமாக நடைபெருகிறது. இந்த பூஜை ஹோலி நாளில் செய்யப்படுகிறது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த முன்னோர்கள் ஆசி வேண்டி செய்யப்படும் பூஜை இது. இது தவிர ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டத்தின் போதும், இந்த வீரா்கள் போற்றப்படுகின்றனா்.

சனிவார் வீர் மாருதி, சனிவார் பேட், புனே கோயில் தெற்கு நோக்கி உள்ளது மற்றும் மந்திர் முன் பெரிய அங்கன் உள்ளது. பெரிய அரச மரம் மற்றும் அதன் கீழ் பார் சன்னதி உள்ளது. நான் தரிசனம் செய்தபோது [2014] பர் சன்னதிக்கு மண்டபம் இல்லை, சமீபகாலமாக பார் சன்னதிக்காக ஒரு பளிங்கு மண்டபம் செய்யப்பட்டது என்பதை நான் புரிந்துகொண்டேன். பக்தர்கள் அங்கிருந்தே இறைவனை தரிசனம் செய்யலாம். ஸ்ரீ சமர்த் ராம்தாஸின் ’பீமரூபி மாருதி’ ஸ்லோகத்தை பக்தர்கள் வாசிப்பதை நாள் முழுவதும் காணலாம். மந்திரில் உள்ள இனிமையான சூழல் பக்தர்களுக்கு மன அமைதியைத் தருகிறது.

வீர் மாருதி

இறைவனின் மூர்த்தம் சுமார் நான்கடி உயரம் மற்றும் தெற்கு நோக்கிய மேடையில் அமைக்கப்பட்டுள்ளது.

இறைவன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இறைவனின் இரண்டு தாமரை பாதங்களையும் தண்டை அலங்கரிக்கிறது. அவரது காலடியில் ஒரு அரக்கன் காணப்படுகிடான். அரக்கனின் பாதங்கள் பிரபுவின் வலது காலின் கீழும், அரக்கனின் தலை பிரபுவின் இடது பாதத்தின் கீழும் உள்ளன. அரக்கனின் பயம், பதட்டம் மற்றும் நடுக்கம் ஆகியவற்றை அரக்கனின் முகபாவனையில் முழுமையாகக் காணப்படுகின்றது. இறைவன் வேட்டியை கச்சம் வைத்து அணிந்துள்ளார். அவர் மார்பை அலங்காரமான ஆபரணங்களை அணிந்துள்ளார். அவரது இரு கைகளிலும் கேயூரம் முன் கையிலும், மணிக்கட்டில் கங்கணமும் அலங்கரிக்கின்றன. அவரது இடது கை அவரது தொப்புளுக்கு அருகில் உள்ளது. அவரது வலது கை முஷ்டி முத்திரையைக் காட்டுகிறது, இது எதிரியுடன் போரிடத் தயாராக இருப்பதைக் குறிக்கிறது. அவரது கழுத்தில் ஒரு அட்டிகையும் ஒரு மாலை உள்ளது. இறைவனின் வால் அவரது தலைக்கு மேலே உயர்த்தப்பட்டு இடது தோள்பட்டைக்கு அருகில் முடிகிறது. இறைவன் தலையில் கிரீடம் அணிந்துள்ளார். அவரது பெரிய காதுகளில் அவர் குண்டல் அணிந்துள்ளார். இறைவனுக்கு பெரிய மீசை. இறைவனின் வசீகரிக்கும் பெரிய கண்களைப் பாருங்கள். வசீகரம் என்பது விவரிக்க ஒரு எளிய சொல் என்பதை போன்று ஒரு நிலையை பக்தர்கள் உணரலாம். இறைவன் முஷ்டி முத்திரையைக் காட்டினாலும் எதிரி அவன் இறைவனின் கண்ணை கண்டதும் சரணாகதி அடைந்துவிடுவான் என்பது தின்னம்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "சனிவார் வீர் மாருதி மந்திர், சனிவார் பேட், புனே"

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் இறைவன் தனது பக்தர்களுக்கு தன்னம்பிக்கையையும் அச்சமின்மையையும் அளித்து, துன்பங்களை தைரியமாக எதிர்கொள்ள அவர்களுக்கு உதவுகிறார். இந்த இறைவனின் தரிசனம் நம்மிடம் மறைந்திருக்கும் கோபம், எரிச்சல் அல்லது உக்கிரத்தை நிச்சயம் தகர்த்துவிடும்.       

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு:  பிப்ரவரி 2024


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+