home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில், சிவாஜி நகர், பெங்களூர்

ஜீகே கௌசிக்

பெங்களூரு, சிவாஜி நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயா கோயிலின் காட்சி


பெங்களூர்

ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில், சிவாஜி நகர், பெங்களூர் இந்நகரதின் கோவில்களின் தலவரலாறு சிறப்புமிக்கதாகவும் மற்றும் நகரத்தின் வளர்ச்சியின் முடிவற்ற கதைகளைக் கொண்டுள்ளது. பெங்களூர் மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஆஞ்சநேயரின் பல கோவில்களை பற்றிய வரலாற்றினை நாங்கள் இவ்விணைய தளத்தில் தந்துள்ளோம். நகரத்தின் பெயர் பெங்களூரில் இருந்து பெங்களூறு என்று மாறிவிட்டது, உள்ளூர் மக்கள் கோவிலின் ஸ்தல புராணத்தை கூறுவதில் காட்டும் ஆர்வமும் உற்சாகமும் ஆச்சரியமாக இருக்கிறது.

சிவாஜி நகர்

அறுபதுகளின் நடுவில் பி.ஆர்.வி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சிவாஜி நகர் பேருந்து நிலையத்தில் பேருந்து பிடிப்பது வழக்கம், அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் இந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அந்த நேரத்தில் இந்த பகுதி ரஸ்ஸல் மார்க்கெட் மற்றும் பௌரிங் மருத்துவமனைக்கு பெயர் பெற்றது. "சிவாஜிநகரில் ஏதாவது கிடைக்காவிட்டால், உலகில் எங்கும் கிடைக்காது!" என்று பழைய பெங்களூருவாசிகள் சொல்வார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு சத்ரபதி சிவாஜியின் நினைவாக இந்தப் பகுதிக்கு சிவாஜி நகர் என்று பெயரிடப்பட்டது. ஜிஜாபாய் மூலம் பெங்களூரின் ஜாகிர்தாராக இருந்த ஷாஜி போன்ஸ்லேவின் மகன் பின்நாட்களில் சத்திரபதி சிவாஜி என்று பெயர் எடுத்த சிவாஜி.

முதலில், சிவாஜிநகர் ஒரு நீர்நிலையாக இருந்தது, இது 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டில் விவசாய குடியேற்றமாக மாறியது. அந்த நேரத்தில், சிலர், பெரும்பாலும் விவசாயிகள், தமிழ்நாட்டின் செஞ்சியில் இருந்து வந்து ஒரு சிறிய கிராமத்தை இங்கு உருவாக்கினார்கள். தங்கள் குடியிருப்பைச் சுற்றி படிப்படியாக ஒரு மண் சுவர் கட்டினார்கள். ஆரம்பத்தில் இந்த கிராமம் பெலிக்கஹள்ளி என்று அழைக்கப்பட்டது, இது இங்கு விளைந்த பிலி அக்கி அல்லது 'வெள்ளை அரிசி'யிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம். ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னர் இவ்விடத்தின் அருகில் ’கன்டோன்மென்ட்’ [இராணுவ முகாம்[ பகுதியை உருவாக்கியது. ஆங்கிலேயர்கள் தங்கள் தேவையான பொருள்களை வாங்க இங்கு வர தொடங்கினார்கள், அதனால் இவ்விடம் வணிக நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய இடமாக மாறியது. இவ்விடத்தின் பெயர் ’பெலிக்கஹள்ளி’ என்பது 'பிளாக்பல்லி' என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது, ஆங்கிலேயர்கள் இதை 'கருப்பு' மக்களின் குடியேற்றமாகக் குறிப்பிட இப்பெயரால் அழைத்தனரோ! இன்றும், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் மீது 'பிளாக்பல்லி' என்று பெயர் வழங்கும் பலகை உள்ளது.

பழமையான அனுமன் கோவில்

ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில், சிவாஜி நகர், பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தால் 1974 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நினைவு மலரிதழில் உள்ள குறிப்பு ஒன்று சுவாரஸ்யமானது. 1830 ஆம் ஆண்டு வரை, மேலே குறிப்பிட்டுள்ள மண் சுவரின் சில பகுதிகள் இங்கு இருந்திருக்கிறது. சுவரின் மேற்கில், ஹனுமந்தராயருக்கு ஒரு சிறிய கோயிலைக் கட்டியிருந்தார்கள் இந்துக்கள் என்று மேலும் குறிப்பிடுகிறது; கிழக்கில், சோமேஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு கோயில் கட்டப்பட்டிருந்தது. இவ்விரண்டிற்கும் இடையில், கிறிஸ்தவர்கள் கிழக்கு நோக்கிய கூரையுடன் கூடிய சிறிய தேவாலயத்தைக் கட்டி, அதற்குக் "காணிக்கைமாதா தேவாலயம்" (அவர் லேடி ஆஃப் பிரசன்டேஷன்) என்று பெயரிட்டனர்.

மேற்கூறிய குறிப்பிலிருந்து, 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய மண் சுவர் 1830 வரை தொடர்ந்து இருந்ததை அவதானிக்கலாம். மேலும் கோட்டை, கிராமத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஸ்ரீ ஹனுமந்தராயருக்கு கோயில் கட்டும் நடைமுறை இருந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். . அப்போது கிராமங்களுக்கு இடையே எல்லை நிர்ணயம் செய்ய அனுமன் கோயில் இருக்கும் நடைமுறை இருந்துள்ளது. இவை இரண்டையும் சேர்த்து பார்த்தால், இந்தக் கோயில் நானூறு ஆண்டுகள் பழமையானது என ஊகிக்கலாம், இல்லாவிட்டாலும் இருநூறு ஆண்டுகள் நிச்சயமாக பழமையானது.

இன்றைய கோவில்

ஸ்ரீ சீதா தேவி, ஸ்ரீ கோதண்ட ராமர், ஸ்ரீ லக்ஷ்மணர், ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில், சிவாஜி நகர், பெங்களூர் தெற்கு நோக்கிய கோயில் சிவாஜி நகர் பேருந்து நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. மூன்று நிலை ராஜகோபுரம் பக்தர்களை வரவேற்கிறது. ராஜகோபுரத்தில் ஸ்ரீராம பட்டாபிஷேகம், ஸ்ரீ ராம தர்பார் மற்றும் பிற சுதை சிற்பங்கள் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தின் இருபுறமும் இரண்டு பிறை வளைவுகள் உள்ளன. இடது பக்க வளைவில் ஸ்ரீ ராம குருவுடன் ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் வலது பக்கம் ஸ்ரீ மகாலட்சுமி என்று கவர்ச்சிகரமான சுதை சிற்பங்கள் காணப்படுகின்றன.

பழமையில் ஸ்ரீ ஹனுமந்தராய ஆலயம் பிற்காலத்தில் விரிவடைந்து ஸ்ரீஹனுமந்தராயரைத் தவிர மற்ற தெய்வங்களுக்கான சந்நிதியுடன் இன்று காணப்படுகிறது. பிரதான கோவிலுக்குள் நுழைந்தவுடன் ஸ்ரீராம பாதம், கொடி கம்பம், பலி பீடம் ஆகியவை காணப்படுகின்றன. அதன் பிறகு கல் தூண்கள் மற்றும் கல் கூரையுடன் கூடிய செவ்வக மண்டபம் கோவிலின் தொன்மையை நிறுவுகிறது. நடுவில் ஸ்ரீ கோதண்ட ராமர் சந்நிதி உள்ளது. ஸ்ரீராமர் இடது கையில் கோதண்டத்தையும், வலது கையில் அம்பையும் பிடித்திருக்கிறார். ஸ்ரீ ராமரின் வலது பக்கத்தில் ஸ்ரீ லக்ஷ்மணர் வில் அம்புகளுடன் காட்சியளிக்கிறார். ஸ்ரீ ராமரின் இடது பக்கம் ஸ்ரீ சீதா தேவி காட்சி தருகிறார்.

ஸ்ரீ ராமர் சந்நிதியின் வலது பக்கத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு தனி சந்நிதியும், ஸ்ரீ ராமர் சந்நிதியின் இடது பக்கத்தில் ஸ்ரீ ராமானுஜர் மற்றும் ஆச்சாரியர்களுக்கு தனி சந்நிதியும் உள்ளன.

ஸ்ரீ ஆஞ்சநேயர், சிவாஜி நகர், பெங்களூர் ஸ்ரீ ஆஞ்சநேயரின் சந்நிதி இடதுபுறம் காணப்படுகிறது. இந்த சந்நிதியில் முன் மண்டபம் மற்றும் கர்ப்பகிரகம் உள்ளது.

ஸ்ரீ ஆஞ்சநேயர்

ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தம் ஒரே கடினமான பாறையில் புடைப்பு சிலையாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த தெற்கு நோக்கிய சந்நிதியில் ஸ்ரீ ஆஞ்சநேயர் இடது பாதத்தை முன்னோக்கி வைத்து மேற்கு நோக்கி நடப்பதைக் காணலாம். அவரது வலது கால் அடுத்த அடி வைப்பதற்காக தயாராக உள்ளது. கணுக்காலில் தண்டையும் மற்றும் நூபுரமும் அவரது இரண்டு தாமரை பாதங்களிலும் காணப்படுகின்றன. வேட்டியை கச்சம் வைத்து அணிந்துள்ளார். இடது இடுப்புக்கு அருகில் காணப்படும் அவரது இடது கை 'சௌகந்திகா' பூவின் தண்டைப் பிடித்துள்ளது. மலர் அவரது இடது தோளுக்கு சற்று மேலே காணப்படுகிறது. ‘அபய முத்திரை’யில் வலது கையை உயர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரு கைகளிலும் மணிக்கட்டில் கங்கணமும், மேல் கரத்தில் கேயூரமும் அணிந்துள்ளார். அவரது மார்பில் ஆபரணங்கள் காணப்படுகின்றன. வால் அவரது தலைக்கு மேலே சென்று இறுதியில் ஒரு வளைவுடன் இருக்கிறது. வால் நுனியில் இருக்கும் சிறிய மணி ‘லங்கூலத்துக்கு’ அழகு சேர்க்கிறது. சற்றே உப்பிய கன்னங்கள் இறைவனின் கண்களுக்குப் பெருமை சேர்த்து அவரது முகத்திற்கு கம்பீரத்தை கூட்டுகிறது. 'கோர பால்' [துருத்திக்கொண்டிருக்கும் பற்கள்] முகத்திற்கு அழகு சேர்க்கிறது. காதில் அணிந்திருக்கும் குண்டலம் இறைவன் தோளைத் தொட்டபடி காட்சியளிக்கிறது. அவரது கேசம் நேர்த்தியாக சீவப்பட்டு, பின்னி, முடிச்சால் இறுக்கமாகப் பிடிக்கப்படுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஆஞ்சநேயர் திருக்கோவில், சிவாஜி நகர், பெங்களூர்"

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் இறைவனின் தரிசனம் நமது சன்மார்க்க செயல்பாட்டுக்கு தன்னம்பிக்கையையும் செழிப்பையும் அளிப்பது உறுதி.       

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு:  ஜனவரி 2024


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+