home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீஆஞ்சநேயர், நந்தி கோயில், திருச்சி, தமிழ்நாடு

ஜீகே கௌசிக்

திருச்சிராப்பள்ளி தாயுமானசுவாமி கோயிலின் பொனோரமா காட்சி :: உதவி: விக்கி காமன்ஸ்


திருச்சிராப்பள்ளி

திருச்சிராமலை கோட்டை, கோவில் மற்றும் கோவில் குளம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி என்ற இவ்வூரினை பலரும் ’திருச்சி’ என்றே அறிவார்கள். பலருக்கும் ’திருச்சி’ என்ற உடன் நினைவுக்கு வருவது மலைக்கோட்டை தான். வசிகரமான மனதை கவர்ந்து இழுக்கும் தோற்றமுடையது இம்மலை. சுற்று வட்டாரத்தில் எங்கிருந்து பார்த்தாலும் மலை தெரியும். வெவ்வேறு இடத்திலிருந்து இம்மலையை காண்கையில், சிவனின் வாகனமான ரிஷபம், அம்பிகையின் வாகனமான சிம்மம், மற்றும் தும்பிக்கையை நீட்டி அமர்ந்த கோலத்தில் விநாயகர் என மூன்று வடிவங்களில் காட்சியளிப்பது மிகவும் அதிசயதக்க ஓர் விஷயமாகும். தென்கைலாசம் என்று போற்றப்படும் இம்மலையினையே சிவனாக வழிபடுவார்கள். இவ்வூருக்கு திருச்சிராப்பள்ளி என்று பெயர் வரவும் இம்மலையில் குடி கொண்டுள்ள இறைவனே காரணம்.

16ஆம் நூற்றாண்டை சேர்ந்த சைவ. எல்லப்பநாவலர் இயற்றிய "செவ்வந்திப் புராணம்" என்ற நூல் திரிசிராமலைப் புராணமாகும். இப்புராணத்தின் வாயிலாக நாம் அறிவது செவ்வந்தி என்னும் பூவினால் இறைவனுக்கு பூசை திரிசிரன் என்னும் சிவ பக்தர் செய்தமையால் இறைவனுக்கு "செவ்வந்தி நாதர்" என்ற பெயரும், திரிசிரன் என்பவர் பூசித்தமையால் திரிச்சிராபள்ளி என்றும் பெயர் வந்தது என்பதாகும்.

"இம்மலை உச்சியில் இயற்கையாக அமைந்த குகைத்தளமொன்றும் உள்ளது. இக்குகையில் சமண முனிவர்களுக்கான கற்படுக்கைகள் உள்ளன. கிபி 5 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில், அக்கற்படுக்கைகளுக்குரிய சமணத் துறவிகள் பெயர்கள் கல்லில் பொறிக்கப்பெற்றுக் காணப்பெறுகின்றன. அவற்றுள் ஒரு பொறிப்பு ’சிரா’ என்ற சமணத் துறவியின் பெயரைக் குறிப்பிடுகிறது." என்று கூறும் கல்வெட்டு ஆய்வாளர்கள் இவரது பெயரால்தான் ’சிராப்பள்ளி’ என இவ்வூருக்குப் பெயர் வந்தது எனக் கருதுகின்றனர்.

’திருச்சிரா’ மலை

திருச்சிராப்பள்ளிக் குன்றின் மீது மூன்று கோயில்கள் உள்ளன. உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோயிலும், இடையே மகேந்திர பல்லவன் சமணம் விடுத்துச் சைவம் மாறியவுடன் எடுத்த ’லலிதாங்குர பல்லவ ஈச்வர கிருஹம்’ என்னும் குடைவரையும், அதற்குக் கீழாகத் தாயுமானசுவாமி திருக்கோயிலும் உள்ளன. மலைமேல் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்குச் செவ்வந்தி நதர், திருமலைக் கொழுந்தர், தாயுமானவர், திருமலைப் பெருமான் அடிகள், மாத்ருபூதேஸ்வரர் என்னும் திருப்பெயர்கள் உண்டு. இவையெல்லம் வெறும் இடுகுறிப் பெயர்கள் அல்ல. காரணப் பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இத்திருக்கோயில் ’தாயுமானவர் திருக்கோயில்’ என்று தான் பிரசுத்தம். இச்திரிசிராமலை இறைவனிடம் பெறகூடியதை செவ்வந்தி புராணம் "நினத்தது கொடுத்த சருக்கத்தில்" இப்படி கூறுகிறது:

நந்தி கோயில், திருச்சி, தமிழ்நாடு ஒருதலம் இறந்தவர்க்கு உறுதி நல்கிடும்
ஒருதலம் பிறந்தவர்க்கு உதவும் நல்கதி
இருதலம் தம்மினும் எய்தும் யாவையும்
தருதலம் இது அலால் தரையில் இல்லையே .

[காசி தன்னிடம் வந்தவர்களுக்கு முத்தியைக் கொடுக்கும். திருவாரூரானது தன்னிடம் பிறந்தவர்களுக்கு முத்தியைக் கொடுக்கும். இத்தலங்கள் இரண்டிலும் பெறுகின்ற அனத்தையும் திரிசிராமலை தரும்.]

தாயுமானசுவாமி திருக்கோயில்

இத்திருக்கோயில் திரிச்சிரா மலையில் நடு உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் 260 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். தாயுமானவர் சன்னதியைச் சுற்றி பாதாளத்தில் ஒரு பிரகாரம் அமைத்து, இரண்டு அடுக்குகளுடன் கூடியதாக சிவன் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இப்பிரகாரத்தில் பிரம்மா, அகத்தியர், இந்திரன், ஜடாயு, அத்திரி மகரிஷி, தூமகேது, திரிசிரன், அர்ஜுனன், ராமர், ஆஞ்சநேயர், விபீஷணர், நாக கன்னி, சாரமா முனிவர், ரத்னாவதி, மௌனகுரு சுவாமிகள், தாயுமானவ அடிகள், சேக்கிழார் ஆகிய அனைவரும் ஒரே இடத்தில் வரிசையாக காட்சி தருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் செவ்வந்தி நாதர் அருள் புரிந்தார் என்பது புராணம். இத்தெய்வ உருவ சிலைகள் நாயகர்கள் கால சிற்ப அமைதியைக் கொண்டது என்பது தொல் பொருள் ஆய்வாளர்களின் கருத்து.

சாதரணமாக இறைவன் கிழக்கு நேக்கி இருப்பார். இக்கோயிலிலும் அப்படி தான் இருந்தார். ஆனால் சாரமா முனிவர் சிவ பூஜைக்காக வைத்திருந்த செவ்வந்தி பூக்களுக்கு ஆசைப்பட்ட சேழ மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டார். ஆனால் இன்றும் சன்னதி வாசலும், கொடி மரமும் கிழக்கு திசையிலேயே நிலைத்து விட்டதை காணலாம். இன்றும் சிவனுக்கு பூஜையின்போது சன்னதிக்குப் பின்புறத்தில்தான் (கிழக்கு திசையில்) மேளதாளம் வாசித்து, தேவாரம் பாடுகின்றனர்.

இறைவன் முன்பு கிழக்கு நோக்கி இருந்தார் என்பதனை உறுதி செய்யும் வகையாக மலையடிவாரத்தில் கிழக்கு பகுதியில் இன்று நந்தி கோயில் உள்ளது. தனிக் கோயிலாக கருதப்படும் இக்கோயிலில் நந்தி பகவான் மேற்கு நோக்கி நேராக மலையில் அருள்பாலிக்கும் இறைவனை நோக்கிய வண்ணம் இருக்கிறார். நந்தி திருக்கோயிலுக்கு போகும் முன் திருச்சிராவிற்கும் இராமயணதிற்கான தொடர்பினை பார்ப்போம்.

திருச்சிராவும் இராமயணமும்

ஸ்ரீராமரின் பட்டாபிஷேகத்திற்கு அயோத்தி சென்ற விபீஷணன் ஸ்ரீராமர் பூஜித்த ஸ்ரீரங்கநாதரை பெற்று இலங்கை நோக்கி பயணித்தான். கீழே வைக்காமல் எடுத்து செல்ல வேண்டிய சிலையை விபீஷணன் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் நடுவில் இருக்கும் தீவில் தனது மாலை பிரார்த்தனை செய்ய நினைத்து அங்கிருந்த சிறுவனிடம் சிலையை கீழே வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டினான். இறைவனின் சித்தம் அறிந்த சிறுவன் சிலையை கீழே வைத்தான். இன்று ஸ்ரீரங்கத்தில் காணும் ஸ்ரீரங்கநாதர் அச்சிறுவனால் நமக்கு கிடைத்தது பாக்கியம். அன்று சிறுவனாக வந்த வினாயகர் நமக்கு இன்று திருச்சிரா மலை உச்சியில் உச்சி பிள்ளையாராக நமக்கு அருளுகிறார்.

செவ்வந்திப் புராணம் கூறும் திருசிரன் என்னும் சிவபக்தன் இம்மலையை செவ்வந்தி பூக்களினால் பூசித்தவன். திரசிரன், தூடணன், கரன் மூவரும் இரவணனால் இங்கு காவலுக்கு அனுப்பபட்டவர்கள். இவர்களில் திருசிரன் செவ்வந்தி பூக்கள் கொண்டு இறைவனை பூசித்தவன். இறைவனுக்கு செவ்வந்தி நாதர் என்ற பெயர் வர காரண கர்த்தா. செவ்வந்தி புராணம் கூறும் செய்தி இது. இராவணனின் தங்கை சூர்பனகையின் ஆணையின் பெயரில் திருசிரன் ஸ்ரீராமருடன் ஜனஸ்தானத்தில் போர் புரிகிறான், ஸ்ரீராமரால் வதம் செய்யப்படுகிறான். இவை நமக்கு இராமயணம் தரும் செய்தி.

ஸ்ரீ ஆஞ்சநேய முத்திரையுடன் கூடிய கோவில் ரசீது, தாயுமானசுவாமி கோவில், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு மனு குலந்தனில் இரவி புங்கவன்
        மதலை தந்தருள் தயரதன்
மனுசன் அங்கவன் அனுசன் என்பவர்
        தமது வெம்பகை தவிரவே
கனல் இலங்கையில் இடும் அவன்
        சொரி கருணை அஞ்சனை பாலகன்
அனுமன் என்பவன் மலையில் வந்துஅதில்
        அரிய நன்புனல் ஆடினான்

[சூரிய வமிசத்திலே பிறந்த மனுகுலத்தாசனாகிய தயரதனுடைய புத்திரனான ஸ்ரீ ராமனும் இலக்குவனும் பகைவனான இராவணனுடைய இலங்கையில் நெருப்பையிட்டவனும் கருணையானது சொரிகின்ற அஞ்சனா தேவியினுடைய பாலகனுமான அனுமன். அவன் சிராமலையில் வந்து அதிலுள்ள அரிதாகிய நல்ல தீர்த்தங்களில் முழுகினான்.]

மேலும் கூறுகிறார் "குன்றெனத் தொழுது அனுமன் நின்றனன்" மலைபோன்ற அனுமன் இறைவனைத் தொழுது நின்றான். இறைவன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டதற்கு "என்றன் முத்திரை உன் தலத்தினில் எய்த வேண்டும் எனச் சொனான்" "என்னுடைய முத்திரை அடையாளம் இத்தலத்தில் நிலைபெற வேண்டும்" என்றானான் அனுமன்.

இது செவ்வந்தி புராணம் "நினத்தது கொடுத்த சருக்கத்தில்" தரும் செய்தி. இதன் அடிபடையில் ராமர், ஆஞ்சநேயர், விபீஷணர் ஆகியவரின் விக்ரஹங்கள் முன்னமே கூறிய மாதிரி திருக்கோயிலில் பிரதிஷ்டைச் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிபடையில் தான் இன்றும் கோயிலில் வழங்கபடும் ’ரசீது’களிலும் அனுமாரின் திருஉருவத்தை பார்க்கலாம்.

நந்தி கோயில்

தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியில் உள்ள தாயுமானசுவாமி கோயில் மற்றும் நந்தி கோயிலை நேர்கோட்டில் காட்டும் கூகுள் படம் தாயுமானவர் திருக்கோயிலுக்கு கிழக்கே மலையடிவாரத்தில் கோயிலுக்கான தெப்பகுளம் காணப்படுகிறது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரிதிநிதிகளாக இப்பகுதியை ஆட்சி நடத்திய மதுரை நாயக்கர்களில் விஸ்வநாத நாயக்கர் என்பவர் தெப்பக்குளம் மற்றும் திரிசிராமலையில் கோட்டையை கட்டினார். தெப்பக்குளத்தின் வடகிழக்கு மூலையில் நந்தி கோயில் வீதியின் மேற்கு வாடையில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது நந்தி கோயில்.

அளவற்ற உடல் வலிமையாலும், ஞானத்தால் நிறையப் பெற்றுச் செல்வச் செழிப்பிலும் திளைத்துக் கொண்டிருக்கும் மேன்மை பெற்றவர்கள் நந்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். [அனுமாரை நந்தி என்று இராவணன் நினைத்தது இதனால் தானோ?] அவர்களது கூட்டம் நந்தி கணம் என்று அழைக்கப்படுகிறது. நந்தி கணத்தினரில் முதன்மை பெற்றவராக இருப்பதுடன், சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலா மலையைக் காத்து நிற்கும் அதிகாரம் பெற்றவராகவும் இருப்பவர் அதிகார நந்திதேவராவார்.

ஸ்ரீஆஞ்சநேயர், நந்தி கோயில், திருச்சி, தமிழ்நாடு இங்கு திரிசிரா மலையே தென்கயிலாயம் என்று கருதப்படுவதால் நந்தியை கிழக்கு நோக்கி இங்கு பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். மலை மீது கோயில் கொண்டிருக்கும் தாயுமானவர் சுவாமிக்கு நேர் எதிரிலும் அமைந்துள்ளது பொருத்தமே. தென்திருகயிலாயத்தை காத்து நிற்கும் இவர் அதிகார நந்திதேவராகிறார். இவரை பெரிய நந்தி மாதிரி ஏழு அடி உயரமும், பத்து அடி நீளமும், 16 அடி சுற்றளவும் கொண்டவராக அமைத்துள்ளனர். நந்திக்கு பின்புறம் பழமை வாய்ந்த சுமார் 35 அடி உயரத்தில் கல் கொடிமரம் உள்ளது. இதன் மேலும் ஒரு நந்தி சிலை இருக்கிறது. நந்திக்கு பூஜையை தொடர்ந்து இந்த கொடி மரத்துக்கும் பூஜை செய்யப்படுகிறது. கொடிமரத்தின் அடியில் செவ்வந்தி விநாயகர் சன்னதியும் தெடர்ந்து வீரஆஞ்சநேயர் சன்னதியும் மேற்கு பார்த்து அமைக்கப் பட்டுள்ளது.

நந்தி கோயில் தெருவிலிருந்து பார்த்தால் முதலில் நந்தி கோயிலுக்கான நுழைவாயிலும், அடுத்து செவ்வந்தி விநாயகர் சன்னதியும், அடுத்து ஆஞ்சநேயர் சன்னதியும் தெரியும். ஆஞ்சநேயர் சன்னதி நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் கட்டியிருப்பார்கள் என்பது சிலையின் அமைதியை அடிப்படையில் சொல்லலாம்.

ஸ்ரீ ஆஞ்சநேயர்

சுமார் மூன்று அடி உயரமுள்ள புடைப்பு சிலையாக அமைக்கப்பட்டுள்ளார். வடக்கு நோக்கி செல்லும் பாணியில் பிரபு இருக்கிறார். வலது திருபாதத்தை முன் வைத்துள்ளார். இரு பாதங்களிலும் தண்டை அணிந்துள்ளார். கச்சம் வைத்து முழங்கால் வரை வேட்டி அணிந்துள்ளார். உத்திரீயம் வேட்டியின் மேல் கட்டியுள்ளார். இரு திருக்கரங்களிலும் கங்கணமும், கேயூரமும் அணிந்துள்ளார். கதையை பிடித்துள்ள வலது திருகரத்தினை வலது தொடையில் ஊன்றியுள்ளார். மேலே ஓங்கி நிற்கும் இடது திருக்கரத்தில் சஞ்சீவி பர்வதத்தை பிடித்துள்ளார். அவரது வால் வளைந்து மேல் நோக்கி செல்கிறது. சற்றே வளைந்துள்ள வாலின் நுணியில் அழகிய மணி ஒன்று காணப்படுகிறது. பரந்த அழகிய மார்பிற்கு அவர் அணிந்துள்ள முப்புரி நூலும், மணி மாலையும் மேலும் அழகு சேர்க்கிறது. காதுகளில் குண்டலம் அணிந்துள்ளார். பிராகாசிக்கும் அவரது கண்கள் அன்பையும் அருளையும் அள்ளிக் கொடுக்கிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "நந்தி கோயில், திருச்சி"

 

அனுபவம்
அளவற்ற உடல் வலிமையாலும், ஞானமும் கொண்டவர் அவர் என்பதை இராவணன் உணர்ந்தான், இருந்தும் தர்மத்தை கடைபிடிக்கவில்லை. தர்மத்தை கடைபிடிப்போம் அவர் அருளும் ஞானம் பெறுவோம். திரிசிராவில் இறைவன் அருள இருக்கும் முக்தியை பெறுவோம்.       

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு:  டிசம்பர் 2023


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+