home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ வீர ஹனுமான் கோவில், அபெர்டீன் பஜார், தெற்கு அந்தமான், போர்ட் பிளேர்

ஸ்ரீ வி. ஆறுமுகம்*

போர்ட் பிளேரின் காட்சி சவுத் பாயிண்டிருந்து :: உபயம்- விக்கி காமன்ஸ்


போர்ட் பிளேயர்

அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள ஒரே நகரமான போர்ட் பிளேர், தெற்கு அந்தமான் தீவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் கல்கத்தாவிலிருந்து 1,255 கிமீ தொலைவிலும், சென்னையிருந்து 1,190 கிமீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து 1200 கிமீ தொலைவிலும், பர்மாவின் தலைநகர் ரங்கூனிலிருந்து 360 கிமீ தொலைவிலும் இருக்கிறது.

2002 கும்பாபிஷேகத்திற்குப் பிறகு போர்ட் பிளேயர் அனுமன் கோவிலின் தோற்றம் நகரத்தின் தற்போதைய இடம், ஆங்கிலேயர்கள் காலத்தில் ராயல் கடற்படையின் கடல் ஆய்வாளரான லெப்டினன்ட் ஆர்க்கிபால்ட் பிளேயரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த இடத்தை தேர்ந்தெடுக்க இரு காரணங்கள், முதலாவதாக பிரிட்டிஷ் கப்பல்களுக்கான பாதுகாப்பாக மோசமான வானிலையில் தஞ்சம் அடையக்கூடிய துறைமுகமாக இது அமையும், இரண்டாவதாக அந்தமான் தொடர் தீவுகளின் நடுவாக அமைந்திருந்தது இவ்விடம். லெப்டினன்ட் பிளேயர் 1789 இல் துறைமுகத்தை நிறுவி, தற்போது போர்ட் பிளேர் நகரத்தின் ஒரு பகுதியான சாதம் தீவுகளில் தனது தலைமையகத்தை நிறுவினார். இருப்பினும், தற்போதைய போர்ட் பிளேயரின் தளம் 1792 இல் கைவிடப்பட்டு, வடக்கு அந்தமானில் உள்ள போர்ட் கார்ன்வாலிஸுக்கு குடியேற்றம் மாற்றப்பட்டது. அதன் பின் திரும்பவும் 1796 இல் போர்ட் பிளேயருக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது.

1857 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் முதல் சுதந்திரப் போர் வெடித்தது. சுதந்திரப் போராளிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட இடமாக இந்த தீவினை உபயோக்கிக்க ஆங்கிலேயர்கள் தீர்மானித்தனர். இவ்விடம் முக்கியத்துவம் பெற்றது. அதன்படி, மார்ச் 1858 இல், டாக்டர். ஜே.பி. வாக்கர், சிறைக் கண்காணிப்பாளர் போர்ட் பிளேர் துறைமுகத்திற்கு 200 குற்றவாளிகளுடன் (பெரும்பாலும் சுதந்திரப் போராட்ட வீரர்கள்), பழைய ராயல் கடற்படைப் படையின் 50 பேர் கொண்ட காவலருடன் வந்து சாத்தம் மற்றும் ராஸ் தீவுகளை செப்பனிட்டு அலுவலங்களை நிறுவி குடியேறினர். பிற்காலத்தில் ராஸ் தீவில் உள்ள நிறுவனங்கள் மாற்றப்பட்டு கைவிடப்பட்டன.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மார்ச், 1942 முதல் அக்டோபர், 1945 வரை ஜப்பானிய வசம் இருந்தன. 1945 ஆம் ஆண்டில், இந்த தீவுகள் மீண்டும் ஆங்கிலேயரிகளின் கீழ் வந்த பிறகு, குற்றவாளிகளாக்கபட்டவர்கள் தண்டனை ரத்து செய்யப்பட்டது மற்றும் அனைத்து மக்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. அனைத்து தீவு வாசிகளுக்கும் அங்கேயே இருப்பதற்கும் அல்லது இந்தியநாட்டின் பிரதான நிலப்பகுதிக்கு திரும்புவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

1951 ஆம் ஆண்டில், போர்ட் பிளேர் நகரம், சத்தம், ஹடோ, புனியாபாத், பீனிக்ஸ் விரிகுடா, ஜங்க்லிகாட், அபெர்டீன் கிராமம், அபெர்டீன் பஜார், சவுத் பாயிண்ட் மற்றும் சாதிப்பூர் ஆகிய 9 கிராமங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட், 1974 இல், லம்பலைன், மின்னி பே, நாயாகாவ், டுத் லைன், ஸ்கூல் லைனின் ஒரு பகுதி, கோர்பின்ஸ் கோவ் மற்றும் குட் வில் எஸ்டேட் ஆகிய கிராமங்கள் நகராட்சிப் பகுதியில் சேர்க்கப்பட்டன.

குடியேற்றத்திற்கு முந்தைய அந்தமானின் வரலாற்று சுருக்கம்

போர்ட் பிளேயர் நகரத்தின் தற்போதைய பகுதி ஒரு காலத்தில் அந்தமானீஸ் மற்றும் ஜாரவாஸ் ஆகிய இரண்டு பெரிய பழங்குடியினரின் தாயகமாக இருந்தது. அந்தமானியர்கள் பொதுவாக கடலோரப் பகுதிகளில் வசிக்கிறார்கள், அதே சமயம் ஜாரவாக்கள் தெற்கு அந்தமானின் உள்பகுதியில் வசிக்கிறார்கள். தெற்கு அந்தமான் தீவு முழுவதும், உண்மையில், இந்த இரண்டு பழங்குடியினரின் வேட்டையாடும் இடமாக இருந்தது. இந்த தீவுகளின் இந்த பழமையான பூர்வீகவாசிகளின் தோற்றம் தொடர்பான உண்மையான வரலாறு இன்றுவரை கிடைக்கவில்லை. இந்த தீவுகள் வழியாக தங்கள் பயணத்தின் போது சென்ற சீனர்கள், மலேசியர்கள், இந்தியர்கள், போர்த்துகீசியர்கள் போன்ற பல்வேறு பயணிகள் அவர்களின் தோற்றம் தொடர்பான பல்வேறு பதிப்புகள் செய்துள்ளனர். 1901 ஆம் ஆண்டு "மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை"யின் படி, சீன மற்றும் ஜப்பானியர்கள் இந்த தீவுகளை முறையே யோங்-டி'மாங் மற்றும் ஆண்டபன் என கி.பி. முதல் நூற்றாண்டில் அழைத்துள்ளனர். பின்னர் மார்கோ போலோ அங்கமேனியா என்று 1292 ஆம் ஆண்டும், நிக்கோல் சென்டி 1430 இல் ஆண்டெமேனியா என்றும் குறிப்பிட்டுள்ளனர். தீபகற்பத்தின் மலாய்க்காரர்கள், பல நூற்றாண்டுகளாக இந்த தீவுகளை தங்கள் திருட்டு நடைமுறைகளுக்கும் அந்தமானிய அடிமைகளை தங்கள் சொந்த நாட்டிற்கும் சியாமிற்கும் வர்த்தகம் செய்வதற்கும் உபயோத்துள்ளனர் என்பது இந்த தீவுகளின் மலேசியப் பெயரை அடிப்படையாகக் கொண்டது என்பதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஹண்டுமான் என்ற பதம் மிகவும் பழமையான ஹனுமான் மற்றும் இந்திய இதிகாசங்களுக்கு நன்கு அறியப்பட்ட மற்றும் மலாய்க்காரர்களுக்கு கதை மற்றும் மொழிபெயர்ப்பில் கொண்டு செல்லப்பட்டதாக இருக்கலாம்.

2002 கும்பாபிஷேகத்திற்குப் பிறகு போர்ட் பிளேயர் ஸ்ரீ வீர அனுமன் இவ்விடம், டோனின் சீன வரலாற்றில் - வம்சம் (கி.பி. 618-906) அவர்கள் ராட்சசர்களின் நிலம் என்று அழைக்கின்றனர். அந்தமானியர்கள் 1883 இல் கல்கத்தாவுக்குச் சென்றபோது ராட்சசர்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த தீவுகளின் பழங்குடியினர் அல்லது பழமையான பூர்வீகவாசிகள், அவர்களைப் பொறுத்தவரை, ஹனுமான் அதாவது குரங்கு அல்லது ராட்சசர்களின் வழித்தோன்றல்கள்.

அனுமன் கோவில்

இன்று போர்ட்பிளேயரில் வசிக்கும் பலர் பிரதான நிலத்திலிருந்து வந்து காலப்போக்கில் இங்கு குடியேறியவர்கள். கப்பல் மூலம் இணைக்கப்பட்ட இடங்களிலிருந்து, அதாவது இன்றைய வங்காளம், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலிருந்து பலர் வந்திருப்பதால், இங்கு பெங்காலி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகள் பரவலாகப் பேசப்படுகின்றன. ராமாயணம் உள்ளூர் மக்களுக்குத் தெரியும், முந்தைய குறிப்பில் வழங்கப்பட்ட உண்மைகளைக் காணலாம். எனவே ஸ்ரீ அனுமனுக்கு வழிபாட்டு தலத்தின் அவசியத்தை அவர்கள் உணர்ந்ததில் ஆச்சரியமில்லை.

1977 ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் தலைவராக இருந்த ஸ்ரீ அங்கத் சிங் தெற்கு அந்தமானில் உள்ள அபெர்டீன் பஜாரில் ஸ்ரீ ஹனுமானுக்கு ஒரு சிறிய கோவிலை கட்டினார். கோயிலும் ஸ்ரீ அனுமனும் மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. ஸ்ரீ ஹனுமனின் சக்தி தீவின் பல மக்களை ஈர்த்தது மற்றும் கோயில் பிரபலமடைந்ததில் ஆச்சரியமில்லை. ஏராளமான பக்தர்கள் வந்ததால், கோவில் விரிவடைந்தது. இக்கோயில் 2002 ஆம் ஆண்டு புதிதாகக் கட்டப்பட்டது. 2002 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீ ஹனுமான்

ஹனுமான் சிலை சுமார் நான்கு அடி உயரத்தில் இரண்டடி பீடத்தில் நிற்கிறது. இறைவன் நின்ற கோலத்தில் நேராகப் பார்க்கிறார். இரண்டு தாமரை பாதங்களிலும் தண்டை அணிந்துள்ளார். இறைவன் கட்சம் பாணியில் வேட்டி அணிந்துள்ளார். அவரது பரந்த மார்பில் இரண்டு மாலைகள் காணப்பட்டன, அதில் ஒரு தொங்கட்டான் உள்ளது. இறைவன் யக்ஞோபவீதம் அணிந்துள்ளார். நெக்லஸ் அவரது கழுத்துக்கு அருகில் காணப்படுகிறது. இறைவன் தனது வலது கரத்தில் சஞ்சீவி பர்வதத்தையும், இடது கையில் சூலாயுதத்தையும் ஏந்தியிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. இறைவன் காதில் குண்டலம் அணிந்துள்ளார். கண்கள் மகிழ்ச்சியாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கும். இறைவனின் கடாக்ஷம் தனது பக்தர்களுக்கு அனைத்து மங்களங்களையும் அருளுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீ வீர ஹனுமான் கோவில், போர்ட் பிளேர்"

 

அனுபவம்
சகல இன்பமும் மங்களமும் பெற அருள்பாலிக்கும் கருணையுள்ள இறைவனை தரிசனம் செய்து, இன்புற்று இருக்கவும்.    

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு: ஜூன் 2023
*ஆசிரியர் அந்தமான் காவல்துறைக்காக பணிபுரிகிறார்


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+