home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

படா தலாப் ஸ்ரீ ஹனுமான் மந்திர், ரேவாரி, ஹரியானா

டாக்டர் ஜெய சங்கர்

படா தலாப் ஸ்ரீ ஹனுமான் மந்திர், ரேவாரி,ஹரியானா


வீரபூமி ரேவாரி

கால்நடைகளுக்குகான படித்துறை, படா தலாப், ரேவாரி, ஹரியானா ரேவாரி பகுதியின் வரலாற்றுப் பின்னணியை முந்தைய நாட்களில் இருந்து சமீப காலம் வரை ஆய்வு செய்தால், இது ஏன் 'வீரபூமி' என்று அழைக்கப்படுகிறது என்பது நமக்கு விளங்கும். முகலாயர் காலமானாலும் சரி, 1962 சீனப் போரின் போதும் சரி, இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காட்டிய வீரமும், தேசபக்தியும் பாராட்டுக்குரியது. 1553-1556 ஆம் ஆண்டு முகலாயர்களின் இடைக்காலம் மற்றும் ஆட்சியின் போது, ரேவாரியின் 'ஹேமு' என்ற புனைப்பெயர் கொண்ட ஹேமச்சந்திர விக்ரமாதித்யா (அவரது ஆரம்பத் தொழிலில் உப்பு மற்றும் துப்பாக்கி குண்டுகள் விற்பதாகும்), சூரி வம்சத்தைச் சேர்ந்த அடில் ஷா சூரி-க்கு பைத்தியம் பிடித்த பிறகு, ஹெமு இராணுவத்தின் தலைவராகவும் பிரதமராகவும் ஆனார். பின் மூன்று வருட காலப்பகுதியில், ஹெமு வங்காளத்திலிருந்து பஞ்சாப் வரை வட இந்தியா முழுவதும் 22 போர்களை அடில் ஷாவுக்காக சந்தித்தார். இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த இந்துப் போராளிகளில் ஒருவராக அவர் விளங்கினார். முகலாயர்களுக்கு முந்தைய வரலாற்றில் ஹேமு முக்கியப் பங்காற்றினார் மற்றும் ஆக்ரா மற்றும் டெல்லியில் அக்பரின் படைகளுக்கு எதிரான வெற்றிகளுக்குப் பிறகு முகலாயர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதில் ஏறக்குறைய வெற்றி பெற்றார். பல நூற்றாண்டுகள் அந்நிய ஆட்சிக்குப் பிறகு, ஹெமு 1556 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி வட இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தை மீண்டும் நிறுவினார், இப்போது தில்லியின் புராண கிலா (பழைய கோட்டை) என்று அழைக்கப்படும் இடத்தில் சூரிக்கு முடிசூட்டு விழா நடத்தினார். கிபி 16-18 ஆம் நூற்றாண்டில், 1556 இல் 2 வது பானிபட் போரில் ஹேமச்சந்திராவை தோற்கடித்த பின்னர் அக்பர் ரேவாரியை தனது பேரரசின் ஒரு பகுதியாக மாற்றினார்.

1962 ஆம் ஆண்டு இந்தியா-சினா யுத்தத்தில் நவம்பர் 18 ஆம் தேதி நடந்த சம்பவத்தில், மொத்தம் 120 இந்திய வீரர்களில் 114 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் ஆனால் 1000 க்கும் மேற்பட்ட சீன துருப்புக்கள் கொல்லப்பட்டனர். இந்த இந்திய வீரர்களில் பெரும்பாலானவர்கள் ரோவரியை சேர்ந்த யதுவன்ஷி வீரர்கள். இவர்களுக்காக ரேவாரியில் உள்ள ஒரு நினைவுச்சின்னம், போரில் 1,300 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது. இந்தப் போரில் இந்திய வீரர்களின் துணிச்சலைப் பார்த்து சீனா போர் நிறுத்தத்தை அறிவித்தது. அதனால் இந்தப் போரில் முக்கியமாக, ரேவாரியின் பங்களிப்பை புறக்கணிக்க முடியாது.

ரேவாரி பெயர் காரணம்

ரேவாரியின் வரலாற்றை மஹாபாரத காலத்தில் காணலாம், மேலும் ரேவாத் என்ற மன்னருக்கு ரேவா என்ற மகள் இருந்தாள், அவள் பெயரில் அவர் 'ரேவா வாடி' என்ற புதிய நகரத்தை நிறுவினார் என்று புராணக்கதை கூறுகிறது. ரேவா கிருஷ்ணரின் மூத்த சகோதரரான பலராமரை திருமணம் செய்தபோது, அரசர் தன் மகளுக்குப் பரிசாக “ரேவா வாடி” நகரத்தை நன்கொடையாக வழங்கினார். காலப்போக்கில், ரேவா வாடி என்ற பெயர் ரேவாரி ஆனது.

இன்றைய ரேவாரி

முகலாயர்களுக்குப் பிறகு ரேவாரி மராட்டியர்களின் கீழ் வந்தது. அவர்களின் ஆட்சியின் போது ரேவாரி தேசிய விவகாரங்களில் முழுமையாக ஈடுபட்டனர். ராவ் துலாராம் ரேவாரியின் ஆட்சியாளராக இருந்தபோது 1857 சுதந்திரப் போராட்டத்தின் போது முக்கிய பங்கு வகித்தார். பின்னர் இந்த இடம் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. மராட்டியம் மற்றும் அதற்குப் பிந்தைய காலகட்டங்களில் குடிமக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இன்றும் அந்த காலகட்டத்தின் பல கட்டமைப்புகள் இந்த நடவடிக்கைகளுக்கான் சாட்சியாக நிற்கின்றன. அத்தகைய ஒரு கட்டமைப்பு இன்று "படா தலாப்" [பெரிய குளம்] என்று அழைக்கப்படுகிறது, இது கட்டிடக்கலை அழகு மற்றும் பொறியியல் அற்புதம் ஆகும்.

படா தலாப்

ஜனனா காட் படித்துறை, படா தலாப், ரேவாரி, ஹரியானா நகரம் மழைநீரை நம்பியிருப்பதால் ஆட்சியாளர்கள் தற்போதைய படா தாலாபின் தெற்கே ஏரிகளை கட்டியுள்ளனர். முதல் ஏரி நிரம்பியவுடன் இரண்டாவது ஏரிக்கு தண்ணீர் நிரம்பி வழியும், அதுவும் நிரம்பினால் உபரி நீர் படா தாலாப்பை வந்தடையும். படா தலாப் பெரிய அளவிலான தண்ணீரைச் சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, சுற்றிலும் வலுவான சுவர்கள் உள்ளன. இந்த குளமும் நிரம்பினால், உபரிநீர் மற்ற ஏரிக்கு வந்து சேரும்.

குளம் ஏறக்குறைய சதுர வடிவில் உள்ளது, ஆழம் சுமார் ஐம்பது அடி இருக்கலாம். இந்த குளத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி குளியல் துறைகள் உள்ளன. கால்நடைகளுக்கு குளத்தில் இருந்து தண்ணீர் குடிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. குளத்தைச் சுற்றியுள்ள வளைவுகள், குளத்திற்கான நுழைவாயில்கள் மற்றும் குளத்தைச் சுற்றியுள்ள கட்டமைப்புகள் அனைத்தும் கட்டடக்கலை ரீதியாக சிறப்பானவை. இந்த பெரிய குளத்தை சிறப்பாக அமைக்க நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டன.

குளத்தைச் சுற்றி மூன்று கோவில்கள் உள்ளன. பிரம்மகாட்டில் உள்ள முதலாவது சிவன் கோயில், இந்த குளத்திற்கான நீர் நுழைவாயில் இந்தப் பக்கத்திலிருந்துதான். இந்த படித்துறைக்கு எதிரே "காய் காட்" என்னும் காலநடை துறை உள்ளது, இங்கிருந்து கால்நடைகள் குடிநீருக்காக நுழையலாம். இந்த முகப்பில் மா பார்வதி கோவில் உள்ளது. குளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள "ஜனனா காட்" என்னும் ஆண்களுக்கான படித்துறை உள்ளது. எதிரே கிழக்குப் பகுதியில் அனுமன் கோயில் உள்ளது.

முதலில் சிவன் கோயில் வந்ததாகவும், பிறகு குளம் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மற்ற கோயில்கள் பின்னர் சேர்க்கப்பட்டன. புதிய கோயில்களும் முந்தைய கட்டுமானத்தின் கட்டிடக்கலைக்கு ஏற்றவாறு கட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இக்குளத்தை கட்டியவர்

ரேவாரியில் உள்ள படா தலாப் 1810-1815 ஆம் ஆண்டில் ராவ் தேஜ் சிங்கால் கட்டப்பட்டது, எனவே இது ராவ் தேஜ் சிங் தலாப் என்றும் அழைக்கப்படுகிறது என்று ஹரியானா அரசாங்கத்தின் இணையதளம் கூறுகிறது. ஆனால் இந்த தாலாப் தளத்தில் நகராட்சி குழுவால் அமைக்கப்பட்ட கல்வெட்டு ஸ்லாப் 1776 ஆம் ஆண்டில் பணிகள் நிறைவடைந்ததாக கூறுகிறது.

அனுமன் மந்திர்

மேலே குறிப்பிட்டுள்ளபடி இந்த ஆலயம் குளத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கோயில் சமீபத்தில் பளிங்கு, விட்ரிஃபைட் தளங்கள் மற்றும் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டு நவீனமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது வடக்கு நோக்கிய கருவறையைக் கொண்டுள்ளது. கருவறையின் முன் இருக்கும் பிரம்மாண்டமான மண்டபத்தில் இருந்தே பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யலாம். கோயிலுக்கு இரண்டு கோபுரங்கள் [விமானம்] மற்றும் தெற்கு பக்கத்தில் கர்ப்பகிரஹம் உள்ளது. இன்று இந்த கோயில் எல்லா பக்கங்களிலும் காவி நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

[கூகுள் மேப்பில் இடம் தவறாகக் குறிக்கப்பட்டிருக்கிறது, உண்மையான கோயிலுக்கு - அருகில் உள்ள காவி நிறக் கட்டிடத்தைத் தேடுங்கள்.]

கோயிலின் தல புராணம்

படா தலாப் ஸ்ரீ ஹனுமான், ரேவாரி,ஹரியானா சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வணிகர் ராஜஸ்தானில் இருந்து ஸ்ரீ அனுமனின் மூர்த்தியை தனது ஊருக்கு எடுத்துச் செல்லும் வழியில், இந்த இடத்தில் நிறுத்தி இளைப்பாறினார். ஓரிரு நாட்களுக்குப் பிறகு அவர் தனது இலக்கை நோக்கி நகரத் தொடங்கியபோது, ஸ்ரீ ஹனுமான் சிலை வைக்கப்பட்டிருந்த வண்டியை அவரால் நகர்த்த முடியவில்லை. ராஜஸ்தானில் இருந்து இதுவரை சீராகப் பயணித்த வண்டிக்கு என்ன நேர்ந்தது என்று ஆச்சரியப்பட்டார். எத்தனை முயன்றும் வண்டி நகராததால், ஊர் பெரியவர்களுடனும், கற்றறிந்தவர்களுடனும் கலந்தாலோசித்ததில், இறைவன் அதே இடத்தில் தங்க விரும்புவதாகத் தெரிகிறது. அதன்பிறகு அந்த வியாபாரி சிலையை அந்த இடத்திலேயே விட்டுவிட முடிவு செய்துவிட்டு தன் இலக்கை நோக்கி நகர்ந்தார்.

ரேவாரியில் வசிப்பவர்கள் ஸ்ரீ ஹனுமானுக்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள். கோயில் கட்டிடம் முன்பு கூறியது போல் குளத்தினைச் சுற்றியுள்ள மற்ற கட்டிடங்களின் அதே வரிசையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று இக்கோயிலில், ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட சிலையைத் தவிர, செந்தூரம் பூசப்பட்ட சிறிய ஹனுமான் சிலையும் கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இறைவனுக்கு காணிக்கையாக செந்தூரம் செலுத்துகின்றனர்.

ஸ்ரீ ஹனுமான் -படா தாலாப்

இறைவன் தனது இடது தாமரை பாதத்தின் கீழே ஒரு அரக்கனை அடக்கிக்கொண்டு நிற்கும் நிலையில் காணப்படுகிறார். இறைவனின் வலது கால் தரையில் உறுதியாக உள்ளது. இறைவன் இடையில் கோவணம் அணிந்துள்ளார். அவரது உயர்த்தப்பட்டுள்ள வால், வலது தோள்பட்டைக்கு அருகில் சிறிய வளைவுடன் முடிவதை காண முடிகிறது. இறைவன் இடது கையில் ‘சஞ்சீவினி மலையுடன்’ காட்சியளிக்கிறார். அவரது வலது கை இடுப்பில் தங்கியிருப்பதைக் காணலாம். அவரது இரு கைகளிலும் அவர் கங்கணம் [மணிக்கட்டில்] அங்கத்தையும் [மேல் கரத்தில்] அணிந்துள்ளார். பகவான் ஸ்ரீ ராமரையும் ஸ்ரீ லக்ஷ்மணரையும் தோளில் சுமந்தபடி காட்சியளிக்கிறார்.

ஒரு அலங்கார நாடா அவரது தலைமுடியை இறுக்கமாகப் பிடித்திருக்கிறது. அதற்கு மேல் அவர் கிரீடம் அணிந்துள்ளார். காதுகளில் குண்டலமும், காதின் மேல் அலங்கார ஆபரணமும் அணிந்துள்ளார். சிரிக்கும் கண்கள் மற்றும் உதடுகளுடன் கூடிய பிரகாசமான முகம் பக்தரின் கவனத்தை அவர் ஈர்ப்பதில் வியப்பில்லை. இறைவனின் முதல் தரிசனத்திலேயே, ஆனுமார் தரும் ஆசிகளை, பக்தர் உணர்ந்து கொள்வார்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "படா தலாப் ஸ்ரீ ஹனுமான் மந்திர், ரேவாரி"

 

அனுபவம்
ஒரு வேலை நாளில் கோயிலுக்குச் செல்லுங்கள், பிரகாரத்தில் அமைதியாக அமர்ந்து இறைவனை நோக்கிக் கண்களைத் திறந்து அவரைத் தியானியுங்கள். சொர்க்கம் என்றால் என்ன என்பதை உணருங்கள்.    

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு: ஏப்ரல் 2023


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+