home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில், ஸ்ரீசந்தான ராமர் கோவில், நீடாமங்கலம், தமிழ் நாடு

ஜீகே கௌசிக்

சாகேத புஷ்கரிணியும்  ஸ்ரீசந்தான ராமர் கோவிலும், நீடாமங்கலம்


தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்கள்

தஞ்சாவூரின் மராட்டிய மன்னர்கள் தங்கள் குடிமக்கள், மற்றும் தங்கள் ராஜ்யத்திற்கு வரும் யாத்ரீகர்களின் நலன்களில் கவனம் செலுத்துபவர்கள் என்று அறியப்பட்டவர்கள். மராட்டிய அரசு, யாத்ரீயகளின் இரவு தங்குவதற்கும் உணவு வழங்குவதற்கும் வசதிகள் செய்ததுடன் மட்டுமில்லாமல் அவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் வழங்கினர். யாத்ரீகரகளின் இவ்வுதவிகளை கவனிக்க ஒரு தனி நிர்வாக பிரிவு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நலத்திட்டங்களின் நிர்வாகத்தில் பெரும்பாலானவை அரசரின் மனைவிகளால் கையாளப்பட்டன.

யாத்திரை செல்லும் பாதையில் ஒவ்வொரு இருபது மைலுக்கும் ஒவ்வொரு சத்திரம் கட்டியிருந்தார்கள், இது யாத்ரீகர்களின் தேவைகளைக் கவனிக்கும். இது எவ்வாறு செயல்பட்டது மற்றும் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களின் நலத்திட்டங்கள் குறித்து மேலும் அறிய, "சத்திரங்கள், சாவடிகள் மற்றும் தண்ணீர் பந்தல்" தலைப்பில் எங்கள் இணையப் பக்கத்தில் “ஹனுமார் கோயில், மோதிரப்பா சாவடி, தஞ்சாவூர்” இல் படிக்கவும்.

நீடாமங்கலம்

மராட்டிய மன்னர் ஸ்ரீ பிரதாப சிம்மன் சத்திரம் கட்டிய இடம் நீடாமங்கலம். இந்த சத்திரம் அவரது பல மனைவிகளில் ஒருவரான யமுனாம்பாள் என்பவரால் நிர்வகிக்கப்பட்டது. இன்றும் இந்த ஊரில் "யமுனாம்பாள் சத்திரம்" என்ற கட்டிடம் உள்ளது. [இது போன்ற அற்புதமான நினைவுச்சின்ன கட்டிடம் உள்ளாட்சி நிர்வாகத்தினால் பராமரிக்கப்படாமல் பாழடைந்த நிலையில் உள்ளது என்பது வேறு விசயம்.]

நீடாமங்கலம் என்பது தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் தாலுகா தலைமையகம் ஆகும், இது தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் இடையே அமைந்துள்ளது.

யமுனாம்பாள் மற்றும் யமுனாம்பாள் கோவில்

யமுனாம்பாள், யமுனாம்பாள் கோவில், நீடாமங்கலம் - courtesy: Dinamani ஸ்ரீ பிரதாப சிம்மன் 1739 முதல் 1763 வரை தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னராக இருந்தார். அவர் தனது மனைவி யமுனாம்பாள் என்பவருக்கு இவ்வூரில் அரண்மனையும் உடன் சத்திரத்தையும் கட்டினார். இவ்வூருக்கு அவரது பெயரில் "யமுனாம்பாள்புரம்" என்றும் பெயரிட்டார். தற்போது நீடாமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. மன்னன் மூலம் அவளுக்கு மகன் இல்லாததால், ஸ்ரீராமனை சந்தான ராமனாக வேண்டிக்கொண்டு, அதன்படி, ஸ்ரீராமனை சந்தான ராமனாகக் கருதி "ஸ்ரீசந்தான ராமசுவாமி"க்குக் கோயில் கட்டினாள். ஒரு குறிப்பிட்ட நாளில் அவளும் ஸ்ரீ பிரதாப சிம்மனும் கோவில் குளத்தில் குளித்துவிட்டு ஸ்ரீ சந்தான ராமனை வணங்கத் தொடங்கினாள்.

கோவில் குளம் "சாகேத புஷ்கரிணி" என்று அழைக்கப்படுகிறது. இன்றும் குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த புனித சாகேத புஷ்கரிணியில் நீராடி வந்து ஸ்ரீ சந்தான ராமனிடம் குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள். யமுனாம்பாள் இங்குள்ள அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்டாள். அவள் மறைவுக்குப் பிறகு மக்கள் அவளுக்கு கோயில் கட்டினார்கள். இன்றும் கர்ப்பிணிப் பெண்கள் இந்தக் கோயிலுக்கு வந்து குழந்தைப் பேறு எளிதாகவும் சுகப் பிரசவத்திற்காகவும் பிரார்த்தனை செய்கின்றனர்.

சந்தான ராமசுவாமி கோவில்

ஸ்ரீசந்தான ராமர் கோவில் விமானம், நீடாமங்கலம் இக்கோயில் கிழக்கு நோக்கியதாகவும், "சாகேத புஷ்கரிணியை" நோக்கியதாகவும் அமைந்துள்ளது. புஷ்கரிணியின் தென்கிழக்கு மூலையில் கோயில் தேரும் காணப்படுகிறது. கோயிலின் நுழைவாயில் ஒரு வளைவு வழியாக உள்ளது, அதன் மேல் ஸ்ரீ ராம தர்பார் புடைப்பு சுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றது. கோயிலுக்கு இவ்வலங்காரவளைவுக்கு பிறகு மூன்று அடுக்கு ராஜகோபுரம் உள்ளது.

ஸ்ரீ சந்தான ராமர் தனது வலதுபுறத்தில் சீதா தேவியையும், இடதுபுறத்தில் லக்ஷ்மணனையும் கொண்டு கர்ப்பகிரஹத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். உற்சவ சந்தான ராமர் கோதண்ட ராமனாக வலது கையில் அம்புடனும், இடது கையில் வில்லுடனும் சீதா, லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயருடன் காட்சியளிக்கிறார். இந்த அற்புதமான மூர்த்தியைப் பார்க்க மிகவும் இனிமையாக இருக்கிறது. இந்த ராமர் கோவிலில், ஸ்ரீ சீதா தேவி, பிரதான கர்ப்பகிரஹத்தில் சந்தான ராமனுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால், ஸ்ரீ சீதா தேவிக்கு தனி சந்நிதி இல்லை.

பிரகாரத்தில் தும்பைகை ஆழ்வார் (விநாயகர்), பக்ஷிராஜன், விஷ்ணு துர்க்கை ஆகியோரை தரிசனம் செய்யலாம். வாகன மண்டபத்தில் குதிரை வாகனம், யானை வாகனம் மற்றும் சூரிய பிரபை ஆகியவை உள்ளன. இந்த கோவிலின் மற்றொறு புனித வாகனமான ஸ்ரீ ஹனுமத் வாகனம் நம்மை மிகவும் கவர்கிறது. மாருதி இங்கு ஸ்ரீராமரின் வாகனம் போல் தத்ரூபமாக காட்சியளிக்கிறார். ராமரின் நூற்றியெட்டு திருநாமங்களும் இங்கு காணப்படிகிறது. வசந்த மண்டபமும் உள்ளது.

ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில், ஸ்ரீசந்தான ராமர் கோவில், நீடாமங்கலம் ராமர் சந்நிதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் க்ஷீரப்திநாதன், சீதாகல்யாணம், பட்டாபிராமர், சேதுபந்தனம், அகல்யா சாப விமோசனம் போன்ற சாந்து சுதை சிற்பங்கள் உள்ளன. சந்நிதி விமானத்தில் ஸ்ரீ நரசிம்மர் [தெற்கு], பட்டாபிராமன் [மேற்கு] மற்றும் பரமபதநாதன் [வடக்கு] சுதை வடிவில் காணப்படுகின்றனர்.

குழந்தை வேண்டி தம்பதிகள் இக்கோயிலில் தொட்டில் கட்டுவது வழக்கம்.

ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில்

புஷ்கரிணியின் வடகிழக்கு மூலையில் ஸ்ரீ சந்தான ராம தேவஸ்தானத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு கோயில் உள்ளது. அப்போது கோயில் யமுனாம்பாள் சத்திரத்தை ஒட்டி இருந்தது. தற்போது, இவை இரண்டும் வித்தியாசமாகத் தோன்றினாலும், அது அப்போது சத்திரத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும். பொதுவாக ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ‘அஞ்சலி-ஹஸ்தான்’ தோரணையில் கோயில் தேருக்குப் பக்கத்தில் சந்நிதி இருக்கும். இங்கு ஸ்ரீ ஆஞ்சநேயரின் தோரணையைப் பார்க்கும்போது, அவரது சந்நிதி சத்திரத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகத் தெரிகிறது.

ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீசந்தான ராமர் கோவில், நீடாமங்கலம் கோயிலும் ஸ்ரீஆஞ்சநேயரும் மேற்கு நோக்கியவாறு உள்ளனர். கோவில் சுற்றுச்சுவர் கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. கோயில் மண்டபத்தின் மேற்கூரையானது தஞ்சாவூர் பாணியில் உருளை வடிவில் இறுதியில் குவிந்து காணப்படுகிறது. இந்த பாணியில் இரண்டு மண்டபங்கள் உள்ளன, ஒன்று கிழக்கு-மேற்கு மற்றும் மற்றொன்று வடக்கு-தெற்கு. கர்ப்பக்கிரகம் வடக்கு-தெற்கு மண்டபத்தில் உள்ளது. பக்தர்கள் பிரதான சாலையில் இருந்தே ஆஞ்சநேயரை தரிசனம் செய்யலாம்.

ஸ்ரீ ஆஞ்சநேயர்

ஸ்ரீ ஆஞ்சநேயரின் கற்சிற்பம் புடைப்பு வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. புடைப்புச் சிற்பமாகத் தெரிந்தாலும், முழுச் சிற்பத்திற்கு நிகராக 'மூர்த்தி' உள்ளது.

ஸ்ரீ ஆஞ்சநேயர் தனது இடது பாதத்தை முன்னோக்கி வைத்து தெற்கு நோக்கி நடப்பதைக் காணலாம். அவரது வலது கால் அடுத்த கட்டத்திற்கு தயாராக உள்ளது. அவரது இரண்டு தாமரை பாதங்களில் கணுக்கால்லில் தண்டை காணப்படுகிறது. இடையில் கச்சம் அணிந்துள்ளார். அவரது உயர்த்தப்பட்ட இடது கையில் ‘சஞ்சீவி பர்வதம்’ காணப்படுகிறது. ‘அபய முத்திரை’யில் வலது கையை உயர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரு கைகளிலும் கங்கணம் அணிந்துள்ளார். அவரது மார்பில் ஆபரணங்கள் காணப்படுகின்றன. வால் அவரது தலைக்கு மேலே சென்று இறுதியில் ஒரு வளைவுடன் முடிகிறது. வால் நுனியில் இருக்கும் சிறிய மணி ‘லங்கூலத்துக்கு’ அழகு சேர்க்கிறது. சற்றே மேல்நோக்கிப் பார்க்கும் முகம் அவருடைய கம்பீரத்தைக் கூட்டுகிறது. அவரது சற்றே கொப்பளித்த கன்னங்கள் இறைவனின் பிரகாசமான கண்களின் அழகை அதிகரிக்கின்றன. குண்டலம் இறைவனின் செவிகளில் காணப்படுகிறது. அவனது கேசம் நேர்த்தியாக சீவப்பட்டு, பின்னி, முடிச்சால் இறுக்கமாகப் பிடிக்கப்படுகிறது. 

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில், நீடாமங்கலம்"

 

அனுபவம்
அழகு கண்களில் உள்ளது, அதே போல் கருணையும் உள்ளது. ‘சஞ்சீவி’யை ஏந்தியபடி காணப்படும் ஸ்ரீ ஹனுமான், எல்லா நியாயமான காரியங்களும் நடக்கும் என்ற நம்பிக்கையை சுமந்து செல்கிறார். இந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீ ராமர் மற்றும் ஹனுமானிடம் பிரார்த்தனை செய்வது நல்லொழுக்கமுள்ள ‘சந்தானத்தை’ பெற ஆசீகள் வழங்குவது தின்னம்.   

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு: பிப்ரவரி 2023


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+