home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஸ்ரீராமசுவாமி செந்தூர ஆஞ்சநேயர் கோவில், திருமஞ்சன வீதி, மன்னார்குடி, தமிழ்நாடு

பி.ராமச்சந்திரன் கேஸ்கர்*

ஹரித்ரா நதி, மன்னார்குடி, சேதுபாவா சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது


தஞ்சாவூர்

சோழர்களின் ஆட்சியின் போது குறிப்பாக சிவபெருமானுக்கு பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டிய முதல் ராஜராஜ சோழனின் ஆட்சியின் போது தஞ்சாவூர் பெருமையின் உச்சத்தில் இருந்தது. அவரது மகன் ராஜேந்திர சோழன் தலைநகரை தஞ்சாவூரிலிருந்து கங்கைகண்டசோழபுரத்திற்கு மாற்றியபோது தஞ்சாவூரிலிருந்து கவனமும் கவனமும் மாறியது.

விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளர்கள் தஞ்சாவூர் மீது தங்கள் கவனத்தை செலுத்தியபோது, அது மீண்டும் பொலிவு பெற்றது. 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் தஞ்சாவூரை ஆட்சி செய்தனர். செவ்வப்ப நாயக்கர் (கி.பி. 1549-1572), விஜயநகரப் பேரரசின் பெயரில் சுதந்திரப் பொறுப்பை ஏற்று, தஞ்சாவூர் நாயக்கர்களின் வம்சத்தை நிறுவினார். பிரகதீஸ்வரர் கோயிலைச் சூழ்ந்து சிவகங்கைக் கோட்டை என்று அழைக்கப்படும் புதிய கோட்டையைக் கட்டினார். அடுத்த நூற்றி இருபத்தைந்து ஆண்டுகள் நாயக்கர்களின் தலைநகராக தஞ்சாவூர் இருந்தது - கடைசி ராஜா விஜயராகவனின் ஆட்சி வரை.

தஞ்சாவூர் மராட்டியர்

தஞ்சாவூர் நாயக்கர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு விசுவாசமாக இருந்தபோது, மதுரை நாயக்கர்கள் (அழகிரி) தஞ்சாவூரின் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பினர் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்களின் அப்போதைய ஆட்சியாளரான விஜயராகவனை வீழ்த்துவதில் வெற்றியும் பெற்றனர். விஜயராகவனின் மகன் தஞ்சாவூர் அரியணையைத் திரும்பப் பெற பிஜப்பூர் சுல்தானின் உதவியை நாடினான். 1675 ஆம் ஆண்டில், இதற்கு இணைந்து பிஜப்பூர் சுல்தான் அழகிரியிடமிருந்து தஞ்சாவூர் ராஜ்யத்தை மீட்டெடுக்க மராட்டிய ஜெனரல் வென்கோஜி என்னும் எகோஜி (சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர்) தலைமையில் ஒரு படையை அனுப்பினார். வெங்கோஜி அழகிரியை தோற்கடித்து, தஞ்சாவூரை கைப்பற்றினார். இருப்பினும், பிஜப்பூர் சுல்தான் அறிவுறுத்தியபடி விஜயராஜவனின் மகனை அரியணையில் அமர்த்தவில்லை, ஆனால் கைப்பற்றிய ராஜ்யத்திற்கு தன்னையே அரசனாக்கிக் கொண்டார். இதனால் தஞ்சாவூரில் மராட்டியர்களின் ஆட்சி தொடங்கியது.

சிவாஜியும் சமர்த்த ராமதாஸரும்

சிவாஜியும் சமர்த்த ராமதாஸரும் வெங்கோஜியால் தஞ்சாவூரில் மராட்டிய ஆட்சி நிறுவப்பட்டபோது, தஞ்சாவூருக்குச் சென்று சமர்த்த ராமதாஸரை வெங்கோஜிக்கு வழிகாட்ட சத்ரபதி சிவாஜி கேட்டுக் கொண்டார். சத்ரபதி சிவாஜி சமர்த்த ராமதாஸரை தனது குருவாகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. சிவாஜியின் வேண்டுகோளை ஏற்று சமர்த்த ராமதாஸர் தஞ்சாவூருக்கு வந்திருந்தார். அந்த பயணத்தின் போது அவர் ராமேஸ்வரத்திற்கும் புனித யாத்திரை மேற்கொண்டார். சமர்த்த ராமதாஸர் ஸ்ரீராமரின் தீவிர பக்தர். அவர் ஹனுமானின் மறுபிறப்பாகக் கருதப்படுகிறார். அவர் ஸ்ரீராமரைப் பல நாட்கள் தியானம் செய்துள்ளார். மரபு செய்திகளின் படி பண்டரிபூர் பாண்டுரங்க விட்டல் ராமதாஸர் முன் தானே ஸ்ரீராமராக தோன்றி தரிசனம் கொடுத்தார் கூறுகிறது.

சமர்த்த ராமதாஸரின் போதனைகள்

"ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்" என்ற "திரியோதக்ஷரி மந்திரம்" உலக்கு அளித்த ராமதாஸர் தனது சீடர்களை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி சனாதன தர்மத்தின் கோட்பாடுகளை பரப்பினார். வடநாட்டில் உள்ள அவரது சீடர்கள் மற்றும் மடங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிவாஜிக்கும் அவரது பணிக்கும் சனாதன தர்மத்தின் ஆட்சியை மீண்டும் நிறுவ உதவியது. அவரது அறிவுரை: "உங்கள் உடல் தேவைகளைப் பற்றி அதிகம் நினைக்காதீர்கள். பக்தர்களுடன் சத்சங்கம் செய்யுங்கள். உங்கள் இதயத்தில் ஸ்ரீராமரின் திருவுருவத்தை வைத்துக் கொள்ளுங்கள். ராம நாமத்தை எப்பொழுதும் உச்சரிக்கவும். காமம், பேராசை, கோபம், வெறுப்பு மற்றும் அகங்காரத்தை அழிக்கவும். எல்லா உயிரினங்களிலும் பகவான் ராமனைக் காண்க, அனைவரையும் நேசி, எங்கும் அவனுடைய இருப்பை உணருவாயக, அவனுக்காகவே வாழு, எல்லா உயிர்களிலும் அவனே சேவை செய், அவனிடம் முழுமையாகவும், இடைவிடாமல் சரணாகதி செய். என்றும் அவனில் மட்டுமே வாழ்வாயாக, நீ அழியாமையையும் நித்திய பேரின்பத்தையும் அடைவாய்" .

எங்கள் ஆங்கில தளத்தின் ஹனுமத் பக்தர் பத்தியின் கீழ் “சமர்த்த ராமதாஸர்” இல் இவரை பற்றி மேலும் அறிய பார்க்கவும்.

சமர்த்த ராமதாஸர் மற்றும் தஞ்சாவூர்

தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு மராட்டிய ஆட்சி நிறுவப்பட்டதன் மூலம் ராமதாஸரின் அமைப்பு தென்பகுதியிலும் பரவியது. ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்ட சமர்த்தர், ஸ்ரீராம பக்தியைப் பிரச்சாரம் செய்வதற்காக தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று முக்கிய மையங்களை நிறுவினார். முதலாவதாக மஹந்த் என அழைக்கப்படும் பீமராஜா கோஸ்வாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீ பிக்ஜி பாவாவுடன் [ஷாஹாபுர்கர்] தஞ்சாவூரில் இருந்தார். இரண்டாவதாக மன்னார்குடியில் ஸ்ரீ அனந்த மௌனி மஹந்தாகவும், மூன்றாவதாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள கூனூரில் ஸ்ரீ ராகவ ஸ்வாமி மஹந்தாகவும் இருந்தார்கள்.

மன்னார்குடி சமர்த்த மடம்

ஸ்ரீசீதா,ராமர்,ஸ்ரீராமசுவாமி செந்தூர ஆஞ்சநேயர் கோவில்,மன்னார்குடி,தமிழ்நாடு மன்னார்குடி திருவாரூர் மாவட்டத்தில் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள ஊர். இந்த இடம் ராஜகோபாலசுவாமி கோவிலுக்காக பிரசுத்தம், இது ஒரு முக்கிய வைணவ கோவிலாகும். ஸ்ரீ அனந்த மௌனி ஸ்வாமியை மஹாந்தராகக் கொண்டு ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் இந்த இடத்தில் தனது மடத்தை நிறுவினார். இந்த ஸ்தாபனத்திற்காக தஞ்சாவூர் ஸ்ரீ வெங்கோஜி மன்னரால் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மன்னார்குடி மடத்தின் குரு பரம்பரை

மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்டு சமர்த்த ராமதாஸர் நிறுவிய சம்பிரதாயப்படி ஸ்ரீ அனந்த மௌலி சுவாமிகள் ஸ்ரீராம பக்தியை பிரசாரம் செய்து வந்தார். அவருக்கு ஸ்ரீ மேரு ஸ்வாமி மற்றும் ஸ்ரீ மேகஷ்யாமா ஸ்வாமி என்று இரண்டு சீடர்கள் இருந்தனர். ஸ்ரீ மேரு சுவாமிக்கு சியாமராஜா ஸ்வாமி, சேது ஸ்வாமி என்று இரண்டு சீடர்கள் இருந்தனர். 1693 இல் ஸ்ரீ அனந்த மௌலி ஸ்வாமியின் முக்திக்குப் பிறகு ஸ்ரீ மேரு ஸ்வாமிகள் தலைமை மஹந்தராகப் பொறுப்பேற்றார்.

ஸ்ரீ மேரு ஸ்வாமி தனது குருவான ஸ்ரீ அனந்த மௌலியிடம் இருந்து ஸ்ரீ சமர்த்ததின் தத்துவத்தைக் கற்றுக்கொள்வதில் அவருக்கு இருந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும், ஸ்ரீ சமர்த்ததரின் பணி மற்றும் அவரின் தத்துவத்தை சிறந்து விளக்கியவர்களில் ஒருவராக அவரை மாற்றியது. இதற்கு அவர் ஆற்றிய பங்களிப்பும், தலைமுறை தலைமுறையாக அவர் விட்டுச் சென்ற இலக்கியப் பணியும் அவரது புலமையின் மகத்துவத்திற்குச் சான்றாகும்.

அவருக்குப் பிறகு ஸ்ரீ மேகஷ்யாமா ஸ்வாமியும், ஸ்ரீ சேது ஸ்வாமியும் ஸ்ரீராம பக்தியைப் பிரச்சாரம் செய்யும் மன்னார்குடி கேந்திரத்திற்குத் தலைமை தாங்கினார்கள். இன்றும் ஸ்ரீ மேரு ஸ்வாமியின் சீடர்கள் ஸ்ரீ ஸமர்த் ஸ்தாபித்த சம்பிரதாயப்படி ஸ்ரீராம பக்தியைப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

மன்னார்குடி சமர்த்த ராமதாஸர் கேந்திரா

ஸ்ரீ ஆனந்த மௌலியை மடாதிபதியாகக் கொண்டு ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் கேந்திரா மன்னார்குடியில் நிறுவப்பட்டது. ஸ்ரீராமசுவாமி கோயிலும் மடத்தில் நிறுவப்பட்டது. இந்த கேந்திரா "ஹரித்ரா நதி" என்று அழைக்கப்படும் பெரிய கோவில் குளத்தையும், இந்த குளத்தைச் சுற்றியுள்ள பல கோவில்களையும் கவனித்து வந்தது.

கேந்திர வளாகத்தில், ஸ்ரீ சமர்த்தர் தாமே ஸ்ரீ மாருதியின் மூர்த்தத்தை நிறுவி பிராண பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீ மாருதியின் மூர்த்தத்தில் ‘செந்தூரம்’ பூசப்பட்டது. மாருதிக்கு "ஸ்ரீ பிரதாபவீர மாருதி" என்று பெயரிடப்பட்டது. இது 1677 ஆம் ஆண்டில் நடந்தது.

ஸ்ரீ ராமசுவாமி செந்தூர ஆஞ்சநேயர் கோவில்

ஸ்ரீ சமர்த சம்பிரதாய ஸ்ரீ மேரு ஸ்வாமி மடம் தற்போது மன்னார்குடியில் ஸ்ரீ ராமசுவாமி செந்தூர ஆஞ்சநேயர் கோயில் என்று அழைக்கப்படுகிறது, இக்கோயில் கிழக்கு நோக்கி திருமஞ்சன வீதியில் அமைந்துள்ளது. கோவில் நான்கு பக்கமும் சுவர்களுடன் காணப்படுகிறது. கோயிலுக்கு வெளிப் பிராகாரம் உள்ளது. முதலில் முக மண்டபத்தையும் அதன் வடக்குப் பகுதியில் மர மண்டபத்தையும் பார்க்கிறோம். இதில் ஸ்ரீராம பட்டாபிஷேக மற்றும் பிற தெய்வங்களின் படத்தையும் காணலாம். இதன் எதிர்புறம் ஒரு நுழைவு வாயில் உள்ளது. அதன் வழியாக பிரதான மண்டபத்திற்குள் நுழையலாம்; அங்கு செந்தூர ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

ஸ்ரீ செந்தூர ஆஞ்சநேயர்,மன்னார்குடி அர்த்த மண்டபத்தில் ஸ்ரீ சீதாராம பஞ்சாயத்ன மூர்த்திகளின் இரண்டு தொகுப்புகள் உள்ளன. அதற்கு அருகில் கிழக்கு நோக்கிய ஸ்ரீதாஸ மாருதியின் பஞ்சலோக விக்ரஹம் உள்ளது. இதற்கு அடுத்ததாக கர்ப்பகிரகம் உள்ளது. கருங்கற்களால் ஆன ஸ்ரீ சீதாராம பஞ்சயத்ன மூர்த்தியின் சிலைகள் கர்ப்பகிரகத்தில் காணப்படுகின்றன.

செந்தூர ஆஞ்சநேயர்

ஸ்ரீ ஆஞ்சநேயரின் மூர்த்தம் சுமார் ஆறடி உயரத்தில் ‘செந்தூரம்’ பூசப்பட்டது. சிலை நின்ற கோலத்திலும், பக்தரை நேராகப் பார்த்தபடி காட்சி தருகிறார்.

இறைவனின் இரண்டு தாமரை பாதங்களிலும் ‘தண்டை’ காணப்படுகிறது. முழங்காலுக்கு அருகில் அவரது வலது தாமரை பாதங்களை அலங்கரிக்கும் அலங்கார சங்கிலி உள்ளது. இறைவனின் இடது தாமரை பாதங்களுக்கு அடியில் ஒரு அரக்கன் சிக்கியிருப்பதைக் காண முடிகிறாது. அவரது வலது தாமரை பாதங்கள் தரையில் உறுதியாக இருப்பதைக் காண முடிகிறது. மௌஜ்ஜி-புல்லின் மூன்று சரத்தால் ஆன இடுப்பு அணி கச்சையில் இறைவன் அணிந்துள்ளார். உயர்த்தப்பட்டு கங்கணத்தால் அலங்கரிக்கப்பட்ட அவரது வலது கை, 'அபய முத்திரை' காட்டி, அவரது பக்தர்களுக்கு ஆசிகளைப் பொழிகிறது. கங்கணத்தால் அலங்கரிக்கப்பட்ட இடது கையை அவரது மார்பில் தங்கியிருப்பதைக் காணலாம். அவரது மார்பில் அலங்கார ஆபரணம் காணப்படுகிறது. அவரது நீண்ட உயர்த்தப்பட்ட வால் அவரது தலைக்கு மேலே சென்று அவரது இடது தோள்பட்டை அருகே ஒரு சிறிய திருப்பத்துடன் முடிகிறது. வால் முனையில் ஒரு சிறிய மணியும் காணப்படுகிறது. இறைவன் தன் தோள்களைத் தொடும் குண்டலத்தை அணிந்திருக்கிறார். நேர்த்தியாக சீவப்பட்டு முடிச்சுப் போடப்பட்ட சிகை தலையின் மேற்பகுதியில் தெரிந்தது.

இறைவனின் தனிச்சிறப்பு சிந்தூரம் பூசப்பட்டு, இரு கண்களாலும் பக்தர்களை நேருக்கு நேர் நோக்கிக் கொண்டிருப்பது. அவரது பிரகாசமான கண்கள் பக்தர் மீது கருணையைப் பொழிகின்றன. தென்னிந்தியாவில் சிந்துரம் பூசப்பட்ட ஸ்ரீ மாருதியைக் காண்பது அரிது. 

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீராமசுவாமி செந்தூர ஆஞ்சநேயர் கோவில், மன்னார்குடி"

 

அனுபவம்
ஸ்ரீ ஸமர்த்தர் ஸ்தாபித்த செந்தூர ஆஞ்சநேயரை வணங்கினால் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் நீங்கும். ஸ்ரீ ஆஞ்சநேயரின் இந்த கம்பீரமான வடிவத்தை ஒருமனதாக தியானிப்பதன் மூலம் பூரண அமைதி அடைய முடியும்.      

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு:  ஜனவரி 2023
* எழுத்தாளர் தஞ்சாவூரில் உள்ள மோடி மொழி நிபுணர், மொழிபெயர்ப்பாளர்
சரஸ்வதி மஹால் நூலகத்தில் பணிபுரிகிறார்


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+