சென்னைக்கு அருகில் "ஸ்ரீ திருமலை வையாபுரி" என்ற க்ஷேத்திரம் உள்ளது. இந்த க்ஷேத்திரத்தின் மூலவர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள். கோவில் ஒரு குன்றின் மேல் உள்ளது. ஸ்ரீ கருட பகவான் திருமலை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளுக்கு குடையாக சேவை செய்ய வேண்டும் என்று விரும்பினார். தனது விருப்பத்தை பெருமாளுக்கு கூற பெருமாள் பாலாறு அருகே உள்ள புனித குன்றின் மீது அவரது விருப்பங்கள் நிறைவேறும் என்று அவருக்கு அருளினார், அங்கு தானே பிரதான தெய்வமாக இருப்பேன் என்றும் கூறினார். என்று க்ஷேத்திர புராணம் கூறுகிறது. இந்த க்ஷேத்திரம் இப்போது சென்னைக்கு அருகில் உள்ள "ஸ்ரீ திருமலை வையாபுரி" என்று அழைக்கப்படுகிறது, இது "தட்சிண திருமலை" என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இந்த குன்று "தட்சிண கருடாத்திரி" என்றும் அழைக்கப்படுகிறது. வெங்கடேசப் பெருமானின் இருப்பிடம் என்பதால் திருமலை - சரி, ஆனால் வையாபுரி என்ற பின்னொட்டு ஏன்?
வையாபுரி என்ற பின்னொட்டுக்கான காரணத்தை அறிய, ராமாயண காலத்துக்குச் செல்வோம். ராவணனின் மகன் இந்தர்ஜித் மற்றும் லக்ஷ்மணன் இடையே நடந்த கடுமையான போரில், இந்தர்ஜித் லட்சுமணனை ஒரு கொடிய அம்பினால் தாக்கினார். இந்த அம்பினால் தாக்கப்பட்ட லக்ஷ்மணன் விழுந்து சுயநினைவை இழக்கிறான். தன் சகோதரர்களின் நிலையைக் கண்டு இராமன் விரக்தியில் புலம்பினார். இந்த அவநம்பிக்கையான நேரத்தில் ஜாம்பவான் விபீஷணனையும் அனுமனையும் ஆலோசனைக்காக அழைக்கிறார். இலங்கை மருத்துவர் சுஷேணனை விபீஷணன் அழைக்கிறார். அவர் துரோணகிரியில் இருந்து மிருத சஞ்சீவனி (புதிய வாழ்வளிக்க), விசால்யகரணி (வெட்டுகள் மற்றும் காயங்களுக்கு), சந்தானகரணி (தோலுக்கு) மற்றும் சாவர்ணகரணி (தோலின் நிறத்திற்காக) ஆகிய நான்கு தெய்வீக மூலிகைகளை எடுத்து வருமாறு அறிவுறுத்தி அதனை சூரிய உதயத்திற்கு முன் மருந்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். இந்தக் குறுகிய காலத்தில் செடிகளைக் கொண்டுவரும் இந்தப் பணியை ஸ்ரீ ஹனுமரால் மட்டுமே சாதிக்க முடியும் என்பது உணரப்பட்டது.
ஸ்ரீ ஹனுமார் துரோணகிரியிலிருந்து சஞ்சீவனி மலையை ஏந்தி இலங்கைக்கு பறந்து கொண்டிருந்தார். வழியில் தட்சிண திருமலையின் மீது பறக்கும் போது ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளுக்குத் தம் பிரார்த்தனைகளைச் செய்தார். சஞ்சீவனி மலையை தரையில் வைக்க கூடாது என்பதால், ஸ்ரீ ஹனுமர் இறைவனை வேண்டிக் கொண்டு, அந்த மலையை தரையில் வைக்காமல், இறைவனுக்கு பூஜை செய்ய துரோண்கிரி மலையை ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றினார்.
ஸ்ரீ அனுமனின் இந்தச் செயல், க்ஷேத்திரத்திற்கு “வையாபுரி” என்ற பின்னொட்டை வழங்கியது. தமிழில் வை என்றால் வைத்தல், வையா என்றால் வைக்காதது, பூரி என்றால் இடம். ஸ்ரீ ஹனுமாரின் ஒரு முக்கியமான பணியில் இருந்தபோதும் வெங்கடேசப் பெருமானிடம் பிரார்த்தனை செய்ததால், மலையை தரையில் வைக்காததால், இந்த க்ஷேத்ரம் "திருமலை வையாபுரி" என்று அழைக்கப்பட்டது.
இந்த க்ஷேத்திரம் "திருமலை வையாவூர்" என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
இந்த க்ஷேத்திரத்தில் மலையின் மேல் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. வராஹ பகவான் [அவரது மடியில் ஸ்ரீ லக்ஷ்மியுடன்] மற்றும் வெங்கடேசப் பெருமாள் ஆகியோருக்கு இரண்டு தனித்தனி சன்னதிகளும் தனி தனி கொடி மரமும் உள்ளது. திருப்பதியில் இருப்பது போல், இங்கும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளுக்கு வராஹ மூர்த்திக்கு அர்ச்சனை செய்த பின்னரே பூஜை செய்யப்படுகிறது. அலர்மேல் தயார், ஸ்ரீ ராமர் - லக்ஷ்மணர் - ஸ்ரீ சீதா தேவி, ஸ்ரீ வேணுகோபால் - ருக்மணி - சத்யபாமா, ஸ்ரீ ராமாநுஜர் ஆகியோகளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. க்ஷேத்திரம் "வையாபுரி" என்று பெயர் பெற்ற சம்பவத்தை மண்டபத்தின் தூண்களில் ஒன்றில் ஒரு சிற்பம் ஸ்ரீ அனுமன் சஞ்சீவினி மலையை ஒரு கையிலிருந்து மாற்றும் செயலை சித்தரித்திருக்கிறார்கள்.
இந்த க்ஷேத்திரம் அமைந்துள்ள பகுதி முன்பு தொண்டைமண்டலத்திற்கு உட்பட்டிருந்தது. அன்றய தொண்டைமண்டலம் இன்றைய நெல்லூர், சித்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. தொண்டைமண்டலத்தை ஆண்டவர்கள் தொண்டைமான் என்ற பட்டப்பெயரால் அறியப்பட்டனர். தொண்டைமண்டலத்தின் ஆரம்பகால ஆட்சியாளர்களில் ஒருவர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளுக்கு இம்மலையில் இக்கோயிலைக் கட்டியுள்ளார்.
மலையின் உச்சியை அடைய சுமார் ஐந்நூறு படிகள் ஏற வேண்டும். வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளுக்கு எதிரில் ஸ்ரீ ஹனுமார் கோயில் உள்ளது. ஸ்ரீ ஹனுமார் கோவிலை ஒட்டி ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் கோவில் உள்ளது. பெரிய கோவிலின் திருவிழாவுக்கான தேர் ஹனுமார் கோவில் வளாகத்திலும் காணப்படுகிறது. இக்கோயில் மலையை நோக்கி வடக்கு பார்த்தவாறு அமைந்துள்ளது. ஒரு பெரிய மண்டபமும் கர்ப்பகிரஹமும் சேர்ந்தது ஹனுமார் கோயிலாகும். பிரதான சாலையில் இருந்தே பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யலாம்.
மண்டபத்தின் பக்கவாட்டுச் சுவர்களில், ஸ்தல புராணத்தைச் சித்தரிக்கும் பெரிய ஓவியங்களைக் காணலாம். கர்ப்பகிரகத்தின் முன் மேற்கூரையில், சுதை சிற்பமாக வாகனத்துடன் கூடிய நவக்கிரகங்களைக் காணலாம். எந்த நவக்கிரகத்தின் நிவாரணம் பெற வேண்டுமோ அதற்கு கீழே நின்று ஸ்ரீ ஹனுமானிடம் பக்தர் பிரார்த்தனை செய்தால் நிவாரணம் பெறலாம் என்பது நம்பிக்கை. ஸ்ரீ ஹனுமாரின் அற்புதமான மற்றும் பிரமாண்டமான தேற்றம் பக்தர்கள் காணும் பொழுது அவர்கள் தங்கள் பார்வையை இறைவனிடமிருந்து அகற்ற முடியாது.
பேரரசர் அக்பரின் ஆட்சியின் போது முகலாயப் பேரரசின் நிதி அமைச்சராக (முஷ்ரிஃப்-இ-திவான்) இருந்தவர் ராஜா தோடர் மால் என்பவர். அக்பரின் அரசவையில் இருந்த நவரத்தினங்களில் இவரும் ஒருவர். தோடர் மாலின் கீழ், அக்பரின் 15 சுபாக்களுக்கு 15 திவான்கள் பரிந்துரைக்கப்பட்டனர். 1558 ஆம் ஆண்டு ஸ்ரீ ஹனுமாருக்கான இந்த கோவில் அவரால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.
இந்த பழமையான ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு கோயில் கோவிந்த உபாசகர் ஸ்ரீ சீதாராம சுவாமிகளால் தற்போது உள்ள இடத்தில் புதிதாக கட்டப்பட்டது என்று லிஃப்கோவால் வெளியிடப்பட்ட “ஸ்ரீ வீர ஆஞ்சநேயன்” புத்தகத்தில், ஸ்ரீ யு.வி. ராமகிருஷ்ணன் ஐயங்கார் ஸ்வாமிகள் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே கல்லில் திருவாச்சி [பிரபை]யுடன் ஸ்ரீ ஹனுமான் சிலை முழுவதுமாக செதுக்கப்பட்டுள்ளது. இறைவன் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இறைவனின் தாமரை பாதங்கள் தண்டை மற்றும் நூபுரம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இறைவன் இடையில் கச்சம் கட்டியுள்ளார். அதன் மேல் மௌஞ்ஜி அணிந்துள்ளார். மேல் கரத்தில் கேயூரமும், மணிக்கட்டில் கங்கணமும் அணிந்துள்ள அவரது இடது கை இடது இடுப்பில் இருத்தியும், வலது கையில் சௌகந்திகா மலரின் தண்டை ஏந்தியவாறும் காட்சியளிக்கிறார். இன்னும் மலர இருக்கும் பூ அவரது இடது தோளுக்கு மேலே தெரிகிறது. பாகு-வலயம் அவரது தோள்களுக்கு அழகு சேர்க்கிறது. அவரது பரந்த மார்பில் யக்ஞோபவீதம் காணப்படுகிறது. அவர் இரண்டு மாலைகளை ஆபரணங்களாக அணிந்துள்ளார், அவற்றில் ஒன்று அவரது மார்பை அலங்கரிக்கும் பதக்கத்தைக் கொண்டுள்ளது. உயர்த்திய வலது கையால் ‘அபய முத்திரை’ காட்டி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவனிடம் பக்தியுடன் இருக்கும் பக்தனாக தனது வாலினை முதுகு புறம் சுருட்டி வைத்துள்ளார் அதனால் அவரது வால் நமக்கு காணப்படவில்லை. இறைவன் தனது தோள்களைத் தொடும் குண்டலங்களை காதுகளில் அணிந்துள்ளார். இறைவனும் காதில் ‘கர்ண புஷ்பம்’ அணிந்துள்ளார். சிகையை நேர்த்தியாக சீவி முடிச்சிட்டு தலையின் மேற்புறத்தில் இருக்கிறது, அதனை அலங்கார தலைப் பட்டை நேர்த்தியாகப் பிடிக்கப்பட்டிருந்தது. அவரது சுருள் கேசத்தின் ஒரு பகுதி காதுகளின் ஓரத்தில் பாய்ந்து 'சுந்தரம்'க்கு அழகு சேர்க்கிறது.
இந்த க்ஷேத்திரத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், அவர் இரண்டு கண்களாலும் பக்தர்களை நேருக்கு நேராக பார்த்தபடி இருக்கிறார். அவரது பிரகாசமான கண்கள் பக்தன் மீது அன்பையும் கருணையையும் வெளிப்படுத்துகின்றன. அத்தகைய பிரகாசமான கண்களுடன், க்ஷேத்திரத்தின் இறைவன் தனது பக்தனுக்கு அனைத்து நேர்மையான வேண்டுகோளையும் அருளுகிறார்.
அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் இறைவனை முழு பக்தியுடன் வேண்டி,
தனக்கு விதிக்கப்பட்ட அனைத்து கடமைகளையும் தடையின்றி செய்தவர் ஹனுமார். அவர் நமக்கு எந்த
தடையும் இல்லாமல் சன்மார்க்கத்தை எவ்வாறு அடைவது என்று நமக்கு வழிகாட்டுவது உறுதி.
தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு: டிசம்பர் 2022
படங்கள் -"புதுயுகம்" தொலைக் காட்சியிலிருந்து