home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஹனுமார் கோவில், மோத்திரப்பச்சாவடி, தஞ்சாவூர்

ஜீகே கௌசிக்

ஹனுமார் கோவில், மோத்திரப்பச்சாவடி, தஞ்சாவூர்


தலைநகர் தஞ்சாவூர்

தஞ்சாவூர் சோழர்களின் தலைநகரம். 13 ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தஞ்சாவூர் பகுதி பாண்டியர்களின் ஆட்சியின் கீழ் வந்தது, பின்னர், மாலிக் கஃபூரின் படையெடுப்பைத் தொடர்ந்து, அது சீர்குலைந்தது.

விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளர்கள் தஞ்சாவூர் மீது தங்கள் கவனத்தை செலுத்தும் வரை, அது வெளிச்சத்திற்கு வரவில்லை. 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் தஞ்சாவூரை ஆட்சி செய்தனர். விஜயநகரப் பேரரசின் படை தளபதி செவ்வப்ப நாயக்கர் (கி.பி. 1549-1572), தஞ்சாவூரின் சுதந்திர ஆட்சிப் பொறுப்பை ஏற்று, தஞ்சாவூர் நாயக்கர்களின் வம்சத்தை நிறுவினார். பிரகதீஸ்வரர் கோயிலை மையம்மாக கொண்டு அதனைச் சுற்றி சிவகங்கைக் கோட்டை என்று அழைக்கப்படும் புதிய கோட்டையைக் கட்டினார். தஞ்சாவூர் அடுத்த நூற்றி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு கடைசி நாயக்கர் மன்னர் விஜயராகவனின் ஆட்சி வரை நாயக்கர்களின் தலைநகராக இருந்தது. விஜயநகரத்தில் இருந்து வந்த நாயக்கர்கள், ஹனுமானின் சிறந்த பக்தர்கள். ஹனுமாரிடமிருந்து பலம், வீரம், வைராக்கியம் போன்ற உயர்ந்தவைகள் தாங்களுக்கு கிடைக்க முன் உதாரணமாக அவரை கொண்டாடினார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

தஞ்சாவூர் மராட்டியர்

ஹனுமார் கோவில், மோத்திரப்பச்சாவடி, தஞ்சாவூர் நாயக்கர்கள், தஞ்சாவூர் ஆட்சியாளர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு விசுவாசமாக இருந்தபோது, ​​மதுரையின் நாயக்கர்கள் (அழகிரி) தஞ்சாவூரின் ஆட்சியைக் கைப்பற்ற விரும்பினர் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்களின் அப்போதைய ஆட்சியாளர் விஜயராகவனை வீழ்த்துவதில் வெற்றியும் பெற்றனர். விஜயராகவனின் மகன் தஞ்சாவூர் அரியணையைத் திரும்பப் பெற பிஜப்பூர் சுல்தானின் உதவியை நாடினான். 1675 ஆம் ஆண்டில், பிஜப்பூர் சுல்தான் புதிய படையெடுப்பாளரிடமிருந்து ராஜ்யத்தை மீண்டும் கைப்பற்ற மராட்டிய தளபதி வெங்கோஜி (எகோஜி என்றும் அழைக்கப்படும் சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர்) தலைமையில் ஒரு படையை அனுப்பினார். வெங்கோஜி அழகிரியை தோற்கடித்து, தஞ்சாவூரை கைப்பற்றினார். இருப்பினும், பீஜாப்பூர் சுல்தான் அறிவுறுத்தியபடி அவரது ஆதரவாளரை அரியணையில் அமர்த்தவில்லை. ராஜ்யத்தைக் கைப்பற்றிய வெங்கோஜி தன்னையே தஞ்சாவூர் அரசனாக அறிவித்தான். இதனிலிருந்து தஞ்சாவூரில் மராட்டியர்களின் ஆட்சி தொடங்கியது.

கலாச்சாரம் மற்றும் சமய நடவடிக்கைகள்

சோழர் காலத்தில், பெரிய கோவில் ஒரு கலாச்சார மையமாக செயல்பட்டது, அங்கு குடிமக்களுக்கு மருத்துவ வசதிகள் விரிவுபடுத்தப்பட்டன மற்றும் நாடக கலைஞர்களுக்கான குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டன. இந்த காலத்தில் நிறுவப்பட்ட கலாச்சாரம் தஞ்சாவூரில் மேலும் தொடர்ந்தது. பிறகு ஏற்பட்ட ஒரு தோய்வுக்குப் பிறகு, நாயக்கர்கள் ஆட்சி மற்றும் மராட்டிய ஆட்சியின் போது, தஞ்சாவூரின் கலாச்சார மற்றும் சமய நடவடிக்கைகள் புத்துயிர் பெற்றன. இந்தக் காலக்கட்டத்தில் தஞ்சாவூர் கலாச்சாரத்தின் முக்கிய மையமாக மாறியது. கலை, சிற்பம், இசை, நடனம் போன்ற நிகழ்வுகள் அனைத்தும் புதுப்புது சிந்தனைகளுடன் செழித்து வளர்ந்தன. இந்த நாயக்கர்கள், மராத்தியர்கள் என்று இரு வம்சங்களும் இந்த நடவடிக்கைகளுக்கு பெரும் ஆதரவளித்தனர். இலக்கியம் புதிய உச்சத்தைக் கண்டது. சமய செயல்பாடுகளில் புதிய கோயில்கள் கட்டப்பட்டன, பழையவை புதுப்பிக்கப்பட்டன. மக்கள் நலன் கருதி புதிய நீர்வழிகள், சாலைகள் கட்டப்பட்டன, வரி வசூல் எளிமையாகவும் எளிதாகவும் செய்யப்பட்டது. நிறுவப்பட்ட சட்டத்திற்காக நீதிமன்றங்கள் செயல்பட்டன.

ராமேஸ்வரம் செல்லும் யாத்திரை பாதை

வட இந்தியாவில் ராமானந்தரால் ராமநந்தா சம்பிரதாயத்தின் எழுச்சியும் மற்றும் தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தின் எழுச்சியும், பக்தர்கள் இந்தியாவின் பல புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள ஆரம்பித்தனர். தென்னாட்டு பக்தர்களுக்கு வாரணாசி யாத்திரை, வடமாநில பக்தர்கள் ராமேஸ்வரம் யாத்திரை செல்லும் வழக்கம் புதிய உச்சத்தையும் புத்துணர்ச்சியையும் கண்டது. யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அனைத்து ஆட்சியாளர்களும் ஆதரவையும் வசதிகளையும் செய்யலாயினர் இதற்கு தஞ்சாவூர் ஆட்சியாளர் விதிவிலக்கல்ல. குறிப்பாக மராட்டிய ஆட்சியின் போது, இது ஒரு சமூக, கல்வி மற்றும் நலன் சார்ந்த காரணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த பக்தர்களுக்கு யாத்திரை, இந்த நீண்ட பயணத்திற்குத் தேவையான வசதிகள் மற்றும் அதே நேரத்தில் உள்ளூர் மக்களுக்கு உணவு, உணவுப் பணிகள், மருத்துவ கவனிப்பு மற்றும் கல்வி ஆகியவற்றை வழங்க நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு தஞ்சாவூர் மராட்டியர்களால் ஒரு தனித்துவமான முறை வகுக்கப்பட்டது.

சத்திரம், சாவடி மற்றும் தண்ணீர் பந்தல்

முக்தாம்பாள் சத்திரம், ஒரத்தநாடு, தஞ்சாவூர் :: உபயம்: விக்கி காமன்ஸ் சத்திரம் என்பது யாத்ரீகர்களுக்கு உணவு வழங்கி மற்றும் தங்க இடம் அளிக்கும் வழித்தட விடுதியாகும். சாவடிகள் ஓய்வு இடம் அல்லது பொதுவான நலன்புரி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் தற்காலிக கொட்டகை ஆகும். பொதுவாக சாவடிகள் வணிகம்/வியாபாரம் போன்றவற்றிற்காக நகரத்திற்கு வரும் மக்களிடமிருந்து நகரத்தின் நுழைவு வாயில்களில் வரி வசூலிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. மராத்தியர்கள் இந்த சத்திரங்கள் மற்றும் அதன் பராமரிப்புக்காக ஒரு அறக்கட்டளையை உருவாக்கினர். மூத்த ராணியால் நிர்வகிக்கப்படும் அறக்கட்டளை மூலம் உணவு வழங்குதல், நோய்வாய்ப்பட்ட யாத்ரீகர்களுக்கு சிகிச்சைச் செய்வது போன்ற நற்பணிகள் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சத்திரங்களில் மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான வசதிகள் செய்து தரப்பட்டன, இங்கு இந்த மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடமும் அளிக்கப்பட்டன.

1743 முதல் 1837 வரை மராட்டிய ஆட்சியின் போது இருபதுக்கும் மேற்பட்ட சத்திரங்கள் இருந்தன. பெரும்பாலான சத்திரங்கள் ராமேஸ்வரம் செல்லும் யாத்ரீகர்கள் ஓய்வெடுப்பதற்காக கட்டப்பட்டவை, மேலும் இந்த விடுதிகள் யாத்ரீகர்கள் அனைவருக்கும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் உணவு வழங்கப்பட்டது.

கோடை காலத்தில் பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் மோர் வழங்கும் "தண்ணீர் பந்தல்" பல இடங்களில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு விடுதிக்கும் சில கிராமங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. குறிப்பிட்ட நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் விடுதியை நிர்வகிப்பதற்கு செலவிடப்பட்டது. மானியம் வழங்கப்பட்ட கிராம நிலங்களில் விளைந்த தானியங்களிலிருந்து உணவு தயாரிக்கப்பட்டு விடுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

யாத்ரீகர்கள் சத்திரத்திற்கு வருவதற்கு முன்போ அல்லது வந்து தங்கியிருக்கும் போதோ நோய்வாய்ப்பட்டால் மருந்து மற்றும் பத்திய உணவு வழங்க வசதி உண்டு. அவர்கள் குணமடையும் வரை கனிவுடனும் கருணையுடனும் கவனிக்கப்பட்டனர்.

சத்திரங்கள்

மராட்டியர்களால் நிறுவப்பட்ட அனைத்து சத்திரங்களிலும் யாத்ரீகர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்குவதற்கு சிறந்த கட்டிடம் இருந்தது. சமையல் செய்யும் இடம், மக்கள் கூடும் பெரிய அரங்குகள் மற்றும் அரங்குகள் விழாக்களுக்கும் பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலான சத்திரங்களில் சொந்தமாக பெரிய குளம் மற்றும் ஒரு சிறிய கோவிலும் இருந்தது. மராட்டிய ஆட்சியாளர்கள் கட்டிய அனைத்து சத்திரங்களிலும் இந்த அம்சம் காணப்படுகிறது.

தஞ்சாவூர் அப்பாகள்

தஞ்சாவூரில் வந்து குடியேறிய மராட்டியர்கள் இரு பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒரு பிரிவினர் "கன்னாகுல்யா" [शहाण्णव कुली – 96 குடும்பங்கள்] என்று அழைக்கப்பட்டனர். அரச குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் இந்தப் பெயரால் அறியப்படுகின்றனர். இரண்டாவதாக ராணுவம், காவலர்கள் மற்ற பிரிவைச் சேர்ந்த மராத்தியர்கள். அவர்களுக்கிடையேயான திருமணம் தடைசெய்யப்படவில்லை. இந்த இரண்டு கிளைகளில் ஏதேனும் ஒரு உள்ளூர் நபரை மணந்தால், அவர்கள் மராத்தி பேசினாலும், இவர்களால் ஏற்படும் சந்ததிகள் மராத்தியர்களாக கருதப்படுவதில்லை. இந்த சந்ததியனர் "அப்பா" அல்லது "அண்ணா" என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் அரசாங்கத்தில் நல்ல பதவியைப் பெற்றனர். இந்த அப்பாக்களில் சிலரைப் பெயரிட வேண்டும் - மானாஜி அப்பா, தாதாஜி அப்பா, முத்தோஜி அப்பா, மலர்ஜி அப்பா, அவர்கள் நன்கு அறியப்பட்டவர்கள். சில தெருக்களுக்கு அல்லது வட்டாரங்களுக்கு அவர்களின் பெயரால் பெயரிடப்பட்டது குறிப்பிடதக்கது.

மோத்திரப்பசாவடி

ஹனுமார் கோவில், மோத்திரப்பச்சாவடி, தஞ்சாவூர் தஞ்சாவூரை கோடிக்கரையுடன் இணைக்கும் சாலையில், தற்போதைய தஞ்சாவூரின் புறநகரில் மோத்திரப்பசாவடி என்ற இடம் உள்ளது. கொடிக்கரை ராமேஸ்வரத்தில் உள்ளது. ராமேஸ்வரம் செல்லும் பழைய நாட்களில் போடப்பட்ட நெடுஞ்சாலைக்கு "கோடிக்கரைப் பெருஞ்சாலை" என்று பெயரிடப்பட்டது. முந்தைய நாட்களில் வட இந்தியாவில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் சிதம்பரம், கும்பகோணம் வழியாக இந்த நெடுஞ்சாலையில் ராமேஸ்வரம் சென்றடைந்தனர். இந்த நெடுஞ்சாலையில் மராட்டிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட சத்திரங்கள் ஏராளம். முன்பு விளக்கியபடி, ராமேஸ்வரம் செல்லும் யாத்ரீகர்களுக்கு மருத்துவத் தேவைகள் உட்பட அனைத்து வசதிகளையும் இந்த சத்திரங்கள் வழங்குகின்றன.

முன்பு கூறப்பட்டபடி, கருவூலத்திற்கு வரி செலுத்த வேண்டிய நபர்களிடமிருந்து வரி வசூலிப்பதற்காக கிட்டத்தட்ட அனைத்து வெளியேறும் மற்றும் நுழைவு வாயில்களிலும் சாவடிகள் நிறுவப்பட்டன. வரி வசூலிக்கும் பணி ஆட்சியாளர்களின் நம்பிக்கைக்குரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்படி இந்த சாவடியின் வருவாய் வசூல் செய்ய மோத்திரப்பா என்ற அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கலாம், எனவே இந்த சாவடிக்கு இந்த பெயர் வந்ததாக கருதப்பட வாய்ப்புள்ளது.

சர்போஜி ஆட்சியின் போது பருத்தி மற்றும் பட்டு துணி உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டது. பருத்தி சாகுபடி ஊக்குவிக்கப்பட்டது, ஆனால் பருத்தி சாகுபடிக்கு வரி விதிக்கப்பட்டது. பருத்தி அல்லது பட்டை நூலாக ஆக்குவதற்கும், அதனை துணியாக நெய்வதற்கும் தனி வரி விதிக்கப்பட்டது. பழைய பதிவுகளின்படி இந்த வரி "மோடர்பா" [தறிகள் மீதான வரி] என்று அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட சாவடியில் இதுபோன்ற வரிகள் செலுத்தப்பட வேண்டும், எனவே இது மோத்திரப்பா சாவடி என்று பெயர் பெற்றிருக்கலாம்.

மோத்திரப்பசாவடியும் சத்திரமும்

தற்போதைய சாவடி அமைந்தா இடத்தை கவனத்துடன் பார்த்தால், வரி வசூலிக்கும் நோக்கத்திற்காக நிறுவப்பட்ட இந்த சாவடி ஒரு சத்திரத்தின் கடமைகளையும் ஆற்றுவதைக் காணலாம். பழுதடைந்த தண்ணீர் குளம், ஸ்ரீ அனுமன் கோயில், பழைய கட்டிடத்தின் இடிபாடுகள், இவை அனைத்தும் இந்த சாவடி சத்திரமாகவும் செயல்பட்டு வந்ததைக் குறிக்கிறது.

ஸ்ரீ ஹனுமான் கோவில்

ஹனுமார் கோவில், மோத்திரப்பச்சாவடி, தஞ்சாவூர் தற்போது அனுமன் கோவிலுக்குச் செல்ல புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டில் உள்ள சாலை வழியாக செல்ல வேண்டும். இந்த இடம் எவர்கிரீன் நகர் என்றும், சாலை "ஹனுமான் கோவில் தெரு" என்றும் அழைக்கப்படுகிறது. மிகவும் பெரிய வளாகத்துடன் கூடிய கோயில் சாலையின் இடது பக்கத்தில் அமைந்துள்ளது, கோயிலை தொலைவில் இருந்தே பார்க்க முடியும். கோயிலை சுற்றி மரங்கள் இருப்பதால் நல்ல சூழல். கோவில் தெற்கு நோக்கி உள்ளது. இக்கோயில் கச்சிதமாகவும், சுற்றுச்சுவர் கொண்டதாகவும் உள்ளது.

இந்த கோவிலின் நுழைவாயிலில் இரண்டு தூண்களுடன் கூடிய வளைவு உள்ளது, மேலும் இரண்டு தூண்களில் ஸ்ரீ ராமர், சீதை, லக்ஷ்மணன் மற்றும் ஆஞ்சநேயரின் சுண்ணாம்பு கலவையால் அழகாக வடிவமைக்கப்பட்ட புடைப்பு உருவங்கள் உள்ளது. பிரதான வளைவு வழியாக கோயிலுக்குள் நுழைந்த பிறகு வரும் கருவறை ஒரு பெரிய மண்டபத்தின் மையத்தில் (அலங்கார மண்டபம்) அமைந்துள்ளது. கருவறைக்கு முன்னால் ஒரு நீண்ட வராண்டா உள்ளது. கோயிலின் முகப்பில் நான்கு அடி உயரமுள்ள சுண்ணாம்பு கலவையால் ஆன ஸ்ரீ ஆஞ்சநேயர் உருவம் இருக்கிறது. ஸ்ரீ ஆஞ்சநேயரின் இடது கையில் கதை உள்ளது, வலது கையில் 'அபய முத்திரை'யை காட்டுகிறது.

கருவறையின் விமானத்தின் மூன்று பக்கங்களிலும் ஸ்ரீ ஆஞ்சநேயரின் உருவம் உள்ளது. கருவறையை சுற்றி பக்தர்கள் வலம் வருவதற்கு பாதை உள்ளது.

ஹனுமார்

ஹனுமார்,மோத்திரப்பச்சாவடி,தஞ்சாவூர் கிரானைட் கற்களால் ஆன ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தம், 'அர்த்த ஷீலா' எனப்படும் புடைப்பு வடிவத்தில், சுமார் நான்கு அடி உயரம் கொண்டதாக உள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தம் தெற்கு நோக்கி உள்ளது மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் கிழக்கு நோக்கி இடது பாதத்தை முன்னோக்கி கொண்டு செல்வதைக் காணலாம்.

இறைவனின் இரண்டு தாமரை பாதங்களும் தண்டை மற்றும் நூபுரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இறைவன் கச்சம் பாணியில் வேட்டியையும், மௌஜா-புல்லின் மூன்று சரத்தால் செய்யப்பட்ட இடுப்புஅணியும் அணிந்துள்ளார். இடுப்பு ’அரைக்கச்சை’யில் ஒரு சிறிய கத்தியை வைத்திருக்கிறார். மேல்நோக்கி மடித்து 'சஞ்சீவி பர்வதம்' பிடித்தபடி காணப்படுகின்றன அவரது இடது கை மேல் கரத்தில் கேயுரமும், முன் கையில் கங்கணமும் காணப்படுகிறது. ’பாகு-வல்லயம்’ அவரது தோள்களுக்கு அழகு சேர்க்கிறது. அவரது பரந்த மார்பில் யக்ஞோபவீதம் காணப்படுகிறது. அவர் இரண்டு மாலைகளை ஆபரணங்களாக அணிந்துள்ளார், அவற்றில் ஒன்று அவரது மார்பை அலங்கரிக்கும் பதக்கத்தைக் கொண்டுள்ளது. அவர் கழுத்தினை ஒட்டி அட்டிகை அணிந்துள்ளார். உயர்த்திய வலது கையால் ‘அபய முத்திரை’ காட்டி தன் பக்தர்களுக்கு அச்சமின்மையையும் ஆசீர்வாதத்தையும் பொழிகிறார். இறைவனின் வால் அவரது தலைக்கு மேலே உயர்கிறது, அதன் முனை சற்று சுருண்டுள்ளது. இறைவன் தனது தோள்களைத் தொடும் குண்டலம் காதுகளில் அணிந்துள்ளார். இறைவனும் காதில் ‘கர்ண புஷ்பம்’ அணிந்துள்ளார். ‘கோர பால்’ அதாவது இறைவனின் துருத்தி நிற்க்கும் பல் அவருக்கு அழகு சேர்க்கிறது. அவரது பிரகாசமான கண்கள் பக்தர் மீது கருணையை பொழிகிறது. நேர்த்தியாக சீவப்பட்டு முடிச்சுப் போடப்பட்டிருக்கும் சிகை அவரது வலது காதின் அருகில் தெரிந்தது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஹனுமார் கோவில், மோத்திரப்பசாவடி, தஞ்சாவூர்"

 

அனுபவம்
ஸ்ரீராமரால் கட்டப்பட்ட சேதுவையும், ஸ்ரீராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈஸ்வரரையும், ஸ்ரீ அனுமனால் கொண்டுவரப்பட்ட ஈஸ்வரரையும் ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்ய செல்லும் வழியிலிருக்கும் யாத்ரீகர்களால் இந்த க்ஷேத்திரத்தின் இறைவனை வழிபடுகின்றனர். இந்த க்ஷேத்திரத்தின் இறைவனின் ஆசீர்வாதத்தால் அவர்கள் தங்கள் பணியில் வெற்றி பெற்றார்கள், நாமும் வெற்றி பெறுவோம்.   

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு: அக்டோபர் 2022


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+