home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

சாக்ஷி ஹனுமான் கோவில், கந்தமாதன மலை, ராமேஸ்வரம், தமிழ்நாடு

ஜீகே கௌசிக்

கந்தமாதன பர்வத்திலிருந்து காட்சி - ராமர் பாதம், ராமேஸ்வரம்


ஸ்ரீ ஜாம்பவான்

பல வருடங்களுக்கு முன்பு நான் ஒரு சத்சங்கத்தில் ஒரு உயர் வங்கி அதிகாரியை சந்தித்தேன். நான் அப்போது வேறு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற எனது உறவினரைப் பற்றி குறிப்பிட்டேன். "ஹோ! எனக்கு அவரை நன்றாகத் தெரியும், ‘அந்நியச் செலாவணி மற்றும் கடன் மதிப்பீட்டில்’ ஜாம்பவான்" என்று அவரை பற்றி கூறினார். இங்குப் பயன்படுத்தப்படும் ‘ஜாம்பவான்’ என்ற சொல்லுக்கு தற்காலப் பயன்பாட்டில் உள்ள ‘குரு’ என்ற சொல்லிருந்து வேறுபட்ட வேறு அர்த்தம். குரு 'ஒரு நிபுணன்' 'ஒரு திறமையான, அனுபவம்' என்பதைக் குறிக்கும் அதே வேளையில், 'ஜாம்பவான்' என்பது 'உதாரணமான' 'யார் ஊக்கமளிப்பவர்' 'யார் ஊக்குவிப்பவர்' என்பதைக் குறிக்கிறது. இந்த பயன்பாடு ராமாயணத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஜாம்பவான், பிரம்ம புத்திரன் ஆவார் அவர் 'சிரஞ்சீவி'களில் [எப்போதும் வாழும்] ஒருவராவார். அவர் பாற் கடலை கடையும் காலத்திலும் இருந்தார், மகாபலியிடம் இருந்து ஸ்ரீமாஹாவிஷ்ணு மூன்று அடி மண்ணை கேட்டு வாமனாவதாரம் எடுத்த காலத்தில் வாமனரை பலமுறை வலம் வந்துள்ளார். இராமயணத்தில் அவர் கரடிகளின் அரசராக கிஷ்கிந்தாவில் இருந்துள்ளார், மேலும் மகாபாரதத்தில் கிருஷ்ணருடன் கூட காணப்பட்டார். இதனால் சிரஞ்சீவி, என்றும் வாழ்பவர் எனப்படுகிறார்.

ஸ்ரீ அனுமனை ஊக்கப்படுத்திய ஸ்ரீ ஜாம்பவான்

 கந்தமாதன பர்வத்தில் இருந்து கடலின் மேல் தாவ தயாராக வீர ஹனுமான் இராமாயணத்தில், அங்கதன் தலைமையில் வானர படை தெற்கு திசையில் ஸ்ரீ சீதையைத் தேடிச் சென்றபோது, ஒரு கட்டத்தில் ஸ்ரீ சீதையைக் கண்டுபிடிப்பதில் நம்பிக்கை இழந்தனர். பின்னர் அவர்கள் சம்பாதி என்னும் கழுகினை சந்தித்தனர், அவர் ராவணன் ஸ்ரீ சீதையை இலங்கைக்கு எடுத்துச் சென்றதைப் பற்றி கூறினார். பின்னர் உற்சாகமடைந்த வானரங்கள் சம்பாதியின் வழிகாட்டுதலின்படி தெற்கு திசையில் பயணத்தைத் தொடர்ந்தன. அவர்கள் நிலத்தின் முனைக்கு வந்து கடலை எதிர்கொண்டபோது, படையில் இருந்த எவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்ல முடியும் என்று நினைக்கவில்லை. இந்தப் பரந்த சமுத்திரத்தைக் கடந்து, இலங்கையில் ஸ்ரீ சீதையை எப்படி, யாரால் கண்டு பிடிக்க முடியும் என்று அவர்களுக்கு புரியவில்லை.

படையில் மிகவும் மரியாதையும், அறிவும், மூத்தவருமான ஜாம்பவான், ஸ்ரீ அனுமனை அழைத்து, அனுமாரின் பிறப்பு, குழந்தைப் பருவம், சிவப்புப்பழம் என்று நினைத்து சூரியனைப் பிடிக்க வானத்தில் பறந்த விதம் ஆகியவற்றைக் கூறினார். ஜாம்பவான் ஹனுமான் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட நிகழ்வுகளை விரிவாக விளக்கினார். ஹனுமான் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டபோது மயங்கி விழுந்தது, வாயு சஞ்சரிக்க மறுத்தது, பின் அனைத்து தேவர்களும் வந்து அனுமாருக்கு பல வரங்களை அளித்தது என்று பலவற்றை நினைவு கூறினார். தேவர்களின் வெல்ல முடியாத வரங்களுடன், பிள்ளை பருவத்தில் அனுமார் எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல் முனிவர்களை விளையாட்டாக சீண்டியது, கிண்டல் செய்தது, இதனால் விளைந்த அசௌகரியத்தில் இருந்து விடுபட முனிவர்கள் மற்றவர்கள் அவரது வலிமையைப் பற்றி அவருக்கு நினைவூட்டினால் தவிர, ஹனுமானுக்கு தனது திறன் நினைவில் வராது என்று சாபமிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, முதலிய நிகழ்வுகளையும் ஜாம்பவான் நினைவு கூறினார். இப்படி அவரது ஆற்றம் எப்படி பட்டது என்று இதையெல்லாம் விவரித்த ஜாம்பவான், அனுமனை உற்சாகப்படுத்தி, வாயுவின் மகனாக இருப்பதால், வேகு தூரம் பறந்து கடலை கடக்க முடியும் என்று ஊக்கம் அளித்தார்.

ஸ்ரீ ஹனுமான் கடலை கடக்கிறார்

ஸ்ரீ ஜாம்பவான் கொடுத்த உத்வேகத்துடன், ஸ்ரீராமரின் பணியை மனதில் கொண்டும் ஸ்ரீ அனுமார் மகேந்தர பர்வத்தின் மீதிருந்து சமுத்திரத்தைத் தாவிச் சென்றார். அவர் எடுத்த பாய்ச்சலை விவரிக்க, ‘விளையாட்டாக’ என்று பொருள்படும் ‘ச-லீலம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அவர் விளையாட்டுத்தனமாக, அதாவது அதிக முயற்சியின்றி கடலைக் கடந்து இலங்கையை அடைந்தார்.

கடலை கடக்கும் போது மூன்று தடைகளை சந்தித்தார். முதலில் மைனாகம் என்ற தங்க மலை அவரை தனது இடத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சொன்னது. அனுமார் ஸ்ரீராமர் இட்ட காரியத்தை நிறைவேற்ற கடமை பட்டவராக இருந்ததால் அதை நிராகரித்தார். இரண்டாவதாக, சுரசா என்ற அரக்கி விதித்த நிபந்தனையை அனுமார் புத்திசாலித்தனமாக நிறைவேற்றினார். மூன்றாவதாக, சிம்ஹிகா என்ற அரக்கி நிழலிலிருந்தே நிழலின் உண்மை உருவத்தை கைப்பற்றும் திறமை உடையவள். அனுமார் தன் புத்திசாலித்தனத்தால் அவளை வென்று கொன்றான். இவ்வாறு மூன்று தடைகளையும் கடந்து சமுத்திரத்தைக் கடந்து இலங்கையில் இறங்கினார். லட்சியத்தை அடைய எவரும் ஆசை [மைனாகம்], பேராசை [சுரசா], பொறாமை [சிம்ஹிகா] ஆகியவைகளை வெல்ல வேண்டும் என்பதை இவை எடுத்துரைக்கிறது.

இலங்கையில் ஸ்ரீ ஹனுமான்

 ஸ்ரீராமர் பாதம் திருக்கோயில்,கந்தமாதன மலை, ராமேஸ்வரம் ஸ்ரீ ஹனுமான் தனது இடது பாதத்தை முன்னோக்கி வைத்து இலங்கைக்குள் நுழைந்தார், லங்காவின் தலைமைக் காவலரான அரக்கி லங்கினியினை அடக்கி, இலங்கையில் எல்லா இடங்களிலும் சீதாதேவியைத் தேடி, அசோக வனத்தில் அவரை கண்டார். ஸ்ரீராமனை நினைத்து, சீதை அரக்கிகளுக்கு மத்தியில் அன்று அணிந்த அதே துணிகளை அணிந்து சோகமே உருவாக இருந்தாள். அவள் தன் வாழ்க்கையைத் துறக்கும் தருவாயில் இருந்தாள். சீதா மாதாவின் இந்த நிலையை பார்க்க முடியாமல், ராம தூதனாக தான் வந்திருப்பதை தெரிவிக்கும் விதமாக அனுமார் ஒரு சிறிய வடிவம்/தோற்றம் எடுத்து, ராமனின் புகழை இனிமையான தொனியில் புகழ்ந்தார். இதனால் சீதா மாதா கவனத்தை ஈர்த்த அவர் தன்னைப் பற்றி அவளிடம் சொன்னார் மற்றும் தான் இலங்கைக்கு வந்த காரணத்தையும் விவரித்தார்.

உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரமாக, அவர் ஸ்ரீராமரின் மோதிரத்தைக் காட்டினார், தேவியைப் பார்த்ததற்கான ஆதாரமாக 'சூடாமணி'யை அன்னையிடமிருந்து பெற்றுக் கொண்டார். ராவணனைப் பார்த்து, அவருக்கு ஸ்ரீராமனின் செய்தியைக் கொடுக்க வேண்டும் என்ற தேடலில், ராவணன் முன் ஆஜர்படுத்தப்படுவதற்காக அசோக வனத்தை அழித்தார்.

ஸ்ரீ ஹனுமான் ராவணனை சந்தித்தார்

அனுமார் ராவணன் முன் ஆஜர்படுத்தப்பட்டார், ஆனால் அதற்கு முன்பு அவர் ராவணனின் மகன் அக்ஷய குமார் உட்பட ராவணனின் இராணுவத்தின் பல முக்கிய உறுப்பினர்களைக் கொன்றார். பிரம்மாவிடம் இருந்து பிரம்மாஸ்திரத்தால் தனக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று வரம் பெற்றிருந்தாலும், இந்தர்ஜித் பிரம்மாஸ்திரத்தை அவர் மீது வீசியபோது பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்பட்டார். ராவணன் முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார், ராவணன் சீதையை சிறையிலிருந்து விடுவிக்க அனுமனின் அறிவுரைக்கு செவிசாய்க்கவில்லை. அனுமனின் அறிவுரையைக் கண்டு கோபமடைந்த ராவணன், அனுமனின் வாலில் தீ வைக்க உத்தரவிட்டான். வாலில் நெருப்புடன் அனுமர் இலங்கை முழுவதும் பார்வையிட்டார், இதன் விளைவாக லங்கா எரிந்தது.

ஸ்ரீ ஹனுமான் திரும்புகிறார்

இலங்கையை எரித்த தனது செயலைப் பற்றி ஒரு நொடி யோசித்த அனுமார், அன்னை சீதாவிற்கு என்ன நடந்திருக்கும் என்று யோசித்தார். அவர் அவளிடம் திரும்பிச் சென்று அவள் பாதுகாப்பாக இருப்பதை அறிந்தார். தன் வாலில் நெருப்பு வைக்கப்பட்டதைக் கேட்டதும், அன்னை சீதா தான் அவரை காயப்படுத்தி எரிக்க வேண்டாம் என்று அக்னிதேவனை வேண்டிக்கொண்டாள் என்பது அவருக்குத் தெரியாது. அன்னை சீதா பாதுகாப்பாக இருப்பதைக் கண்டு, சுக்ரீவனும் ஸ்ரீராமனும் ஒப்படைத்த பணியை நிறைவேற்றிய அவர், அன்னை சீதாவிடம் விடைபெற்று, லம்ப பர்வதத்திலிருந்து பாய்ந்து வடக்கரைக்குத் திரும்பினார்.

ஸ்ரீ ஜாம்பவான் மற்றும் ஸ்ரீ அங்கதாவை சந்தித்த ஸ்ரீ ஹனுமான்

சாக்ஷி ஹனுமான் கோவில், கந்தமாதன மலை, ராமேஸ்வரம் ஸ்ரீ ஹனுமான் மஹேந்திர மலையில் இருந்து கடல் மீது பாய்ந்து தெற்கு நோக்கி இலங்கைக்கு பயணம் செய்தார். ஜாம்பவான், அங்கதன் மற்றும் பிற வானரர்கள் அவர் மலையிலிருந்து தாவுவதைக் கண்டனர் மற்றும் அன்னை சீதாவைப் பார்த்த நற்செய்தியுடன் அவர் திரும்புவதற்காகக் காத்திருந்தனர். லங்காவில் அன்னை சீதாவைப் பார்த்த பிறகு, ஹனுமான் லம்ப பர்வதத்திலிருந்து வடக்கு நோக்கி பாய்ந்தார். இந்த பணியில் தன்னுடன் வந்திருந்த தனது கூட்டாளிகளை சந்திப்பதற்காக அவர் மஹிந்திரா பர்வத்தின் அருகே இறங்கினார். அனுமார் வரும் சத்தத்தைக் கேட்ட வானரர்கள் உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பெரிய சப்தங்களை எழுப்பத் தொடங்கினர். ஹனுமான் பறந்து வந்த வேகம் மற்றும் அதனால் ஏற்பட்ட ஒலியால், பணி நிறைவேறியதை அவர்கள் உறுதியாக நம்பினர். வாயுசுதனின் நற்செய்தியைக் கேட்க அவர்கள் அமைதியற்றவர்களாகவும் பதற்றமடைந்தவர்களாகவும் இருந்தனர்:

இலங்கையில் சீதாதேவியைப் பார்த்ததற்குச் சாட்சியாக அனுமார் ஆனார். ஹனுமான் சுருக்கமாக “சீதையைக் கண்டேன்” [த்ருஷ்டா சீதேதி- दृष्टा सीतेति] [வால்மீகி 5.57.35] என்று அறிவித்தார். அங்கு மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை; இந்தச் செய்தியைக் கேட்டு அனைவரும் சிலிர்த்துப் போயினர், மேலும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ராமர் பக்கம். இவ்வாறு இலங்கையில் சீதாதேவியைப் பார்த்ததற்கு சாட்சியாகவும், ஸ்ரீராமனின் பக்கம் இருந்த அனைவருக்கும் அன்னை சீதாவை மீட்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்திய முதல் நபராகவும் அனுமார் ஆனார்.

ஸ்ரீ ஹனுமான் சாக்ஷி

அனுமார் முதன்முதலில் "த்ருஷ்டா சீதேதி" என்று அறிவித்து, அனைத்து வானரர்களுக்கும் நம்பிக்கை அளித்த இடம், இராமேச்வரத்தில் கந்தமாதன பர்வத் என்று அழைக்கப்படும் மஹிந்திரா பர்வத்திற்கு அருகில் உள்ளது. பாம்பன் தீவில் உள்ள மிக உயரமான சிகரம் இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பாக் ஜலசந்தியில் அமைந்துள்ளது. இங்கிருந்துதான் ஸ்ரீ ஹனுமான் தாவி கடலின் மேல் பறந்தார். அவர் இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது இங்குதான் இறங்கினார். நற்செய்திக்காகக் காத்திருந்த அனைத்து வானர சேனைகளையும் அவர் இங்கு சந்தித்தார். பாலம் கட்ட முடிவு செய்வதற்கு முன்பு ஸ்ரீராமர் லங்காவைப் பார்வையிட்ட இடம் இதுவாகும்.

கந்தமாதன பர்வத் ஸ்ரீ ராமநாத சுவாமி கோயிலுக்கு வடக்கே மூன்று கி.மீ. தூரத்தில் உள்ளது. மலையின் மேல் இரண்டு அடுக்கு மண்டபம் உள்ளது, அங்கு ராமரின் பாதங்கள் பொறிக்கப்பட்ட வட்ட வடிவமான முத்திரை ஒன்று காணப்படுகின்றது. இந்த மலையின் உச்சியில் கர்பகிரகத்தில் ஸ்ரீ ராம-பதத்துடன் கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவிலின் இரண்டாவது தளத்தில் இருந்து பக்தர்கள் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியின் அற்புதமான வான்வழி [ஏரியல்] காட்சியை காணலாம்.

சாக்ஷி ஹனுமான் கோவில்

சாக்ஷி ஹனுமான், கந்தமாதன மலை, ராமேஸ்வரம் ஸ்ரீராம பாத கோவிலில் இருந்து சுமார் முந்நூறு மீட்டர் தூரத்தில் ஒரு சிறிய கோவில் அனுமாருக்காக உள்ளது, இக்கோயிலில் 'சாக்ஷி ஹனுமான்' என்று அழைக்கப்படும் ஸ்ரீ ஹனுமான் வழிபடுகிறார். கோயில் கிழக்கு நோக்கியதாகவும் எளிமையான அமைப்பாகவும் உள்ளது. முதலில் ஒரு வராண்டாவும், பின்னர் கோவிலின் கர்பகிரகமான மண்டபமும் காணப்படுகின்றது. இங்கு முக்கிய தெய்வமான ஸ்ரீ சாக்ஷி ஹனுமான் வீற்றிருக்கிறார். கிரானைட் கல்லால் ஆன ஸ்ரீ அனுமாரின் மூர்த்தம், 'அர்த்த ஷீலா' எனப்படும் புடைப்பு சிலை வடிவில் கிழக்கு நோக்கி உள்ளது. இந்த மூர்த்தம் சிந்துரம் என்னும் பாரம்பரிய சிவப்பு பசையால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. தனுஸ்கோடியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீ பாலகிருஷ்ண விக்ரஹமும் இங்கு காணப்படுகிறது.

ஸ்ரீ சாக்ஷி ஹனுமான்

ஸ்ரீ சாக்ஷி ஹனுமான் தனது இடது காலை முன்வைத்து வடக்கு நோக்கி நடப்பதைக் காணலாம். அவரது இரு பாதங்களிலும் ‘தண்டை’ காணப்படுகிறது. அவரது பக்கவாட்டில் மரத்தின் ஒரு துண்டு காணப்பட்டது, இது அவர் இலங்கைக்கு தனது முதல் விஜயத்தின் போது பயன்படுத்திய ஆயுதத்தைக் குறிக்கும். அவரது முழங்காலுக்கு அருகில் ஒரு ஆபரணம் காணப்படுகிறது. அவர் இடுப்பில் ‘கௌபீனம்’ அணிந்துள்ளார். அகன்ற மார்பும் தோள்களும் அவரது வீரத்தைக் காட்டுகின்றன. இரண்டு கைகளிலும் கங்கணம் அணிந்துள்ளார். அவரது இடது கரம் கல்-பாறையை ஏந்தியவாறும், வலது கையால் 'அபய முத்திரை' காட்டி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவனின் கேசம் நேர்த்தியாகக் கட்டப்பட்டு குடுமியாக காணப்படுகிறது. இறைவனின் வால் அவரது தலைக்கு மேல் லேசான உள்நோக்கிய வளைவுடன் காணப்படுகிறது மற்றும் வாலின் முடிவில் ஒரு மணி காணப்படுகிறது. அவரது பிரகாசமான அமைதியான கண்கள் பக்தர்களை மயக்கும் வண்ணம் உள்ளது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "சாக்ஷி ஹனுமான் கோவில், கந்தமாதன மலை, ராமேஸ்வரம்"

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் தரிசனமும், ஹனுமாரின் தரிசனமும், ‘சாத்தியமற்றது’ என்று நினைக்கும் காரியத்தையும் சாதிக்கும் நம்பிக்கையை நமக்கு அளிக்கும். ‘தர்ம’ வழியைப் பின்பற்றி ‘ராம’ ஜபிப்பதை விடச் சிறந்த ஆயுதம் எதுவுமில்லை என்பதைச் சொல்லும் அவருடைய ‘மந்திரம்’ நிச்சயமாக இங்கே உணரப்படுகிறது.   

தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: பதிப்பு: செப்டம்பர் 2022


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+